குமரப்பாவிடம் கேட்போம் -பாபுஜி

நம் நாடு இதுவரையில் சந்தித்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இப்போது நம் முன் நிற்கிறது. இந்த நிகழ்வின் விளைவு 1943 இல் நடந்த வங்காளப்பஞ்சத்தை விட கொடுமையானதும் மிகப்பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றும் கூட என்று நம்மால் இப்போதே கூற இயலும். இந்த நிகழ்வின் ஆபத்தான விளைவுகளை பற்றி அதன் பொறுப்பில் இருப்பவர்களே யோசிக்காதது இந்த ஆபத்தை பேராபத்தாக மாற்றிவிடக்கூடும். அவர்கள் யோசிக்காமளிருந்தால் கூட பரவாயில்லை, தம் கண் முன்னால் காணும் உண்மைகளையும் மக்களின் கருத்துகளையும் வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு உதாசீனம் செய்வது போல நடந்துகொள்கின்றனர். அவர்கள் எந்த விதமான சார்பற்ற ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்கும் மனநிலையில் இல்லை. நம் நாடே தடுமாறி விழும் அபாயம் நிகழ்ந்தால் கூட அவர்கள் தம்முடைய தனி உலகத்தில், தனி சிந்தனைகளோடு தனித்திருக்கவே விரும்புகின்றனர். தோல்வியிலிருந்து பாடம் கற்பதை விட அவர்களுக்கு தம் தவறுகளை சரியென்று வாதிடுவதே மேலானதாக உள்ளது. இத்தகைய சூழலிலும் நம் நிலைப்பாடு சார்ந்த பரிந்துரைகளை மக்களுக்கு முன்வைப்பதன் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதால் நாம் அவற்றை முன்வைக்கிறோம்.

உணவு மற்றும் விவசாயம் என்கிற துறை நம் மைய அமைச்சரைவயில் யாருமே விரும்பாத ஒரு மாற்றாந்தாய்க் குழந்தையாகவே பாவிக்கப்படுகிறது. ஒரு புதிய அமைச்சருக்கு அந்தத் துறை சார்ந்த அறிவோ, பணிகளை செயல்படுத்தும் திறனோ இருக்கின்றதா என்ற கேள்விக்கே இடமின்றி, வேறு எந்தத் துறையுமே அவருக்கு ஒதுக்க முடியாதென்றால் மட்டுமே துறைகளிலேயே மிக முக்கியமான இந்த உணவு மற்றும் விவசாயத்துறை அவரிடம் 'தள்ளப்'படுகிறது. நம் நாட்டின் அடிப்படை ஆதாரத்தையே தீர்மானிக்கக்கூடிய இந்தத் துறை நாட்டின் தலைவரின் நேரடி கவனிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டுமென்றே அண்ணல் காந்தியடிகள் கருதினார். ஆனால் அதிகாரத்திலுள்ள மைய அரசோ, மற்ற நாடுகளுடன் இணக்கமான உறவை மேலாகக்கருதி 'வெற்றிலை பாக்கைப் பகிர்ந்தளிக்கும்' வெளியுறவுத்துறை மற்றும் இதர துறைகளே உணவு மற்றும் விவசாயத்துறையை விட முதன்மையானவை என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. 'நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு உணவு மற்றும் உடை முதலியவை கிடைக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு, மனவுறுதியும் தெளிந்த சிந்தனையும் கொண்ட, அனைத்துத் துறைகளையும் இந்த ஒற்றைக் குறிக்கோளுக்காக வேலை வாங்கும் நிர்வாகத்திறனும், ஒருங்கிணைப்புத்திறனும் கொண்ட ஒரு திறமையான மனிதரிடம் விவசாயத்துறைய ஒப்படைக்க இப்போதும் கூட காலம் கெட்டுவிடவில்லை. இத்தகையதொரு செயல்பாடு இல்லாமல், 'எதையாவது தட்டிக்கொட்டி சமாளிப்பது' அல்லது 'நாடு தழுவிய ஏமாற்று வேலைகளை ஒருங்கிணைத்து நடத்துவது' மட்டுமே மேற்சொன்ன தேவைகளை அடையும் வழி என்பது ஒரு பயனும் தராத ஒரு முயற்சியாகவே வீழும்.

