தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மரபீனிப் பொய்கள் - வந்தனா சிவா


மரபீனி மாற்றப்பெற்ற உயிரிகள் தொடர்பான பிதற்றல்கள் முனைவர் வந்தனா சிவா, மேலாண் இயக்குநர், 'நவதான்யா' மரபீனி மாற்றப்பெற்ற உயிரிகள் (மமாஉ) குறித்த சொற்போர் கடந்த சில மாதங்களில் சூடுபிடித்துள்ளது. மமாஉயிரிகளின் பலன்கள் விதந்தோப்பட்ட அளவுக்கு இல்லை என்பதற்கான அறிவியல் அறிகுறிகள் இந்தச் சொற்போரின் ஒரு புறம் உள்ளன. அந்தத் தொழில்துறையில் உள்ள நிறுவனங்களும் அவ்வுயிரிகள் குறித்த ஆய்வுகளையே தம் அறிவியல் வாழ்வாதாரமாகக் கொண்ட அறிவியலாளர்களும் மற்றொரு பக்கத்தில் உள்ளனர். இது குறித்து ஆய்வதற்கு இந்தியாவின் தலைசிறந்த மற்றும் தளைகளற்ற அறிவியலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் ஆணையம் ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 'மமாஉயிரித் தொழில்நுட்பம் குறித்த உறுதியானதும் பக்கச்சார்பற்றதுமான ஒழுங்காற்றுக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும்;

அதுவரை மமா பயிர்களைத் திறந்தவெளிக் களங்களில் சோதனை செய்ய அனுமதி தரக்கூடாது' என்று அக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய ஆய்வறிக்கை தெளிவாகப் பரிந்துரைத்தது. இருபதாண்டுகளாக மமா பயிர்கள் வணிகப் பயன்பாட்டில் உள்ளன. அவை விளைச்சலை அதிகரிக்கவில்லை, வேளாண் வேதிப்பொருள் பயன்பாட்டையும் குறைக்கவில்லை என்பதைத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மாறாக, வீரியக் களைகள் உள்ளிட்ட வீரிய நச்சுயுரிகளையே அப்பயிர்கள் உருவாக்கியுள்ளன. மேலும், அப்பயிர்கள் அறிவுச் சொத்துரிமை தொடர்பான காப்புறுதிச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இக்காரணங்களால் உழவர்கள் பெருநிறுவனங்களுக்கு மிக அதிக விலை தரவேண்டியுள்ளது.

எனவே இப்பயிர்கள் உழவர்களின் பொருளாதார நிலையைக் கடுமையாகப் பாதிக்கின்றன. 1995-2012 ஆகிய பதினேழு ஆண்டுகளில் 2,84,694 உழவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் மகாராட்டிரந்தான் முன்னணியில் உள்ளது. பீட்டீ (Bt) எனப்படும் மமா பருத்தியை விளைவிப்பதிலும் அம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உழவர் தற்கொலைச் சிக்கலை பா. சாய்நாத் அவர்கள் தொடர்ந்து முறையாக ஆய்வு செய்துள்ளார். அவருடைய ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து பின்வரும் புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன: “மகாராட்டிர மாநிலத்தில் 1995 முதல் 54,000 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் 33,752 பேர் 2003 முதலான ஒன்பதாண்டுகளில் தற்கொலை செய்துள்ளனர்.

அதாவது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 3,750 பேர். 1995-2002-இல் 20,006 பேர் - ஆண்டுக்குச் சராசரியாக 2508 பேர் - தற்கொலை செய்துகொண்டனர்.” பீட்டீ பருத்தி பெருமளவில் பயிரிடப்பட்ட பிறகு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. உழவர்கள் ஏன் பீட்டீ பருத்தியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அதுதான் மிகச் சிறந்தது என்று பொருளா? இல்லை! அவர்களுக்கு வேறு எந்த மாற்றும் இருக்கவில்லை. பிறவகைப் பருத்தியினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. விதைப் பன்மயம் ஒழித்துக்கட்டப்பட்டது. சந்தையில் மான்சான்ட்டோ நுழைந்ததன் பின்னர் நடுவண் பருத்தி ஆராய்ச்சிக் கழகம் புதிதாக எந்தப் பருத்தி வகையையும் வெளிக்கொணரவில்லை. பெரும்பாலான இந்திய விதைக் கம்பணிகள் மான்சான்ட்டோவுடன் உரிம ஒப்பந்தங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. விளைச்சல் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. மமா பயிர்களின் வருகைக்கு முன்னர் நல்ல மகசூல் இருந்த ஆண்டுகளில் [ஏக்கருக்கு] 1,200 கிலோ வரை பருத்தி விளைச்சல் இருந்துள்ளது. பீட்டீ பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விளைச்சல் ஐநூறு கிலோவைத் தாண்டவில்லை. அமெரிக்க உழவர்கள் மமா விதைகள், உயிர்க்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவைக் காட்டிலும் வட அமெரிக்காவில் உற்பத்தி பின்தங்கிவிட்டதை கேன்ட்டர்பரி பல்கலையின் பேரா. எய்ன்மேன் தலைமையிலான ஆய்வுக்குழு காட்டுகிறது. வட அமெரிக்காவில் மமா விதைகளும் ஐரோப்பாவில் இவையல்லாத விதைகளும் பயன்படுத்தப்படுவதுந்தான் இவ்விரு பகுதிகளுக்கிடையிலான முதன்மையான வேறுபாடு என்று அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நச்சுயுரிகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததால் உயிர்க்கொல்லிப் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

