தலையங்கம்


யாருக்கும் வெட்கமில்லை


மத்திய அரசு இவ்வாண்டிற்கான நிதியறிக்கை அறிவித்து 15 நாட்கள் ஆகி விட்டன. இவ்வறிக்கையில் உழவர்களுக்கு என்ன பலன், துண்டு விழுவது எவ்வளவு என்பதெல்லாம் பொருளற்ற கவலைகள். திருடர்கள் கையில் சாவியைக் கொடுத்து விட்டுக் கருவூலத்தைப் பற்றிக் கவலைப் படுவது நம் மடமையே. யார் நல்ல திருடன் என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்கும் நிலைமை உள்ளது. ஊழல் இல்லாத கட்சியே இல்லை.

பிச்சையெடுத்து உண்டபின் மடம் கட்டத் திட்டமிடும் ஆண்டிகள் போல் ஒவ்வொரு ஆண்டும் இல்லாத நிதியைக் கடன் வாங்கி ஒதுக்கீடு செய்கிறோம். அறிக்கை என்பது வரும் ஆண்டிற்கான திட்டமே - இது வரை அறிவித்த திட்டங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வந்தன, கடந்த ஆண்டுகளில் எவ்வளவு விழுக்காடு இலக்குகள் நிறைவு செய்யப் பட்டன என்பதெல்லாம் யாரும் அறிவிப்பதில்லை. அடுத்த ஆண்டு சீட்டுக் கட்டு விளையாட்டுப் போல் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு அடுத்த ஆட்டம் தொடங்கி விடுகிறோம். 'தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான்' என்று பொதுப் பணத்தில் சுரண்டுவதைப் பற்றி சாணக்கியரே அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். எனவே நமக்கு ஊழல் என்பது வரலாற்றுக்கு முற்பட்டது! ஆனால் இப்போது பொதுப் பணத்தில் மிகச் சிறு அளவே மக்களைச் சென்றடைகிறது என்பதும், அவையும் பெரும்பாலும் இலவசங்களுக்குப் போகின்றன என்பதும்தான் மிகக் கசப்பான உண்மை. முழுத்தேனையும் தம்முள் பங்கு போட்டுக் கொண்டு வெறும் புறங்கையை நக்கக் கையேந்தும் நிலையில் நம்மை ஆளும் அரசுகள் வைத்துள்ளன.

4 - 5 நாட்கள் நாடு முழுவதும் நிதியறிக்கையைப் பற்றியே விவாதங்களும், பேச்சும் , ஆய்வுகளும் நடந்து பின்னர் வழக்கம்போல் அடுத்த வம்பிற்குத் தாவி விட்டோம். வாய்ப்பாகக் கிடைத்தது விஜய் மல்யாவின் கடன் ஏய்ப்பு. அவரை நல்லவர், வல்லவர், இந்திய வாணிபத்தின் தாரகை என்றெல்லாம் பலவருடங்களுக்கு முன் வருணித்த அதே ஊடகங்கள் இப்போது அவரைக் கடுமையாகச் சாடியும், நையாடியும் வருகின்றன. அவரைக் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரு கட்சிகளும் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ஆக்கிக் கவுரவித்தனர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மிகச்சிறந்த தொழிலதிபர் என்ற விருதைப் பெற்றவர்! இப்போது 7000 கோடிக்கு மேல் அவருக்குக் கடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெரம்பலூரில் 2 லட்சம் டிராக்டர் கடன் உள்ள விவசாயியொ இரண்டு நாட்களுக்கு முன் வங்கிகளின் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சிக்கல்களுக்கு முழுக் காரணம் இந்த மேம்படுத்தும் மையப் பொருளாதார மாதிரியே. யார் என்ன செய்தார்கள், எத‌ற்கு யார் பொறுப்பு என்று கண்டறிய இயலாத, குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் ஒரு தொழில்நுட்பமாக உலகமயமாக்கல் உள்ளது. இதில் ஏழைகள் முற்றிலுமாக ஒதுக்கப் பட்டும், வஞ்சிக்கப் பட்டும், நடுத்தர‌ வர்க்கத்தோர் தம் விதியை நொந்தபடியே சுமை இழுக்கும் வண்டி மாடுகளாகவும், செல்வந்த‌ர்கள் பிறர் முதுகில் சவாரி செய்து மேலும் கொழுப்பவர்களாகவுமே ஆக இயலும். இதை மாற்றவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் துணிவோ, அறிவோ இல்லை. கண்ணீரால் காத்த நம் நாடும் சுதந்தரமும் கருகவில்லை - களவாடப் படுகிறது. நாமெல்லாம் வெட்கமின்றி இலவச மிக்சி, கிரைண்டருக்கு அடித்துக் கொள்ளலாம் - டாஸ்மாக் கடைகளிலும், சினிமாக் கொட்டகைகளிலும், தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் போதை ஏற்றிக்கொண்டு வலம் வரலாம். தேர்தல் வந்து விட்டது - ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரப் போகிறதே, இனிக் கவலையில்லை!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org