கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


“நல்ல கல்வி என்பது என்ன; அதை எவ்வாறு நம் குழந்தைகளுக்கு அளிப்பது ? “என்ற தேடல் இத்தொடரின் நோக்கம். நாம் இதில் பள்ளிக் கல்வியைப் பற்றி மட்டுமே பேசுவதாக உள்ளோம். தற்காலக் கல்லூரிகளெல்லாம் அரசியல், சினிமா, கிரிக்கெட், இணையம் போன்றவற்றின் சந்தையாகி விட்டதும், அதற்கு அப்பாவி இளைஞர்கள் பலிகடாவாவதும் தினசரி நிகழ்வாகி விட்டன. அதிலும் ஓட்டுப் போடும் வயது 21ல் இருந்து 18 ஆனதும் கல்லூரிகள் அரசியல்வாதிகளின் ஆடுகளம் ஆகி விட்டன. தற்காலக் கல்லூரி மாணவ‌ மாணவியர் தங்களின் மனங்கவர் கதாநாயகன் யார் என்று தம்முள் அடித்துக் கொள்வதிலேயே பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறார்கள். கல்விக்கும் கல்லூரிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை. எனினும் கல்லூரிக் கல்வியைப் பற்றி நாம் இத்தொடரில் ஆய்வது தேவையற்றது. ஏனெனில் கல்லூரி என்பது 18 வயதிற்கு மேற்பட்டுத் தொடங்குகிறது. அவ்வயதில் நம் குழந்தைகளுக்கு நன்றும் தீதும் விவரம் தெரியும் என்றும், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்னவாக, யாராக வர வேண்டும் என்றும் தாங்களே முடிவெடுக்க இயலும் என்றும் நாம் ஓரளவு நம்பலாம், எதிர்பார்க்கலாம்.

“கல்வி என்பது ஒரு சுடரைத் தூண்டுவது போன்றது; அது ஒரு பாத்திரத்தை நிரப்புவது அன்று” என்று சாக்ரடீஸ் கூறியுள்ளார். உண்மையான கல்வி என்பது ஒரு மாணவனின் உள்ளிருக்கும் திறமையை வெளிக் கொண்டு வ‌ருவதேயன்றித் தலையணையில் ப‌ஞ்சை வைத்து அடைப்பதுபோல் தேவையற்ற விஷயங்களை நெட்டுருப் போடச் சொல்லி அவனைக் கட்டாயப் படுத்துவது அல்ல. இந்தியாவில் உள்ள பல கோடிப் பள்ளிச் சிறார்களுக்கும் மனப்பாடம் செய்யும் ஒரே திறமைதான் இருக்கிறது என்று சமச்சீர் கல்வியை அழுத்தித் திணிப்பதைப் போன்ற ஒரு முழு மூடத்தனம் எதுவுமே இல்லை. மேலை நாடுகளில் கண்டு பிடிக்கப் பட்ட, பல்லாயிரக் கணக்கான முட்டைக் கோழிகளை மூக்கறுத்துக் கூண்டில் அடைத்து வாயில் தீனியைக் கொடுத்து, வாலில் முட்டையைப் பெறும் கோழிப் பண்ணைக்கும், நம் குழந்தைகளுக்கெல்லாம் சீருடையும், சுமையாய் நூல்களும், கொடுத்து எல்லோருக்கும் ஒரே மாதிரியான‌ கல்வியை அடித்துப் புகட்டும் கல்வித் திட்டத்திற்கும் பெரிதும் வேற்றுமை ஏதும் இல்லை.

சென்ற கட்டுரையின் இறுதியில் “முற்றிலும் கசடற்ற, நேர்மையான, குழந்தைகளுக்கு ஆர்வத்தையும், சிந்திக்கும் திறனையும் தூண்டும் அடிப்படைக் கல்வித் திட்டம் எங்ஙனம் அமைக்கலாம் என்று ஆராய்வோம்” என்று கூறியிருந்தோம். இக்கட்டுரையில் அதனைத் தொடர்வோம். நாம் முதல் கட்டுரையில் கூறியது போன்று கல்வி என்பது இரண்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 1. கடவுக் கல்வி (qualification) 2. கடைகால் கல்வி (fundamental edification).

