பருத்திச் செடியும் பாரதக் கொடியும் - பாமயன்


கடந்த பிப்ரவரி 14-15 ஆகிய இரண்டு நாட்களில் திண்டுக்கல் காந்திக் கிராம வளாகத்தில் நடந்த கருத்துப் பட்டறை மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டினப் பருத்தியைப் பாதுகாக்கும் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். பல அரிய செய்திகள் அதில் பரிமாறப்பட்டன. குறிப்பாக மரபீனி மாற்றப் பருத்தியின் தீய விளைவுகள், நமது நாட்டினப் பருத்தியின் சிறப்புகள் என்று பலவும் விவாதிக்கப்பட்டன. (சஹஜ சம்ருத்தா, ஆஷா உடன் இணந்து 'துலா' தின்டுக்கல் அடுத்துள்ள‌ காந்திகிராமில் இரு நாள் கலந்தாய்வு சென்ற பிப்ரவரி 14-15ல் நடைபெற்றது - ananthoo ; )

ஆஷா, துலா, காந்திகிராமம் அறக்கட்டளை, சகஜகம்ருதா, அப்பச்சி காட்டன், சிம்கோடஸ் என்று பல அமைப்புகள் இதில் பங்காற்றியிருந்தன.

திருமிகு. கவிதா குருகந்தி, அனந்து, பாமயன், கிருஷ்பிரசாத், மணி முதலிய பலரும் உரையாற்றினர். நாட்டுப் பருத்தியை மீட்டுள்ள பல மாநில உழவர்கள் பேசினார்கள். இந்த கருத்துப் பட்டறை நடக்கும்போதே வெளிவந்த செய்திகள் நம்மை வேறு ஒரு தளத்திற்கு இழுச்சென்றது. பருத்தி என்பது வெறும் விளைபொருள் மட்டுமல்ல, அது நாட்டின் சமூக, பொருளியல், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஊடும் பாவுமாக இருக்கும் இறையாண்மை குறித்த செய்தி என்ற எண்ணம் மேலோங்கியது.

இன்றைய செய்தி ஊடகங்களில் இந்திய தேசியக் கொடியின் மீதான தாக்கங்கள் வலுப்பெற்று வருவதைக் காணமுடிகிறது. தேசியக் கொடியை அவமதிப்பது குறித்து இந்த வாதங்கள் எழுந்து வருகின்றன. இந்திய தேசியக் கொடிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது தன்னுடைய மூன்று வண்ணத்தையும், அசோகச் சக்கரத்தையும் பெறுவதற்கே நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. இந்தியாவிற்கு என்று ஒரு கொடி வேண்டும் என்ற எண்ணம் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பின்னர் உருவானது. இதை முதல் விடுதலைப் போர் என்றும் கூறுவர். ஆனால் கட்டபொம்மனுடன் நடந்த போரையும், பிரிட்டிசாருக்கு எதிராக ஒரு திருச்சி சாற்றுரையை வெளியிட்ட மருதுபாண்டியரையும் இந்திய வரலாற்றாசியர்கள் குறிப்பிடுவதில்லை என்பது வேறு செய்தி.

இந்திய தேசியக் கொடி முதலில் பிரிட்டிஷ் கொடியின் சாயலில்தான் இருந்தது. அதை மாற்ற பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலில் திலகர், அரவிந்தர் போன்றோர் விநாயகர், காளி போன்ற அடையாளங்களையும் நிவேதிதா ஆன்மீக அடையாளங்களையும் பரிந்துரைத்தபோது அவை மத அடையாளங்களாக இருப்பதால் அவை ஏற்கப்படவில்லை. இப்படி நீண்ட ஊடாட்டங்களுக்குப் பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த பிங்களி வெங்கையா என்பவர் வடிவமைத்த மூவண்ணக் கொடி அதாவது இந்து, இசுலாமியர் போன்ற அனைத்து மக்களையும் உள்ளடங்கிய அடையாளமுடைய இன்றைய இந்திய தேசியக் கொடியாக விளங்குகிறது. இந்தக் கொடிக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கக் கூடும். இங்குதான் நமது நாட்டின் மூத்த விடுதலைத் தலைவர்கள் செய்த தொலைநோக்குச் சிந்தனை நம்மை வியக்க வைக்கிறது.

