உணவு என்பது பொதுச் சொத்தே! - பரிதி


[கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)]

காற்று, நீர், உணவு ஆகியன நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதன. இவையனைத்துமே மாசுபட்டுத் தரங்கெட்டுவிட்டன. மேலும், நம் உணவு பெரும்பாலும் சந்தையில் வாங்கிவிற்கிற வணிகப் பண்டமாகிவிட்டது. (தண்ணீரும் அதுபோலவே ஆகி வருகிறது.) இதற்கு முழுமுதற் காரணமான உலகளாவிய, ஆலைமயமான உணவு உற்பத்தி முறைமை தவிர்க்கமுடியாதது மட்டுமின்றி இத்தகைய சந்தைப் பொருளாதாரமே அனைவருக்கும் சிறந்தது என்கிற மாயை உலெகங்கும் பரப்பப்பட்டுள்ளது. ஒன்றிய நாடுகளவை வெளியிட்ட 'நிலைத்த மேம்பாட்டு'க்கான முன்னீடுகளும் இதை அடிப்படையாகக் கொண்டவையே. உலகம் முழுவதையும் தம் வணிகக் களமாக மாற்றியுள்ள பெருநிறுவனங்களின் போக்கைத் திருத்தினாலே சூழல் கேடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிற மிகத் தவறான வாதத்தைப் போலவே மேற்கண்ட மாயையும் தவறானது.

உணவு என்பது முற்காலத்தில் இருந்ததைப் போலவே அனைத்து மக்களுக்கும் உரிமையான பொதுச் சொத்தாக மீண்டும் கருதப்படவேண்டும். அத்தகைய கருத்துப் பரவினால் மட்டுமே உணவு உற்பத்தி செய்வோர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயங் கிடைக்கும். அப்போது தான் உணவு உற்பத்தி முறையும் சூழல் உள்ளிட்ட பொது நலன்களுக்கு ஏற்றதாக அமையும். உற்பத்தியும் வழங்கலும் பகுதிசார்ந்தனவாகவும் அதே சமயம் சந்தை விதிகள், அரசுச் சட்டங்கள், மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் ஆகிய அனைத்துக் கூறுகளும் ஒருங்கிணைந்தனவாகவும் இருக்கும். அறநெறி, சட்டம், பொருளாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்தின் மீதும் இது பெருமளவு தாக்கம் செலுத்தும்.

உணவு ஒரு சந்தைப் பண்டமன்று

உணவு என்பது அளவில் இயற்கை வரம்புகளுக்கு உட்பட்டது; ஆனால், புதுப்பிக்கத்தக்கது; மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இயற்கையில் தானாக விளைவது மற்றும் மனிதர் தம் உழைப்பால் வேளாண்மையில் உருவாக்கக்கூடியது என இருவகைகளில் உணவு உற்பத்தியாகிறது. முற்காலத்தில் உணவு என்பது அனைவருக்கும் கிடைத்த பொது வளமாகக் குமுகக் கட்டுப்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் இந்நிலை பிறழ்ந்து உணவு என்பது இப்போது உலகளாவிய சந்தைப் பரிமாற்றப் பண்டமாக, தனியார் உடைமையாக மாறிவிட்டது. அந்த மாற்றத்தினூடாக ஆலைமயமான உற்பத்தி மற்றும் பதனிடு முறைகளுக்குத் தக்கவாறு உணவு மாற்றப்பட்டுவிட்டது. அதே சமயத்தில் பொருளாதாரம் தவிர்த்த கீழ்க்கண்ட பிற கூறுகள் அனைத்தும் உணவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. உணவு என்பது,


1.உள்ளார்ந்த மனிதத் தேவை; ஆகவே அது உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்
2.நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்படவேண்டிய அடிப்படை மனித உரிமை
3.உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருடைய பண்பாட்டுத் தூண்
4.மாந்தக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய புதுப்பிக்கத் தக்க இயற்கை வளம்
5.நேர்மையான வணிகம், நிலைத்து நிற்கவல்ல உற்பத்தி முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு சந்தைப்படுத்தக்கூடியது
6.உலக மக்கள் அனைவரும் உண்டு மகிழவேண்டிய பொது வளம்