கடவுக் கல்வி வேலைக்கும், தொழிலுக்கும், வருவாய்க்கும் நம்மை அணியமாக்குவது (தயார் செய்வது). கடைகால் கல்வி ஆனந்த குமாரசாமி, சாக்ரடீஸ் போன்றோர் போற்றும் அறிவை நமக்கு அளிப்பது. விளக்கைத் தூண்டி விடுவதுபோல் நம் ஆர்வத்தையும், அறிவு வேட்கையையும் தூண்டி விட்டு மனிதனை வளர்ப்பது. இப்போது பொருள் ஈட்ட நம்மை அணியமாக்கும் கட்டாயக் கல்வியானது அறிவு வளர்ச்சிக்கே இடம் இல்லாது செய்து விட்டது. இவ்விரண்டையும் ஒருங்கே கற்க இயலும்; எவ்வாறு என்று நாம் பார்ப்போம்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 15-16 வயதில் எதிர்கொள்ளும் ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தை 4 பிரிவுகளாகக் கொள்ளலாம். இது ஒரு எடுத்துக் காட்டே. அவரவர் தம்தம் குழந்தையின் அறிவிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப இதை மாற்றிக் கொள்ளலாம்.

1. இளஞ்சிறார் பருவம்

இது 3 முதல் 7 வயது வரை உள்ள காலம். இப்பருவத்தில் எழுதவோ, படிக்கவோ கற்கலாகாது. புரிதலால் அணியமாகும் பருவம் இது. இப்பருவத்தில் எழுத்தறிவும், தேர்வுகளும், புத்தகங்களும் கையாள்வது கருட புராணத்தில் சொன்னது போல் “முற்புரிதலால் அணியமாகாதவன் நூல்களைப் படிப்பது, குருடன் கண்ணாடியில் அழகு பார்ப்பது போன்றது”. இப்பருவத்தில் குழந்தைகள் பெரும்பாலும் விளையாட்டின் மூலமே கற்கிறார்கள். எனவே சிந்திக்கும் திறனை வளர்க்கும் விடுகதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள், வாய்வழி எண்கணிதம் போன்றவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும் - பயிற்றுவித்தல் என்பதே தவறான சொல்லாடல்; பயிலும் சூழலை மட்டுமே நாம் ஏற்படுத்த வேண்டும் - குழந்தைகள் அவரவருக்கு விருப்பமானவற்றில் தானே ஈடுபடுவார்கள்.

புராணக் கதைகள் , எளிய பாடல்கள், பறவை, மிருகங்களின் பெயர்கள் மற்றும் ஒலிகள், வண்ணம் தீட்டுதல், ஓவியம், விடுகதைகள் மூலம் கணக்கு, ஈசாப் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற நீதிக் கதைகள் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டும். கல்வி என்பதற்குத் தனி நேரம் ஒதுக்காமல் வாழ்வுடன் இணைந்த கல்வியாய் இருக்க வேண்டும். குறிப்பாகப் பாட்டி, தாத்தாவுடன் குழந்தைகள் அதிக நேரம் செலவிட்டால் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக நன்று. எப்படியாயினும், அழுத்தம், போட்டி, வெற்றி, தோல்வி, தோற்றால் கேலி செய்வது போன்ற அழுக்கான சிந்தனைகள் அறவே இல்லாத அன்பான சூழலில் 7 வயது வரை குழந்தைகள் வளர வேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் விளையாட்டின் மூலமே கற்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடவே கூடாது. இப்பருவத்தில் தாய்மொழியிலேயே கல்வி இருக்க வேண்டும். அலைபேசி, ஐபேட், கணினி போன்ற பொருட்களை இப்பருவத்தில் பயன்படுத்தல் மிகக் கெடுதலே. முக்கியமாக வீட்டில், தொலைக்காட்சிப் பெட்டிக்கு விடை கொடுத்து விடவேண்டும். (சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, ஒரு அமெரிக்கக் குழந்தை 3 வயது ஆவதற்குள் சுமார் 20 லட்சம் கொலைகளைத் தொலைக்காட்சியில் கண்டு விடுகிறதாம்!)

