நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகரைக் காண செல்லும் பொழுதே, உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பயணத்தைத் துவங்கினோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூர் செல்லும் சாலையில் அமைந்த்துள்ளது, திரு. சுந்தரராமன் அய்யா அவர்களின் இலட்சுமி தாளாண்மைப் பண்ணை. திரு. சுந்தரராமன் அய்யா அவர்களைப் பற்றி அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறோம். நம் தாளாண்மை மலர்கிறது இதழின் முன்னோடி இவரே. அவரும், நண்பர் பாமயனும் இணைந்து துவங்கியதே, தாளாண்மை /தற்சார்பு இயக்கம். அவர்கள் வழி வந்தே நம் இவ்விதழின் வழியாக இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாற்று வாழ்வியல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி செய்திகளைப் பறிமாறிக் கொள்கிறோம்.

நாம் அய்யாவிடம் இது நாள் வரை நெருங்கிப் பழகியதில்லை. சில இயற்கை வேளாண் கருத்தரங்குகளில் அவர் உரையாற்றக் கேட்டிருக்கிறோம். ஓரிரு முறை நண்பர்கள் இல்லங்களில் சந்தித்துள்ளோம். அவரது உரைகளைக் கேட்ட போதெல்லாம், அவர் வேளாண்மையை, விவசாயிகளை எவ்வளவு நேசிக்கிறார் என்று உணர்ந்திருக்கிறோம். எனவே தான் இந்த நேர்காணலை மிக்க ஆவலுடன் எதிர் நோக்கினோம்.

காலை அவர் பண்ணையை அடைந்ததும் வெயிலுக்கு இதமாக மோர் அருந்தி விட்டு, உரையாடலைத் தொடங்கினோம். திரு. சுந்தரராமன் அய்யா, இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையாக நான்கு விதமான அமைப்புகளை நிறுவி, பல வருடங்களாக திறம்பட இயக்கி வருகிறார்.

1. தமிழக உழவர் தொழில் நுட்பக் கழகம்: இவ்வமைப்பு, வேதி இடு பொருட்களை விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்பும் விவசாயிகளுக்கு, அவர்கள் அடிப்படையாக செய்ய வேண்டிய மாற்றங்கள், இயறகை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்கள் உருவாக்கும் முறைகள், பயிர் சுழற்சி முறைகள், போன்றவைகளுக்கு செயல் முறைப் பயிற்சி அளிப்பதற்காக.

2. தாளாண்மை உழவர் இயக்கம் என்ற அமைப்பின் மூலம் அய்யா அவர்கள், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல இயற்கை விவசாயிகளுக்காக‌ கருத்துப் பரிமாற்றம், ஒருவருக்கொருவர் தேவைப்படும் உதவி, களப்பணி போன்ற ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

3. உழவர் ஆற்றுப்படை: இவ்வ்மைப்பின் நோக்கம், வேதிப்பொருட்களால் பாதிக்கப் பட்ட மண்ணை திரும்ப மீட்டெடுக்கும் விதமாக, புதிதாக இயற்கைக்கு மாறும் விவசாயிகளுக்கு, மண்புழுக்கள் எவ்வாறு மண்ணில் பெருக்க வேண்டும் என்பது பற்றிய பயிற்சியும், மண்புழுக்களும் தந்துதல்.

4. அடிசில் சோலை: இயற்கை விவசாயம் செய்ய முனையும் மக்களுக்கு தம் பொருட்களைச் சந்தைப் படுத்த உதவும் ஒரு மேடை.

இதைப்பற்றி சுந்தரராமன் அவர்கள் விவரிக்கும் பொழுது, ” நாம் பல வித பெயர்கள் சொன்னாலும் குறிக்கோள் ஒன்று தான் - இயற்கை விவசாயத்துக்கு கை கொடுப்பதே. இவை வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப் பட்டன. ஒரு வித பரிணாம வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும்” என்று சொல்கிறார்.

