தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

டிம்பக்டூ - கற்பனை உலகு!

அக்கரை பார்வை - 12 - அனந்து

டிம்பக்டு என்பது நிஜத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஆனால் ஆங்கிலத்தில் இதனை போக்கிடம் இல்லாத பொழுதோ அல்லது எங்கு சென்றார் என்பது தெரியாத பொழுதோ, விளையாட்டாக உபயோகிக்கப்படும் ஒரு சொல்லாகி உள்ளது. இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன் நம் கதையின் நாயகர்கள் பப்லு மற்றும் மேரி, அனந்தபூர் மாவட்டத்தில் சென்னகொத்தபள்ளி என்னும் கிராமத்திற்கு அருகிலுள்ள மலையில், மரங்கள் நட செல்லும் பொழுது அவர்களது குழந்தை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு “டிம்பக்டு” என்று விளையாட்டாக கூறி, இன்று அது ஒரு பெரும் இயக்கமாக உருவெடுத் துள்ளது. நான் அங்கு கடந்த மாதம் சென்ற பொழுது, பல ஆண்டுகளுக்கு முன் பப்லுவை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்ட அந்த குழந்தை தான் அங்கு எனக்கு அந்த முழு இடத்தையும் சுற்றி காட்டிய பெண்மணி!

1990-களில் மிகவும் காய்ந்து, வறட்சியில் வாடிய மழையற்ற பூமியான அனந்தபூர் (ஆந்திராவில்) நகரில், வாடிய மலையையும் சுற்றுப்புற கிராமங்களையும் பசுமையாகவும் தன்னிறைவாகவும் மாற்றியமைத்த பப்லு கங்குலி மற்றும் மேரி வட்டமாட்டம் இருவரின் கனவு தான் டிம்பக்டு. இன்று பசுமையாக,அழகான வேளாண் காடாகத் திகழும் இடமாக டிம்பக்டு உள்ளது. அது மட்டும் அல்லாது வாழ்வாதாரம் நிரம்பிய வாழ்வுடன் மக்கள் காட்சி அளிக்கும் கிராமங்கள் நிரம்பிய சுற்றுப்புறமாகவும் உள்ளது. இந்த அனந்தபுரி முற்காலங்களில் காடுகளுக்கும் பழங்களுக்கும் பெயர் போனது. அப்படிப்பட்ட இந்த பெருமை வாய்ந்த அனந்தபூர் மாவட்டத்தில் காடுகளை அழித்ததாலும், அளவற்ற ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் உபயோகித்தால் மண் மற்றும் சுற்றுசூழல் மிகவும் கெட்டு வறண்ட பூமியானது.

வறட்சியில் வாடிய இந்த பகுதியை தற்சார்பான பசுமை உலகமாக மாற்ற இவர்கள் அமைத்த அமைப்பு தான் டிம்பக்டு கலக்டிவ்(Timbaktu Collective). மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், உள்ளாட்சி மற்றும் தன்னாட்சி அமைக்கவும், பாடுபட்டது டிம்பக்டு. பல வருடங்களாக வறட்சியிலிருந்த இந்த பகுதியில் மண்வளம் மட்டும் இல்லாது மனித வளமும் குன்றி, வேலையின்மை, கட்டமைப்பு இன்மை, பொதுவாக எல்லா வளங்கள் குன்றி அதனால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன இந்த சுற்றுப்புற பகுதி. தற்கொலைகளும் நிகழ்ந்தன. அந்த பகுதியில் நிலம் பாழாவதை தடுக்கவும், தாங்கள் இந்த டிம்பக்டு குழுவிற்கு வாங்கிய நிலத்தை முதலில் மேம்படுத்தவும், மண்ணை வளமாக்கவும் பின்னர் அந்த மலைகளில் மரங்களை நட்டு பசுமையாக்கவும், சுற்றுப்புற கிராமங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தையும் முன்னேற்றவும் முடிவு செய்து தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர் இவர்கள் இருவரும். இப்படி கொண்டு வந்தால் சுற்றுச்சூழல் மேம்படுவதை விட இந்த சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் எல்லோரும் நீடித்த நிலையான மற்றும் தற்சார்பான வேளாண் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரமும் மேன்மை அடைந்து சந்தோஷமாக இருக்க இயலும் என்பதை நிலைநாட்ட முற்பட்டனர். அதில் பெரிதும் வெற்றியும் கண்டனர். அதற்கு இவர்கள் கடைப்பித்த வழிமுறைகள் மிகவும் சிறப்பானவை.

