தரம்பால் கண்ட இந்தியா - ராம்


தரம்பால் என்ற மனிதர் ஸமன்வயா ராம்

தரம்பால் வாழ்க்கை – ஒரு சிறு குறிப்பு

1922ஆம் ஆண்டு இன்றைய உத்திரபிரதேசத்தில் உள்ள மீரட் எங்கின்ற ஊரை அடுத்த சிறு கிராமத்தில்தான் தரம்பால் பிறந்தார். அவர் வளர்ந்தும் இந்த மீரட் பகுதியில்தான். முதன் முதலில் 1930களில் லாகூர் காங்கிரஸ் கூட்ட்த்திற்கு தன் தமையனுடன் சிறு பிள்ளையான தரம்பால் சென்றார், அங்குதான் அவர் முதல்முறையாக மகாத்மா காந்தியை தரிசித்தார். 1942வில் சுதந்திர இயக்கத்தின் தீவிரத்தால் ஈர்கப்பட்டு தன் கல்லூரி படிப்பை துறந்து சிறை சென்ற தரம்பால், இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் தில்லீயில் அகதிகள் முகாமில் சேவகனாக பணி செய்தார். அன்று பல காந்தியவாதிகள் கமலாதேவி சடோபாத்யாயா தலைமையில், பாகிஸ்தானிலுருந்து வந்து குமிந்துகொண்டிருந்த லட்சக்கணக்கான அகதிகளை, அகதிகள் முகாம்களில் தங்கவைத்து பார்த்துக்கொள்ளும் வேலைகளை செய்துவந்தனர்.

காந்தியடிகளில் முக்கிய சீடர்களில் ஒருவரான மீரா பெஹ்ன் அவர்களுடன் நெருங்கி பழக வாய்ப்புகிடைத்ததால், தரம்பால் மற்றும் பல காந்தியவாதிகள் 1950களில் ரிஷிகேஷ் அருகே ஒரு சிறு கிராமத்தி, மாதிரி கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஃபிலிஸ் எங்கின்ற ஆங்கிலேய பெண்ணை மணந்து கொண்ட தரம்பால் அவருடன் லண்டன் சென்று வாழலானார். சுதந்திர போரட்ட காலத்தில் தன்னுடன் தொடர்பு கொண்ட பல இளைஞர்களுடன் தொடர்ந்து அவர் கடிதம் மூலமாக இந்தியாவின் வருங்காலத்தை பற்றி தனது சிந்தனைகளை பகிர்ந்து வந்தார். அவ்வப்போழுது இந்தியாவிற்கும் வரவும் செய்தார்.

1960இன் தொடக்கத்தில், சீன தொடர்புகளின் மெத்தன போக்கையும், தனது மகளை அரசியலில் முன்னிருத்தும் முயற்சியையும், பண்டித நேருவை விமர்சித்து இவரும் இன்னமும் இருவரும் சேர்ந்து ஒரு கடுமையான சாடல் கடிதமெழுதினர், (“ஒரே மாலைப்பொழுதில் அந்த கடிதத்தை, கைப்பட நகலெடுத்து, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் இல்லத்திற்கும் சைக்கிளில் கொண்டு அளித்தோம்”, என்று பிற்காலத்தில் அவர் அந்த மாலைப்பொழுதை நினைவுகூர்வார்). இதற்காக இவரை இந்திய அரசாங்கம் சிறையிலடைத்தது. 1970களில் இந்திராகந்தி அவரசட்டம் பிரகடனப்படுத்திய பொழுது, லண்டனில் இருந்த தரம்பால், அதனை எதிர்த்து இந்திய சமூகத்தின் மத்தியில் மக்கள் குரலை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். 1982ல் தரம்பாலில் மனைவி காலமானார், அப்போழுது இந்தியா திரும்பிய தரம்பால், அதற்கு பிறகு அவர் மறையும் (2006) வரை பெரும்பாலும் செவாகிராம் காந்தி ஆஸ்ரமத்திலேயே வாழ்ந்தார்.