அவரிடம் இதுவரை ஆயிரக் கணக்கானவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நாம் பேசிக்கொண்டிருக்கையிலேயே, கேரள அரசாங்க விவசாயடத் துறையில் இருந்து அழைப்பு வந்தது. அடுத்த பயிற்சி முகாம் குறித்த நாட்களை பற்றி பேச.

எங்களுடனே, கோவையில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் இருந்து இரண்டு சமூகவியல் முனைவர் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்கள் வந்த நோக்கத்தைப் பற்றி வினவினோம். அவர்கள் தம் ஆய்வின் ஒரு முக்கிய பகுதியாக, மலை வாழ் பழங்குடியினர் வாழும் ஒரு கிராமத்துக்கு புனரைமப்பு பணிகள் மேற்கொள்வதாகக் கூறினார்கள். அதில் ஒரு முக்கிய அங்கம், அம்மக்களுக்கு இயற்கை வேளாண் முறைகளைப் பயிற்றுவித்தலாகும். அதற்கு சுந்தரராமன் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார் என்று தெரிவித்தார்கள். சுந்த‌ரராமன் அவ்விளைஞ‌ர்களுக்கு மண்வளம், மண்புழுக்களின் விதம், மேல் மண்புழுக்களில் உள்ள இரண்டு வகை, மண்புழுக்கள் எவ்வாறு நுண்ணுயிர்களுடன் இணைந்து பயிர்களுக்கு பயனளிக்கின்றன என்பது பற்றி விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வளவு எளிதாகவும், சுவைபடவும் ஆழமான அறிவியல் செய்திகளை எடுத்துச் சொல்வது என்பது ஒரு ஆச்சரியமான செயலே. அது மட்டுமின்றி பல்வேறு இயற்கை ஆதார பயிர் ஊக்கிகள், அவற்றின் இடுபொருட்கள், அப்பொருட்களின் வேதித்தன்மை, அவை நுண்ணுயிர்களால் எவ்வாறு பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எவ்விதம் கிடைக்க பெறுகின்றன என்பதெல்லாம் அந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விவரித்தார். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நேரம் போவதே தெரியாமல் நாங்கள் யாவரும் அவரது உரையில் கட்டுண்டு ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். அவர் எங்களிடம், ” நான் ஏன் இவர்களுக்கு இவ்வளாவு விரிவாக சொல்லுகிறேன் என்று எண்ணுகிறீர்களா? நான் இவர்கள் ஆதரிக்கும் கிராமஙளுக்கு ஓரிரு முறை சென்று இந்தக் கரைசல்கள் செய்யும், பயன் படுத்தும் முறையை பயிற்றுவித்தால் போதாது. தொடர்ந்து செல்ல எனக்கு நேரமும் நிலைமையும் அமையாமல் போகலாம். ஆனால், இவர்கள் படித்தவர்கள். நம் பணியின் அடிப்படை நோக்கத்தை, அதன் அறிவியலை நன்கு உணர்ந்து கொண்டால், என்னைச் சார்ந்திருக்கத் தேவையில்லை அல்லவா?” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

அவருடன் அவரது பத்து ஏக்கர் பண்ணையை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். தென்னை மரங்களூக்கிடையில் கால்நடை தீவனம், பப்பாளிக்கு இடையில் மிளகாய், மிளகாய்க்கு கீழடுக்கில் மஞ்சள் என்று எங்கும் பல அடுக்கு வெள்ளாமை அவரது உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டாய் மின்னுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் தேவையான கனிமச் சத்துக்கள், அது இயற்கையில் கிடைக்கும் செடி என்று எங்களுக்கு பொறுமையாக விளக்கினார். ஒரு பகுதியைக் கடப்பதற்குள் நேரமாகி விடவே, மதிய உணவுக்கு பின் தொடர முடிவு செய்தோம்.