2. சிறார் பருவம்

இப்பருவம் 8,9,10 ஆகிய வயதுகள். இதில் எழுத்தறிவு, வாய்ப்பாடு, நமக்கு விருப்பமான‌ பிற மொழிகளுக்கு அறிமுகம், பிற குழந்தைகளுடன் திறந்த வெளியில் விளையாட்டு ஆகியவை நன்மை பயக்கும். இப்பருவத்தில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணிநேரம் பள்ளி நேரம் என்று ஒதுக்கி அதில் அவர்களை ஈடுபடச் செய்யலாம். மற்றும் அவரவர்களுக்கு விருப்பமான விடயங்களில் ஓரிரு மணிநேரம் செலவிடச் செய்யலாம். (எடுத்துக்காட்டாக‌ இசையில் ஈடுபாடுள்ள சிறார்களுக்கு இசைப் பயிற்சி, கணக்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எழுத்துப் புதிர்கள், இயல்பாக மொழிவன்மை உள்ள குழந்தைகளுக்கு இலக்கியப் பரிச்சயம், நாடகம், நடனம் போன்ற விருப்பமானவற்றில் பயிற்சி போன்றவை). இப்பருவத்தில் சுற்றுலா செல்வதும் மிக நன்மை பயக்கும். தமிழகத்தில் இதற்குப் பஞ்சமே இல்லை. நாம் எங்கிருக்கிறோமோ அப்பகுதியின் வரலாற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் பின் மாத‌ம் இருமுறையாவது அருகில் உள்ள பண்டை வர‌லாற்றுச் சின்னங்களைக் காணச் செய்ய வேண்டும். இது தவிர, உழவைப் பற்றியும், தச்சு, தையல், கொல்லர், செங்கல்/சுண்ணாம்புக் காளவாய் போன்று பலதர‌ப்பட்ட‌ தொழில்களைப் பற்றியும் நேரடி அறிமுகப் பயணங்கள் தேவை.

இதன் இறுதியில், சாதாரணப் பள்ளியில் 5ம் வகுப்பு முடிக்கும் சிறுவர்களுக்கு இணையாக நம் குழந்தையின் படிப்பறிவும் இருக்கும். கல்வித் துறையில் மிகுந்த அனுபவமும், அரசுக்குப் பாடத் திட்டங்கள் வரைவதில் ஆலோசகரும் ஆன நண்பர் ஒருவர் “ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் கற்கும் பாடங்களைக் கற்கத் தேவையானது மூன்றே மாதங்கள்தான்” என்ற வியப்பான உண்மையைக் கூறினார்.

3. மலரும் பருவம்

11 முதல் 13 வயது கொண்ட மூன்றாண்டுகள். இதுவே அறிவு மலரும் பருவம். பசுமரத்தாணி போல் கற்பது நிலைத்து இருக்கும் பருவம். இப்பருவத்தின் இறுதியில் சமச்சீர்க் கல்வியின் எட்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவிற்கு நம் குழந்தை அணியமாகி விடும். இம்மூன்று ஆண்டுகளில் வாரம் 5 நாட்கள் தினமும் ஒரு 4 மணிநேரம் ஒரு பாடத் திட்டம் வைத்துக் கொண்டு நாம் கற்பிக்க வேண்டும். நம் பள்ளிகளில் கற்பிப்பது போன்று கணிதம், தமிழ், ஆங்கிலம், அறிவியல்,வரலாறு-புவியியல் ஆகிய ஐந்து பாடங்கள் கற்பிக்கலாம். இவை தவிரக் கைவினைப் பயிற்சி, அடிப்படைக் கணினிப் பய‌ன்பாடு, மாதம் ஒரு சுற்றுலா, கலைகளிற் பயிற்சி, உடற் பயிற்சி, விளையாட்டு போன்றவை மாலை நேரங்களில் இருக்க வேண்டும். எல்லாப் பருவத்திலும் ஓடியாடிப் பிற குழந்தைகளுடன் விளையாடுவது இன்றியமையாதது. வற்புறுத்தல் என்பது துளியேனும் இருக்கலாகாது. இப்பருவத்தின் இறுதியில் நம் பிள்ளைகளுக்கு என்ன துறையில் இயல்பான விருப்பமும் திறமையும் உள்ளது என்று தெளியத் தொடங்கி விடும்.

