வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


நாட்டு உழவாரன்

House Swift (Apus Affinis)

தோற்றம்

சிட்டுக்குருவியின் அள‌வை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும். தலை கருமையாகவும், கழுத்துக்கடியில் வெள்ளை நிறமாகவும் இருக்கும். சிறகுகள் மற்றும் வால் கருமை நிறத்தில் இருக்கும். சிறகின் முன்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும். கால்கள் கருமை நிறத்தில் இருக்கும். பற‌க்கும் போது கால்களை தன் உடம்புடன் ஒட்டி மறைத்து வைத்துக் கொள்ளும் பார்க்கும் போது கால்கள் இல்லாதது போல் இருக்கும். ஆண்,பெண் ஒரே நிறத்தில் இருக்கும்.

காணும் இடம்

இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா முழுவதும் இவற்றைக் காணலாம். இந்தியாவில் பெரும்பாலும் சதுப்புநிலக் காடுகளில் இவற்றைக் கூட்டம் கூட்டமாக காணலாம். அது மட்டுமல்லாமல் பழைய கோட்டைகளில், மசூதிகளில், கோவில்களில், பழைய கட்டிடங்களில் இவற்றைக் காணலாம். கருங்கல் குன்றுகளின் உச்சியில் பாறைகளுக்கடியில் கூடு கட்டும். புதுக்கோட்டையில், சிற்றன்ன வாசலின் மேல் உள்ள சமணப் படுகைகளில் இவை நிறையத் தென்படும்

உணவு

வானத்தில் பறக்கும் அனைத்துப் பூச்சிகளையும் உண்ணும். ஏன் என்றால் இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை. அதுமட்டுமல்லாமல் நான்கு விரல்களும் முன்பக்கம் நோக்கி அமைந்துள்ளதால் நிலத்தில் உள்ள எந்த இரையும் பிடிக்க இயலாததால் வானத்தில் பறக்கும் பூச்சிகளை வேட்டையாடும்.

இனப்பெருக்கம்

கூட்டம் கூட்டமாக தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். கோவில்களில் உள்ள ஓட்டைகளிலோ, சதுப்புக் காடுகளில் உள்ள மரக்கிளைகளிலோ, கட்டிடங்களில் உள்ள ஓட்டைகளிலோ , பாலங்களில் உள்ள ஓட்டைகளிலோ அதிகமாக இவை கூடு கட்டும். வைக்கோல், உதிர்ந்த சிறகுகள், கிடைத்த குப்பைகள் மற்றும் உமிழ்நீர் வைத்து கிண்ணம் போல் கூட்டை கட்டும். 2 முதல் 4 முட்டை இடும். முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

குறிப்பு

நாட்டு உழவாரன் அதிவேகமாக பறக்கும் பறவைகளில் ஒன்று. மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியவை! உடம்பு எடை குறைவாகவும், சிறகுகள் கூர்மையாகவும் அமைந்துள்ளதால் மிக வேகமாக பறக்கிறது.

ஏழு மாதம் வரை கீழே இறங்காமல் இவை வானத்தில் பறந்து கொண்டிருக்கும். குடிநீரைக் கூட சிறகுகள் வழியாக குடித்துக் கொள்ளும். வானத்தில் பறந்து கொண்டே தூங்கும் பறவை ஆகும். இனப்பெருக்க காலங்களில் மட்டும் தான் இவை முட்டையிடக் கீழே இறங்கும். கூட்டம் கூட்டமாக இவை ஓசை எழுப்பி கொண்டே பறக்கும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org