தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு - உழவன் பாலா

‘வேண்டுமடி விடுதலை எப்போதும் அம்மா’ என்றான் மகாகவி பாரதி. நாம் தற்சார்பு இயக்கத்தில் முக்கிய கோட்பாடாக முன்னிறுத்துவது தனி மனித விடுதலையும், தற்சார்பும்தான். பல தனி மனிதர்கள், குடும்பங்கள் விடுதலை அடைந்து விட்டால் அது ‘பாலிற் பிரை போல்’ மெதுவாய் வளர்ந்து ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கிவிடும். இதை எப்படிச் செயல்படுத்துவது என்று குழப்பமாய் இருக்கும் பொழுது, நாமே குழம்பாமல், நமக்கு முன்னே இருந்த பல அறிவாளிகளையும், ஞானிகளையும் பார்த்து, அவர்கள் எழுத்தைப் படித்துத் தெளிய முயற்சிக்கலாம். . நம்மைச் சிட்டுக் குருவிகளைப் போல் விட்டு விடுதலை ஆகி நிற்கச் சொன்ன பாரதி, விடுதலையின் அங்கங்களை விவரிக்கும் பொழுது வீட்டைப் பற்றி “பீடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு” வாழச்சொல்கிறான். சங்க இலக்கியத்தில் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடைக்கு அடுத்து இருப்பிடமும், ஒழுகலாறும் (வாழ்முறை/தர்மம்) வரிசைப் படுத்தப்படுகின்றன. பாதுகாப்பான உணவைப் பற்றி நம் அனந்து, கவிதா உட்படப் பலர் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கையில், பீடையில்லாத கூடு என்ன என்று நாம் யோசிக்கலாமே. பீடை என்றால் தீமை, பாவம் போன்ற பொருள் தரும். இப்போது நாம் கட்டும் கான்க்ரீட் வீடுகள் (அடியேன் உட்பட) மிகுந்த இயற்கை அழிவையும், ஆற்றல் (சக்தி) பசியையும் தன்னுள் அடக்கியவை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உருவான ஆற்றுப் படுகைகளின் நுண் மணலை நாம் வெகு வேகமாக அழித்து வருகிறோம். சிமெண்டும் தன் தயாரிப்பிற்கென அளவற்ற ஆற்றலை உணவாய்க் கொள்கிறது. இதே போல இரும்பும், சல்லி எனப்படும் மலையை உடைத்துக் கிடைத்த துகள்களும், மரமும், பூச்சும், ரசாயனச் சாயங்களும் எல்லாம் இயற்கை அழிவிலும், தூர தேசங்களிலிருந்து பயணம் செய்வதிலும் தம்முள் பெரும் பீடைகளை அடக்கி உள்ளன. அடுத்த சொல்லான கூடு என்பதற்கு அளவான வீடு என்று பொருள் கொள்ளலாம். ‘இடம் பட வீடிடேல்’ என்ற பழஞ்சொல்லில் இதே கருத்தைக் காணலாம்.

எனவே பீடையில்லாத கூடு கட்ட வேண்டுமானால், நம் முன்னோர்கள் கட்டியது போல் அண்மையில் கிடைக்கும் பொருட்களை வைத்து, இயற்கையுடன் இணைந்த வீடுகளைக் கட்ட வேண்டும். காந்தி, தனக்கே உரித்தான ரத்தினச் சுருக்கத்துடன் ஒன்று சொன்னார், ‘‘ஒரு வீடு கட்டத் தேவையான அனைத்துப் பொருட்களும் அக்கட்டிடத்தின் ஐந்து மைலுக்குள் இருந்து வர வேண்டும்”. இதன் விளைவாக உண்டாகும் தேடல்தான் மண்ணால் வீடு கட்டுவது. மண் வீடு என்றால், நாலடி உயர பொக்கை மண்சுவரும், தாழ்ந்து ஒழுகும் கூரை வீடும் என்று எண்ணி விடக் கூடாது. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் மண்ணால் கட்டப்பட்டதுதான்! நவீன காலங்களில், சிமென்ட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னும், கட்டிடக் கலை வல்லுனர்களில் மண்ணால் கட்டிச் சாதனை புரிந்த இரண்டு மிகப் பெரிய மேதைகள் உண்டு. ஒருவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹசன் ஃபாத்தி (Hasan Fathy), இன்னொருவர் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வந்து இந்தியரான லாரி பேக்கர் (Laurie Baker). தற்சார்பு வாழ்வியலின் முக்கிய அங்கமான இயற்கை வீடுகளை உருவாக்கிய இவர்களில், இவ்விதழில் நாம் ஹசன் ஃபாத்தியைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1900 ம் ஆண்டில் எகிப்து நாட்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்த ஃபாத்தி தன் 26வது வயதில் தற்போதைய கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். 1930ல் நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஏற்ற ஃபாத்தி, 1930ல் இருந்து சுடாத மண் செங்கல்களில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1946ல் இருந்து 1952 வரை புதிய குர்ணா என்ற ஒரு முழுக் கிராமத்தை மண்ணாலேயே உருவாக்கினார் ஃபாத்தி. இவர் கட்டிய மசூதி இன்றும் மழை, வெய்யிலைத் தாங்கி திடமாய் நிற்கிறது.