ஆனால், நம் உடல் நலம், உயிராதாரம் உள்ளிட்ட பல இன்றியமையாத பரிமாணங்களின் அடிப்படையில் இப்போது உணவு மதிப்பிடப்படுவதில்லை. இருப்பினும், இப்போதும் ஒன்றும் தலைமுழுகிவிடவில்லை! உணவின் கீழ்க்கண்ட பல பரிமாணங்களை ஆலைமயமான உணவு முறை இன்னமும் கையகப்படுத்தவில்லை, தனியார்மயமாக்கவில்லை; இவை பொது வளங்களாகவே இப்போதும் கருதப்படுகின்றன:


1.பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகத் தொகுக்கப்பட்ட பாரம்பரிய வேளாண் அறிவு
2.அண்மைக் காலங்களில் தேசிய வேளாண் கழகங்களில் தொகுக்கப்பட்டுள்ள நவீன வேளாண் அறிவு
3.பகுதிசார் உணவு முறைகள், சமையல் செய்முறைகள், தேசிய மற்றும் உள்ளூரளவிலான சுவையுணவுக்கலை
4.உணவுக்காக மனிதர் வளர்க்காத, ஆனால் உணவாகக்கூடிய பயிர்கள், விலங்குகள் (இயற்கையாக வளரும் மீன் வகைகள், பழங்கள் உள்ளிட்டவை)
5.உணவுக்கும் வேளாண்மைக்கும் தேவையான மரபியல் வளங்கள்
6.பொதுநலன் தொடர்பான அக்கறைகள் - உணவுத் தூய்மை, உடல்நலம், சத்துகள்,

ஆலைமயமான உணவு முறைமை செயலிழந்துவிட்டது

விதைகளையும் நிலத்தையும் தனியுடைமையாக்குதல், சட்டமியற்றுதல், அநீதியாக விலைகளை உயர்த்துதல், காப்புரிமை பெறுதல் போன்ற செயல்களின் வழியாக ஆலைமயமான உணவு முறைமை உலக மக்களின் உணவு உரிமையைச் சுற்றிவளைத்துள்ளது. வரவர அதிக எண்ணிக்கையிலான உலக மக்களுடைய உணவு உரிமை அதன் கட்டுப்பாட்டில் உள்ளது. உணவு ஏற்றுமதி மற்றும் வேளாண் இடுபொருள்கள் ஆகியவற்றை அது கட்டுப்படுத்துகிறது. உலகந் தழுவிய பெருஞ்சந்தையை உருவாக்கி மக்களை வெறும் நுகர்வோராக மாற்றியுள்ளது.

உரியதைக் காட்டிலும் குறைவாக விலை மதிப்பிடப்பட்ட உணவு வளங்களைக் கைப்பற்றுதல், பெருநிறுவனங்களின் உபரியை அதிகரித்தல் ஆகியவையே இந்த முறைமையின் குறிக்கோள்கள். மக்களின் நலவாழ்வுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருதல் உள்ளிட்ட (பொருளாதாரம் தவிர்த்த பிற தளங்களில்) உணவின் முதன்மையான பண்புகளை உறுதிப்படுத்துதல் அதன் குறிக்கோளன்று. உலகளாவிய உணவு முறைமை தோல்வியுற்றதற்கும் முறிந்திருப்பதற்கும் இதுவே காரணம்.

உலகில் தேவையைக் காட்டிலும் மிக அதிக அளவில் உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும் பசி, பட்டினி தொடர்கின்றன. “பணம் இல்லாவிட்டால் உணவு இல்லை” என்பதுதான் இதற்குக் காரணம். நிலைத்த வேளாண் முறைகளைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்தல், அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு தருதல், பசிப்பிணி போக்குதல் ஆகிய அடிப்படைக் குறிக்கோள்களில் இந்த உணவு முறைமை மேன்மேலும் தோல்வியைத் தழுவி வருகிறது. உலக உணவு உற்பத்தியில் எழுபது விழுக்காட்டினை உற்பத்தி செய்பவர்களில் பாதிப்பேர் பசியால் வாடுகிறார்கள் என்பது நகைமுரணானது.

உணவு முறைமைக்கும் பசிப்பிணிக்கும் இடையிலான தொடர்புகளைக் குறித்த பகுப்பாய்வுகள் உணவு தனியார்மயமாக்கப்படுவதைப் பெரும்பாலும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. இதன் விளைவாக, உணவுப் பற்றாக்குறைதான் பசி, பட்டினிக்கு முதன்மைக் காரணம் என்றே பெரும்பாலான மக்கள் [தவறாக] நினைக்கின்றார்கள்.