தரம்பால் வாழ்க்கையில் காந்தியின் தாக்கம்

சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அறைகூவலுக்கிணங்க கதர் ஆடை அணிய துவங்கிய தரம்பால் கடைசிவறை அதையே அணிந்து வந்தார். அந்த காலத்து காந்தியவாதிகளின் வாழ்க்கை தரத்திகிற்ணங்க அவர் தனிப்பட்ட வாழ்க்கை, எளிமையாகவும், சுதந்தரமாகவும், சுத்தமாகவும் இருந்தது. எளிமை என்ற பெயரால் அழுக்காகவும், அருவருக்கும் விதத்திலும் யாராவது காந்தியவாதிகள் கண்ணில்பட்டால் மிகவும் கோபமடையக்கூடிய தரம்பால், அதனை காந்தியத்தில் சேர்க்க மறுத்தார். காந்தியடிகளை கடவுளாக பாவித்த சில காந்திய பக்தர்களான காந்தியவாதிகளை அதிக அளவில் சாடிய தரம்பால், தன்னை ஒரு காந்திய தொண்டனாகவே வாழ்நாள் முழுவதும் எண்ணினார். மகாத்மா காந்தி, கடந்த நூற்றாண்டில் மிக அதிக அளவில் எழுதியும், பேசியும் உள்ள உலகத்தலைவர்களில் முதல் இடத்தை பெற்றவர். அவருடயை எழுத்தும், பேச்சும் ஒன்று திரட்டி 98 தொகுப்புகளில் வெளியிட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தொகுப்பும் ஏறத்தாழ 400-450 பக்கங்களை கொண்ட்தாக இருக்கும். இந்தியாவில் இந்த மொத்த தொகுப்புகளை படித்தறிந்த கையளவு காந்தியம் வல்லுனர்களில் தரம்பால் முக்கியமானவர். “இந்தியாவின் சாதாரண மக்களை காந்தியை தவிர வேறொரு தலைவர் மரியாதையுடனும், கவனத்துடனும் பார்த்தும் பழகியும் நான் கண்டதில்லை” என்று பிற்காலத்தில் தரம்பால். இந்த அணுகுக் முறை மற்றும் சாதாரண மக்களுக்கான மரியாதை தரம்பாலின் மனதிலும் மனித உறவுகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சேவாகிராமில் அவர் காண வந்த பல முக்கியஸ்தர்களுக்காக, தனது ஆராய்சி நேரத்தை என்றும் விட்டுக்கொடுக்காத அவர், அந்த வழியாக போகும் ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும், வீட்டிற்கு விறகு சுமந்து செல்லும் பெண்களுக்கும், ஆஸ்ரமத்திற்கு வரும் கிராம பள்ளி ஆசிரியர்களுக்காவும் அதிக அளவில் நேரம் ஒதுக்குவார். அவர்கள் கூறுவதை மிக ஆழமாகவும், மரியாதையுடனும் கேட்டறிவார். “இந்திய நாகரீகத்தைவிட உயர்ந்த உன்னதமான நாகரீகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்ற காந்தியடிகளின் மற்றொரு சிந்தயையை, தரம்பால் வெகுவாக ஆதாரித்தார், ஆமோதித்தார், தானும் அதையே தனது ஆராய்சிகளில் வாயிலாகவும் உணர்த்தினார். காந்தியடிகளின் மற்றொது பண்பு, பகைவனுக்கும் மனிதநேயம் பேணுதல். காந்தியடிகளில் கொலைக்கு பிறகு காந்தியவாதிகள் பலரும் இன்றும் கூட, ஆர்.ஸ்.ஸ். மற்றும் இந்துத்துவ சித்தாந்த இயக்கங்களை வெறுக்கவும், நிராகரிக்கவும் செய்கின்றனர். தரம்பால் இதற்கு மாறாக அவர்களுக்கும் இடையே சென்று காந்தியத்தை பற்றியும் இந்தியாவின் உண்மை பெருமைகளை கூறியும் வந்தார். இதனால் இவருக்கு காந்தியவாதிகளின் மத்தியில் அவப்பெயர் வந்தபோதும் அதை அவர் பெரிதும் பொருட்படுத்தவில்லை. தரம்பாலும் தமிழகமும்

