ஏறத்தாழ ஒவ்வொரு ஏக்கருக்கும் 225 லிட்டர் ஏஜண்ட் ஆரஞ்சு தெளிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தெளிக்கப்பட்டது. பல இடங்களில் 4 தடவைகூட தெளிக்கப்பட்டது. அப்போதும்கூட கவலைப்பட வேண்டியதில்லை என்று அமெரிக்கப் படையினர் கூறி வந்தனர். ஆனால் சீக்கிரமாகவே பசுமையான செடியினங்கள் கருகத் தொடங்கின. மரங்கள் உடனடியாகப் பாதிக்கப்படவில்லை. இதில் கலந்திருந்த ‘டையாக்சின்’ மூலம் புற்றுநோய் பரவுவதாக ஆராய்ச்சி (எலியைப் பரிசோதித்து) முடிவுகள் வெளிவந்தன.
1963 தொடக்கத்தில் மக்களின் நிலை குறித்து குறிப்பாக களைக்கொல்லிகளைக்
கையாளும் மனிதர்களின் உடல்நிலை அபாயம் குறித்து கேள்விகள் எழுந்தன. ஆனால்
அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் இதைப் பெரிதும் மறுத்தன. போர் பெரிதாக நடந்து
கொண்டிருக்கும்போது இது போன்ற கேள்விகளை எழுப்புவது தேசப் பற்றின்மையைக்
காட்டுவதாகும் என்றன. மேலும் ‘ரசாயனங்களை பெரிய அளவில் போரில் பயன்படுத்துவது
உலகச் சட்டங்களை மீறுவதாகும்’ என்பதற்கும் பதில் இல்லை. 1970 களின்
பிற்பகுதியில் ஓய்வு பெற்ற வியட்நாம் போர் வீரர்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர்.
அவர்களது குழந்தைகள் ஊனமுற்றவையாகப் பிறந்தன. புற்றுநோய், நீரிழிவு போன்ற
நோய்கள் களைக்கொல்லி உடலில் பட்டதால் உண்டானதாகக் கருதப்பட்டது. இப்போரில் 27
லட்சம் அமெரிக்கப் படைவீரர்களும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கொரியா
நாட்டினரும் போரில் பணியாற்றினர்.
உயர் பதவியில் இருந்தவர்களையும் நோய் விட்டுவைக்கவில்லை. அமெரிக்க அட்மிரல் ஒருவர் 1988 இல் புற்றுநோயால் தனது மகனை இழந்தார். அவருடைய பேரன் மூளைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டான். இதற்கும் ஏஜண்ட் ஆரஞ்சு காரணம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் இதன் உற்பத்தியாளர்களான டௌ, மாண்சாண்டோ, டையமண்ட் சாம்ராக் போன்ற கும்பணிகளின் மீது 1987 இல் தொடுத்த வழக்கால், அவை 18 கோடி டாலர்களை அபராதமாகக் கொடுத்தன. வேளாண்மைக்காக பயன்படுத்தாமல் படையினர் தவறாகப் பயன்படுத்தியதால்தான் இந்த விளைவுகள் என கம்பனிகள் குற்றம்சாட்டின. ஒப்புக் கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்தின்படி பாதிப்பிற்கு ஏற்ற அளவில் ஒவ்வொரு அமெரிக்க வீரரும் 2000 முதல் 5000 டாலர் வரை மாதம் மாதம் பெற்றனர். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியட்நாம் வீரர்களோ மாதத்திற்கு 7 டாலர்களே பெற்றனர்.
இதுபற்றி ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் சரியான தகவல்களும் புள்ளி விவரங்களும் வெளியிடப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இதுபற்றிய விவாதங்களில் வியட்நாமும் அதன் மக்களும் ஓரங்கட்டப் பட்டே உள்ளனர். இப்புவியில் போரினால் அதிக ரசாயனம் பயன்படுத்தப்பட்ட ஒரே இடம் வியட்நாம்தான். வியட்நாமின் 14% காடுகளும் 50% அலையாத்திக் காடுகளும் இதனால் அழிந்தன. போருக்கு முந்தைய நிலைக்கு அவை வளர 100 ஆண்டுகளுக்கும் மேலாகலாம்.
கனடாவைச் சேர்ந்த ஃகேட்ஃபீல்டு ஆலோசனை நிறுவனம் வியட்நாமில் களைக்கொல்லிகளால்
ஏற்பட்ட உடல்நலம் சூழல்கேடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. ஐந்தாண்டு
ஆய்வுக்குப் பிறகு பலவேறு குறைபாடுகளைக் கண்டறிந்தது. ஏறத்தாழ நான்கு லட்சம்
பேர் இறந்தோ அல்லது காயம்பட்டோ இருக்கலாம் எனவும் ஐந்து லட்சம் குழந்தைகள்
பிறவிக் குறைபாட்டுடன் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டது. ஆனால் இதற்குப்
பொறுப்பேற்க இன்னும் அமெரிக்கா மறுக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் போதைப் பொருட்களின் மீதான போர் என்ற பெயரில் அமெரிக்கா இக்களைக்கொல்லியை இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பயன்படுத்துகிறது. 1978 க்கு முன்பிருந்தே இக்களைக்களைக்கொல்லியை மரியுவானா பயிர்களில் மெக்சிகோவிலும் அமெரிக்கா பயன்படுத்துகிறது. இன்னமும் இக்களைக்ககொல்லிகளைத் தெளிப்பதற்கான வசதிகளை அமெரிக்கா இந்நாட்டிற்கு செய்து கொடுத்து வருகிறது. 1990களில் கிளிண்டன் அரசு மத்திய மற்றும் தென்னமரிக்காவில் கோக்கோப் பயிர்களிலும் விமானம் மூலம் இக்களைக் கொல்லிகளைத் தெளிக்க உதவியது. மாண்சாண்டோவின் ரவுண்டப் களைக்கொல்லி பொலிவியா, கவுதமாலா, பெரு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலும் பயன் படுத்தப்பட்டது. இது எல்லாவகைத் தாவரங்களையும் விரைவில் அழிக்க வல்ல சக்தி கொண்டது. இது மிக விரைவாக நீர்நிலைகளில் சென்று சேர்ந்துவிடும் தன்மை கொண்டது.
விமானம் மூலம் தூவியதால் மனிதர்கள் மீதும் உணவுப் பொருட்கள் மீதும் காப்பி போன்ற ஏற்றுமதிப் பயிர்களிலும் படிந்தது. இதனால் கொலம்பியா மட்டுமன்றி வெளிநாட்டவர்கட்கும் பாதிப்பு உண்டு.
1988 இல் குறைந்தது 65000 எக்டேரில் விமானம் மூலம் ரவுண்டப் தெளிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 50% அதிகமாகும். கொலம்பியா நாட்டிற்கு கஞ்சா போன்ற போதைப் பயிர் ஒழிப்பிற்கு என்று 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிளிண்டன் 160 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தார். ஆனால் கடத்தல்காரர்கள் மேலும் உள்நோக்கி ஊடுருவி சென்று விடுகின்றனர்.
ரவுண்டப் இப்போது நம் உழவர்களின் நிலங்களின் மீதும் படையெடுக்கத் தொடங்கி விட்டது. இதைப் பயன்படுத் துவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதுபோலாகும். எனவே உழவர்கள் இதை எதிர்க்க வேண்டும்.