தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மரபீனி மாற்றப் பயிர்களும் இருண்டு வரும் நம்முடைய எதிர்காலமும்- ராம்கி


இயற்கையே நமது வாழ்வாதாரம் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இருப்பினும், இயற்கையை நாம் மிக வேகமாக அழித்து வருகிறோம். இதன் விளைவுகள் நம் தொழில், வாழுமிடம், பொருளாதார வசதி, கல்வித் தகுதி, ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவை. இவ்விளைவு களை நாம் அனைவருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறது பழந்தமிழ் இலக்கியம். நம் உணவாகிய நிலத்தையும் நீரையும் தேவையில்லாமல் கெடுத்துவரும் ஒரு செயலைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஒரு சில நிமிடங்களை யாவது ஒதுக்குவீர்களென நம்புகிறோம்.

அ. மரபீனி மாற்றம் என்பது என்ன?
மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து தாளாண்மையில் ஏற்கெனவே படித்திருப்பீர்கள். உங்களுக்கு நினைவுபடுத்துவதற்குச் சில வரிகள் இதோ. இயற்கையில் ஒன்றுடன் ஒன்று இணையாத இரண்டு வெவ்வேறு வகை உயிரினங்களைச் சோதனைச் சாலையில் இணைய வைத்துப் புதியதோர் உயிர்வடிவத்தை உருவாக்குவது இதன் அடிப்படை. எடுத்துக்காட்டாக, தக்காளி அறுவடைக்குப் பின் நிறைய நாட்கள் அழுகாமல் இருப்பதற்காக ஒருவகை மீனின் மரபீனி தக்காளியின் மரபீனியுடன் சோதனைச் சாலையில் பிணைக்கப்படுகிறது. அதனால் அந்தத் தக்காளி, மரபீனி மாற்றப் பெற்ற தக்காளியாகிறது. (அது காயா அல்லது மீனா? அந்தத் தக்காளி சைவமா, அசைவமா?)

ஆ. மரபீனி மாற்றப் பயிர்கள் தேவையா?
உலக மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. அனைத்து மக்களுக்கும் போதிய சத்துள்ள உணவு கிடைக்க வேண்டுமானால் விவசாயத்தில் புதுத் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவை என்பது அவற்றைப் புகுத்துவோர் கூறும் அப்பட்டமான பொய்களில் ஒன்று. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தில் பசுமைப் புரட்சி எனும் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தியபோதும் இதே காரணத்தைச் சொன்னார்கள். பசுமைப் புரட்சியை அரசாங்கங்கள் விவசாயிகளிடத்தே புகுத்தத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதன் மறைபொருளையும் (பசுமைப் புரட்சியின் பின்னணியில் உள்ள பொய்கள் ஆகியவை) அதனால் விளையப் போகிற பெருந்தீமைகளையும் பல அறிஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் தெளிவாக எடுத்துரைத்தனர். எடுத்துக்காட்டு ‘உலகளாவிய பஞ்சம் - பன்னிரண்டு பொய்கள்’ என்ற (பொருள்படும் தலைப்பிலான ஆங்கில) நூல் விளக்கியது. ஆனால், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு இயந்திரங்களின் பணபலத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் பசுமைப் புரட்சியை விவசாயிகளின் தொண்டைக் குழிக்குள் திணித்தவர்களுக்கும் அவ்வாறு திணித்தவர்களைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கும் செல்வம் பெருகிற்று. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், நுகர்வைக் கட்டுப்படுத்துவதுதான் மிக முக்கியமாகவும் உடனடியாகவும் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியதாகும். எடுத்துக்காட்டாக, கடந்த இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கள்தொகை மூன்று மடங்கு பெருகிற்று. ஆனால் தண்ணீர் பயன்பாடு ஏழு மடங்கு அதிகரித்தது. உலோகம், மரப் பொருட்கள், ஆற்றல் முதலிய அனைத்து இயற்கைப்பொருட்களின் பயன்பாடும் இதுபோலவே மக்கள்தொகை அதிகரிப்பதை விட மிகவேகமாகப் பெருகி வருகிறது. பணவசதி அதிகமாகையில் நுகர்வும் அதிகமாகிறது. நுகர்வை அதிகரித்துக்கொண்டே போவதனால் விளையும் தீமைகளுக்குப் புதுப்புது தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தீர்வு கண்டுவிடலாம் என்பது பொறுப்பற்ற செயல். மேலும், நம் ஆடம்பரத்திற்காக நம் சந்ததியி னரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது நியாயமும் அல்ல.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க அதிகரிக்க உலகில் பசி, பட்டினி, பஞ்சம் அதிகரிக்கின்றன. அமோக விளைச்சல் உள்ள அதே நேரத்தில் பட்டினிச் சாவுகளும் அதிகரிக்கின்றன. அரசின் சேமிப்புக் கிடங்குகளில் எலிகள் தானியங்களை உண்டு கொழுக்கின்றன. பல லட்சம் டன் தானியங்கள் அழுகி வீணாகின்றன. ஆனால், ஒருவேளைச் சாப்பாடுகூடக் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் தவிக்கின்றனர். உணவு கிடைக்கும்போதும் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் பல லட்சம் குழந்தைகளும் கருவுற்றிருக்கும் பெண்களும் வளமும் வலிமையும் குன்றி நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களால் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்குபெற முடிவதில்லை. அதனால் மிக அரிய வளமான மனித வளம் யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது.