பிற பருத்தி வகைகளைக் காட்டிலும் பீட்டீ பருத்தியைப் பயிரிடுகையில் சிறு உழவர்கள் வேதி உயிர்க்கொல்லிகளை வாங்கும் செலவு அதிகரிப்பதாகச் சாகுபடிநில ஆராய்ச்சி மீளாய்வு எனும் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை தெரிவிக்கிறது. பீட்டீ குறிவைக்காத நச்சுயுரிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் பெருகிவிட்டன; எனவே, [பீட்டீ தன்மை காரணமாக] உயிர்க்கொல்லித் தேவை குறையக்கூடியதைக் காட்டிலும் பெருகிவிட்ட நச்சுயிரிகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் உயிர்க்கொல்லிகளின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனாவில் பீட்டீ பருத்தி பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதன் விளைவாக மிரிட் எனும் தீய வண்டுகளின் எண்ணிக்கை அங்கு 1997 முதல் 12 மடங்கு பெருகிவிட்டது.

அதற்கு முன்னர் இவை சிறு தொல்லையாக மட்டுமே இருந்தன. பீட்டீ தொழில்நுட்பம் குறிவைக்காத நச்சுயிரிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரவர அதிகமாகப் பயன்படுத்தப்படும் உயிர்க்கொல்லிகளின் செலவு காரணமாக பீட்டீ பருத்தியைப் பயிரிடுவதால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் பலனற்றுப் போய்விடுவதாக நாட்டிடை உயிரித்தொழில்நுட்ப ஆய்விதழில் 2008-இல் வெளியான கட்டுரையில் தெரிகிறது. ரவுன்டப் களைக்கொல்லியைத் தாங்கும் விதைகள் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு களைக்கொல்லிகளின் பயன்பாடு 1994 முதல் 2006 வரையான கால இடைவெளியில் 15 விழுக்காடு அதிகரித்ததற்கு இது முதன்மையான காரணம்.

மமா விதைகள் பயன்படுத்தப்படும் ஏக்கர் ஒவ்வொன்றுக்கும் களைக்கொல்லிப் பயன்பாடு சராசரியாக சுமார் நூறு கிராம் அதிகரித்திருப்பதாக இயற்கைவேளாண் நடுவம் 2009-இல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ரவுன்டப்-இல் உள்ள க்லைசோபேட் களைக்கொல்லிக்கு எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொண்ட களைகள் வரவர அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேன்மேலும் அதிக நச்சு வாய்ந்த களைக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. அமெரிக்கா வியட்நாமை ஆக்கிரமித்திருந்தபோது அதற்கெதிராக நடந்த போரில் ஆரஞ்சு இயக்கி எனும் நச்சினை அமெரிக்கப் படைகள் வியட்நாம் முழுமையிலும் கொட்டின. 2,4D என்பது அந்நச்சின் உட்கூறுகளில் ஒன்று. இப்போது உழவர்கள் இந்த நச்சைப் பயன்படுத்தத் தூண்டப்படுகின்றனர்.

அமெரிக்க வேளாண் துறை 2010-யில் வெளியிட்ட ஆய்வுகள் இந்தப் போக்கினை உறுதிப்படுத்துகின்றன. க்லைசோபேட் பயன்பாடு மிக வேகமாகவும் அதைவிடக் கடுமையான களைக்கொல்லிகளின் பயன்பாடு நிலையாக அல்லது ஏறுமுகத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன. அர்சென்ட்டினா நாட்டில் ரவுன்டப் ரெடி சோயா 1999-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், 2005-06-இல் க்லைசோபேட் பயன்பாடு மூன்று மடங்கைவிட அதிகமாகிவிட்டது. அந்த சோயாவைப் பயிரிட்ட உழவர்கள் வழக்கமான சோயா வகைகளைப் பயிரிட்ட உழவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமாக களைக்கொல்லிகளைப் பயன்படுத்தியதாக 2001-ஆம் ஆண்டறிக்கை ஒன்று காட்டுகிறது. இவை அறிவியல் சான்றுகள்.

