தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சிறுதானியங்களை மீட்கவும் பிரபலப்படுத்தவும் ஒரு கருத்தரங்கு

சிறுதானியங்களை மீட்கவும் பிரபலப்படுத்தவும் ஒரு கருத்தரங்கு தமிழக திட்டக் குழு (state planning commission) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் சேர்ந்து ஒரு சிறப்பான கூட்டத்தை கூட்டின, சிறுதானியங்களின் பெருமையும் அவற்றை பிரபலப்படுத்த ஒரு நாள் கருத்தரங்கு, சென்னை IIT-இல் சென்ற மாதம் அக்டோபர் 25 ஆம் நாள் நடைபெற்றது. இதில் நமது தற்சார்பு இயக்க நண்பர்களும், ஆசா (ASHA) குழுவினரும் பெரும் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தரங்கினை வடிவமைப்பதிலும் கருத்தரங் கிற்கு பல முனைவர்களையும் வல்லுனர்களையும் கொண்டு வரவும் பெரும் பங்காற்றினர்.

தமிழக அரசு, சிறுதானியங்கள் இயக்கம் (millets mission) ஒன்றை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், இந்த அரசின் பல்வேறு துறைகளும் சிறுதானியங்களைப் பரப்பவும் விருத்தி செய்யவும் முற்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு துறைகளின் தலைமைச் செயலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், வேளாண் துறையின் உயர் அதிகாரிகள், வேளாண் பல்கலைகழக வல்லுனர்கள் மற்றும் முனைவர்கள், பல்வேறு பாரம்பரிய வல்லுனர்கள், சித்தமருத்துவர்கள், உணவு நிபுணர்கள் என பலரும் கலந்து கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பல்துறையி னரும் கலந்துகொண்டனர். சிறுதானியங்கள் என்றால் கேழ்வரகு, கம்பு, சோளம் மட்டுமல்லாது இன்று பழக்கத்தில் அதிகம் இல்லாத தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவையும் ஆகும். அவற்றை விருத்தி செய்ய பல ஆலோசனைகள் முன்னிறுத்தப்பட்டன. இந்த புஞ்சை தானியங்கள் எவ்வளவு பாரம்பரியமும் பழமையும் கொண்டது என்பது முதல், விளைச்சலைப் பெருக்குவது, அறுவடைக்கு பின் அரிசியாக்குவது (அந்த செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டிய நிலைமையும் எடுத்துரைக்கப்பட்டது), மதிப்புக் கூட்டுதல் வரை எல்லாம் விவாதிக்கப்பட்டன. உடல்நலனுக்கும் மண் நலனுக்கும் சுற்றுச் சூழலுக்கும், இன்றைய பருவநிலை மாற்றச் சூழலில் எப்படி சிறுதானியங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றும், சத்து குறைபாடு உள்ள (malnourished ) குழந்தைகள் நிறைந்த கிராமப்புறங்களில் உள்ள சத்துணவு மையங்களில் சிறுதானயங்கள் மூலம் இந்தக் குறைபாட்டினை நீக்க முடியும் என்றும் விவாதிக்கப்பட்டது.

இன்று மழை மற்றும் தட்ப வெட்ப நிலை மிகவும் மாறியுள்ள நிலையில் இந்த பயிர்கள் வெள்ளம் மற்றும் வறட்சியினை எளிதாக கையாளும் திறனை விவசாயிகளுக்கு அளிக்கும். இந்தப் பயிர்களின் பெருமையை உணர்த்தவும் எளிதாகவும் ருசியாகவும் நல்ல உணவு தயாரிக்கமுடியும் என்பதை நிலைநாட்ட, ‘ரீஸ்டோர்’ மற்றும் ‘நல்ல கீரை’ குழுவினர் இணைந்து மிகச் சிறப்பான முழுவதும் இயற்கை பொருட்கள் மற்றும்

சிறுதானியங்களினாலான மதிய உணவினை பரிமாறினார். கொள்ளு சூப், தினைப் பொங்கல், வரகு எள்ளுச் சோறு, குதிரைவாலி சாம்பார் சோறு, சாமை தயிர் சோறு, சிவப்பு பொன்னாங்கண்ணி பொரியல், சிறு தானிய இட்லி, கத்தரிக்காய் குழம்பு, நிலக்கடலைத் துவையல், நவதானியக் கொழுக்கட்டை போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.

அந்த உணவு எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் சிறுதானியங்களை முன்நிறுத்துவதற்கு இது மிகவும் உதவியது. எல்லோருக்கும் இவ்வளவு சுவையாகவும் எளிதாகவும் சமைத்து சிறுதானிய உணவு பரிமாறலாம் என்பது ஒரு பெரும் நிறைவையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

மொத்தத்தில் பல்வேறு துறையினரும் இந்த பொன்னான சிறுதானியங்களை பல்வேறு காரணங் களுக்காகவும் இவற்றின் சீர் குணங்களுக்காகவும் இவற்றை விருத்தி செய்வது என தீர்மானித்து தத்தம் துறையின் வாயிலாக கொண்டு செல்வதென முடிவு செய்தனர். நாம் அனைவரும் அரசு கொண்டு வரும் திட்டங்களுக்காக காத்திருக்காமல் விளை விக்கவும் உட்கொள்ளவும் தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org