தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பருவநிலை மாற்றமும் விவசாயமும் - டாக்டர் கிருஷ்ண பீர் சௌதாரி

பூமியைச் சுற்றிய வளி மண்டலத்தில் கரிக்காற்று (CO2) மற்றும் மீத்தேன், நைட்ரச ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகம் குவிவதால் உண்டாகும் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பசுங்குடில் வாயு குவிதல் (GHG) இதனால் உண்டாகும் பசுங்குடில் விளைவு புவி வெப்பமடைதல் (global warming) பருவநிலை மாற்றம் ஆகிய சங்கிலித் தொடர் தீய விளைவுகளின் தொடக்கப்புள்ளி மனிதனும் மனிதச் செயல்பாடுகளுமே.

அமெரிக்கா (5841 டன்) ஐரோப்பா (3271 டன்) ஆஸ்திரேலியா (377 டன்) ஆகியவை அதிகம் கரிக்காற்று குவிப்ப¬வாக உள்ளன. தற்போது இந்தியா (1149 டன்) சீனா (5062 டன்) ரசியா (1544 டன்) போன்ற வளரும் நாடுகள் அவற்றிற்குப் போட்டியாக முன்னேறி வருகின்றன. இந்தப் போட்டி தொடருமானால் இன்றுள்ள கரிக்காற்றின் அளவு இரட்டிப்பாகி விடும்.

பருவநிலை மாற்றம் மனித உயிர்வாழ்வின் முதன்மைத் தேவையான உணவு உற்பத்தியைப் பாதிக்கும். உலகின் விவசாயம் பெரிதும் மழையை நம்பியே உள்ளது. இது இந்தியாவில் 41 விழுக்காடு. பருவநிலை மாற்றத்தால் மழை குறையும். ஏற்கனவே இருக்கும் நீருக்கும் அதிகப் போட்டி உண்டாகும். உணவு உற்பத்தி உறுதியின்றி மோசமாகும். உலகின் உணவு உற்பத்தி, தரம், கிடைக்கும் அளவு ஆகியவற்றில் மாறுபாடு ஏற்படும். இதனால் அரசியல் பொருளாதார குழப்பம் ஏற்படும்.

விவசாயம் சார்ந்த கால்நடை உற்பத்தி, விநியோகம் என அனைத்தும் குறைந்து கட்டுப்பாட்டை இழக்கும். புவி வெப்பமடைதல் முன் எப்போதும் இல்லாத வகையில் 2001-09 இல் அதிகமாக இருந்தது. புவியின் வெப்பம் 0.4 இல் இருந்து 0.6 டிகிரி பாரன்கீட்டாக உயர்ந்துள்ளது.

பசுங்குடில் வாயு உற்பத்திக்கான காரணங்கள், மின்னுற்பத்தி (61%) விவசாயம் (28%) தொழிற்சாலைகள் (8%) நிலப்பயன்பாடு மாற்றம் (1%) புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயரும், மழை அளவு மாறுபடும், முன்கணிக்க முடியாதபடி வறட்சி, வெள்ளம், அனல் காற்று, புயல், சூறாவளி, சுனாமி ஆகியன எதிர்பாராமல் திடீரென உண்டாகும். இதனால் உணவு உற்பத்தி குறையும் பனி மலை உருகும். ஆற்றில் வெள்ளம் பெருகும், புதிய நோய்கள் உண்டாகும். உயிரினங்கள் அழியும்.

பசுங்குடில் வாயுக்கள் அதிகமாவதற்கு விவசாயமும் போக்குவரத்தும் முக்கிய காரணங்களாகின்றன. இதனால் இன்னும் 100 ஆண்டுகளில் 1.5 முதல் 4.5 டிகிரி பாரன்கீட் உயரும். இதன் பாதிப்புகள் உலகை அழிக்கும்.