ஆனால், நடுவண் வேளாண் அமைச்சர் சரத் பவாரின் கூற்று இவற்றுக்கு நேரெதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளது: மமா பயிர்கள் அதிக விளைச்சல் தருவதாலும் நோய் எதிர்ப்பாற்றல் மிக்கனவாக இருப்பதாலும் உழவர்களுக்கு அவை அதிக உபரியை (லாபத்தை) ஈட்டித் தருகின்றன; ஆகவே உழவர்கள் பீட்டீ பருத்தியையே விரும்புகின்றனர் என்று 2013 ஆகத்து 27 அன்று நாடாளுமன்ற மேலவையில் அவர் அறிவித்தார். [அவருடைய] ஒவ்வொரு கூற்றும் பொய்யானதே. பீட்டீ பருத்தி அதிக விளைச்சல் தந்ததில்லை. அதற்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லை. செடிப் பேன் உள்ளிட்ட - பருத்தியை முன்னர் தாக்காத - தீங்குயிரிகளின் எண்ணிக்கை மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளது. காய்ப்புழுவை பீட்டீ பருத்தி கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தப் புழுவும் பீட்டீக்கு எதிர்ப்பாற்றல் பெற்றுவிட்டது. அதைக் கட்டுப்படுத்தும் முகமாக போல்கார்ட்-II எனும் பூச்சி-எதிர்ப்புப் பெற்ற வீரிய மமா பருத்தியை மான்சான்ட்டோ வெளியிடவேண்டிவந்தது. இவையனைத்தும் உழவர்களுக்கு உபரி ஈட்டித்தருவதற்கு மாறாக அவர்களைக் கடனாளிகளாகத் தான் மாற்றியுள்ளன.

விதைச் செலவு எண்பது மடங்கு (8000 விழுக்காடு) அதிகரித்து, உயிர்க்கொல்லிகளின் பயன்பாடு 13 மடங்கு (1300 விழுக்காடு) அதிகரிக்கையில் உழவர்களின் வருமானம் அதிகரிக்காது. அனைத்துச் சான்றுகளுக்கும் அறிவியலுக்கும் எதிராக சரத் பவார் மமா பயிர்களை ஊக்குவிக்கிறார். தோல்வியைத் தழுவிய இந்தத் தொழில்நுட்பத்துடன் தம் வாழ்தொழிலைப் பிணைத்துக்கொண்டுள்ள சில அறிவியலாளர்கள் பவாரை எதிரொலிக்கின்றனர். மமா கடுகு பயிரிடுவதை ஊக்குவிக்கும் தீபக் பென்த்தால் எனும் மரபீனித் துறை பேராசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: “விளைச்சலைக் குறைக்கும் நோய்களை வெல்வதற்கு மரபீனிமாற்ற வழிகள் தேவை. செய்வதறியாத சில தொண்டுநிறுவனங்கள் மக்களிடையே பீதியைக் கிளப்புவதில் முனைப்பாக உள்ளன. மேலும், இத்தகைய பயிர்கள் குறித்துச் சோதனை செய்வதையும் அப்பயிர்களைப் பயன்படுத்துவதையும் தடை செய்யுமாறு சில அறிவியலாளர்கள் கோருகின்றனர்.”

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தில் பயிர் அறிவியல் துறையின் உதவிப் பொது இயக்குநராக சுவபன் குமார் தத்தா உள்ளார். அவருடைய மனைவி மேற்கொள்ள விரும்பிய மரபீனி மாற்ற அரிசி ஆய்வுகளுக்கு அனுமதி வழங்குவதில் நெறி பிறழ்ந்த வகையில் அவர் செயல்பட்டார். மமா பயிர்களின் தோல்வி குறித்து நிறைய சான்றுகள் இருந்தபோதும் அவர் அத்தொழில்நுட்பத்தை ஆதரித்துக் காப்பாற்றுவதில் முனைப்பாக உள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இயல்பாக உள்ள செடி கொடியினங்களின் மரபு மூலக்கூறுகள் மொத்தம் சுமார் 4,00,000 தொகுத்துவைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தையும் பன்னாட்டுக் கம்பணிகளுக்கு எடுத்துத் தந்துவிடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். முறையான அறிவியலானது, சான்றுகளையும் (மதிப்பீடுகள், திறனாய்வுகள் உள்ளிட்ட) உலகியல் பின்னூட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்னேறும். சான்றுகளைக் கண்டுகொள்ளாது ஒதுக்கும் தவறான அறிவியலானது, பொய்மையைப் பரப்பும். மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான சொற்போரில் [அரசியல், வணிக, பொருளாதார] வல்லமையும் பொய்யான பரப்புரைகளுமே அவ்வுயிரிகளை ஆதரிப்போர் பக்கம் உள்ளன என்பது வருத்தந்தரும் உண்மை.

ஆரஞ்சு இயக்கி agent orange இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் indian council of agricultural research இயற்கைவேளாண் நடுவம் organic center எய்ன்மேன் heine,amm, jack க்லைசோபேட் glysophate கேன்ட்டர்பரி canterbury சாகுபடிநில ஆராய்ச்சி மீளாய்வு review of agrarian studies சுவபன் குமார் தத்தா swapan kumar datta தீபக் பென்த்தால் deepak pental தொழில்நுட்ப வல்லுநர் ஆணையம் technical experts committee நடுவண் பருத்தி ஆராய்ச்சிக் கழகம் central institute for cotton research நாட்டிடை உயிரித்தொழில்நுட்ப ஆய்விதழ் international journal of biotechnology போல்கார்ட்-II bollgard-II மரபீனி மாற்றப்பெற்ற உயிரிகள் (மமாஉ) genetically modified organisms மான்சான்ட்டோ monsanto மிரிட் mirid வந்தனா சிவா vandana shiva

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org