தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு - ஆசிரியர்

தற்போது உழவர் சமூகத்தின் மீது ஈவு இரக்கமற்ற கொடுமையான போர் தொடுக்கப்பட்டுள்ளது. உழவர்களின் மீது சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர். விளைவாக வேளாண்மையை விட்டு வெளி யேறும் உழவர்கள் ஏராளம். நீர் ஆதாரங்களைக் கெடுத்து தொழிற்சாலைகளுக்கு என்றனர். அந்தத் தொழிற்சாலைப் பொருள்களோ உள்ளூர் மக்களுக்கல்ல வெளிநாட்டு ஏற்றுமதிக்கு என்றனர். காவிரி முல்லைப் பெரியாறு போன்ற ஆறுகளில் இருந்து கிடைத்து வந்த தண்ணீ ருக்கும் உலை வைத்தாயிற்று. கண்மாய்களும் ஏரிகளும் கழிவு சாய்க்கடை குட்டைகளாகவும், கட்டுமான மனைகளாகவும் மாறிவிட்டன. உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் நான்கு வழிச் சாலைகளும் தங்க நாற்கரச் சாலைகளும் போடப்படுகின்றன. கேட்டால் உழவர்களின் விளைபொருள்களை கொண்டு சேர்க்கப் போகிறோம் என்கின்றனர். ஆனால் நவீன சீருந்துகளை (கார்கள்) உற்பத்தி செய்து அதை சாலைகளில் குலுங்காமல் செல்வதற் காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் சொகுசு வண்டிகளுக்கு ‘0’ % வட்டியுடன் கடன் தருகிறார்களாம். அட வேளாண்மைக்குக் கடன் கேட்டால் துரத்தி அடிக்கிறார்கள் அதைவிட்டால் ஆண்டுக்கு 12 விழுக்காடு என்று ஒரே போடு போடுகிறார்கள். என்னே வளர்ச்சிக் கொள்கை?

உள்கட்டடைப்பு வசதி என்பது பெரும்சாலைகள் போடுவதும், விமான நிலையங்கள் கட்டுவதும், துறைமுகங்களை அமைப்பதும், நட்சத்திர விடுதிகள் கட்டி வெளிநாட்டானுக்கு களிப்பூட்டுவதும்தானா? ஊரகங்களில் கண்மாய்களை உருவாக்குவதும், பழைய ஏரிகளை சீர்செய்வதும், விளைவித்த பொருள்களை அரிசியாக, மாவாக, எண்ணெயாக, நூலாக இப்படி மாற்றத்தக்க ஆலைகளைக் கட்டுவது கிடையாதா? படித்த இளைஞர்களை நவீன ஊரக வேலை களில் ஈடுபடுத்தும்போது நசிந்துபோய்க்கிடக்கும் ஊரக இந்தியா சிரிக்காதா?

உழவர்களுக்கு நேரடியாகக் கிடைத்து வந்த ஒரே உதவி இலவச மின்சாரம் அல்லது ‘விலையில்லா மின்சாரம்’ அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. வீட்டுக்கே மின்சாரம் இரண்டு மணி நேரம் என்றால் உழவனுக்கு ஏது மின்சாரம். காவிரிக் கரையில் காயும் கதிர்களைப் பார்த்து கண்ணீர் விடுவதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

எல்லாக் கட்சிகளுக்கும் அரசியல் கணக்கு வழக்குகள் உள்ளன. உழவனைப் பற்றி நினைக்க ஏது நேரம். அதைவிட வேதனை காவிரி நடுவர் ஆணையத்தையே (அதாவது இந்தியாவின் தலைமை அமைச்சரையே) மதிக்காத கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி இந்தியாவின் உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதி மன்றம் கூறுகின்றது?

கடன் வாங்கி நகையை அடகு வைத்து திரட்டிய பணத்தை எல்லாம் ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் வாங்கிப் போட்டு உழவனின் சுமை வட்டிக்கு மேல் வட்டியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ரசாயனக் கழிசடைகளை விட்டொழிக்கும் எந்தக் கொள்கையும் அரசிடம் இல்லை.

இந்தத் துயரங்களை எல்லாம் தாண்டி தண்ணீரை விட்டு வளர்க்காமல் கண்ணீரை விட்டுச் சாகுபடி செய்து சந்தைக் கொண்டு சென்றால் வயிற்றில் அடிக்கும் விலைக்கு வணிகர்கள் கேட்கிறார்கள். ‘இதை முறைப்படுத் துங்கள் ஐயா’ என்று கேட்டால், வால்மார்ட் என்ற பன்னாட்டுக் கும்பணியை அழைந்து வந்து உழவனைக் காப்பாற்றுவோம் என்கிறார்கள். வாக்களித்த அரசசே உழவனைக் காப்பாற்றாத போது லாபம் பண்ணும் நோக்கில் வரும் கும்பணிக்காரனா உழவர்களைக் காப்பாற்று வார்கள்? இதற்குப் பெயர்தான் மொட்டைத் தலைக்கும் முழங்காக்கும் முடிச்சுப் போடுவது என்பதா?

நூற்றி இருபது கோடி இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் வேளாண்மையைக் கொன்றுவிட்டு வேறு துறைகளில் வேலை வாய்ப்பைப் பெருக்கலாம் என்பது பகல் கனவு. இதன் விளைவு படித்த, வேலையற்ற இளைஞர் கூட்டம் பெரும் எண்ணிக்கையில் பெருகும் அது என்ன செய்யும் என்று எல்லாருக்கும் தெரியும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org