பருவநிலை மாற்றமும் விவசாயமும்

இந்தியா ஒரு விவசாய நாடு, நமது விவசாயம் பெரிதும் பருவமழை சார்ந்தது, விவசாயம் உணவு அளிப்பதுடன் நமது பொருளாதாரத்தின் அடித்தளமும் ஆகிறது. பருவநிலை மாற்றம் விளைச்சலை பாதிக்கிறது. மறுபுறம் பாசன நீர் வரத்தையும் பாதிக்கிறது. வெப்பமும் பனிப் பொழிவும் புன்செய் விளைச்சலையும் பாதித்துள்ளது. வளர்ந்த பணக்கார நாடுகளில் பருவநி¬ மாற்றத்தால் வெப்பம் உயர்வதால் பனி குறைந்து, பனிக்காலத்திலும் விவசாயம் செய்ய வாய்ப்பு உண்டாகிறது. இதனால் பணக்காரக் குளிர்பிரதேசங்கள் அதிக விளைச்சல் பெரும் வாய்ப்பு உண்டாகிறது. தெற்காசிய வெப்ப நாடுகளில் மழைசார்ந்த சோளம் கோதுமை போன்றவற்றின் விளைச்சல் குறைகிறது. ஆப்பிரிக்காவின் சகாராவின் கீழ்ப்பகுதிகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஒரு புறம் விளைச்சல் குறைவும் மறுபுறம் அதிகரிப்பும் உண்டாகிறது.

விவசாயமும் கரிவளியும்

வளிமண்டிலத்தில் கரிவளியின் அதிகரிப்பால் ஓசான் வாயுவின் அளவு அதிகரிப்பதுடன் வெப்பமும் அதிகரிக்கிறது. தாவரங்கள் காற்றிலுள்ள கரிவளி, வெயில், வேர் மூலம் பெறும் நீர் ஆகியவற்றைக் கொண்டு ஒளிச்சேர்க்கை நடத்துகிறது. இச்செயலால் சர்க்கரை, மாவுச்சத்து, செல்லுலோஸ் ஆகியவை தயாராகின்றன. கோதுமை, நெல், சோயா போன்ற சி-3 வகைத் தாவரங்கள் கரிவளி அதிகமாவதை உடனே ஏற்கின்றன. மக்காச்சோளம், கரும்பு போன்ற சி-4 வகைத் தாவரங்களில் அதிகக் கரிவளியால் இலைகள் விரிவதும் கரிமத்தை ஈர்ப்பதும் நீராவி வெளியீடும் பாதிக்கப்படுகிறது. இவற்றால் நீர்ப்பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும், இதனால் கரிவளி அதிகரிப்பின் எதிர் விளைவுகள் குறைகிறது. வெப்பம் அதிகரிப்பால் பயிரின் வளர்ச்சிக் காலம் குறைந்து விளைச்சல் குறைகிறது. இயற்கை விவசாயம் குறைவான கரிமப் பயன்பாடு (less carbon intensive) கொண்டது என்பதால் அது பருவநிலை மாற்றத்தைச் சீர்செய்ய உதவுவதுடன், செலவையும் குறைக்க உதவகிறது.

