தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்... - ஹர்ஷ் மந்தர்


தமிழாக்கம் - விஜயப்ரியா

[ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளரான ஹர்ஷ் மந்தர் அவர்கள் பஞ்சம் , வறட்சி ஆகியவற்றைச் சற்றும் சட்டை செய்யாமல் எல்லாம் மிளிர்வதுபோல் ஒரு மாயையில் அரசு இயந்திரமும், நிர்வாகிகளும் வலம் வருவதைச் சாடி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 08/02/2016 அன்று எழுதிய கட்டுரை. உலகமயமாக்கலால் வலுத்தவர் மேலும் வலுத்தும், இளைத்தவர் மேலும் இளைத்தும் போவார்கள் என்பதற்கு இப்பொதைய நிலைமை ஒரு நல்ல சான்று]

மறைக்க மற்றும் மறுக்கப்பட்ட வறட்சி: பல மாநிலங்களின் மக்கள் உணவு மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையால் வாடும் போது அத்துயரக்கண்ணீருக்கு நாம் புறமுதுகு காட்டுகிறோமா?

நமது இந்திய தேசம் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வியப்பூட்டும் ஆச்சரியகரமான மாற்றங்களைக் கண்டுள்ளது. சில மாற்றங்கள் நம்மை மிகவும் வருத்தப்படவும் வைக்கின்றன‌. இதில் வேதனைப்படக்கூடிய மாற்றம் ஒன்று என்னவெனில், நமது அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் மக்கள் வறட்சியைக் கையாளும் விதம்தான்.

1980 ம் ஆண்டு நான் மாவட்ட ஆட்சியராக சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாவட்டங்களில் பணியாற்றும் போது தொடர்ந்து மூன்று வருடங்கள் அங்கு வறட்சி நிலவியது. தற்சமயம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் நமது நாடு எதிர் கொண்டிருக்கும் சூழல் அதனின்றும் வேறுபட்டதல்ல. அதே தொடர் வறட்சியாகவே இருக்கிறது.ஆனால் 1980 ம் ஆண்டில் நாம் வறட்சியைக் கையாண்ட விதம் வேறு. அப்போது நமது மத்திய, மாநில அரசுகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் வறட்சி நிலவுகிறது என்பதனை தீவிரமாக அறிந்து அதற்குரிய நிவாரணப் பணிகளுக்கும், அதைச் சார்ந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிக் கருவூலத்தை வறட்சி நிவாரணப் பணிகளுக்குச் செலவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முழுமையான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலிட உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டுய அவசியமும் இல்லாது இருந்தது. இதனால், இந்த அதிகாரத்தைச் பயன்படுத்தித் தங்கள் மாவட்டத்தின் மக்கள் தங்களின் உணவு மற்றும் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சூழ்நிலை இருந்தது. அத்துடன் அவர்களின் கால்நடைகளுக்குப் போதிய தீவனம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் தங்கள் கிராம‌ங்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிடும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

எனது மாவட்டத்தில் மக்களுக்கான 'உணவுக்கூடம்', கால்நடைகளுக்கான தீவனக்கூடம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டு நிவாரணப்பணிகள் தீவிரமாகச் செய்யப்பட்டன‌. சுமார் ஒரு லட்சம் மனித உழைப்பு நாட்கள் தினமும் செலவிடப்பட்டு வந்தது.

இந்த நிவாரணப் பணிகளில் ஒருசில குறைபாடுகள் இருந்த போதிலும் நிவாரணப் பணிகள் முழுமையாகவும், தீவிரமாகவும் செய்யப்பட்டு வந்தன‌. இந்த பணிகளுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது நமது நாட்டில் 11 மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்காளக வறட்சி நிலவிவருகிறது. (ஆனால் நாம் பத்திரிக்கைகளை திறந்தாலோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தாலோ நாடாளுமன்ற‌ விவாதங்களைக் கேட்டாலோ நாட்டில் உள்ள வறட்சியைப் பற்றிய‌ செய்திகளே இல்லை. மூத்த பத்திரிக்கையாளர்கள் கூட வறட்சி என்பது இல்லை என்கின்றனர். மேலும் வறட்சி நிலவுகிறது என்பது ஒரு கற்பனையே என்கின்றனர்.

