மானுடம் வெல்லுமா? - அனந்து


அது ஒரு முன் இரவு. இயற்கை விவசாயிகள் சந்தையின் (OFM) அடையாறு அலுவலகத்தில் திடீரென ஒரு நண்பர் சிவகங்கையிலிருந்து பார்க்க வந்திருக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களால் இங்கு மாடிக்கு வர முடியாது, மாற்றுத்திறனாளிகள் என்றதும் சுருக்கென்றது. நாம் ஒரு அலுவலகமோ ,வீடோ தேடும் பொழுது அது மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததா என்று பார்ப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டே (சபித்துக் கொண்டே) கீழே வந்து அவர்களைச் சந்தித்தேன். அறிமுகத்திற்குப் பிறகு அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றனர். நாம் ஏதோ விவசாயிகள், இயற்கை விவசாயம், பாதுகாப்பான உணவு என்று நம்மால் இயன்ற சிறிய கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம், இது என்ன என்று தயங்கையில், அவர்கள் சொன்னது பெரிதும் பாதித்தது. நம்மால் முடிந்ததை செய்தே ஆகவேண்டும் என்று மனது துடித்தது.

வந்திருந்த அவர்கள் தவழும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளிலும் இன்னும் அதிக‌ இன்னல்களை சந்திக்கும் இவர்கள், இரு கைகள் மற்றும் கால்கள் கொண்டே நகர முடியும். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்றும், இம்மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினராலேயே கண்டு கொள்ளப்படாமலும் துன்புறுத்தப்பட்டும் உள்ளனர் என்றும், சமூகத்தில் தங்கள் குடும்பத்தில் அப்படி ஒரு மாற்றுத்திற‌னாளி இருக்கிறார் என்பதையே மறைத்தும், மறுத்தும் இயங்குகின்றனர் என்றனர். அதிலும் பெற்றோர்களின் காலத்திற்குப் பிறகு மேலும் வேதனையே. பெண்களென்றால் இன்னும் கொடுமை.

சமூகத்தில் எப்படி இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை, மனிதம் குறைந்து வருகிறது என்று நாம் எண்ணும் பொழுது அவர்கள் கூறும் அவலக்கதைகள் நம்மை மிரள வைக்கின்றன‌. அவர்களிடம் கை குலுக்கக்கூட தயங்குகின்றனர் மக்கள். இவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கப் பெரும் யோசனை. எல்லோரும் கூடும் விழாக்களுக்கு அழைப்பதில்லை. அதனால் அவர்களில் பலர் திருமணத்தை, ஏன் திருமண சாப்பாட்டையே கூடக் கண்டதில்லை என்றபோது நம் கண்கள் குளமாகி விட்டன.

அரசாங்கமும் - முக்கியமாக அரசியல்வாதிகளும் இவர்களுக்கு நல்லது செய்வதில்லை. அப்படியே முக்கி முனகி இவர்கள் மனு மேல் மனு கொடுத்து, படிப்படியாக முன்னேறி வரும் பொழுது அடுத்த தேர்தல் வந்துவிடுமாம். அப்படியே ஏதேனும் சிறு உதவிகள் முந்தைய அரசு செய்திருந்தால் அடுத்த அரசு அதனை ரத்து செய்து விடும். முந்தைய திமுக அரசு கடைசி 6 மாதங்கள் இருக்கையில் இவர்களுக்கு ஒரு 'வீட்டிற்'கான வாடகையும் இவர்களது உணவிற்கும் நிதி உதவி கொடுக்க முடிவு செய்தது. (ஒரு நபருக்கு 3 வேளை உணவிற்கு ரூ 25). அதையும் அடுத்து வ‌ந்த அதிமுக அரசு ரத்து செய்தது, அவர்களது வாடிக்கையான வேலை தானே! இதை விடக் கொடுமை சமீபத்தில் ஒரு அரசு உயர் அதிகாரி 'கை கால் உள்ளவர்களுக்கே வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும் இந்தக் காலத்தில் உங்களுக்கு எப்படி..” என்று அவமதித்து அனுப்பியதும் நடந்தது.