அதிக வெப்பத்தின் பாதிப்புகள்

புவி வெப்பமடைதல் மத்திய மற்றும் உயர் புவிநேர்கோட்டுப் பகுதிகளில் உள்ள பயிர்களின் வளர்ச்சிப் பருவ காலத்தை நீட்டிக்கும். எனவே இளவேனில் காலத்தில் விரைவாக நடவு தொடங்கலாம். இதனால் விளைச்சலும் அறுவடையும் விரைவில் முடியும். இதனால் ஒரு பருவத்தில் இரண்டு விளைச்சலைக் காணவும் முடியும். பயிர்களும் இம்மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்கின்றன. ஆனால் உயர் புவிநேர்கோட்டு பகுதியில் காணப்படும் நீண்ட நாட்களைக் கொண்ட கோடை காலத்திற்கு இப்பயிர்கள் ஈடுகொடுக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. வெதுப்பாக இருக்கும் கீழ் புவிநேர்கோட்டுப் பகுதிகளில் பயிர்கள் அதிகக் கரிவளியை சுவாசத்தால் வெளியேற்றுகின்றன. இது வளர்ச்சிக்கு அவ்வளவு உகந்தது அல்ல. வெப்பம் தேவைக்கு மேல் அதிகரிக்கும்போது பயரின் வளர்ச்சியும், விளைச்சலும் எதிர்மறையான விளைவைச் சந்திக்கின்றன. இரவு வெப்பம், பகல் வெப்பத்தைவிடக் குறைவாக அதிகரிப்பது பசுங்குடில் விளைவின் நீட்சியே. இரவு வெப்பநிலை அதிகரிப்பு, விளைச்சலைக் குறைக்கும் மறுபுறம் அதிக வெப்பம் பயிரின் வளர்ச்சியைத் விரைவுப்படுத்தி கதிர் முதிர்ச்சியையும் விளைச்சலையும் குறைத்து விடும்.

ஈரப்பதமும் விவசாயமும்

பருவநிலை மாற்றம் பாசனப் பயிரின் நீர் ஏற்புத்திறனை நேரடியாகப் பாதிக்கிறது. உள்ளக புதுப்பிக்கக் கூடிய நீர் ஆதாரம் (internal renewable water) என்பது மழை, பனி போன்ற பொழிவின் மூலம் பெறப்படும் ஆதாரமாகும். இது உலக அளவில் பெரிதும் அதிகரித்த போதும் கிழக்கு வடக்கு மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் சகாராவின் கீழ்ப்பகுதியிலும் குறைகிறது. இதனால் பயிரின் நீர்த்தேவை அதிகரிக்கிறது. நீர்ப்பயன்பாடு, தேவை இவற்றுக்கு இடையேயான விகிதம் (irrigation water supply reliability -IWSR) குறையும்போது பாசனப் பயிரின்நீர்த்தேவை அதிகரிக்கிறது. இது சகாராவின் கீழ்ப்பகுதியில் மோசமாவதுடன் பிற ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகரிக்கிறது.

விவசாயத்திற்கான நீர் கிடைப்பது வருங்காலத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும். இதைச் சீர்படுத்தும் முயற்சி உலகம் முழுவதும் நடக்கிறது. கரிவளியின் அதிகரிப்பு நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. நீர் இழப்பு குறைகிறது. இதனால் பொழிவும் குறைகிறது. இதனால் நீரியல் சமநிலை மாறுபடுகிறது. இது பருவநிலை மாற்றத்திற்குக் காரணமாகிறது. பயிர், பருவநிலை மாற்றம், நீர்ச்சுழற்சி இவற்றுக்கிடையான தொடர்பை இது உணர்த்துகிறது. பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு, நீராவியாதல், மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் மக்காச்சோளம், சோயா ஆகியவற்றில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும். நீர்ப்பயன்பாடும் தேவையும் அதிகமாகும்போது விவசாயத்திற்கும் நகர்ப்புறத் தேவைக்கும் மோதல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் குறைவதால் அதை ‘பம்ப்’ மூலம் உறிஞ்சி எடுக்க மின்சாரம் தேவைப்படுகிறது. இது சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறது. புவி வெப்பத்தால் நீராவியாதல், பயிருக்கான நீர்த் தேவை அதிகரித்தல், நிலம் உவர்ப்பாதல் போன்ற பல நெருக்கடிகள் தோன்றும்.

மோசமான பருவநிலையும் விவசாயமும்

பயிரின் சீரான வளர்ச்சிக்கு சீரான பருவநிலை வேண்டும். அதிகரிக்கும் வெப்பம் விளைச்சலைக் குறைக்கும். 30 டிகிரி செ. மேலான வெப்பம் 8 மணி நேரம் நீடிக்குமானால் கோதுமையின் விளைச்சல் குறையும். கதிர் பிடிக்கும் காலத்தில் வெப்பம் 38 டிகிரி செ. மேல் 1 மணி நேரம் இருந்தாலே விளைச்சல் குறைந்துவிடும். ஆனால் அத்தகைய நிகழ்வுகள் இப்போது அதிகமாக நடக்கின்றன.