கொடியின் வரலாறு இப்படி இருக்க, இதை எந்தத் துணியில் தைக்க வேண்டும்? எந்த அளவில் தைக்க வேண்டும் என்ற வரையறையையும் உருவாக்கினார்கள். கொடியானது நீளவாக்கில் மூன்று பங்கும் அகலவாக்கில் இரண்டு பங்கும் என்ற விழுக்காட்டு அளவில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் மிக முதன்மையாக அந்தத் துணி காதியாக இருக்க வேண்டும். அதில் பருத்தி அல்லது பட்டு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது தவிர்த்து வேறு ஏதாவது பொருளில் தேசியக் கொடியைத் தயாரித்துப் பயன்படுத்துவது தண்டணைக்குரிய குற்றம். அப்படியானால் இன்று பல இடங்களில் பள்ளிகளில் கூட பாலித்தீன் கொடிகள் பயன்படுத்துவது சட்டப்படிக் குற்றம். பெருத்த அவமானம்.

தேசியக் கொடிக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கக் கூடும். கொடிக்கான பருத்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?. காதி இயக்கத்தை காந்தியடிகள் ஏன் நடத்தினார்? என்ற வினாக்களை நாம் கேட்க வேண்டும். காதி இயக்கம் இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்லாது, பொருளியல் விடுதலையைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்ட இயக்கம். பருத்தித் துறையில் இந்தியா தற்சார்புள்ள நாடாக விளங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக பிரிட்டனின் வெளிநாட்டுத் துணிகளைக் கொளுத்திப் புறக்கணித்து நடத்தப்பட்ட இயக்கம் காதி இயக்கம். இதில் பலர் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்துள்ளனர்.

ஆனால் இன்று இந்தப் பருத்தியின் நிலை என்ன? இந்தியாவில் உள்ள 90% பருத்தி அமெரிக்க நாட்டு பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் விதைகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள 10% என்பது நமது 'நாகரிகம்' எட்டிப் பார்க்காத பழங்குடிப் பகுதியிலும் மானாவாரிப் பகுதியிலும் நடக்கிறது. அப்படியானால் காதியால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டிய நமது தேசியக் கொடியின் நிலை என்ன? வெளிநாட்டு நிறுவனத்தின் தயவால் அல்லவா நமது கொடி பறக்கிறது? இது நமக்கு அவமானம் அல்லவா?

இந்த மரபீனி மாற்றப்பட்ட பருத்தி விதைகள் வந்த பின்பு எவ்வளவு இழப்பை நமது உழவர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட விதர்ப்பா உழவர்களில் பெரும்பானோர் பி.ட்டி பருத்திச் சாகுபடியாளர்கள். நமது ஒட்டு மொத்த நாட்டுப் பருத்தி வளம் அழிந்துபோனது. இத்தனைக்குப் பிறகும் பூச்சிகள் வராது என்று சத்தியம் செய்தவர்கள் இன்று பி.ட்டி பருத்தியிலும் பூச்சித் தாக்குதல் அதிகமாகிவிட்டது என்று கை பிசைந்து நிற்கின்றனர். பஞ்சாபிலும், கருநாடகாவிலும் இருந்து வரும் புள்ளி விவரங்கள் நம்மைப் பதற வைக்கின்றன. இப்போது கத்தரியிலும், கடுகிலும் பி.ட்டி என்று முழங்குகின்றனர். நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கும் போக்கல்லவா இது? சரி பருத்தியைப் பற்றிய அறிவு நமக்குக் கிடையாதா? உலகிற்கே பருத்தியைக் கொடுத்தவர்கள் நாம்.

கிரேக்க நாட்டில் கி.மு 400களில் வாழ்ந்த ஃகீரோடோடஸ் (பிமீக்ஷீஷீபீஷீtus) 'இந்தியாவில் செடிகளில் செம்மறியின் உரோமம் விளைகிறது' என்று குறிப்பிடுகிறார். அதேபோல 1350களில் ஜான் மாண்டவெல்லி என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர், 'இந்தியாவில் அதயமான செடி ஒன்று உள்ளது, அது செம்மறிக் குட்டிகளை ஈறுகிறது, அதில் பருத்தி வருகிறது' என்று எழுதுகிறார். இதுதான் 1600 வரை ஐரோப்பியர்களுக்கு பருத்தியைப் பற்றிய செய்தி. அவர்கள் இங்கிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டனர். சிந்துவெளி மக்கள் காலத்தில் இருந்தே பருத்தி நமக்கான பயிர்.