இவர்களை இணைத்து, அரவணைத்து வரும், (தானே ஒரு மாற்றுத்திரனாளியாக இருந்தும்) திரு புஷ்பராஜ் அவர்கள் நம்மை திடீரென அணுகி இந்தக் கஷ்டங்களைக் கூறி, ஏதும் வாழ்வாதார வழி வகை செய்ய முடியுமா என்று கேட்டதும், திக்கு முக்காடிப்போனாலும், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற தீவிரம் வந்தது. நண்பர்களை அணுகி, எல்லோரும் கொஞ்சம் நிதியளித்து சேர்த்துக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களை ஒரு வீடு பார்த்து, 20-25 நபர்கள் அங்கு தங்கும்படி செய்து அவர்களுக்கு 3 வேளையும் நல்ல உணவும் கிடைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான நிதியை உடனே கொடுக்கவும் முடிவு செய்தனர். 20 நண்பர்கள் சேர்ந்து ஒரு வருடத்திற்கான வாடகை மற்றும் உணவிற்கான தொகையை (சுமார் 2 லட்சம்) முன்பே திரட்டி அவர்களது வங்கியில் போடப்பட்டது. இங்கு இவர்கள் 20-25 நபர்கள் இருந்துகொண்டு மெழுகுவத்தி, இயற்கை கொசு விரட்டிகள், பேப்பர் குப்பிகள், தட்டுகள் செய்து ஒரு பொருளாதார நிலைத்தன்மை கொண்டு வருவதும், அதன் பின்னர் அவர்கள் தற்சார்பாகத் தம் உழைப்பில் மூலம் வாழ்ந்து , அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதலை எடுத்து வேறு 20 நபர்கள், வேறு ஒரு வீடு என பெருக்கிச்செல்ல எண்ணம்.

சுருங்கச்சொன்னால், நகரத்தில் உள்ள நபர்கள் ஆளுக்கு 10000/- கொடுத்தால் (20 பேர் சேர்ந்து 2 லட்சம்) 20 மாற்றுத்திறனாளிகளை ஆதரித்து அவர்கள் நிலைத்தன்மை அடைந்ததும் அடுத்த 20 நபர்கள். இது மேலும் பல நகரத்து நபர்கள் உதவ இருபது இருபதாக பல மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும். இத்துடன் முடியவில்லை.

அவர்களுக்கு அவ்வளவு எளிதில் வீடு கொடுக்க முன்வருவதில்லை அப்பகுதிகளில். பல முயற்சிகளுக்கு பின் ஒரு வீடு பார்த்தனர். அங்கு நண்பர் சிவா அவர்கள் காகித தட்டு/தொன்னை செய்யும் இயந்திரத்தை தமது நட்பு வட்டத்திலிருந்து கொடுக்க, அவர்கள் அதனையும், அந்தப் புதிய இல்லத்தையும் தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியரை அழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் மிகவும் நல்ல இதயம் படைத்த சீரிய அதிகாரி. இவர்களது பிரச்சினைகளை உடனே புரிந்துக்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நடந்தார். வருவாய் மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் வரவைத்திருந்தார். மிகவும் ஆழமாகச் சிந்தித்து, இவர்களுக்கு நீண்ட கால தீர்வுகள் வாய்க்குமாறு வடிவமைத்தார். (இதைப்போல சில அதிகாரிகள் இருப்பதால் தான் மழையும், கொஞ்சம் நம்பிக்கையும் வருகிறது). நாம் அவரை அணுகி, இவர்களுக்குக் கைவினைப் பொருட்கள் செய்ய சில பயிற்சிகள் அளித்தால் அந்தப்பொருட்களைச் சந்தை படுத்த உதவுமாறு கேட்டவுடன், அதற்கும் ஏற்பாடு செய்தார். மேலும் வேறு ஒரு இடம் இவர்களுக்கே சொந்தமாக கிடைக்க வழி செய்வதகாவும் உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களையும் செய்தார். (அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன !)

எங்கோ பல கேள்விகளுடனும், ஐயங்களுடனும் தொடங்கிய இந்தப் பயணம் சிறப்பாக முடிந்தது. ஒரு சிலருக்கு தான்.இதன் பயனாளிகள் சிலரே, நாம் இன்னும் கடின முயற்சி எடுத்து மேலும் பலருக்கும் நன்மை பயக்குமாறு இதனைப் பெருக்க வேண்டும்.