ஆனால், உண்மை இதற்கு நேரெதிரானது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் தமக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொள்ள இயன்றாலுங்கூடக் கட்டற்ற சந்தைப் பொருளாதார முறைகளால் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு தர இயலாது. சந்தை விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும் ஒரு பண்டமாக உணவைக் கருதுகிற ஆலைமயமான உணவு முறைமை உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு கிடைப்பதை ஒருபோதும் உறுதி செய்யாது. மேலும், உணவைச் சந்தைப் பண்டமாக்குதல் அதன் சந்தைக்கு அப்பாற்பட்ட பிற முதன்மைக் கூறுகளை ஒதுக்கித்தள்ளுகிறது. பலர் ஒன்று கூடிச் சமைத்துச் சாப்பிடுதல், வெவ்வேறு நாகரிங்களின் சிறப்புக் கூறுகளாகத் திகழும் பாரம்பரிய உணவு முறைகளையும் கலைகளையும் போற்றிக் காத்தல், அறுவடைக்குப் பின்னர் எஞ்சும் கழிவுகளில் இருந்து தவசங்களைப் பொறுக்கியெடுத்தல் மற்றும் உணவு பதுக்கப்படும் கிடங்குகளில் இருந்து பஞ்ச காலங்களில் உணவைத் திருடி வறியோர்க்கு வழங்குதல் போன்ற பழங்காலப் பொருளாதார அறநெறிச் செயல்பாடுகள் ஆகியவை அத்தகைய முதன்மைக் கூறுகளில் சில.

தனி மனிதர், உள்ளூர், மாநிலம், நாடு, உலகம் எனப் பல தளங்களில் நிகழும் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இது தொடர்பாகப் பருண்மையான ஒரு தீர்வு உருவாகும். மேலும், சந்தை, அரசு, மக்கள் திரள் ஆகிய பல முனைகளிலும் இருக்கும் ஆளுமைகளைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் அந்தத் தீர்வு இருக்கவேண்டும்.

உணவு ஒரு பொது வளமாக …

நாம் நம் உணவைப் பொதுச் சொத்தாக நினைக்கவேண்டும்; அதற்கு நம் சிந்தனைகளில் மிகப்பெரிய மாற்றம் தேவை. அதன் விளைவுகள் நம் அன்றாட நடைமுறையில் எதிரொளிக்கும் என்பது உறுதி. தனியார் பெருநிறுவன நலன்களுக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ள நாட்டிடை வர்த்தக உடன்படிக்கைகள்தாம் நம் உணவு முறைமையைக் கட்டுப்படுத்துகின்றன. உலக அளவில் உணவு உற்பத்தி, வழங்கல், பெறுதல் ஆகிய அனைத்தையும் உறுதி செய்யும் ஆளுமை முறைமையை உருவாக்கவேண்டும். பட்டினியை ஒழித்தல், அனைவருடைய உணவு உரிமையையும் உறுதி செய்தல், ஒவ்வொரு நாட்டின் அரசும் தன் குடிமக்களுக்குத் தேவையான அளவு உணவு வழங்குவதை உறுதிப்படுத்துதல், உணவுப் பண்டங்களின் விலைகளுக்கேற்பத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், உணவுப் பொருள்களில் ஊகவணிகத்தைத் தடுத்தல், உயிரெரிபொருள் உற்பத்தி போன்ற உணவல்லாத தேவைகளுக்கு உணவுப் பண்டங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகிய கடப்பாடுகளைச் செயல்படுத்துவதற்கு அந்தப் புதிய ஆளுமை முறைமை அரசுகளைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தவேண்டும்.

அந்தப் புது முறைமையில் அறிவியல் தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றனவாக வடிவமைக்கப்படும். அனைத்து மக்களின் நேரடிப் பங்களிப்பும் பகிர்ந்துகொள்ளக்கூடிய படைப்பாற்றல் உரிமங்களும் அந்த வடிவமைப்புக்கு உதவும். அந்தப் படைப்பாற்றல் உரிமங்கள் கட்டற்றவையாக – அதாவது, காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாதனவாக – இருக்கும். உணவு முறைமைகளின் நேர்மை மற்றும் நியாயத் தன்மை, தொடர்ந்து பயன்படுத்தத் தகுந்த நிலைத்த தன்மை ஆகியவற்றை ஒவ்வோர் பகுதிக்கும் தக்கவாறு வடிவமைப்பதற்கு ஏதுவானவையாகவும் அவை விளங்கும். பெருநிறுவனங்கள் மற்றும் அரசுகளின் ஆராய்ச்சிச் சாலைகளில் சில ஆயிரம் அறிவியலாளர்கள் உருவாக்கக்கூடிய தீர்வுகளைக் காட்டிலும் புத்தாக்கத் திறனுள்ள பல கோடிப் பொதுமக்கள் உருவாக்கக்கூடிய தீர்வுகள் அவர்களுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமானவையாகவும் சூழலுக்கேற்ப மாற்றத்தக்கனவாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேளாண் துறையில் இப்போது உள்ள காப்புரிமைச் சட்டங்கள் உணவாதாரத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையான முழு அளவிலான கண்டுபிடிப்புகளுக்குப் பின்னடைவை உண்டுபண்ணுகின்றன. இதற்கு மாறாக, கண்டுபிடிப்புகளைக் கட்டற்ற முறையில் அனைவரும் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் மக்களுடைய படைப்பாற்றலையும் புத்தாக்கத்திறனையும் வளர்க்கமுடியும்.