பருவநிலையும் மண்வளமும்

வெப்ப அதிகரிப்பால் மண்ணில் உள்ள உயிர்ச்சத்தும் ஈரப்பதமும் குறையும். வறட்சியால் மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள் குறைவாகும். இதனால் அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டி வரும். இதற்காக அதிக அளவு நீரும் தேவைப்படும். அப்படிக் கொடுக்காவிட்டால் உரங்கள் வீணாகப்போகும். இதனால் செலவு கூடுவதோடு மண்ணும் மாசுபடும். மண்ணில் உள்ள கனிமங்கள் நீருடன் சேர்ந்து பசுங்குடில் வாயுக்களை உற்பத்தி செய்யும்.

பருவநிலை மாற்றமும் பூச்சிகளும் நோய்களும்

பருவநிலை மாற்றம் அதனால் ஏற்படும் வறட்சி, அதிக மழை ஆகியவற்றால் பூச்சிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. வெட்டுக்கிளி போன்றவை பெருகும். பூச்சிகளின் முட்டை, புழு போன்றவை வறண்ட சூழலில் பெருகி வளரும். காற்று வீசும் திசை மாறி மாறி இருப்பதால் நோய்க்கிருமிகள் பரவும். இதனால் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகமாகி மாசுபாடும் அதிகமாகும்.

பருவநிலை மாற்றமும் தாழ்நிலப்பகுதி வேளாண்மையும்

வெப்பத்தால் கடல் நீர் விரிவடைவதும், பனி மலை உருகுவதும் நடக்கும். கடல் மட்டம் 4 விரற்கடை (அங்குலம்) முதல் 20 விரற்கடை வரை அதிகமாகும். இதனால் தாழ்நிலப் பகுதிகளில் கடல் நீர் புகும். மீன் வளம் பாதிப்படையும். எகிப்து, வங்காள தேசம், இந்தோனேசியா, சீனா, நெதர்லாந்து, புளோரிடா போன்ற தீவுப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து மண் உவர்ப்பாகி பேரழிவுகள் ஏற்படும். மக்கள் வாழ்விடங்களை இழந்து அகதிகளாவர்.

வெப்பமாதலும் பருவமழையும்

எல்நினோ தெற்கு ஊசலாட்டம் (ணிழிஷிளி) என்பது இந்தியாவில் மழைப் பொழிவைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகும். மழையளவு தான் நெல் விளைச்சலை தீர்மானிக்கும் காரணியாகும். நடவு, அறுவடை விளைச்சல் போன்றவை சீராக இருக்க வேண்டுமாயின் சரியான நேரத்தில் மழை பொழிய வேண்டும். பொதுவாக அக்டோபரில் நடவு தொடங்கி சனவரியில் அறுவடை நடக்கும். ஆனால் வெப்பநிலை உயர்வால் மழைப் பொழிவில் ஏற்படும் தடுமாற்றம் விளைச்சலைக் கடுமையாகப் பாதிக்கிறது.