உலகப்புகழ்பெற்ற நோபெல் பரிசை நம் நாட்டுப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென் சில ஆண்டுகளுக்கு முன் பெற்றார். அவருடைய ஆய்வுகளில் முக்கியமான ஒன்று பசி, பட்டினிக்கு முக்கிய காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான், உணவுப்பற்றாக்குறை அல்ல என்பதாகும்.

பசுமைப் புரட்சிக்காரர்கள் சொன்னதற்கு நேர்மாறாக உலகில் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவையும் பெருகிக் கொண்டே உள்ளன. ஆனால், ‘முதல் பசுமைப் புரட்சி வெற்றி யடைந்துவிட்டது. அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இனி நாம் இரண்டாவது பசுமைப் புரட்சிக்குச் செல்லவேண்டும்’ என்று இப்போது அவர்கள் சொல்கிறார்கள். சொல்வதோடு நிற்காமல் தமது பலம் முழுமையையும் பயன்படுத்தி இரண்டாம் பசுமைப் புரட்சியை வெவ்வேறு விதங்களில் நம் அனைவர் மீதும் திணிக்கிறார்கள். அதன் முக்கிய அங்கமே மரபீனி மாற்றப் பயிர்களாகும்.

இ. மரபீனி மாற்றத்தால் வரும் தீமைகள் யாவை?

பசுமைப் புரட்சியின் அடிப்படையில் விவசாயிகள் வேதி உரங்களைப் பெருமளவு பயன்படுத்தியதன் விளைவாக விளைநிலங்கள் வளமிழந்தன. தொடக்கத்தில் விளைச்சல் அதிகரித்தபோதும் பின்னர் படிப்படியாகக் குறைந்து கொண்டேவந்தது. மேன்மேலும் உர அளவை அதிகப்படுத்தியும் எந்தப் பலனும் இல்லாமல்போயிற்று. இது மட்டுமல்ல. உழவர்களின் நண்பர்களான மண்புழுக்கள் வேதியுரங்களின் தாக்கத்தால் செயலிழந்தன. உயிர்க்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தியதால் பயிர்களைத் தாக்கும் புழு பூச்சிகளுடைய எதிர்ப்புத்திறன் அதிகரித்தது.

நன்மை செய்யும் பூச்சிகள் (தேனீக்கள் முதலியன), பறவைகள், ஆகியவை பெருமளவில் அழிந்தொழிந்தன. விவசாயிகளின் வெளியிடு பொருட்செலவுகள் அதிகரித்துக்கொண்டே வந்த அதே நேரத்தில் விளைச்சல் குறைந்து கொண்டே போயிற்று. பசுமைப்புரட்சியினால் விளைந்த தீமைகள் அனைத்தும் இந்த இரண்டாவது பசுமைப் புரட்சியினாலும் விளைந்தே தீரும். அது மட்டுமன்றி, இன்னும் மிக மோசமான விளைவுகளும் நேரும்.

