தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


அண்மையில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவை மிகுந்த நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன.

நிகழ்வு 1: எடுவார்டோ வெர்டூகோ என்னும் மெக்சிகோ நாட்டின் மத்திய நீதிபதி, மரபீனி மாற்றப்பட்ட மக்காச்சோளத்தின் திறந்த வெளிப் பரிசோதனைகளுக்கும், அவற்றின் விற்பனைக்கும் தடை விதித்துள்ளார். அந்நாட்டின் சூழல் பாதுகாப்பு அமைப்பான SEMARNAT ற்கு உடனடியாக மரபீனிச் சோளத்தைத் தடை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளிலும், நம் போன்ற வளருகிறேன் என்று அழியும் நாடுகளிலும், நீதிபதிகள் பல அரசியல் மற்றும் அதிகார நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டுத் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டி மரபீனி மாற்று விதைக் கம்பணிகளுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கவே தயங்குகிறார்கள். இச்சூழலில் பொருளாதார வலுவில் இடைப்பட்ட நிலையில் இருக்கும் மெக்சிகோ இத்தீர்ப்பு அளித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நிகழ்வு 2: நம் இந்தியாவில், மத்திய சூழல்துறை அமைச்சர் திருமதி ஜயந்தி நடராஜன், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூன்றில் ஒரு பகுதியை , சுமார் 60,000 சதுர கிலோ மீட்டரை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். முன்னர் மாதவராவ் காட்கில் தலைமையில் அமைந்த நிபுணர் குழு, ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைந்த தற்போதைய குழு, குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி உயிர்ப்பன்மையத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்ததுரைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஜயந்தி நடராஜன் செய்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது.( இவர் முன்னரே, வேளாண் அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாக மன்சான்டோவை ஆதரிப்பதை எதிர்த்துப் பிரதம மந்திரிக்குக் கடிதம் எழுதினார் ). இதனால் இப்பகுதிகளில் சுரங்கம் தோண்டுதல், மரம் வெட்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற சுரண்டல்கள் செய்வது சட்டப்படி இயலாது போய்விடும்! இதுவும் ஒரு மிக முக்கிய நிகழ்வு.

நிகழ்வு 3: ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான UNCTAD ஒரு சமீபத்திய அறிக்கையில் “மாறி வரும் பருவ நிலையில் உலகம் உணவுப் பாதுகாப்பு அடைய வேண்டுமெனில், பெரும் பண்ணைகளில் ஓரினப்பயிர் செய்வதை விட்டு, சிறு விவசாயிகளால் பல்வகைப் பயிர்கள் , சிறு பண்ணைகளில், வேதிப் பொருட்களின்றி உற்பத்தி செய்யப்பட்டு அண்மையில் நுகரப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது. உலகை உணவால் ஒரு சில நிறுவனங்கள் ஆளப் பெருமுயற்சி செய்யும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வு.

நிகழ்வு 4: மன்சான்டோவின் தத்துப் பிள்ளையான மகிகோவிற்கு எதிராய் உயிரித்திருட்டு (bio-piracy) வழக்கு (பிட்டீ கத்தரி உருவாக்கும் போது பாரம்பரியக் கத்தரி ஈனிகளைத் திருடியதாக) ஒன்று 2011ல் போடப்பட்டது. இரண்டு வருடத் தடையால் சுணங்கியிருந்தது வழக்கு. கர்நாடக நீதிபதி பச்சாபுரே அத்தடையுத்தரவை நீக்கியுள்ளார். மன்சான்டோவிற்கு எதிராக வழக்கு மீண்டும் நடக்கும்.

நிகழ்வு 5: அக்டோபர் 12 அன்று, உலகமெங்கும் மன்சான்டோவிற்கு எதிராய் மக்கள் தாங்களாகவே, தங்கள் செலவில் தெருவில் இறங்கிப் போராடினார்கள். இயல்பாய் வெளிப்பட்ட தார்மீகக் கோபம் நம்பிக்கை அளிக்கிறது.

உலகமே பெருநிறுவனங்களின் வியாபார சந்தையாகவும், அரசியல்வாதிகளும், ஆள்வோரும் வியாபாரிகளின் கைப்பாவைகளாகவும் ஆகிவிட்ட சூழலில், இந்நிகழ்வுகள் நமக்குப் பெரும் நம்பிக்கை ஊட்டுகின்றன. பத்து வருடமாக நம் நாட்டு உணவில் மரபீனித் தொழில்நுட்பம் நுழைய விடாமல், 120 கோடிப் பேரைப் பிடிவாதமாய்க் காத்துவரும் தன்னார்வலர்கள் நூறு பேருக்கும் குறைவே! தனி மனிதர்களால் உலகைக் காக்க முடியும்; செய்வோம். தோரோ எழுதியது போல், “கடும் இருளிலும், விடியலின் நம்பிக்கை நம்மைக் கைவிடுவது இல்லை”!.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org