தமிழகமும், தமிழும் தரம்பாலின் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றிருந்த்து. தமிழகத்தில் உள்ள கிராமப்புற ‘சமுதாயங்கள்’ எங்கின்ற சமூக்கட்டமைபையும் அதன் துல்லியமான கணக்குவழக்குகளை நிற்ணயித்து பராமரிக்கும் விதத்தையும் பெரிதும் வியந்து பாராட்டியுள்ளார் தரம்பால். தமிழகத்தில் பலகாலம் தங்கியும், பயணித்தும் அவர் பல்வேறு ஆராய்சி கட்டுரைகளை இங்கிருந்து எழுதியிருக்கின்றார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பாரம்பரிய சமூகங்களை குறித்த பல ஆவணங்கள் அன்றைய ‘மதராஸ் மாகாணம்’ ஆன, தமிழகம் மற்றும் இதர தென் மாநிலங்களை சேர்ந்தவையே. லண்டனை போலவே, சென்னையிலும், எழும்பூரில் அமைந்துள்ள ஆவணங்களின் நூலகத்தில் அவர் பல மாதங்கள் ஆராய்சியில் கழித்துள்ளார்.

“1950களில், என் கை ரேகையை பார்த்த ஒரு ஜோதிடன் சொன்னான், ‘வாழ்நாள் முழுவதும் உன்னை சுற்றி ஒரு இளைஞர்கள் கூட்டம் உனக்கு பலமாக இருந்துகொண்டேயிருக்கும்’ என்று. அவன் கூறிய இந்த ஒரு ஜோதிடம், நிச்சயமாக எனது வாழ்வில் உண்மையாகியுள்ளது”, என்று ஒரு முறை வேடிக்கையாகப் பேசும்பொழுது தரம்பால் கூறினார். அவருடன் பணியின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த முக்கிய இளைஞர்களின் கூட்டமும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. சென்னையை சேர்ந்த பி.பி.ஸ்.டி. (PPST - Patriotic People for Science and Technology) என்ற 80களில் செயல்பட்ட இளைஞர் இயக்கம், இந்திய பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் தரம்பால் அவர்களின் முக்கிய பங்களிப்பை உணர்ந்தது. அவர்களின் நட்பை தரம்பால் பெரிதும் போற்றினார். இந்த இயக்கத்தை சேர்ந்த பலரும் தரம்பால் மிகவும் மதிக்கத்தக்க ஆராய்ச்சியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் பிற்காலத்தில் உருவாயினர். பி.பி.ஸ்.டி. என்ற அமைப்பு இன்று பல்வேறு நிறுவனங்களாக உருவெடுத்து சமூகத்துறையில் பல பணிகளை செய்து வருகின்றது. இன்றும் இந்தியா அளவில் அவர்களின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிவருகின்றது.

தமிழக பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்களையும், குறிப்பாக ராமேஸ்வர மற்றும் ஸ்ரீரங்கத்தின் புனித அனுபவத்தையும் மிகவும் அழகாகப் பகிர்ந்து கொள்ளுவார். “தமிழகத்தில் மனிதநேயம் என்றுமே மிக ஓங்கியிருந்தது” என்று கூறுவார்.

அவர் மறைந்த 2006 ஆண்டின் முதன் மாதங்களில் தமிழகத்தின் பல ஊர்களையும் சுற்றிப்பார்த்த அவர், காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலின் எளிய சிற்பங்களை பலமுறை சுற்றிச்சுற்றி ரசித்திருக்கிறார். “நான் இற‌க்கும் பொழுது இந்தக் கோயிலைப் பார்த்தவாறே இற‌க்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியது அந்த கோயிலின் வேலைப்பாட்டில் அவர் கோண்டிருந்த பற்றை வெளிப்படுத்தும்.

கோவாவைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் மேற்கத்திய சித்தாந்த அடிப்படையிலானா ஆதிக்கத்தை தீவிரமாக சாடும், திரு. கிலாடு அல்வாரிஸ் அவர்களால் நிறுவப்பட்ட “அதர் இந்தியா பிரஸ்” எங்கின்ற பதிப்பகம்தான் தரம்பால் அவர்களில் மொத்த பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளை ஒன்று திரட்டி 5 தொகுப்புகளில் 2000 ஆம் ஆண்டு பதிப்பித்த்து. தரம்பாலின் நீண்டகால நட்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான கிளாடு அல்வாரிஸ் தனது எழுத்துக்களின் மூலமாகவும், சொற்பொழிவுகளின் மூலமாகவும் தரம்பாலின் வரலாற்றுப் பணியை உலகிற்கு அறிமுகப்படுத்திய‌ முக்கிய பணியைச் செய்துள்ளார். தரம்பாலின் தமிழக சீடர்கள் பெரும்பாலானவர்கள் ஆங்கிலப் புலமை பெற்றவர்களாவே விளங்கிய காரணத்தினால், அவருடைய எழுத்துக்களும், புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கபடவில்லை. இந்த தொடரின்மூலம் தரம்பாலில் முக்கிய புத்தகங்களின் சார‌த்தையாவது தமிழில் தொகுத்து அளிக்கலாம் என்று எண்ணியே இந்தக் கட்டுரையை துவங்கியுள்ளேன். தொடர்ந்து நமது வரலாற்றைச் சரியாகப் படிக்க, தரம்பால் அவர்கள் காட்டிய வழியில் கற்றுக்கொள்ளுவோம்.

தரம்பால் மதவாத அறிஞரா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு அறிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு அவருடைய அரசியல் பின்புலத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகின்றது. எந்த ஒரு அறிஞரின் படைப்புகளை புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்கள்கூட அவர்களது அரசியல் ஒப்புதல்களையும் ஒவ்வாத்தன்மையையும் வைத்து அவர்களது படைப்புகளை எடைபோடுவது இன்று மிகவும் எளிதாகிவிட்டது. திரு. தரம்பால் அவர்களையும் குறித்து அத்தகைய வதந்திகள் மற்றும் அவதூறுகள் உள்ளன. அவற்றில் தலையான அவதூறு அவருடைய ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்ததாகும்.

திரு. தரம்பால் அவர்களின் தொகுப்புக்களை குறித்து எழுதுபவர்கள் பலரும் அவரது சர்ச்சைக்கு இடமளிக்காத சில வரலாற்று பதிப்புகளை குறித்து மாத்திரமே எழுதுவர் அல்லது அவரது சில சர்ச்சைக்குள்ளாகிய சிந்தனைகளையும், வார்த்தைகளையும் ஒதுக்கவும், மறைக்கவும் முயலுவர். இந்த கட்டுரை தொடரில் நாம் துவக்கத்திலேயே அவரது சர்ச்சைக்குரிய சில சிந்தனைகளை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம் என்று நினைத்து அதில் மிக முக்கியமான அவரது பாப்ரி மசூதி இடிப்பு குறித்த சொற்பொழிவின் தொகுப்பிலிருந்து துவங்குகிறோம். திரு. தரம்பால் அவர்கள் என்றுமே மற்றவர்கள் தான் கருத்தால் மகிழவேண்டும் என்றோ, அதனால் தனது புகழோ, பொருளோ பெருகவேண்டும் என்றோ வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. அவர் உண்மையைப் புரிந்து கொள்ளவே வரலாறு மற்றும் சமூக ஆய்வினை மேற்கொண்டார். அதனையே தனது சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களின் வாயிலாகவும் பகிர்ந்துகொண்டார். காந்தியடிகளின் உண்மை சீடனாக என்றும் இந்திய சாதாரண மக்களுக்காகவே சிந்திக்கவும், செயல்படவும் முயன்றார்.