விவசாயிகள் தமது தற்சார்பை முற்றிலும் இழந்து விடுவார்கள். விதைகளைச் சேமித்து வைப்பதும் பரிமாறிக்கொள்வதும் குற்றமாகி விடும். அதை மீறிச் சேமித்து வைத்தாலும் முளைக்காத வகையில் மடிவிப்பு விதைகள், மலட்டு விதைகள் முதலானவற்றை மரபீனி மாற்றத்தை ஒட்டிய உயர் உயிர் தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கமுடியும். அதிக விலை கொடுத்து விதைகளையும் பிற இடுபொருட்களையும் வாங்க வேண்டிவரும். விவசாயிகள் பெரும் நிறுவனங்களுக்கு அடிமைகளாக வேண்டிவரும். இவையெல்லாம் வெறும் கற்பனையன்று. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதற்கு மரபீனி மாற்றப்பட்ட பி.ட்டி பருத்தி முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பன்மயத் தன்மை இயற்கையின் மிக முக்கியமான அங்கம். உலகில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட வகை உயிரினங்கள் உள்ளன என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவற்றில் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தருவன பல. குறிப்பிட்ட தானியம், பருப்பு, காய்கறி எதை எடுத்துக்கொண்டாலும் அதிலேயே பல நூறு வகைகள் உள்ளன. (எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன) ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்பவெப்பம், மழையளவு, மண்ணின் தன்மை முதலான இயற்கை வளங்களுக்கு ஏற்ற வகைகளை இயற்கையுடன் இணைந்து விவசாயிகள் பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கினர். நம் பகுதியில் விளைந்தவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. பசுமைப்புரட்சியின் விளைவாக விவசாயிகள் வீரிய ஒட்டு வகைகளைப் பயிரிட ஆரம்பித்தனர். அதனால் ஒரு சில ரகங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. பாரம்பரிய இனங்கள் இருக்குமிடம் தெரியாமல் போயின. புதிய வீரிய ரகப்பயிர்களுக்கு வேதியுரங்கள், உயிர்க்கொல்லிகள், தண்ணீர் ஆகியவற்றின் தேவை மிக அதிகமாயிற்று. வேதியுரங்களைக் கொட்டியதால் மண் வளம் அழிந்தது. பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறன் ஏறக்குறைய முழுவதும் அழிந்துவிட்டது. ஒரு சில ரகங்களை நம்பி நம் உணவாதாரம் இருப்பது ஆபத்தானது என்பதற்கு அண்மைக் கால விவசாய வரலாற்றில் உலகளாவிய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

மரபீனி மாற்றம் விரைவிலேயே கட்டுக்கடங்காமல் போய்விடும்என்ற எச்சரிக்கை தற்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. வேளாண் விஞ்ஞானிகள் நினைத்ததை விட வேறுவகைகளில் மரபீனி மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டது. களைக்கொல்லிகளைத் தாங்கி வளரும் களைகள் தோன்றிவிட்டன. அவற்றை அழிக்க மேன்மேலும் அதிக அழிவுத்திறன் உள்ள களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிவரும். இது ஒரு முடிவில்லாத போட்டிக்கு இட்டுச்செல்லும்.

இந்தத் தொழில்நுட்பத்தையும் மீறி பயிர்களைத் தாக்கும் புழு பூச்சிகள் வளரும் என்பதற்கும் இப்போதே அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அதனால் மேன்மேலும் உயரிய தொழில்நுட்பங்களை நோக்கி விவசாயிகள் இழுத்துச் செல்லப்படுவர். இதுவும் ஒரு முடிவில்லாத போட்டிக்கு இட்டுச்செல்லும். விவசாயிகளுடைய இன்னல்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டேபோகும்.

ஊடுபயிர், கலப்புப் பயிர் செய்தல் ஆகிய சிறந்த, எளிய தொழில்நுட்பங்களுக்கு இந்தச் செயற்கை விவசாயத்தில் (அதிக) இடமில்லை.

ஈ. இதில் நம் அரசுகள், ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகளின் பெரும்பான்மை நிலை என்ன?