உணவின் போது, அவர் குடும்பத்துடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது மகன் கிருஷ்ணன், வணிகவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். அவரும் தந்தைக்கு உதவியாக, விவசாயம் மற்றும் இயற்கை வேளாண் களப்பணியில், முழு நேரம் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இது பற்றி கேட்டோம். சில காலம் தான் நகரத்தில் அலுவலகப் பணியில் இருந்த்தாகக். கூறினார். அவ்வாழ்க்கையில் மனம் ஒப்பாததால் மீண்டும், தந்தையுடனே இணைந்து விட்டதாகத் தெரிவித்தார். “இதன் நிறைவு எதிலும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.” என்று சொல்கிறார். சுந்தரராமன் அவர்களின் துணைவியார் எளிமையும் அமைதியும் நிறைந்து காணப்படுகிறார். அவர்களின் அன்பு விருந்தோம்பல் அந்தச் சுவையான உணவுக்கு மேலும் சுவை கூட்டுவதாக அமைந்திருந்தது.

மீண்டும் அவர் தோட்டத்தில் உலவத் தொடங்கினோம். அவரது வீட்டு சமையல் யாவும் சாண எரிவாயு மூலமே நடை பெறுகிறது. சாண எரிவாயு கலனைப் பார்வையிட்டோம். அய்யா ஒரு ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையில், சாண எரிவாயுக் கலன் எவ்வளவு இன்றியமையாத பங்கு வகிக்கிறது என்பதை நமக்கு விளக்கினார். கலனில் இருந்து வரும் சாணிப்பால், பண்ணைக் குப்பைகளை எளிதில் மக்க வைக்கிறது. பாசன நீருடன் கலக்கப் படும் போது, மற்ற பயிர் ஊக்கிகள் சிறப்பாகச் செயல் பட உறுதுணையாகிறது. நுண்ணுயிர்களுக்கும் மண்புழுக்களுக்கும் சிறந்த நண்பனாக எவ்வாறு உதவுகிறது போன்ற விடயங்களை ஆழ்ந்த வேதியியல் விவரங்களுடன் நமக்குப் புரிய வைத்தார்.

தம் தோட்டத்தின் நீர் மேலாண்மை பற்றி எங்களுக்கு விளக்கத் தொடங்கினார். அவர் தம் பண்ணையில் நீர்ப் பாசனத்திற்கு செய்திருக்கும் அமைப்பு அற்புதமானது. சாணிப்பால், மற்ற ஊட்டங்கள் யாவும் நீர் பாயும்போதே அதனுடன் கலந்து பயிர்களுக்கு அடையுமாறு அமைத்திருக்கிறார். இந்த அமைப்பால் குறைந்த அளவே மனிதத் தலையீடு தேவை. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை அமைக்கையிலே, பிற்காலத்தில் வேளாண் பணிக்கு ஆட் தட்டுபாடு வரக்கூடும் என்ற தொலைநோக்குடன், இவ்வாறு வடிவமைத்திருக்கிறார். அவருடன் அமர்ந்து சிறிது நேரம் உரையாட விரும்பினோம். எனவே அவரது பண்ணையை முழுமையாக பார்வையிட முடியவில்லை.

சுந்தரராமன் அவர்கள் பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இருபதுகளில் தம் தந்தையார் மறைவுக்கு பின் பண்ணையின் பொறுப்பேற்றுக் கொண்டார். “உடன் பிறந்தவர்களில் நான் அதிகம் படிக்கவில்லை. அதனால்தான், நான் வேளாண்மை வேலையை ஏற்றுக் கொண்டேன்” என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அவரிடம் தொடக்கத்திலிருந்தே இயற்கை விவசாயம் செய்து வருகிறாரா என்று கேட்டோம். இல்லையென்றார். தொடக்கத்தில் தாமும் வேதிப் பொருட்களை பயன் படுத்தியதாக்க் கூறினார். அவரது சிந்தனையாள நண்பர் ஒருவர் இச்செயற்கை வேதிப்பொருட்கள் பிற்காலத்தில் நிலத்துக்கு பாதிப்பை உண்டாக்கலாம் என்று ஒரு விதையை இட்டார். அது அய்யாவின் சிந்தனையைத் தூண்டி அவரை இயற்கை வழியைத் தேட வைத்தது. அதன் பின் அவர் பாஸ்கர் சாவே மற்றும் நாராயண ரெட்டி ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். நம்மாழ்வார் அய்யாவின் சகோதர‌ரும் சுந்தரராமன் அவர்களுக்கு இயற்கைக்கு மாறும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