நான் உத்திரப்பிரதேசத்தில் “பண்டல் கண்ட்” என்ற மாவட்டத்திற்கு நேரில் சென்றேன். அந்த மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று அக்கிராமங்களில் உள்ள சுமார் 500 கிராம மக்களிடையே நேர்க்காணல் செய்தேன். அதில் நான் தெரிந்து கொண்ட அதிர்ச்சியான உண்மைகள் என்னவெனில்:

சில மக்கள் ஒரு நாளில் ஒரு வேலை மட்டுமே உணவு உண்கிறார்கள் மற்றும் சில மக்கள் பசி ஏற்படாது இருக்க சில தானியங்களுடன் சில காட்டு இலைகளையும் சேர்த்துஅச் சாப்பிடுகின்றனர்.(இந்த இலைகள் ஒரு நாள் முழுவதும் பசி எடுக்காமல் இருக்க உதவுமாம்) நாங்கள் எடுத்த கணக்கெடுப்பில் 86 சதவீத மக்கள் பருப்பு சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ள‌னர். 79 சதவீத மக்கள் தாங்கள் சாப்பிடும் சாப்பாத்தி மற்றும் சாதத்திற்கு உப்பு மற்றும் துவையல் வைத்தே சாப்பிடுகின்றன்ர். 84 சதவீத மக்கள் தங்கள் வீட்டு சிறுவர்களுக்குப் பால் கொடுப்பதையே நிறுத்தி விட்டனர். பத்துக்கு ஏழு குடும்பங்களில் அந்த வீட்டு ஆண்கள் வேலை தேடி பஞ்சாப்,டெல்லி,ஹைதராபாத் போன்ற மாநிலம் மற்றும் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.

மேற்சொன்ன ஆதரங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, வரும் கோடைகாலத்தில் வறட்சியின் தாக்கம் மிகக் கூடுதலாகவே இருக்கும் என்று தெறிகிறது. இது தவிர விவசாயிகள் மற்றும் தினக்கூலிகளின் தற்கொலையும் அதிகரித்து கொண்டே போகிறது.

உதாரணமாக “ஓரன்” என்ற‌ கிராமத்தில் சகுந்தலன் என்பவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில், பயிர் செய்துவிட்டு , பஞ்சாப் மாநிலத்திற்கு கூலி வேலை செய்ய தனது கிராமத்திலிருந்து சென்றுவிட்டார். சென்ற இடத்தில் தனக்கு போதுமான வருமானம் இல்லாததால் தனது கிராமத்திற்கே திரும்பி வந்தார். தான் பயிர் செய்திருந்த தனது நிலத்தில் வருமானம் இல்லாததால் ரூ 50,000/- வரை கடனாளி ஆனார். முடிவில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வறட்சிக்கு நிவாரணம் கொடுக்க மாநில அரசுகள் அலட்சியமான போக்கையே காட்டி வருகின்றன. இந்த அலட்சியமான‌ போக்கு மிகவும் வேதனை தருகிறது. அரசு மக்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு செய்து கொடுக்கவில்லை. வேலை கொடுத்தாலும் வேலை செய்த மக்களுக்குச் சரியான சம்பளம் கொடுப்பதில்லை. MNREGA போன்ற திட்டங்களில் வருடக்கண‌க்காக சம்பளம் கொடுக்காமால் இருக்கும் சூழ்நிலையே உள்ளது.

15 மாதங்களுக்கு முன்னரே அமலுக்கு வரவேண்டிய‌ தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) என்னும் சட்டத்தினை அமல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரும் தயக்கத்தையே காட்டி வருகின்றன‌. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாட்டின் 80 சதவீத மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான தானியங்கள் 50 சதவீதம் இலவசமாக கிடைத்து விடும்.

வேலைக்காக வெளியிடங்களுக்கு செல்லும் ஆண்களின் குடும்பத்தினரின் வீட்டில் வயதான முதியவர்கள், தனியே வசிக்கும் பெண்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் இந்த வறட்சியின் போது இன்னும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு கிச்சடி போன்ற உணவு தொடர்ச்சியாக, போதுமான அளவு அளிப்பதில்லை. அவர்களுக்கு நல்ல குடிதண்ணீர் கொடுப்பதில்லை, சரியான தீவன சேமிப்பு கிடங்கு மற்றும் வினியோகம் இல்லாததால் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில்லை. இவை எல்லாம்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் அடிப்படையான வேலை ஆகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவது இல்லை. இந்த அடிப்படையான வேலையை செய்யாத அரசு அதிகாரிகளின் மேல் நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட வறட்சிக் காலத்தில் பஞ்ச நிவாரணப்பணிகள் இவ்வாறு செய்வது என்று ஒரு வரையறை செய்திருந்தனர். ஆனால் தற்போதைய நமது குடியரசு ஆட்சியில், வறட்சிக் காலங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு எவ்வாறு நிவாரணப் பணிகள் செய்வது என்ற தக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்த முடியாத நிலையே உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் வேகமகன வளர்ச்சிப் பாதையைக் கண்டுள்ளது. தானியக் கிடங்குகளில் அபரிமிதமான இருப்பு உள்ள சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார வளர்ச்சியோ அல்லது தானியக் கிடங்குகளில் இருக்கும் தானியங்களோ வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் துயரைத் துடைக்கப் பயன்படுத்துவதில்லை. அவரின் துயரக் கண்ணீருக்கு நாம் புறமுதுகைக் காட்டுவது போலவே உள்ளது.

http://indianexpress.com/article/opinion/columns/drought-india-food-scarcities-1980-hot-summer-the-invisible-drought/

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org