அந்த நிகழ்ச்சியின்போது நான் கண்ட கேட்ட சில சம்பவங்கள், நம்மில் பலருக்கும் புதியதாகவும், கண்களைத் திறப்பதாகவும் இருக்கும். சமூகம் விழித்துத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன:

1. வீடு கிடைத்தும் அது இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடியதாக இருக்கவில்லை. வீட்டிற்குள் கழிப்பறை வசதி இல்லை. நமது சமூகமே அப்படி யோசிப்பது கிடையாதல்லவா?

2.பலரும் கூறிய மிகவும் வேதனையான விஷயம், இவர்களை மிகவும் அதிகமாக ஏசியதும், பல வன்சொற்களால் காயப்படுத்தியதும் பெற்றோரே

3.பேருந்துகள் இவர்களுக்கு ஒரு சிறு கரிசனமும் காட்டுவதில்லை. மாற்றுத்திறனாளி அவரது சக்கர நாற்காலியுடன் நிற்பதைக்கண்டால் பேருந்துகள் நிற்பதுமில்லை, இவர்களுக்கு வசதி செய்வதுமில்லை. இத்தனைக்கும் நீதி மன்றம் அரசாங்கத்தை மிகவும் கடிந்து இவர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம் வடிவமைத்து நீதிமன்றத்திலேயே வந்து காட்டும் படி பணித்தும் ஓரிரு பேருந்துகளில் மட்டும் அப்படி வைத்து விட்டு மறந்துவிட்டனர்

4. பல சமயங்களில் (அரசுப்)பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இவர்களை கடிந்துக்கொள்வார்கள். அப்படி உதாசீனப்படுத்தும் பொழுது பொது மக்களாகிய நாம் கடிந்து, இவர்களுக்கு நன்மை பயக்குமாறு வழி செய்ய வேண்டும்

5. இப்படி ஒரு கூட்டத்தில் பங்கேற்பது, எல்லோருடனும் உணவு உட்கொள்வது என்பதும் 'கல்யாண‌ சாப்பாடு' என்பதும் ஏக்கம் நிறைந்தவையாகவே உள்ளன‌

6.ஆனால் ஒரு தாயும் மகளும் சாப்பிடப் போகாமலிருந்ததைப் பார்த்தேன். அவர்களை சாப்பிடப்போகுமாறு நான் வற்புறுத்த, எனதருகிலிருந்த ஆண் வற்புறுத்த வேண்டாம் என்று சைகை செய்தார். அவர் கூறிய காரணம்- எங்களில் பலரும் வெளியில் செல்ல வேண்டுமானால் தண்ணீர் கூடக் குடிக்க மட்டோம். பொது இடங்களில் கழிப்பறைகள் எங்களுக்கு எளிதாக செல்லுமாறு இருக்காது. பெண்களுக்கு மேலும் அவல நிலை என்ற ஒரு பெரும் துக்ககரமான உண்மையை உணர்த்தினார்.

7. இவர்களில் இவற்றை ஒருங்கிணைத்து செல்லக்கூடிய இருவரும் என்னிடம் ' தயவு செய்து தொடர்பில் இருங்கள். எங்களுக்கு அறிவுரை கூறவோ, உலக விஷயங்கள் பேசவோ கூட அதிக ஆட்களில்லை என்றனர்.

இந்நிகழ்வு முடிந்ததும் பெரியதொரு வாழ்க்கைப் பாடம் கற்ற உணர்வு வந்தது. பரிவும், கருணையும், அன்பும் தான் மானுடத்தைப் பிற உயிர்களிடம் இருந்து பிரித்துக் காட்டுபவை. சக மனிதரிடம் பரிவில்லாமல், சதா நாம் நம் சுயநலமான கவலைகளில் உழன்று கொண்டிருப்பதே உலகின் எண்ணற்ற சிக்கல்களுக்கு ஆணிவேராக இருக்கிறது.


துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடீ - கிளியே
அன்புக்கு அழிவில்லை காண்

என்றான் பாரதி. அன்புடனும், பரிவுடனும் சக மனிதரைப் புரிந்து அவரை நம்மோடு ஒருவராக இணைத்துச் செல்லுவோமா?

மானுடம் வெல்லுமா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org