தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ என்னும் துறவி

தற்சார்பு வாழ்வியல் - 02 - சாட்சி

சென்ற கட்டுரையில் தோரோவைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். 1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் இரண்டு வருடம் இரண்டு மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங் களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the Woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது.

மாற்று வாழ்முறை (alternate living) என்றும் தற்சார்பு வாழ்முறை (self-reliant living) என்றும் அழைக்கப்படும் ஒரு தனிப்பாதையில் பயணிக்க அனைவருக்கும் துணிவு இருப்பதில்லை. ஆனால் யாருடைய உதவியும், உந்துதலும் இன்றித் தானே தனக்கொரு விளக்காய், வழியாய், ஆசானாய், மாணாக்கனாய்ப் பயணித்து வென்ற மிகச் சில மாமனிதர்களில் தோரோ தலையாயவர். தன் சம காலத்தவர்களால் வெறும்பயல் (idler) என்று ஒதுக்கப்பட்ட தோரோ, தன் வாழ்நாளில் எதுவும் பெரிதாய்ச் சாதிக்கவில்லை. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 1817ல் பிறந்த தோரோ 45 வருடங்களே வாழ்ந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. வாழ்நாளில் மிகச் சொற்ப நாட்களே வேலை செய்தார். ஆனால் அவரின் தேடலும், அவர் கண்ட விடைகளும் மிக நுட்பமானவை. வாழ்வில் அர்த்தம் தேடுபவர்களுக்கு உணவாய், மூச்சுக் காற்றாய் இருப்பவை.

தன் தந்தையின் பென்சில் தயாரிக்கும் சிறு தொழிலில் அவர் குறைந்த செலவில் உடையாத முனைகளுடைய பென்சில் தயாரிக்கும் உத்தி ஒன்றைக் கண்டு பிடித்தார். நண்பர்கள் அவரிடம் 'இதைப் பதிவு (patent) செய்துகொள், உனக்கு வாழ்நாள் முழுவதும் பணம் கிடைக்கும்' என்ற பொழுது, 'ஒரு முறை செய்ததை எதற்கு மீண்டும், மீண்டும் செய்ய வேண்டும்' என்று அலட்சியமாகத் தூக்கி எறிந்து விட்டார். அன்றே உலகின் மிகப் பிரபலமான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற தோரோ, எல்லோரைப் போலவும் வேலைக்குச் செல்லாமல், 'வாழ்வில் பிழைப்பையும் செய்து, வாழவும் நேரம் காண்பது எப்படி' என்ற தன் கேள்விக்குத் தன்னையே பரிசோதனை எலி ஆக்கிக் கொண்டார்! 'மாந்தரில் பெரும் பகுதி சத்தமின்றி ஒரு விரக்தியில் வாழ்கிறார்கள்' என்ற அவரின் வரிகள் மிகப் பிரசித்தம்.

எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் துணிவும், தெளிவும் அவருக்கு இருந்தன. 'ஒரு பொருளின் விலை என்பது நான் அதற்குக் கொடுக்கும் பணம் அல்ல, அந்தப் பணத்தை ஈட்ட நான் செலவிடும் என் வாழ்நாளின் நேரத்தை வைத்துத்தான் அதை மதிப்பிடுவேன்' என்றார். உதாரணமாக ஒருவன் மாடி வீடுகட்டிக் கடன் அடைக்க வேண்டுமானால் 10-15 வருடம் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டும். ஆனால் ஒரு வாரத்தில் குடிசை ஒன்றைக் கட்டிக் கொள்ள ஒரு மாத வருமானமே போதுமானது. தோரோவைப் பொறுத்தவரை, குடிசையில் இருப்பவன் கடன் ஏதும் இல்லாமல் ஒரே மாதத்தில் வீடு கட்டி விடுவதால், மாடி வீட்டுக்காரனை விட அவனே செல்வந்தன்! ''எனக்கு எவ்வளவு விரல்கள் இருக்கிறதோ அதை விடவும் எனக்குத் தொழில்கள் இருக்கின்றன' என்று எழுதிய தோரோ, ஆசிரியர், பொறியியலாளர், எழுத்தாளர், பேச்சாளர், உழவர், நில அளவையாளர் (surveyor) என்று பல தொழில்களை அவ்வப்போது செய்தார். அடிப்படைக் கூலித் தொழிலாளராகவும் அடிக்கடி பணி செய்வார். 'தினக்கூலித் தொழில்தான் நான் செய்த வேலைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கூலிக்காரன் அன்றைய பணி முடிந்ததும் தனக்கு இச்சை கொண்ட தேடல்களில் ஈடுபடலாம். தேவைப் படும் பொழுது மட்டும் வேலை செய்யலாம். ஆனால் முதலாளியோ வருடத்தின் ஆரம்பத்தி லிருந்து கடைசி வரை கணக்கிட்டுக் கொண்டு, ஓய்வின்றிக் கவலையில் உழல்கிறான்' என்று வாணிபத்தை நையாடுவார். வாரம் ஒரு நாள் ஓய்வு என்று உலகமே இயங்குகையில் வாரம் ஒரு நாள் வேலை செய்தால் போதும் என்று வருடத்தில் 30-40 நாட்கள் மட்டுமே வேலை செய்து தன் தேவைகள் அனைத்தையும் தானே நிறைவு செய்தவர்.