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதே நம் ஆட்சியாளர்களிலும் அறிவுஜீவிகளிலும் பெரும்பாலானோரின் நிலைபோலத் தெரிகிறது. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற நிலையிலும் பலர் இருப்பர். மிகச் சிலரே உண்மையைத் தேடுபவர்களாக இருப்பர். அதிகாரத்தில் உள்ளவர்களில் உண்மை எந்தத் திசையில் இட்டுச் சென்றாலும் அஞ்சாமல், தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் புகழ், பணம் ஆகியவற்றுக்கும் அடிமையாகாமல் இருப்போரை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல் தோன்றுகிறது.

உ. விவசாயிகள் என்ன செய்யவேண்டும்?

செயற்கையான (வேதியுரங்கள் முதலிய) வெளியிடுபொருட்களைப் பயன்படுத்துவதை அறவே ஒதுக்கி இயற்கை வேளாண்மைக்குத் திரும்பவேண்டும். இயற்கை வேளாண்மை செய்தால் வருமானம் குறையும் என்பது பெரிய பொய் என்பது உலகம் முழுவதும் பரவலாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பாரம்பரிய ரகப்பயிர்களை இயற்கை உரமிட்டுப் பயிர் செய்வதுடன் நிரூபிக்கப்பட்ட தொழில் நுட்பங்களான ஊடுபயிரிடுதல், கலப்புப் பயிரிடுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

வேதி உரங்களுக்கும் உயிர்க்கொல்லி களுக்கும் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் மானியங்களை நிறுத்தவேண்டும். நிறுத்தாவிட்டாலும் இயற்கை வேளாண்மை செய்வோருக்கு அதே அளவு மானியம் தர வேண்டும் என்று போராடிப்பெறவேண்டும். அப்படிச் செய்தால் இயற்கை வேளாண்மையே நல்லது என்ற உண்மை அம்பலமாகிவிடும். எந்த விவசாயியும் விரும்பி வேதியுரங்களையும் உயிர்க்கொல்லிகளையும் பயன்படுத்தமாட்டார். விவசாயிகளும் நுகர்வோரும் நலம் பெறுவோம். நம் சுற்றுச் சூழலும் நலம்பெறும்.

விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வண்ணம் அரசு இயந்திரத்தை திசை திருப்ப வேண்டும். ஊழலையும் வீண்செலவு களையும் குறைப்பதன் மூலம் விவசாயிகளும் விவசாயக் கூலித்தொழிலாளர்களும் மட்டுமன்றி அனைத்து மக்களுமே தம்முடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும்.

அதற்கான இயற்கை வளங்கள் இன்னும் நம் நாட்டில் உள்ளன. மேலும், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் முதலிய பெரிய பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல், பொருளாதாரச் சூழ்ச்சிகளையும் புரிந்து ஒன்றுபட்டு அவற்றை எதிர்த்தால்தான் நம் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

நாம் ஒன்றுபட்டால் நம்மால் கண்டிப்பாக இதைச் செய்யமுடியும். தமிழகம் வற்றா ஆறுகள் இல்லாத மாநிலம். நம் காட்டு வளங்களையும் பெருமளவு அழித்து விட்டோம். குளம் குட்டைகளை மூடி விட்டோம். எனவே மழைநீரை நம்மால் பெருமளவு பயன்படுத்த முடிவதில்லை. நெல், கரும்பு, பருத்தி, மஞ்சள், வாழை, தென்னை முதலிய பயிர்கள் நீர் மிக அதிகம் தேவைப்படும் பயிர்கள். விவசாயிகள் இவற்றை அதிகம் பயிரிடுவதற்குக் காரணம் அரசின் தவறான பொருளாதாரத் திட்டங்களே. அந்தத் திட்டங்களை மாற்ற வேண்டும்.

இவற்றைச் செய்தால்தான் மக்களிடையே விவசாயத்தின் மதிப்பு மீண்டும் உயரும். சிறு, குறு விவசாயிகள் வாழ முடியும். நம் நாடு உணவுத் தன்னிறைவு அடையமுடியும். இல்லாவிட்டால் உணவுப் பஞ்சம் நம் அனைவரையுமே நெருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஊ. நுகர்வோர் என்ன செய்யவேண்டும்?