இயற்கை விவசாயம் மற்றும் வறட்சி பயிர்களான சிறு தானியங்கள் ஆகிய இரண்டின் மூலமே! முதலில் அவர்கள் இதனை செயல்படுத்த முயன்ற பொழுது தோல்வியே கண்டனர். அதனால் துவண்டு விடாமல் 7000 மரக்கன்றுகளை வாங்கி வந்து கிராமத்தாருடன் மலையில் நட முடிவு செய்தனர் அதற்கு முன்னர் எல்லோரும் சேர்ந்து நீர் ஆதாரத்தை ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாண்டு மேம்படுத்தினர். ஒவ்வொரு சொட்டு நீரையும் உபயோகிக்கவும் அது வீணாகாமல் பல உக்திகளை கையாண்டனர். பின்னர் விதை நேர்த்தி முதல் பல பாரம்பரிய மற்றும் இயற்கை வழிமுறைகளை கடைபிடித்து பயனடைந்தனர். இவ்வாறு செய்ததன் மூலம் அந்த மலை மற்று சுற்றுபுறம் எல்லாம் பசுமையாகவும் இயற்கையாகவும் திகழுமாறு மீட்டு எடுத்தனர். இப்படி தான் அந்த வறண்ட பூமி பசுமை ஆனது, வதங்கிய வாழ்வாதாரங்கள் மலரத் துவங்கியது, வற்றிய நீர் ஆதாரம் மறுபடி உயிர்பெற்றது! ஒரு நிஜ சூழல் மீட்சி (Eco Restoration) நடந்தேறியது! பறவைகள், பாம்புகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் எல்லாம் திரும்பி வந்தன. பழைய பெருமையும் புகழும் நிலைநாட்டப் பட்டன. இந்த வழிமுறைகளை கடைபிடித்து இந்த மாவட்டத்தின் மற்ற வறண்ட பகுதிகளிலும் சமுதாய பங்களிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படிருக்கின்றன.

நீர் ஆதாரமே முதன்மையானது. அதுவே மற்ற மாற்றங்களுக்கு வித்திட்டது இங்கு. இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் பயிரிடுதல் மீண்டும் வந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி இருப்பதுடன் இந்த சுற்றுபுறங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து குழந்தைகளுக்கான மாற்றுக் கல்வி (alternate education) மற்றும் தங்கும் விடுதியும் கூட அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் குழுக்கள் சேமிப்பு குழுக்கள் அமைத்து பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பல முயற்சிகள் செயல்படுத்தப் பட்டு மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றன. மாற்று வங்கிகளும் உண்டு இங்கு! மேலும் குழந்தைகள் உரிமை, பெண்ணுரிமை, தலைமை தகுதிக்கு பயிற்சி போன்று பலதரப்பட்ட முயற்சிகளும் பற்பல குழுக்கள் மூலம் நடைபெறு கின்றன. பெண்கள் குழுக்கள், அந்த குழுக்கள் சேமிப்பு மற்றும் விதை சேகரிப்பும் செய்கின்றனர். மற்றும் ஒரு குழு சிறு தானியங்கள் மட்டுமே கொண்ட ஒரு உணவு விடுதியினை நடத்துகிறது அந்த கிராமத்தில். இங்கு டிம்பக்டு குழுமத்தின் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் மண்ணினாலும் இங்கு உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட் களால் மட்டுமே ஆகும். மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு இடமும் தண்ணீர் சேமிப்பு மற்றும் சேகரிப்பு முதன்மையாக கொண்டிருக்கும். இப்படி எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த பெரும் சாம்ராஜ்ஜியத்தை ஒரு நல்ல அன்பான ராஜா போல் வழி நடத்துகிறார் பப்லு. அவரது நகைச்சுவை உணர்வும், கள அறிவும், மிகவும் சாதாரணமான எல்லோருடனும் பழகும் விதமும், கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் பல சாதனைகளை நிகழ்த்தியதுடன், நாள்தோறும் இன்னமும் மேம்படுத்தி சென்றுகொண்டு இருந்தும், அதை பற்றிய கவலையோ மிதப்போ இல்லாமல் சர்வ சாதாரணமாக உலா வரும் அவர் மிகவும் போற்றப்படவேண்டிய பின்பற்றப்பட வேண்டிய நபர். மொத்தத்தில் டிம்பக்டு ஆங்கிலத்தில் கூறப்படுவது போல் ஒரு கற்பனை உலகையே பிரதிபலிக்கிறது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org