தன் உழைப்பாலேயே தன் உணவை விளைத்துக் கொண்ட தோரோ, உணவுத் தற்சார்பைப் பற்றி ”ஒரு மனிதன் தான் விளைவிப்பதை மட்டும் உண்டு, உண்பதை மட்டும் விளைவித்தால், அவனுக்குத் தேவையா னதை அவ்வப்போது, நினைத்த நேரத்தில், இடது கையால் ஒரு கைக்கலப்பையால் விளைவிக் கலாம். இதற்குத் தேவை ஒரு வருடத்தில் 30 நாட்கள் உழைப்பு மட்டுமே” என்றார். மேலும், “இந்த உலகில் உயிர்வாழ்வது என்பது ஒரு போராட்டமல்ல, அது ஒரு பொழுது போக்கே!” என்றார்.

'ஒரு மனிதனால் எல்லாவற்றையும் எவ்வளவுக்கெவ்வளவு அலட்சியப் படுத்த முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் செல்வந்தன்' என்று செல்வம் என்பதற்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்தார். சந்தையின் மீது நமக்குள்ள ஆதிக்கத்தைத்தான் நாம் சாதாரணமாக செல்வம் என்கிறோம், ஆனால் சந்தையே இல்லாமல் வாழ இயல்பவன்தான் உண்மையில் செல்வந்தன் என்று தோரோ தெளிவாய் உணர்ந்தார், வாழ்ந்தும் காட்டினார். எளிமைசெய், எளிமைசெய், எளிமைசெய் என்பது அவரின் தாரக மந்திரம்.

இயற்கையின்மேல் மாளாத காதல் கொண்ட தோரோ, வளர்ச்சி, மேம்படுத்துதல் என்று இன்று கூறப்படும் நவீனங்களின் தீமையை 180 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தார். அமெரிக்காவில் ரயில் பாதை அமைத்துப் போக்குவரத்துப் புரட்சிகள் செய்ய ஆரம்பித்த போது, அப்பாதை அமைப்பதற்காக சீனாவிலிருந்தும் அயர்லாந்திலிருந்தும் கூலித் தொழிலாளார்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைக் கடுமையாக எதிர்த்த தோரோ, ' நான் தண்டவாளத்தைக் காணவில்லை, அதன் ஒவ்வொரு குறுக்குக் கட்டையிலும் ஒரு சீனத் தொழிலாளியின் உடலைத் தான் காண்கிறேன்' என்று எழுதினார். தன் மாநிலத்தில் காடுகள் வெட்டப்பட்டு நகரங்கள் உருவாக்கப் படும்போது, மன வேதனையுடன் 'ஒருவன் காடுகளின் மேலுள்ள காதலினால் அவற்றில் அரை நாள் நடப்பானேயாகில் அவனை வெட்டிப் பயல் என்று பட்டமிடுகிறது இவ்வுலகம். ஆனால் அதிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துப் புவியை அதன் காலத்திற்கு முன்னரே சொட்டையாக்கும் பொருட்டு ஒருவன் நாள் முழுவதும் நடந்தால் அவனைத் தொழிலதிபர் என்று உலகம் கொண்டாடுகிறது. மானுடத்திற்குத் தன் காடுகளின் மேல் அதனை அழிக்கும் ஆர்வம் ஒன்றுதான் இருக்க வேண்டுமா?' என்று எழுதினார்.

1840-50 வருடங்களில், அமெரிக்காவில், தென் மாநிலங்களில் அடிமைகளாய் இருந்த கறுப்பர்கள் தப்பி ஓடி வட மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். 1850ல் அமெரிக்க அரசு அடிமை அகதிகள் சட்டம் என்ற ஒரு சட்டத்தின் மூலம், இவ்வகதிகளுக்கு உதவுவதோ, புகலிடம் அளிப்பதோ கடும் குற்றம் என்ற சட்டம் கொண்டு வந்தது. அரசியலைப் பற்றி ஆழ்ந்த புரிதலும், மனித உரிமை மீது பற்றும் உள்ள தோரோ இச்சட்டம் வந்தவுடன் தனிமனித வரியான poll tax என்பதைக் கட்ட மறுத்து விட்டார். இதனால் சில நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்க வந்த நண்பர் எமர்சன், 'ஹென்ரி அங்கே உள்ளே என்ன செய்கிறாய்' என்றதற்குத் தோரோ 'நீ அங்கே வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என்று பதிலளித்தார். 'ஒரு அரசு அநியாயத்திற்கு துணை போக ஆரம்பித்து விட்டால் அப்போது நேர்மையான மனிதர்களின் இடம் சிறைதான்' என்றும் 'எவ்வரசு மிகக் குறைவாக நிர்வாகம் செய்கிறதோ அவ்வரசே நல்லரசு' என்றும் அப்போது அவர் எழுதிய “பண்பட்ட ஒத்துழையாமை” (civil disobedience) என்ற கட்டுரை மிகுந்த ஆழ்நோக்குடன், அன்றை விட இன்று அதிகப் பொருத்தமாய் இருக்கிறது. பின்னாளில் வந்த காந்தி, டோல்ஸ்டாய், மார்டின் லூதர் கிங் போன்றோர் இக் கட்டுரையால் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தப் பட்டார்கள். காந்தி, தான் சத்தியாக்கிரகக் கொள்கையை உருவாக்க இக்கட்டுரை மிக முக்கிய காரணி என்று கூறியுள்ளார்.