சங்க இலக்கியத்தில் 'பருத்திப் பெண்டிர்' என்போர் பருத்தித் தொழிலில் ஈடுபட்டிருத்ததைக் காண முடியும். 'பருத்தின் பெண்டின் பனுவல் அன்ன' (புறநானூறு 125) 'பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து' - (புறநானூறு 326) என்ற வரிகள் பெண்கள் பருத்தியில் இருந்து பஞ்சைப் பிரித்து நூல் நூற்பதைக் குறிப்பிடுகின்றன. 'அரவு உரி அன்ன அறுவை நல்கி' என்ற (பொருநர் ஆற்றுப்படை 83) வரி, பாம்புத் தோலைப் போன்ற உடைகளைப் பற்றிப் பேசுகின்றது.

மதுரை துணிக்கடை வீதியைப் பற்றிக் கூறும் சிலம்பு,


'நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்' (சிலம்:14:205-207)

என்ற சிலப்பதிகார வரிகள் தமிழகத்தில் ஆடைத் தொழிலின் உச்சத்தைக் குறிக்கின்றது.

'நுழைநூல்' என்பது நமது உரையாசியர்கள் குறிப்பிடுவதுபோல 'தத்தம் பகுதி தோன்ற நெய்யபடுவது' அல்ல, இன்று எம்பிராய்டரி என்று கூறுகின்ற நுட்பமான வேலைப்பாடு உள்ள துணிகள். இந்தகைய ஆடைகள் இன்றும் வட இந்திய அருங்காட்சியங்களில் உள்ளன.

இந்தியாவின் பருத்திச் சாகுபடியும் நெசவுத் தொழிலும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் பெரிதும் மாற்றம் அடைந்தது. நம்நாட்டின் பண்டைய பருத்தி இனங்கள் அழிக்கப்பட்டன. கருங்கண்ணி, உப்பம் போன்ற போன்ற நாட்டினப் பருத்திகள் மறைந்தன. ஆங்கிலேயர்கள் தங்களது யாங்கசயர் ஆலைகளுக்கு வேண்டிய நீண்ட இழைப் பருதிதியான அமெரிக்கப் பருத்தியைச் சாகுபடி செய்யச் சொல்லி வற்புறுத்தினர். நமது நாட்டினப் பருத்திகள் குட்டை இழைப் பஞ்சைக் கொண்டவை. இவை ராட்டைகளில் நூற்பதற்கு ஏற்றவை. இவை காலங்காலமாக மக்களிடம் இருந்து வந்தவை. மிகக் கடுமையான சட்டங்கள் மூலமும் வரிகள் மூலமும் இந்தப் பருத்திச் சாகுபடியை ஆங்கிலேயர்கள் தடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் இருந்து பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. கி.பி. 1720ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துக்கான மொத்த துணி வணிகத்தில் கலிக்கோ துணி 20 விழுக்காடு பங்காக இருந்துள்ளது. இது 1780ஆம் ஆண்டில் 6 விழுக்காடாகவும் 1840ஆம் ஆண்டில் 4 விழுக்காடாகவும் மாறியுள்ளது. (மிஸீவீளீஷீக்ஷீவீ 2002: 517) கலிக்கோ துணி சேரநாடான கோழிக்கோட்டுப் பகுதியில் தயாரானது, அவர்களுக்கு பருத்தி பாண்டியநாட்டுப் பகுதியில் இருந்து சென்றது.

பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா மிகவும் கொந்தளிப்பான சூழலில் இருந்தது. மாட்சிமை மிக்க தொழில்துறை அக்கறையற்ற தன்னலமிக்க ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டது. பகுதி சார்ந்து இருந்த குறுநில மன்னர்களும் தளபதிகளும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வரியை மக்களிடம் இருந்து தண்டிக் கொண்டனர். அதை தில்லிக்குக் கொடுப்பதில்லை. இவர்களுக்கென்று தனிப் படைகளை அமைத்துக் கொண்டனர். இதனால் மைய அரசு சிதையத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் வணிக வருகை இதை விரைவுபடுத்தியது. ஆங்கிலேயர்கள் சிறு தொகையைக் கொடுத்து பெருநிலங்களை வாங்கிக் கொண்டனர். பல இடங்களில் உழவர்களின் நிலங்கள் சிதைக்கப்பட்டன, குளங்கள் அழிக்கப்பட்டன. உழவர்களுக்கு தங்களது விளைச்சலில் ஆறில் ஒருபங்கு மட்டுமே தரப்பட்டது. (ஙிணீஹ்றீஹ் 1983, 70). இப்படியாகச் சிதைக்கப்பட்ட உழவும் தொழிலும் மக்களிடம் வறுமையை உருவாக்கியது. இந்திய நெசவாளர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டனர், பருத்தியை மட்டும் ஏற்றுமதி செய்ய வற்புறுத்தினர். இங்கிருந்து பருத்தி ஒரு நாளைக்கு 7 செண்ட் என்ற முறையில் (ஒரு ஆள் சம்பளம்) திரட்டப்பட்டு யாங்கசயருக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அது மீண்டும் துணியாகி 100 விழுக்காடு லாபம் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டது என்று காந்தியடிகள் கூறியதை ஃபிஷர் எழுதுகிறார்.

கோசிபியம் ஆர்போரியம், கோ.ஹெர்பேசியம் என்ற இரண்டும் இந்திய பருத்தி இனங்கள் இவை நோய், பூச்சித் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ளும். விளைச்சல் சற்று குறைவு. ஆனால் கோ.பாபடன்ஸ், கோ.ஹிர்சூடம் என்ற இருவகை ஆப்பிரிக்க, தென் அமெரிக்க வகைப் பருத்திகள். இவை நீண்ட இழை கொண்டவை. பெரும் எந்திரங்களுக்கு ஏற்றவை. நமது பருத்திகள் இழை குட்டையாக இருந்தாலும் நமது தொழிலாளர்கள் அதை மிக மெல்லியதாக ஆக்கும் திறன் பெற்றவர்கள். அதாவது ஒரு மோதிரத்திற்குள் புடவை ஒன்றை வைக்கும் மெல்லிய ஆடைகளைப் படைப்பவர்கள். இதனால் வெளிநாடுகளில் இந்தத் துணிகளுக்கு பெரிய தேவை இருந்தது. எனவே தொழில் திறனையும் அழித்தார்கள், பருத்தியையும் அழித்தார்கள். டாக்கா மஸ்லின் என்ற ஆடை உலகப் புகழ்பெற்றது.

அந்த துணியை நெய்யும் ஒரு எண்பது வயதுப் பெண்மணியின் புகைப்படத்தை அண்மையில் நடந்த கருத்துப் பட்டறையில் கொல்கத்தா நண்பர் காண்பித்தார். எனவே ஆங்கிலேய எந்திரங்கள் ஓடுவதற்காக, நமது நாட்டுப் பருத்தியை தரமற்றது என்று ஆங்கிலேயர்கள் கூறினர். ஏனெனில் அது அவர்களது எந்திரங்களுக்கு ஏற்ற நீண்ட இழைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவை நமது நாட்டுக்கு மிகப் பொருத்தமானவை. மிகக்குறைவான நீர் இருந்தால் போதுமானது, நோய்களை எதிர்த்து வளரும் திறன் பெற்றது. விதைகளும் உழவர்களிடமே இருக்கும். இப்படியாக தற்சார்புத் தன்மை மிக்க அந்த பருத்தியைத்தான் ஆங்கியேலர்கள் அழித்தார்கள். தங்களது விதைகளைப் புகுத்தினார்கள். ஆனால் இந்திய நாடு 1947இல் அரசியல் விடுதலை பெற்ற பிறகும் அந்த வெளிநாட்டு இனங்களையே தொடர்ந்து நமது தலைவர்களும் அறிவாளிகளும் கொடுத்ததன் நோக்கம்தான் என்ன?

வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்த விதைகள் நோய்களையும், பூச்சிகளையும் கொண்டு வந்தன. இன்று அதிகமாக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படும் ஒரே பயிர் பருத்திதான். மிகக் கடுமையான உழைத்து பருத்தியைச் சாகுபடி செய்தாலும் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. ஏனெனில் உலகச் சந்தை மிக முதன்மையான பங்கை வகிக்கின்றது. உலகமயமாக்கலுப் பின்னர் சந்தை திறந்துவிடப்பட்டதால் சூதாட்டத்தின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது. சீனா வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு கடும் வரிகளை போட்டுவிடுகிறது. இதனால் உள்ளூர் உழவர்கள் தப்பிக்க முடிகிறது. இந்தியாவில் இறக்குமதி வரியை உயர்த்தவிடாமல் துணி ஆலை முதலாளிகளின் கைவண்ணம் வேலை செய்கிறது. இதனால் பாதிக்கப்படுவது வாயில்லாப் பூச்சியான உழவர்கள்தாம். அமெரிக்கா தனது நாட்டு பருத்திச் சாகுபடியாளர்களுக்கு மிக அதிக அளவு மானியம் கொடுத்து விலையைக் குறைத்துவிடுகிறது. உலக வணிக நிறுவனம் கூறும் எந்த விதிகளையும் மீறி அமெரிக்கா தனது நாட்டு உழவர்களுக்கு மானியத்தைத் தருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3.2 பெரும்பேராயிரம் (பில்லியன்) அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்கியது. அத்துடன் 1.6 பில்லியன் தொகையை ஏற்றுமதிக்கான கடனாக வழங்கியுள்ளது. ஏறத்தாழ 400 பேராயிரம் (மில்லியன்) அமெரிக்க டாலர்கள் தொகையானது 2001-03 ஆண்டளவில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டு பருத்தி உழவர்களுக்கு அமெரிக்காவின் மானியங்களால் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாலியில் உள்ள உழவர்கள் தங்களது பருத்திக்கு 25 விழுக்காடு குறைவான விலை கொடுக்கப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. (ஆக்ஸபாம்) பெரும்பாலும் அமெரிக்க கொடுக்கும் மானியங்கள் யாவையும் பெரும் பண்ணையாளர்களை குறிவைத்தே தரப்படுகின்றன. (இந்தியாவிலும் அப்படித்தான்) அதாவது 78% மானியம் 10% பண்ணையாட்களுக்குக் கிடைக்கின்றன. பருத்தி உழவர்கள் வரலாறு காணாத அளவிற்கு தற்கொலை செய்து வருகின்றனர். ஆந்திரா, மராட்டியம், பஞ்சாப் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது. பெரும்பாலான உழவர்கள் கந்துவட்டிகக்£ரர்களாலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மராட்டிய மாநில அரசு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2500 இல் இருந்து 1750 ஆக குறைத்துவிட்டது, இதனால் மிகக் பெரும் அதிர்ச்சிக்கு உழவர்கள் உள்ளானர்கள்.

இந்தியச் சாகுபடிப் பரப்பளவில் பருத்தி 5% இடத்தைக் கொண்டுள்ளது, ஆனால் 54% அளவிற்கு பூச்சிக்கொல்லி நஞ்சு அதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதலில் 1980களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது, அதைத் தடுக்க பைரித்ராய்டு வகை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு பூச்சிகள் கட்டுப்படவில்லை. எனலே அதைவிடக் கடுமையான எண்டோசல்பான், குவினோபாஸ், மோனோகுரோட்டோபாஸ், குளோரிபைரிபாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இதன் பின்னர் நிலைமை மேலும் மோசமானது. அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காயப்புழு போன்ற புழுக்கள் பெருகத் தொடங்கின. இதை எதிர்கொள்ள முடியாத உழவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஏறத்தாழ 100000 உழவர்கள் பருத்திச் சாகுபடியல் ஈடுபட்ட காரணத்தால் தற்கொலை செய்துள்ளனர்.

பருத்திச் சாகுபடியைப் பொருத்த அளவில் மானாவாரி, இறவை ஆகிய இரண்டு முறையும் உண்டு. மொத்தச் சாகுபடியில் 35 விழுக்காடு பாசனப் பரப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் பருத்திச் சாகுபடி மிக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1950ஆம் ஆண்டைக் காட்டிலும் 2004/05ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கு அதாவது 9.5 பேராயிரம் (மில்லியன்) நூற்றேர் (எக்டேர்) அளவிற்கு உயர்ந்துள்ளது.