தரம்பாலும் பாப்ரி மசூதி இடிப்பும்

என்னைப் பொருத்தவரை, இந்தச் சொற்பொழிவு திரு. தரம்பால் அவர்களின் மிக முக்கியமான ஒன்று என்று கருதுகின்றேன். வெறும் ஒரு வரலாற்று ஆசிரியராக மட்டுமே அவரை அறிந்த பலருக்கு (அவரை அங்ங‌னமே குறுக்க முயன்றவர்களுக்கு) இந்தச் சொற்பொழிவு அவரது பரந்த இந்திய மக்களின்பால் இருந்த அக்கறையை எடுத்துக்காட்டியது. இந்தச் சொற்பொழிவிற்கு பிறகு அவருடன் பலரும் தங்கள் நட்பைத் துண்டித்துக்கொண்டனர், சிலர் அவரை முழுமையாகவே ஒதுக்கிவைத்தனர். பிற்கால வல்லுனர்கள் என்று சொல்லிகொண்டுள்ள பல வரலாற்று வியாபாரிகள், அவரை “ஹிந்துத்துவாவாதி” என்று எளிதாகச் சித்திரிக்க இந்தச் சொற்பொழிவை முழுவதுமாக படிக்காமல் பயன்படுத்தனர். இந்தச் சொற்பொழிவு இதுவரை தமிழில் ஏன் மொழிபெயர்க்கப்படவில்லை என்று எனக்குப் புரியவில்லை. சமீப காலத்துத் தமிழக அரசியல் மற்றும் சமூக மாற்றங்களினால் இந்தச் சொற்பொழிவு இன்றய காலகட்டத்திற்கு மேலும் முக்கியத்திவம் வாய்ந்ததாகவே நான் கருதுகின்றேன். பின்வருவது அவருடைய சொற்பொழிவிலிருந்து சில முக்கியமான பகுதிகள்.

“நண்பர்களே, கடந்த சில நாட்களாகவே இந்த அயோத்தியில் பாப்ரி மசூதி இடிப்பதைக்குறித்த விவாதங்களை நான் கேட்டு வருகின்றேன். சில நாட்களுக்கு முன்னர், திரு. அப்துல் சமது சாஹிப் அவர்கள் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து சில கலந்துரையாடல்கள் நடந்தன. அப்பொழுது ஒரு இந்துவும் ஒரு இஸ்லாமியரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது : “இந்த மசூதி இடிப்பு உங்களுக்கு மிகவும் வேதனை அளித்திருக்க வேண்டும்”, என்று அந்த இந்து வினவினார், அதற்கு அந்த முஸ்லிம் நண்பர், “ஆமாம், ஆனால் எங்களைப் பொருத்தவரை நடப்பது எதுவுமே இறைவனின் சக்தியால் நடக்கின்றது என்பதை நாங்கள் நம்புகிறோம். மற்றும் இந்த நிகழ்வு நடந்ததால்தான் நாம் இருவரும் பேசிக்கொள்ளுகின்றோம், இதற்கு முன் நமக்கிடையே பேச்சுவார்த்தை இருந்த்தில்லையே” என்று விடையளித்தார்.