பாஸ்டன் நகரின் அறிவியல் மேம்பாட்டுக் கழகம் உட்படப் பல பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் அழைப்புக்களும் வாய்ப்பு களும் இருந்த போதிலும், தன் சுய பொருள் ஈட்டலை விடுத்துத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை எளிமையான கட்டிடங்கள், பாரம்பரிய கட்டுமானத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்கு அர்ப்பணித்த ஃபாத்தி, ‘ஏழைகளுக்கான கட்டிடக் கலை’ (Architecture for the poor) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.

நூபியன் வால்ட் என்றழைக்கப்படும் கம்பியும்,சிமென்டும் இல்லாத பரந்த கூறைகளை இவர் புதிப்புத்து நவீன கால கட்டிடங்களில் பயன்படுத்தினார். திருவெண்காடு போன்ற பழைய கோவில்களில் இன்றும் இம் அமைப்பைக் காணலாம்.

தன் 89வது வயதில் கெய்ரோ நகரில் மரணமடைந்த ஹஸன் ஃபாத்தி இயற்கைக் கட்டிடக் கலையில் ஒரு மிகப் பெரும் பங்களித்தவர். அவர் எழுத்துக்களிலிருந்து பதத்திற்காக ஒரு சோறு இங்கே வைக்கிறோம்.

‘‘இயந்திரப் புரட்சியின் வருகைக்குப் பின், பாரம்பரியமாகப் பெற்ற தொழில்நுட்பங்களும், கைக் கருவிகளால் உருவாக்கிப் பழக்கத்தால் துல்லியமாக்கப்பட்ட அறிவும் அழிந்து விட்டன, முற்றும் மறக்கப்பட்டு விட்டன. ஆற்றற் பசி கொண்ட இயந்திரங்கள் பொருட்களை உருவாக்குவதற்கும், கட்டிடங்களைக் கட்டுவதற் கும், உணவை வளர்ப்பதற்கும் பயன் படுத்தப்படுவதால் அவற்றில் தனிமனிதனின் கைவண்ணத்திற்கு இடமின்றிப் போகிறது. எங்கே மனிதன் தன் நுண்ணறிவையும், படைப்புத் தன்மையும் வெளிக்கொணர வாய்ப்பில்லையோ அங்கே உற்பத்தியும் கலைத்தன்மையை இழக்கிறது”

“என் அறுபது வருட அனுபவத்தில், கட்டிடத் தொழில் இயந்திரமயமாகவும், வியாபார மயமாகவும் ஆனதால், கட்டிடம் கட்டும் முறைகளில், உலகின் பல பகுதிகளில் பல உபயோகங்களுடன், பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் கைத்தொழில்களால் வளர்ந்த பாரம்பரிய நாடுகளை தொழில்மய முன்னேற்றம் கொண்ட நாடுகள் பலவீனப் படுத்தும்போது பல சமூக ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன. அவை கலக்கும்போது உருவாகும் மாற்றங்களில் சமூக, திணையியல் ஏற்றத் தாழ்வுகள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதனால் ஆழ்ந்த பாதிப்பு அடைவது பொதுமக்களே. இயந்திர உற்பத்தியின் பொருட்களை வாங்கும்படி அவர்கள் அழுத்தப் படுகிறார்கள். இதன் விளைவு கலாசார, உளவியல், தர்ம மற்றும் பொருள் சீரழிவாகிறது.” - கட்டிடக்கலையும் சூழலும் - ஹசன் ஃபாத்தி. 1986

‘‘ஒரு மனிதன் ஒரு வீடு கட்ட முடியாது, ஆனால் பத்து மனிதர்கள் சேர்ந்து பத்து வீடுகள் சுலபமாகக் கட்டலாம். ஏன் நூறு வீடுகள் கூடக் கட்டலாம். சமூகத்தில் பாரம்பரியமாக இருந்த கூட்டு வாழ்க்கை பரிமளிக்க ஏற்ற ஒரு வாழ்முறை நமக்குத் தேவை. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நாம் காசில்லாத ஏழைகளின் பொருளாதாரத்திற்கு அடிபணியச் செய்ய வேண்டும். நுண்ணிய கலை நோக்கத்தை நாம் கட்டிடங்களில் சேர்க்க வேண்டும். ஏனெனில் எவ்வளவு எளிமையாகக் கட்டுகிறோமோ அவ்வளவு அழகைக் கூட்டினால்தான் பாமர மனிதனுக்கு மரியாதை கூடும்.” ஆங்கிலம், அரபு மற்றும் பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்ட ஹசன் ஃபாத்தியின் எழுத்துக்களை கீழ்க்கண்ட இணைய தளத்தில் காணலாம்.

http://archnet.org/library/images/sites.jsp?select=collection&key=663&order_by=location&collection_id=663

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org