“பிறகு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தினம் ஒரு முயற்சி தான். தினமும் புதுப் புதுப்பாடங்கள் இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும். நம‌க்கு முன்னம் புரிபடாத பல புதிர்களுக்கு விடை கண்முன்னே கிடைக்கும். உண்மைகள் எப்போதும் எளிமையானவை. கண்ணெதிரே நிற்பவை. நாம் தான் அவ்வுண்மைகளை பார்க்க முயற்சிப்பதில்லை. நான் இன்று உங்களுக்கு சொன்ன செய்திகளோ, நீங்கள் கண்ட தோட்ட அமைப்போ எதுவும் புதியதல்ல. இவற்றை நான் தான் கண்டு பிடித்தேன் என்பதும் சரியல்ல. இயற்கை இந்த உண்மைகளை உங்களூக்கு தெரியப் படுத்த என்னை ஒரு கருவியாக்கியுள்ளது. அவ்வளவே.” என்று மிகுந்த அடக்கத்துடன் கூறுகிறார்.

அந்தி நேரம், வானமும் இருட்டத்தொடங்கியது. நாம் புறப்பட்டு இல்லம் திரும்ப வேண்டிய கட்டாய‌த்தினால் சுந்தரராமன் மற்றும் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக் கொண்டோம். அவரது அனுபவமும், சிந்தனைத் திறனும், எளிதாக ஒரு பொருளின் அடிப்படை உண்மையை ஆட்கொள்ளுதலும், ஒரு எண்ணத்தை / புதுச் சிந்தனையை செயல் படுத்தும் விதமும் யாவும் நமக்கு மிகுந்த உவப்பளிக்கின்றன.அவர் பொதுச் சிந்தனையில் ஒரு உயர்ந்த சிகரமாக இருக்கிறார். அவரைப் பின்னொற்றி நாம் செல்கிறோம் என்பதே நமக்கு செருக்களிக்கிறது.

இது போன்ற ஒரு மாமனிதர் வழியில் நம் இதழ் செல்கிறது, அதில் நாமும் ஒரு சிறு பங்காற்ற முடிகிறது என்ற எண்ணமே நமக்கு அளவில்லாத மகிழ்வைத் தருகிறது. இயற்கையை நேசிக்கும் அனைவரும், வேளாண்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், ஈடுபட விழையும் அனைவரும் அய்யாவின் பண்ணைக்கு குறைந்தது ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

திரும்பி வருகையில் அந்த ஆய்வு மாணவர்களுடன் ஒன்றாகப் பயணித்தோம். அவர்கள் இருவரும், அய்யாவைப் பற்றி வியப்பு மிகுதியுடன் உரையாடிக் கொண்டு வந்தார்கள். இவருக்கு ஏன் இன்னும் விருதுகளோ மற்ற அங்கீகாரங்களோ கிடைக்கவில்லை என்று வருத்தப் பட்டார்கள். நமக்கும் அவர் மாபெரும் புரட்சியை, சுற்றுச் சூழல் சேவையை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆயினும், வேறோர் எண்ணமும் தலைப் பட்டது. அவர் இம்மகத்துவம் பொருந்திய செயலை, எந்தப் பலனையும் எண்ணாமல், செயலில் மட்டுமே கவனம் கொண்டு செய்யும் கரும வீர‌ராக இருக்கிறார். அவருக்கு ஏதேனும் விருது கொடுக்கப் பட்டாலும் அது அந்த விருதிற்கு ஒரு அங்கீகாரமே தவிர, சுந்தரராமன் அய்யாவுக்கு அல்ல என்று தோன்றுகிறது.

தொடர்பிற்கு - செம்மல் 9994447252 ; திரு. சுந்தரராமன் 9842724778

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org