மக்களின் ஒன்றுபட்ட செயல்பாடுகளும் உணவுத்துறையில் செயல்படும் மாற்று வலையங்களும் நிலைத்த, நேர்மையான உணவு முறைமைகளை நோக்கி நம்மை இட்டுச்செல்லும். தம்மை ஆளும் அமைப்புகளிலும் பொதுக்குடிவாழ்வுக் குழுமங்களிலும் அனைவரும் ஈடுபடுதல், மக்கள் பொது இடங்களில் கூடி உண்டுமகிழ்தல், உள்ளூர்ப் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்துப் பகிர்ந்துண்ணுதல் உள்ளிட்டவை அந்தப் புது உணவு முறைமைகளின் கூறுகளாக இருக்கும். பொருளாதாரத்தில் நொபேல் பரிசு பெற்ற அறிஞர் எலினார் ஓசுட்ராம் உள்ளிட்டோர் முன்வைக்கும் ஆளுமைக் கோட்பாடுகளின்படி உணவு உற்பத்தி, வழங்கல், நுகர்வு ஆகியவை இயங்கும்.

இந்தக் கூட்டுச் செயல்பாடுகள் முதலில் உள்ளூரளவில் செயல்படுத்தப்படும். தம் குடிமக்களின் நலனைப் பெருமளவு உயர்த்துதல், மக்கள் தம் உணவு உரிமையை அடைவதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியன அந்தச் செயல்பாடுகளில் பங்கேற்கும் அரசுகளின் முதன்மைக் குறிக்கோள்களாக இருக்கும். அந்தச் செயல்பாடுகளின் தொடக்கக் காலத்தில் அரசுச் சட்ட நெறிமுறைகள், அரசியல் மற்றும் நிதித் துறைகளில் அரசுகளின் ஊக்குவிப்புகள் ஆகியன கூட்டுறவு அமைப்புகள் மற்றும் குமுகவியல் தொழில்முனைவோருக்கு உதவிகரமாக இருக்கும். உணவு உற்பத்தியாளர்கள், நுகர்வோர், சூழல், குமுகம் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் இத்தகைய கூட்டுமுயற்சிகள் நன்மை செய்வதை உலகின் பல பகுதிகளில் செயல்படும் முனைப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன. முன்மாதிரியான அத்தகைய செயல்பாடுகளை நாடு முழுமையிலும் உலக அளவிலும் பரப்பி மேம்படுத்தவேண்டும். அந்நிலையில் உள்ளூர் அரசுகள், தொழில் முனைவோர், மற்றும் மக்கள் தாமாக இணைந்துருவாக்கும் பொதுக்குடிவாழ்வுக் குழுமங்கள் ஆகியவை ஒத்திசைந்து செயல்பட்டு வளரும்; அனைவருக்கும் போதுமானதும் சத்து மிக்கதுமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான குமுக மாற்றத்தில் அரசுகளுக்குத் தலையாய பங்களிப்புத் தரும் செயலாக அது விளங்கும்.

நன்றி: Jose Luis Vivero Pol, World Nutrition, April 2015, vol. 6, No. 4, p. 306-309


1.எலினார் ஓசுட்ராம் elinor ostrom
2.ஒன்றிய நாடுகளவை the united nations
3.சுவையுணவுக்கலை gastronomy
4.நிலைத்த மேம்பாட்டுக்கான முன்னீடுகள் proposals for sustainable development
5.நொபேல் பரிசு nobel prize
6.பகிர்ந்துகொள்ளக்கூடிய படைப்பாற்றல் உரிமங்கள் creative commons licenses
7.பொதுக்குடிவாழ்வுக் குழுமம் community

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org