இது முழுக்க முழுக்க விவசாயிகளை மட்டுமே பாதிக்குமா? ‘நான் விவசாயி அல்ல. எனவே நான் ஏன் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டும்? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்னிடம் பணம் உள்ளது. நல்ல தரமான விளைபொருட்களை வாங்கிக்கொள்ள என்னால் முடியும். எனவே நான் இதைப்பற்றி கண்டுகொள்ளப்போவதில்லை’ என்று நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். ஏனெனில், இன்று உங்களை இந்த ஆபத்து நெருங்காமலிருக்கலாம். ஆனால், மிக விரைவில் உங்களுக்கும் வேறு வழி இல்லாமல்போகும். நீங்களும் மரபீனி மாற்றப்பெற்ற தானியங்கள், காய்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டிவரும். அவற்றை உண்பதால் ஏதேனும் கேடுகள் இருப்பின் அவற்றை நீங்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அந்தத் தொழில்நுட்பம் கேடுள்ளது என்று சிறந்த உயிரியல் அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இன்னும் ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

ஆராய்ச்சிகள் முழுமை பெறாத நிலையில் அவசர அவசரமாகப் பெரும் நிறுவனங்களும் சில அரசுத் துறைகளும் இந்தத் தொழில் நுட்பத்தைப் பரப்புவதன் அரசியல், பொருளாதாரப் பின்னணி என்ன என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அரசியல் எனக்குப் பிடிக்காது என்று ஒதுங்குவது தவறான அணுகுமுறை மட்டுமல்ல. கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருப்பதே மிகப்பெரும் அரசியல், மிக மோசமான அரசியல் என்பதை நாம் உணர வேண்டும். இந்தப் போக்கு எப்படிப்பட்ட பேராபத்தில் முடியும் என்பதற்கு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மார்ட்டின் நீய்மால்லெர் என்ற ஜெர்மானியப் பாதிரியார் சொன்ன கீழ்க்கண்ட வரிகள் நல்ல சான்று.