ப‌ருவநிலை மாற்றமும் இந்திய வேளாண்மையும்

இன்னமும் வேளாண்மையே இந்தியாவின் பெரிய ஒரே தொழிலாக உள்ளது. வேளாண்மையை நமது ஆட்சியாளர்கள் இவ்வளவு சீரழித்தும் இன்னும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 17 விழுக்காடு பங்கு வகிக்கிறது. மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வேளாண்மையை நம்பியே உள்ளனர். நாட்டின் ஏற்றுமதியில் 11 விழுக்காடாக வேளாண் பொருள்கள் உள்ளன. பசுங்குடில் வாயுக்கள் நீரை நிறுத்தி செய்யப்படும் வேளாண்மையில் 28 விழுக்காடு உருவாகின்றன. அதாவது நீர் வயலில் நிறுத்தி வைக்கும்போது உருவாகும் மீத்தேன் வாயுவே இதற்குக் காரணம். பருவநிலை மாற்றத்தில் வேளாண்மையின் பங்கு பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்படுகிறது. மேலை நாடுகள் நமது வயல்கள் அதிக மீத்தேனை உருவாக்குவதாகக் கூறுகின்றன. எனினும் நமது நாட்டின் வெப்பநிலையானது உயர்ந்துள்ளதை மறுக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் உலக வெப்பம் 0.85 டிகிரி செ. உயர்ந்துள்ளபோது இந்தியாவில் வெப்பம் 0.54 டிகிரி செ. உயர்ந்துள்ளது. இதனால் இமயமலைகளில் உள்ள பனி உருகி வட இந்திய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாகிறது. காற்றில் கரிவளியின் அளவு அதிகமாகும்போது தானியப்பயிர்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்து 10 முதல் 20% விளைச்சல் கூடும் வாய்ப்புள்ளது. ஆனால் வெப்ப உயர்வால் விளைச்சல் குறைவு ஏற்படும். இப்படி இரண்டு எதிர்ப்போக்குகள் நடக்கும். அதிக அளவு நகரமயமாக்கம், வீடுகளின் பெருக்கம், மரங்களின் அழிவு ஆகிய செயல்பாடுகளின் காரணமாகவும்,

ஏற்கனவே உருவான அதிக வெப்பத்தாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் வறண்டுபோகும். இதனால் கரிவளியை ஈர்க்கின்ற பச்சைச் தாவரங்களின் அளவு குறைந்து மேலும் வெப்பம் அதிகமாகும். தொழில்சாலைமயமான மேலைநாட்டு வேளாண்மை மேலும் சிக்கலை அதிகமாக்குன்றது. அதிக நீர், அதிக ரசாயன உரம் என்று புவி வெப்பத்தை மேலும் அதிகமாக்குகிறது. புதிதாக அறிமுகமாகி வரும் மரபீனி மாற்ற (நிவி) பயிர்கள் அதிக நீரையும் அதிக ரசாயனங்களையும் நம்பியுள்ளன. இது பருவநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கு கிறது. பன்மயமான பயிரினங்கள் அழிவதற்கு இந்த மரபீனி மாற்றப் பயிர்கள் காரணமாகின்றன.

பருவநிலை மாற்றச் சவாலை எப்படி சமாளிப்பது?

இந்தியா எதிர் கொண்டுள்ள இந்த ஆபத்தை தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் போர்க்கால அவசரத்துடன் செயல்படுத்த வேண்டும்.

  • விவசாய நிலங்கள் வேறு காரணங்களுக்கு மாற்றப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
  • ரசாயன உரங்கள் இல்லாத இயற்கைமுறை வேளாண்மைக்கு படிப்படியாக மாற வேண்டும்.
  • கழிவு மறுசுழற்சி மூலம் கழிவுகள் தேங்காமல் வளங்களாக மாற்றப்பட வேண்டும்.
  • விவசாயத்துடன் இணைக்கப்பட்டு மரம் வளர்ப்பு கலப்பு பயிர் வளர்ப்பாக செய்யப்பட வேண்டும்.
  • சிறுதானியங்கள், பயறு வகை சாகுபடிக்கு அதிக ஊக்கம் கொடுத்து ஆதரிப்பதன் மூலம் உணவின் புரதத் சத்து, ஊட்டச் சத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
  • நீர் நிலைகளில் உள்ள ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் மழைநீர் சேமிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • ஆழ்குழாய் மூலம் மழை வெள்ள நீரை நிலத்திற்குள் இறக்கி நிலத்தடி மட்டத்தை உயர்த்த வேண்டும்.
  • தாக்குப் பிடிக்கும் பாரம்பரிய வேளாண்மைப் புரட்சிக்கு வித்திட்டு கிராமத்தின் வளங்களைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்
(மூலம்: கிஷான் கிருஷி இதழ்)
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org