4. மாணவப் பருவம்

14, 15, 16 ஆகிய மூன்று வருடங்கள். இது வரை பெற்ற கசடற்ற கல்வியின் வலுவால், கடவுக் கல்வியை எளிதாகப் பெறும் பருவம் இது. இதன் இறுதியில் பத்தாம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி கொண்டு, 11ம் வகுப்பில் தங்களுக்கு விருப்பமான பள்ளியில் சேரலாம். இதற்கு அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இரண்டு விதமான தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று நம் இந்திய அரசின் NIOS (National Institute of Open Schooling) எனப்படும் தேர்வு. இன்னொன்று IGCSE (International General Certificate of Secondary Education) எனப்படும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வு. இவை இரண்டை எழுதுவதற்கும் 14 வயது நிறைவேறி விட்டது என்ற பிறப்புச் சான்றிதழ் மட்டுமே தேவை! இத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் எல்லாப் பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் இளைஞர்கள் அவர்களுக்கு விருப்பமான துறையில் கடவுக் கல்வி பெறலாம். இதில் IGCSE மிகவும் பரந்து விரிந்தது. வேளாண்மை, கணிதம், உயிரியல், கட்டிடக் கலை, நாடகம் போன்று 70 இயல்களும், 30 மொழிகளும் தெரிவாக அளிக்கப் படுகின்றன. இவற்றில் அவரவருக்குப் பிடித்த ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றால் போதுமானது.

[மேலும் விவரங்களுக்கு http://www.nios.ac.in/ மற்றும் http://www.cie.org.uk/programmes-and-qualifications/cambridge-secondary-2/cambridge-igcse/ என்ற இணைய தளங்களை அணுகவும்.]

இம்முறைக் கல்வி அதிக அழுத்தம் அற்றது. பிள்ளைகளின் கற்பனைத் திறன், தெரிந்து கோள்ளும் ஆர்வம், சிந்திக்கும் திறன் போன்றவற்றைக் கெடுக்காத ஒரு வழி. இவ்வாறு கற்றால் பின்னாளில் நல்ல வேலைக்கு வர முடியுமா என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால் அது தேவையற்றது. எடுத்துக்காட்டாக மிகக் கடினமான படிப்பு என்று கருதப்படும் மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு குழந்தை விரும்பினால் கூட இம்முறையில் படித்து அவ்விலக்கை அடையலாம். 13 வயது வரை பொதுக் கல்வி கற்ற பின்னர், IGCSE யில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று இயல்களுடன், ஆங்கிலம் எடுத்துக் கொண்டு ஐந்தாவதாக உணவு மற்றும் ஊட்டம் அல்லது புவியியல் அல்லது வேளாண்மை அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற ஒன்றை எடுத்துத் தேர்ச்சி பெற்றுப் பின்னர் 11ம் வகுப்பில் சேரலாம்.

இவ்வாறு கற்பதற்குத் தடையாய் இருப்பவை என்ன, இதனால் விளையும் நல் மற்றும் தீ விளைவுகள் என்ன, சாதாரண பெற்றோர்களுக்கு இது சாத்தியமா போன்ற கேள்விகளை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org