மிகப் பெரும் அளவில் பருத்தியில் பூச்சிக்கொல்லிகள் பயன்பட்டதால் மண்வளம் இழந்ததோடு, இடுபொருள் செலவும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனைக் காரணமாக வைத்து மிக புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்தனர். விதைகளைச் சேமித்து மறுவிதைப்புச் செய்து கொள்ளும் உழவனின் உரிமையை மறுப்பதும், இந்திய விதைச் சந்தையை முழுக்கக் கைப்பற்றுவதும் மரபீனி மாற்ற விதைத் தொழில்நுட்ப அறிமுகத்தின் நோக்கமாகும். உலகிலுள்ள பெரும் விதைச் சந்தைகளில் ஒன்று இந்திய விதைச் சந்தை. 2000-ம் ஆண்டில் நம் நாட்டின் விதைச் சந்தை மதிப்பு ரூபாய் 2000 கோடிகளாகும். கி.பி. 2007ல் அது மூன்று மடங்காக மாறியுள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (ஙிt)

இந்த பாசில்லஸ் விதை 1996- ஆம் ஆண்டு சந்தைக்கு வந்தது. பாசில்லஸ் துருஞ்சியஸ் என்ற நுண்ணுயிரி இயற்கை வழி வேளாண்மையில் உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பூச்சிக்கொல்லி, தீமை செய்யும் புழுக்களின் உணவுப் பாதையில் இந்த நுண்ணுயிர் சென்று நச்சுத் தன்மையை உருவாக்கும். படிகம் போன்ற நஞ்சு தோன்றி புழுவினைக்கொன்றுவிடும். இந்த முறையைக் கண்டறிந்த பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஆராய்ச்சியாளர்களும், பாசில்லஸ் நுண்ணுயிரின் மரபீனியில் இருந்து படிக ஏசி (நீக்ஷீ.கிசி) என்ற நஞ்சு உருவாக்கும் தன்மையை எடுத்து, பருத்திவிதையில் பொருத்தியுள்ளனர். இதற்கு பால்கார்டு விதை என்ற பெயரும் கொடுத்துள்ளனர்.

பருத்தியில்தான் அதிகம் பூச்சிகொல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 1.7 கோடி உழவர்கள் பருத்திச் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் ஆளுக்கு இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள். இந்தியாவில் மரபீனி மாற்ற விதைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு முன்பே திருட்டுத்தனமாக இந்த விதை சந்தைக்குள் புகுந்துவிட்டது என்பது வேறு கதை. இந்த விதையை அறிமுகம் செய்யும் போது, 'பூச்சி கொல்லி, களைக்கொல்லி எதுவும் தேவையில்லை. விளைச்சல் பெருமளவு கிடைக்கும்' என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையன்று. எல்லாப் பூச்சிகளையும் இந்த விதையில் உள்ள நஞ்சால் கொல்ல முடியாது. புகையிலைப்புழுக்களை மட்டும் படிக ஏசி கட்டுப்படுத்தும். இந்தியாவில் பெரிதும் காணப்படுபவை அமெரிக்கன் காய்ப்புழு வகையினம். இதற்கு படிக 1 ஏசி (நீக்ஷீஹ் 1 கிசி) என்ற நஞ்சு தேவைப்படும். அத்துடன் பூச்சிகள் இந்த நஞ்சினை எதிர்த்து வாழும் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்கின்றன. சீனாவில் 1999ம் ஆண்டு பாசில்லஸ் நஞ்சுக்கு 7 முதல் 10 மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூச்சிகளைக் கண்டறிந்து கூறினர். தென்கிழக்கு அமெரிக்காவில் உருளைப்புழுக்கள் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதை அமெரிக்க மேம்பாட்டு முகவாண்மை (ஹிஷிஞிகி) என்ற நிறுவனமே கூறியது.

விளைச்சலை எடுத்துக்கொண்டால் 1980க்குப் பிறகு அமெரிக்காவிலேயே (மரபீனிப் பருத்திக்குப் பின்பும்) பருத்தி விளைச்சல் குறைந்துவிட்டது. பன்மயப்பட்ட பருத்தியினங்கள் மறைந்து ஒரே வகைப் பருத்தியின் பரவலால் ஏற்பட்ட சீர்கேடு என்று இதைக் கூறுகின்றனர்.

இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், கார்கோன் மாவட்டத்தில் பாசில்லஸ் பருத்திச்செடி விளைச்சலில் 100% தோல்வி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதே கதைதான். இழப்பீடு கேட்டு உழவர்கள் போராடினர். ஆந்திராவில் அரசே இழப்பீடு கேட்டு போராடியது. சீனாவில் கடுமையாகத் தோல்வி கண்டுள்ளது. ஆனால் இயற்கையின் சாதகமான வாய்ப்புகளால் சின்ன சின்ன வெற்றிகளைக் காட்டி மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் விற்பனையைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு பல்கலைகழகங்கும் உடந்தை என்பதுதான் வேதனையானது. இந்திய, நாட்டுப்பருத்தியினங்கள் வறட்சியின்போது 20% இழப்பை ஏற்படுத்தினால் பாசில்லஸ் பருத்தி 100% இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர். மரபீனி மாற்ற விதைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவின் (நிமீஸீமீtவீநீ மீஸீரீவீஸீமீமீக்ஷீவீஸீரீ ணீஜீஜீக்ஷீஷீஸ்ணீறீ நீஷீனீனீவீttமீமீ) செயல்பாடுகள் குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் தோன்றியுள்ளன. பாசில்லஸ் பருததியை உள்நுழைய விட்டதற்காக இவ்வமைப்பின் மீது கடும் குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே மரபீனி மாற்ற விதைகளை 'நவபாரத்' என்ற வணிக நிறுவனம் விற்று வந்தது. இது குறித்து மெத்தனமாக இருந்த அரசு, மிகக் காலதாமதமாக மே மாதம் நடவடிக்கை எடுத்தது. இதற்காகச் சூழலியலாளர்கள் பெரும் 'போர்' நடத்தவேண்டியதாயிற்று. ஆயினும் வேளாண்மையில் பெருத்த சேதாரம் ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் பிற பருத்திகளுடன் பாசில்லஸ் பருத்தி 'கலந்து'விட்டது. இரண்டாம், மூன்றாம் தலைமுறைச் செடிகளை, சட்டத்திற்குப் புறம்பாகவே உருவாக்கிவிட்டனர். இந்த 'கள்ளவிதைகள்' குஜராத், ஹரியானா, பஞ்சாப் போன்ற (தமிழ்நாட்டிற்கும் கூட வந்திருக்கலாம்) இடங்களில் விற்பனைக்கு வந்து விட்டன. குஜராதிலுள்ள ஒரு காதி நிறுவனம் உருவாக்கிய பருத்தியாடை, பாசில்லஸ் மரபீனி மாற்றப் பஞ்சில் நெய்யப்பட்டது. இதை அணிந்த பலருக்கு உடல் அரிப்பும், தடிப்பும் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. பாசில்லஸ் பருத்தி சாகுபடி செய்த இடத்தில் 20% பரப்பில் வழக்கமான பருத்தியைச் சாகுபடி செய்யவேண்டும்! இது நிறுவனத்தின் பரிந்துரை. ஏனெனில் பாசில்லஸ் பருத்தியில் இருந்து வரும் நஞ்சுக்குத் தப்பி வாழும் பூச்சிகள் வயலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் பூச்சிகள் எதிர்ப்புத் திறனற்ற மற்ற பூச்சிகளோடு இணைந்து எதிர்ப்புத்திறன் இல்லாத பூச்சிகள் தோன்றும். அவ்வாறு சாதாரணப் பருத்தி இல்லை என்றால் எல்லாப் பூச்சிகளுமே எதிர்ப்புத்திறன் பெற்றுவிடும். எனவே இந்த 20% ஒதுக்கீடு வேண்டும். இதற்கு 'புகலிடப்பகுதி' என்றும் பெயர் வைத்துள்ளனர்! இது ஒரு வேளை அமெரிக்கா போன்ற ஆயிரம் ஏக்கர் பண்ணைகளுக்குப் பொருந்தலாம். இந்தியாவில் 2 ஏக்கர் வைத்துள்ள உழவர் எவ்வாறு ஒதுக்கீடு செய்ய முடியும்?

பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கி வருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம் பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதைப் பொருளியல் பண மதிப்பைப் பெற்று வணிகத் துறையில் குறிப்பான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது. வெளிநாட்டுக் கடன்களாலும், பிற ஒதுக்கீடுகளாலும் பசுமைப் புரட்சியின் பெருமையும் வீரிய விதைகளின் பரப்புதலும் நடைபெற்றன. அதனால் வந்த துயரோ மிகப் பெரியதாகிவிட்டது.

