தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

விசும்பின் துளி - 7


மாமழை போற்றுதும் - பாமயன்

மழையும் மழைக் காலமும் வெப்பமண்டல நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும் கும்மாளமும் தருபவை. தமிழர்களின் வாழ்வோடு இணைந்த மழை செழிப்பிற்கு அடிப்படையாகும். வேளாண்மைக்கு அடிப்படை நீர். ‘நீரின்று அமையாது உலகு’ என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கு வியப்புத் தருவன. ஆனால் அந்த மரபில் வந்த இன்றைய மக்கள் நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த வேதனை உண்மையாகும்.

போற்றுதக்குரியவையாக ஞாயிறு, திங்கள், இவற்றுடன் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்கிறார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது.

இதேபோல,
‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99)
என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது. இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி ................. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது. ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulics and hydraulic research - a Historical Review ) இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து.

திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ‘மாறாநீர்’ (குறள்:701) பற்றி தெளிவுபடக் கூறியுள்ளார்.
‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி’
என்று குறள் கூறுகிறது. இதன் மூலம் இந்த வையத்தில் உள்ள (உலகில் உள்ள) நீரின் அளவு மாறுபடாது என்ற அறிவியல் உண்மை வெளிப்படுகிறது. இதற்கு முன்பே சங்க இலக்கியங்கள் கூறியதை நாம் பார்த்தோம். மழையை உலகத்தின் அச்சாணியாகப் பார்த்துள்ளனர், ‘உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப் பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறும் ..................... இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே’ (நற்:139) என்ற வரிகள் மழையை மக்கள் பார்த்த பார்வையைக் கூறுகிறது. ஆனால் நமது தமிழ்க் குழந்தைகள் இன்று ஆங்கிலப் பள்ளிகளில் ‘ரெயின் ரெயின் கோ அவே’ (rain rain go away) அதாவது ‘மழையே, மழையே! போ, போ!’ என்று பாடுகின்ற அவலத்தைக் காணுகின்றோம்.

வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் சமமாகப் பாவிக்க வேண்டியது மன்னனின் பண்புகளில் தலையாயது என்பது பண்டைத் தமிழர்களின் கோட்பாடு. சாதிக்கொரு நீதி என்பது தவறு என்பது அதன் அடிப்படை. இதைக் கூறவந்த புலவர் அதற்கு எடுத்துக் காட்டாக மழையைக் கூறுகின்றார்,
‘அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி’ (புறம்: 142)
வற்றிப் போய்விட்ட குளத்தை நிரப்பியும் அதேபோல வேறுபாடு இல்லாமல் அகன்ற வயல்களின் மீது பொழிந்தும் விளைச்சலே தராத உவர்நிலப் பகுதிகளிலும் நீரைச் சொரிந்தும் பாகுபாடு இன்றிக் கொடுக்கும் மழை என்பது இதன் பொருள். அது மட்டுமல்ல உவர் நிலத்தில் பெய்யும் மழை நீரால் மண்ணின் தன்மையும் சரியாகும் என்பது கவனிக்கத்தக்கது. மாரி (மழை) என்பது தமிழகத் தாய்த் தெய்வத்தின் பெயர்.

வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வள்ளுவர் படைத்துள்ளார். ‘உணவாகி, அப்படியான உணவிற்கும் உணவாகும்’ மழை பற்றி வள்ளுவர் மிக நுட்பமாகக் கூறுகிறார். அதாவது நீரானது நாம் குடிக்கும் நீராக (உணவாக) இருக்கிறது. அத்துடன் அரிசி, காய்கனிகள் போன்ற உணவுப் பொருள்களை விளைவிக்கவும் காரணமாக இருக்கிறது.
‘துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை’ (குறள்:12)
. மழை வரும் அறிகுறிகளை பண்டை மக்கள் மிகக் கவனமாகப் பதிந்துள்ளனர். விண்மீன்களும் கோள்களும் அமையும் அமைப்பை வைத்தே மழை பொழியும் வாய்ப்பைக் கணித்துள்ளனர்.
‘வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிதுவடக்கு இறைஞ்சிய நீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்
கவிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்
கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை’
அதாவது கதிரவன் வானில் வரும்போது வடக்கிருந்து ஒளிமிக்க வெள்ளியானது ஆநியம் எனப்படும் மூல நட்சத்திரத்தில் இருக்க நல்ல மழை கிடைக்கும் என்ற செய்தி உள்ளது.

இதேபோல முக்கூடல் பள்ளு, மழை வருவதற்கான குறிகளாக, நண்டுகள் சேற்றைக் குழைந்து வளைகளை அடைப்பதும், மரக்கிளைகள் சுழன்று காற்று அடிப்பதும், மேற்கிலும் தெற்கிலும் மின்னல் சூழ்ந்து வெட்டுவதும், வானம்பாடிகள் மழைக்காக வானத்தில் பறப்பதும் கூறப்படுகின்றன. ‘ஆற்று வெள்ளம் நாளை வர...’ என்ற பாடல் நன்கு விளக்கும்.

மழைநீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும் என்ற நிலை குறிஞ்சி நிலத்தில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையானது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்லது அருவி நீரை அடிப்படையாகக் கொண்டது. மேலும் உயர்ந்த மலைகளில் போதுமான மழைப் பொழிவு அப்போது இருந்ததால் அவர்கள் எவ்வித இடைஞ்சருலும் இல்லாமல் தினை விதைப்பதும், ஐவன வெண்ணெல் விதைப்பதும் அறுப்பதுமாக இருந்தனர். இந்த மழைப் பாசன மக்கள் காடுகளை உயிர்போலக் காத்தனர். இவர்களது தேவை மிகக் குறைவு. எனவே இயற்கை இவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டே இருந்தது. தலைவி தலைவனது வருகைக்காக காத்திருந்து மழை வந்ததும் அதற்கு நன்றி சொல்வாள்.

‘என் இனிய மழையே உனக்கு நன்றி. எனது தலைவனை விரைவில் வரச் செய்த உனக்கு நன்றி’ என்று சொல்வாள். அதே சமயம் மற்றொருத்தி ‘அட மழையே ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய்? என் தலைவன் இன்னும் வரவில்லை. நீயோ அதற்குள் வந்து என்னை இன்னலில் ஆழ்த்துகிறாயே! என்று திட்டுவாள். ஆக மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் ஒட்டிப்போன இந்த மழை முல்லை நிலத்திலும் அதேபோலப் பார்க்கப்பட்டது. மாடுகளும் ஆட்டு மந்தைகளும் மழையில் நனைந்து கொண்டு நடுங்குவதும் கோவலர்கள் குழலை மறந்து நடுக்கத்தில் பல்லால் இசைப்பதும் சுவையான பதிவுகள்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org