நம்முடைய எல்லைக்குள் சிந்திக்கையில் நம்மால் இந்த பிரச்சினைக்கான நுணுக்கமான தீர்வை முன்வைக்கமுடியாவிட்டாலும்கூட, இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதற்கு ஒரு மேலோட்டமான வரையறுக்கப்பட்ட அணுகுமுறையையேனும் குறிப்பிட இயலும். நாம் இவற்றை, 'உடனடி', 'குறுகிய கால' மற்றும் 'நெடுங்கால' செயல்திட்டங்களாக வரிசைப்படுத்துவோம்:

உடனடி செயல்திட்டம்

மிக அடிப்படையான முதல் முயற்சியாக, இயற்கை தந்ததை சேமிக்க முற்படுவோம்! இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் எவர் செய்தாலும் அவற்றை தேச துரோகமாக அறிவித்து, சட்டத்தின் வலிமையான கரங்களினால் அவர்களை தண்டிப்போம் (சிறிய தவறு, பெரிய தவறு என்கிற பேதமின்றி). இத்தகையதொரு அணுகுமுறை 'இயற்கை பொருட்களை மதிப்புக்கூட்டும்' தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தால்தான் செயல்படுத்தமுடியும். இவ்வாறு செய்வதற்கு அரிசி ஆலைகள், மாவு ஆலைகள், சர்க்கரை ஆலைகள் மற்றும் கொழுப்பு எண்ணைகள் உற்பத்தி செய்யும் (Hydrogeneration) ஆலைகள் அனைத்தும் மூடப்படவேண்டும். மனிதர்களால் நடத்தப்படும் இத்தகைய தொழில்கள், உணவூட்டம் ஏதும் செய்யாமல், உற்பத்திப்பொருட்களின் தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தப்போவதில்லை என்பது மட்டுமல்லாமல் இவை உற்பத்திப்பொருட்களின் விலையை உயர்த்தி எதிர்மறையான நன்மைகளை தரும் நோக்கில் செயல்படுபவை. உணவின் ஆதார சுவை மட்டுமே நம் செயல்பாடுகளின் பின்புலமாக இருக்கவேண்டுமேயன்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவைகள் அவற்றை கட்டுப்படுத்தக்கூடாது.

உணவுப்பொருட்களை பாதுகாப்பது, தேவையான இடங்களுக்கு எடுத்துச்செல்வது மற்றும் பண்டமாற்று ஆகியவற்றுக்கான திட்டங்களை நாம் மிகுந்த கவனத்துடன் அணுகவேண்டும். பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட கிடங்குகள் இல்லாததால் ஏராளமான உணவுப்பொருட்கள் மனிதர்களின் பயன்பாட்டிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு எலிகளுக்கும் புழுக்களுக்கும் தரப்படுகின்றன (இப்போதுள்ள நடைமுறையில்). தரமற்ற கிடங்குகள் மற்றும் எலிகள்/புழுக்கள் உண்ணும் உணவுகள் ஆகிய உணவை வீணடிக்கும் இவ்விரு மன்னிக்கமுடியாத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த பயமின்றி,பாரபட்சமின்றி செயல்படவேண்டும். உணவுப்பொருட்களை பகிர்வதிலும், நுகர்வதிலும் 'சரியான மக்களுக்கு சரியான அளவு' சென்று சேர வேண்டும் என்கிற அக்கறை முன்னிற்கவேண்டும்…

நாம் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையை சமாளிக்க அவற்றை இறக்குமதி செய்ய வேண்டுமானால் நாம் நமது அந்நியச்செலாவணியை, டாலர்களை இந்த உணவு மற்றும் அடிப்படைத்தேவைகளை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கவேண்டியிருக்கும். நம்மை தற்போது அச்சுறுத்தும் பஞ்சகால சூழல் விலகும் வரையில், நம் கையிருப்பில் உள்ள அந்நியச்செலாவணியை ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்யத்தேவையான விலையுயர்ந்த எந்திரங்கள் மற்றும் தளவாடங்களை வாங்குவதில் செலவழிப்பதை தவிர்த்து, அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org