இது ஒரு புறம் இருக்க, கடந்த 1991ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் அடிப்படையான வேளாண் துறையைக் குறிவைத்துக் கைப்பற்றும் நோக்கோடு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முனைப்பாகப் படையெடுத்துள்ளன.இனிமேல் வருங்காலங்களில் உழவர்கள் விதைகளை தமக்கென வைத்துக்கொள்ள முடியாதவாறும், அரசுகளே தமது கட்டுப்பாட்டில் விதை இருப்பைக் கொண்டுவர இயலாதவாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு உலக வணிக நிறுவனம் அதன் துணையான வணிகம் சார் நுண்மதிச் சொத்துரிமை ஒப்பந்தம் ஆகியவை உதவி புரிகின்றன. வீரிய விதைகள் உட்புகுந்தபோது நமது உழவர்களின் விதை சேமிக்கும் பழக்கம் மறைந்தது. இப்போது வந்துள்ள மரபீனி நுட்பவியல் விதைகள் வழியாக உழவர்களிடமிருந்து விதை சேமிக்கும் உரிமையும் பறிபோகவுள்ளது.

இந்திய விதைச் சந்தை மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளின் விதைச் சந்தை முழுவதையும் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்தியச் சந்தைதான் மிகப் பெரியது. எனவே இதில் அவர்களுக்கு முகாமையான குறி உள்ளது. சீனாவின் சந்தையைவிட இந்தியச் சந்தைதான் அவர்களுக்கு ஏதுவாக உள்ளது. ஏனெனில் சீனச் சந்தையில் தடுப்பும் சமன்பாடும் (நீலீமீநீளீ ணீஸீபீ ஙிணீறீணீஸீநீமீ) உள்ளது.

இத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெரும் ஆராய்ச்சித் திட்டங்கள் வழியாக பெறப்பட்டுள்ள நுட்பவியல் அறிவையும், காப்புரிமையும் (ஜீணீtமீஸீt க்ஷீவீரீலீt) வைத்துக்கொண்டு, உலகை ஆட்டிப் படைக்கின்றன. உயிரி நுட்பவியல் துறையில் விதைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வியப்புக்குரியன. மரபீனிகளை (ரீமீஸீமீs) மாற்றி விதைகளின் அடிப்படைக் குணநலன்களையே மாற்றிவிடமுடியும். மான்சாண்டோ நிறுவனம் பருத்தி, சோயா மொச்சை போன்ற பல பயிர்களுக்கு காப்பு உரிமை பெற்றுவிட்டது. இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய விதை நிறுவனமாகும். இதன் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் நில நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தைவிடக் கூடுதலாகும்.

மேலும், மான்சாண்டோ நிறுவனம் தனது மரபீனி மாற்ற உயிரியின் (நிமீஸீமீtவீநீணீறீறீஹ் விஷீபீவீயீவீமீபீ ளிக்ஷீரீணீஸீவீsனீ) பயனாக உருவாகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அதில் மரபீனி மாற்றப் பொருள் என்று பொருள்படும் குறிப்பை அச்சிட மறுத்து வருகிறது. எனவே இதனாலும், பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி இந்நிறுவனங்கள் ஓடி வருகின்றன. இத்தகைய விதைகளின் படையெடுப்பினால் இந்தியா போன்ற உயிரிப்பன்மயம் (ஙிவீஷீ - பீவீஸ்மீக்ஷீsவீtஹ்) மிக்க நாட்டில் உள்ள ஏராளமான மரபு விதையினங்கள் மறைந்து போக வாய்ப்புள்ளது.

அடுத்தாக, நச்சுத்தன்மை கொண்ட களைக் கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நிலமும் பாழாகின்றது. புதிய களைச் செடிகள் எதிர்ப்புத் திறனுடன் தோன்றுகின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கையின்போது, மரபீனி மாற்றச் செடியின் மகரந்தத்தூள் பிற செடியுடன் சேரும் நிலையில் வேறு புதிய சிக்கலான ‘களைகள்’ தோன்றலாம். இதற்கும் மேலாக, உழவர்களின் தீர்மானிக்கும் உரிமையும், சாகுபடி உரிமையும் பறிபோய், பன்னாட்டு நிறுவனங்களின் பண்ணையடிமைகள் போல் உழவர்கள் மாறும் சூழல் உள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையும், அதன் நிலைப்பாடும் அந்நாட்டின் உணவு உறுதிப்பாட்டில்தான் உள்ளது. உணவுப் பாதுகாப்பிற்குப் பங்கம் வருமேயானால், எந்த நாடும் தனது தன்னுரிமையைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. இப்போது படையெடுத்துள்ள, பி.டி பருத்தியும் பிற மரபீனி மாற்ற விதைகளும் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org