வாழ்வில் சோகம், ஒப்பாரி, புலம்பல் என்பதை எல்லாம் முற்றும் நையாடிய தோரோ ‘‘நான் துக்கத்திற்குப் பிலாக்கணம் பாட விழையவில்லை, பெரும் ஆரவாரத்தோடு வைகறையை வரவேற்கும் ஒரு சேவலைப் போல் என் வெற்றிகளைப் பறை சாற்ற விரும்புகிறேன், என் சக மனிதர்களை எழுப்புவதற்காகவேனும்!” என்று, தான் ‘வால்டன்’ எழுதிய காரணத்தைக் கூறுகிறார். 'உலகின் எந்த மூலையில் ஒரு நன்மையோ, ஆரோக்கியமோ நடந்தாலும் அது எனக்கு நன்மையே' என்றும், 'உன் வாழ்க்கை எவ்வளவு கேவலமாய் இருந்தாலும் அதை வெறுத்து ஒதுக்காதே, நேரே நின்று எதிர்கொள்', 'மனிதர்கள் வெல்வதற்குப் பிறந்தவர்கள்', 'நீ காற்றில் கோட்டை கட்டி விட்டால் அதற்காக வருந்தாதே, அவை அங்கேதான் இருக்க வேண்டும். இப்போது உழைத்து அதற்குத் தரையிலிருந்து அடித்தளம் போடு', 'கடுமையான தூக்கத்திலும் விடியலின் நம்பிக்கை நம்மைக் கைவிடுவதில்லை', 'உன் வாழ்வை நீ எளிமை யாக்க ஆக்க பிரபஞ்சத்தின் விதிகள் அனைத்தும் உனக்கு எளிதாகிவிடும்' என்றும் பலவாறாகத் தன் சக மனிதர்கள் படும் பாட்டைத் துடைக்க முயன்றிருக்கிறார்.

வாழ்வில் கஷ்டம் என்பதே பொருளற்றது என்ற திடமான சித்தாந்தம் கொண்ட தோரோ வேறு ஒரு இடத்தில், ‘‘என் நண்பா, நீ சகதியில் சிக்கிக்கொண்டு என்னைக் காதலித்துக் கரையேற்று என்று கதறுகிறாய். நான் கூறுகிறேன் நீ வெளியேறி விடு எல்லோரும் உன்னைக் காதலிப்பார்கள்” என்கிறார். விடுதலை என்பது அனைவருக்கும் கைக்கெட்டிய ஒன்று, அனைவராலும் இயலக் கூடிய ஒன்று, அதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நம்மைத் தளைப்படுத்தும் அனைத்தும் நாமே உருவாக்கிக் கொண்டவை. அவற்றை விடத் துணிவும், நேர்மையும்தான் தேவை என்பது தோரோவின் அசையாத கோட்பாடு. நம் பாரத நாட்டில், எல்லா மதங்களிலும், பொருள், பதவி ஆசைகளைத் துறந்து, ஒரு ஆன்ம தேடலில் ஈடுபடுபவர்களைத் துறவி என்கிறோம். மனிதன் தெய்வமாகலாம் என்று அவர்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடு கிறோம், காலில் விழுகிறோம், குரு என்கிறோம். அவர்கள் காலடிகளைப் படம் எடுத்துப் பூசை அறையிலும், கழுத்திலும் எல்லாம் மாட்டிக் கொள்கிறோம். இதில் ஏதும் நான் குறை காண முயலவில்லை. 'அவரவர் தமதமது அறிவறி வகைவகை' என்று 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொன்னதுபோல் இது அவரவர் இச்சை. ஆனால், எந்த குரு - சீட மரபிலும் சாராமல், எந்த மதத்தையும் கைக்கொள்ளாமல், புகழையும், பணத்தையும் அறவே புறந்தள்ளி, தன்னறி வொன்றே தெய்வம் என்று உண்மைப் பகுத்தறிவுடன், தற்சார்பான, எளிய வாழ்முறை, ஞானத்திற்கு ஒரு வழியென்று, தானே பயணித்த ஒரு மா மனிதனை, ஒரு உண்மைத் துறவியை இனங்கண்டு அவரின் எழுத்துக்களைப் படிப்பதே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறு!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org