நாம் எந்த விதமான சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்? நமது நாட்டின் மூத்த மற்றும் முக்கிய பத்திரிகையாளரான கிரிராஜ் ஜயின் ஒரு முறை எழுதுகையில், “எனக்கு எந்த நவீன முஸ்லிமையும் தெரியாது” என்று கூறினார். அவரது 50 ஆண்டு பத்திரிகைத் துறை நிர்வாகத்தில் பல ஆயிரம் பேரையாவது அவர் சந்தித்திருப்பார். ஆனால் அவர் இவ்வாறு கூறுவது நமது சமூகத்தை க் குறித்து என்ன கூறுகிறது? இங்கு சென்னையில் ஒரு குழுவால் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டத்தை நட்த்துபவர்கள் மிகவும் அறிவுக்கூர்மை படைத்தவர்கள். இவர்கள் விஞ்ஞானம் மற்றும் சமூகத்துறை வல்லுனர்களாக விளங்குகின்றனர். இவர்களுக்கு இந்தியாவில் இதர பகுதிகளில் 4-5 இடங்களில் நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் பிராமண வர்க்க‌த்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கும் இஸ்லாமிய மிக குறைவுதான். நமது சமூகத்தில் அனைத்து தளங்களிலும் இந்தப் போக்கையே காண நேர்கின்றது.

நான் உ.பி. யிலுள்ள அதிரஞ்சி கிரா என்னும் பழங்கால அகழ்வாராய்ச்சி பகுதியில் ஒருமுறை சென்றிருந்த பொழுது அங்கு வேலை செய்யும் சிப்பந்தி ஒருவருடன் பேச நேர்ந்தது. கி. மு. 1300 ஆண்டு மக்கள் வாழ்ந்த மிகப் பழமை வாய்ந்த இடமது. அங்கு நான் சென்ற வேளையில், அலுவலகம் மூடிவிட்டதால், அவர் ஒருவர் தான் இருந்தார். பல புராண இதிகாசக் கதைகளைப் பற்றி அவர் அறிந்திருந்தார். அவரிடம் பேசுகையில் அவர் ஒரு கிருத்தவர் என்று தெரிந்தது. “நான் இங்கு மிகவும் தனியாக இருக்கின்றேன்” என்றார் அவர். ஏன் என்று வினவியபோது, அந்த கிராமத்தில் அவர் ஒருவர்தான் கிருத்தவர் என்று தெரியவந்தது. அதனால் அவர் அங்கு தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவே உணர்ந்தார் என்பது தெரியவந்தது. இதுதான் நமது சமூகத்தின் இன்றைய நிலை. ஒரு விரிந்த சமுதாயத்தை சேர்ந்த நாம், இன்று சிதறியும், குறுகியும், முறிந்தும் வருகின்றோம். அவ்வாறு சமூகங்கள் சிதறும்பொழுது, அயோத்தி போன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளிக்கவில்லை.

இத்தகைய பிரிவு ஏதோ இன்று நேற்று நிகழ்ந்ததாக நான் கருதவில்லை, இது ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிகழவில்லை, முகலாயர்களுக்கு பின் நிகழவில்லை, அதற்க்கும் முன்பு இந்துக்களில் வாழ்ககை முறையில் இருந்தும், அவர்களது வாழ்கை நெறிகளின் மாற்றத்தினாலேயோ அல்லது வேற்று நாகரீகங்களுடன் அவர்களுக்கு ஏற்பட்ட புதிய உறவுகளின் தாக்கத்தினாலேயோ ஏற்பட்டதாகவே நினைக்கத்தோன்றுகின்றது.”

பின்குறிப்பு: சென்ற கட்டுரையை படித்துவிட்டு திரு. தரம்பாலின் முக்கிய சீடர்களில் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு தெரிவித்த கருத்து : தரம்பால் என்றுமே ஆங்கிலேயர் முதலில் இந்தியாவிற்கு வெறும் வர்த்தகத்திற்காக மட்டுமே வந்ததாகக் கருதியதில்லை. அவர் ஆங்கிலேயர்கள் முதலில் வந்தபோழுதே அவர்கள் ஆள்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டுதான் வந்தார்கள் என்ற நம்பினார்; அதற்கான பல சான்றுகளையும் சுட்டிக்காட்டுவார்.

(தொடரும்)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org