முதலில் அவர்கள்
கம்யூனிஸ்ட்களைப் பிடிக்க வந்தார்கள்.
நான் கண்டு கொள்ளவில்லை.
ஏனெனில், நான் கம்யூனிஸ்ட் அல்லன்
பிறகு அவர்கள்
யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்.
நான் கண்டுகொள்ளவில்லை.
ஏனெனில், நான் யூதன் அல்லன்
பிறகு அவர்கள்
கத்தோலிக்கர்களைப் பிடிக்க வந்தார்கள்.
நான் கண்டுகொள்ளவில்லை.
ஏனெனில், நான் கத்தோலிக்கன் அல்லன்
இறுதியாக என்னைப் பிடிக்க வந்தார்கள்.
அந்தோ,
என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை
(இதில் அவர்கள் என்பது கொடுங்கோலன் இட்லரின் போர் வீரர்களைக் குறிக்கின்றது.)
விவசாயிகள் தன்னிறைவு பெறுவதற்கு நாம் அனைவருமே பாடுபடவேண்டும். இதற்கு முதற்படியாக நாம் ஒவ்வொருவரும் விவசாயத்தை எதிர்கொண்டுள்ள பிரச்னை களைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு ஊர்/நகர மன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம் முதலியவற்றிலுள்ள நம் பிரதிநிதிகளையும் வெவ்வேறு துறைகளிலுள்ள அதிகாரிகளையும் ஒன்றுபட்டுச் சந்தித்து சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்குப் பாடுபடுமாறு திட்டங்களை மாற்றியமைக்கச் செய்ய வேண்டும். இது மிகவும் கடினமான செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்களாட்சியில் நம்பிக்கை வைத்து பொதுமக்களாகிய நாம் ஒன்றுபட்டுச் செயல்படாவிட்டால் இழப்பு நம் அனைவருக்கும் கண்டிப்பாக நேரும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’ என்ற பாரதியார் கூற்றுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும். விவசாயிகளின் தன்னிறைவு என்பது நம் நாட்டின் தன்னிறைவுக்கும் பாதுகாப்புக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அதைக் கோட்டை விட்டுவிட்டால் நாம் ஒவ்வொருவரும் படையில் சேர்ந்தாலும் நம் நாடு மீண்டும் முழு அளவில் அடிமைப்படுவதைத் தடுக்கமுடியாது. நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். அரிசிச் சாப்பாட்டையே ஒவ்வொரு நேரமும் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, வரகு முதலிய தானியங்களையும் பருவத்துக்கேற்ப நம் பகுதியில் விளையும் கத்தரி, கீரை, சுரை, புடல், பாகல் போன்ற காய்கறிகளையும், கொய்யா, மா, பலா, மாதுளை போன்ற உள்ளூர் பழங்களையும் அதிகம் பயன்படுத்த வேண்டும். மிகத் தொலைவிலிருந்து அதிக ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டு வரப்படும் கேரட், பீட்ரூட் முதலான காய்கறிகளையும் ஆப்பிள் முதலான பழங்களை யும் உண்பதைப் பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உண்பதைக் குறைப்பது சூழல் பாதுகாப்புக்கு நாம் செய்யக்கூடிய எளிய பங்களிப்பு என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. மொத்தத்தில், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்தச் செயல் அவசியம்தானா, அதனால் தண்ணீரும் ஆற்றலும் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன, சூழலுக்கு எந்த அளவில் கேடு நிகழ்கின்றது முதலிய கேள்விகளுக்கு விடை தேடிய பின்னரே அச்செயலைச் செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
வரம்பற்ற நுகர்வைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். குறைவாகப் பயன்படுத்து, உள்ளூரில் விளையும் பொருட்களை மட்டுமே பயன்படுத்து, ஒரு பொளுளை மீண்டும் மீண்டும் பயன்படுத்து, இறுதியில் தூக்கி எறியாமல் மறுசுழற்சி செய்வது (வேறு வகைகளில் பயன்படுத்து) என்பதே நமது மந்திரமாகவும் செயல்பாடாகவும் இருக்கவேண்டும். நம் பொருளாதார வசதி அதிகமாக அதிகமாக நம்முடைய தார்மீகப் பொறுப்பும் அதிகமாகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். புதுப்புதுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதே பெருமை என்று நிறுவனங்கள் மிகவும் சூட்சுமமாக விளம்பரங்கள் மூலம் திட்டமிட்டு நமக்குப் புகட்டுகின்றன. இதை எதிர்த்து, ‘நான் நுகர்வைக் குறைத்துக் கொண்டேன்’ என்பதனை ஒவ்வொருவரும் பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லும் நாள் வரவேண்டும். அதை நோக்கி நாம் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும். அது நடக்காது என்கிற வர்கள் முகத்தில் கரிபூசவேண்டும்.

எ. இறுதியாக ...
நாம் தொழில்நுட்பத்தையும் அறிவியல் முன்னேற்றங்களையும் வெறுத்து ஒதுக்குபவர்கள் அல்லர். நிலையான, நீடித்த, சூழலுக்கு இசைந்த, எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறோம். தேவைக்கு அதிகமான உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது நம்மிடம் கத்தி இருக்கிறது என்பதற்காகக் கையை வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

நுகர்வைக் குறைப்பதன் மூலம் மாசுக்கட்டுப் பாட்டைக் குறைப்பதே சிறந்த, நிலையான தீர்வாகும். அதை விட்டுவிட்டு உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாசுக்கட்டுப் பாட்டைக் குறைப்போம் என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க முயல்வது போன்றதாகும்.

அதுபோலவே, பொருளாதார ஏற்றத்தாழ்வு களைக் குறைப்பதன் மூலம் இப்போது உள்ளதொழில்நுட்பங்களையும் இயற்கைச் செல்வங்களையும் வைத்தே உலக மக்கள் அனைவரும் நல்ல வாழ்க்கை வாழமுடியும் என்றிருக்கையில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க மனமில்லாமல், தொழில்நுட்பம் மூலம் தீர்வு தேடுவது போகாத ஊருக்கு வழி தேடுவதைப் போன்றதே.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (குறள் 1032)
பொருள் ஈட்ட வருத்தும் துன்பத்தைத் தாங்காது உழவை விட்டு நீங்கிப் பிற தொழில் செய்பவர்களுக்கும் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள் வாழ்க்கை எனும் வண்டிக்கு அச்சாணி போன்றவர்கள்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org