தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை உழவர் மாநாடு - ராம் & அனந்து


ஐந்தாவது அகில இந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு, சண்டிகர், ஃபிப்ரவரி 28 முதல் மார்சு 2, 2015 வரை மிகவும் சிறப்பாகவும், வியக்கவைக்கும் விதத்திலும் நடந்தேறிய‌து. உலகிலேயே மிகப்பெரிய இயற்கை விவசாயிகளின் மாநாடாக இந்த மாநாடு திகழ்ந்தது. இந்தியா முழுவதுமிருந்து ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பாதுகாப்பான உணவிற்கான ஆர்வலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு சாரா அமைப்புகள் என பல தரப்பினரும் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில், தமிழகத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட‌ இயற்கை விவசாயிகள், தொலைதூரம் பயணித்துக் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் சில சிறப்புகள்

மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும், மாநாட்டிற்கான பதிவுத்தொகையை செலுத்தியும், தங்கள் சொந்த செலவில் பயணித்தும் மாநாட்டில் கலந்து கொண்டது

பல தரப்பட்ட மக்களின் நன்கொடை மற்றும் பங்களிப்புடனும், சில அரசு அமைப்புகளின் நல்கையுடனும் மட்டுமே (கார்பரேட் கம்பனிகளிடம் பொருள் அறவே பெறாமல்) நடத்தப்பட்டது

முழுக் கட்டுரை »

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


கோவை மாவட்டம் பல்லடம் வட்டம் செஞ்சேரிமலை அருகில் உள்ள ஐயம்பாளையம் கிராமத்தில் ஒரு தார் சாலையை ஒட்டி 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது ஒரு உழவாண்மை பண்ணை. 5 ஏக்கரில் சுமார் 250 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் பல வருடங்களாக தரிசாக கிடந்த நிலம். இந்த பண்ணை திரு பாபுஜிக்கு சொந்தமானது. இது 4 வருடங்களுக்கு முன்னர் இவரால் வாங்கப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.

இவர் தொழில்நுட்பத்துறையில் மேலை நாடுகளில் வேலை பார்த்தவர். ஐரோப்பா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேலை பார்த்தவர். தனது 39 ஆவது வயதில் தாயகம் திரும்பியவர். வெளி நாட்டில் வேலை செய்தபோதும் தொடர்ந்து தாயகத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கையில் இந்தியாவில் நடை பெற்றுக்கொண்டிருந்த பொருளாதார மற்றும் வளர்ச்சி மாற்றங்களை இடையறாது கவனித்து வந்ததாலும் வெளி நாட்டு வாழ்வு ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே (சம்பாதி, ஊர் சுற்று, செலவு செய், சம்பாதி…) இருந்ததாலும் தாயகம் திரும்பியவர். தேவைக்கு அதிகமான வருவாய் இருந்த பொழுதும் நுகர்வு கலாசாரத்தில் இருந்து விலகி (தனக்கு தேவையான) உற்பத்தி கலாசாரத்திற்கு மாற இவர் மனம் விரும்பியுள்ளது. இது இவர் விவசாயம் செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது. இவரது மனைவியின் நோக்கமும் அவ்வாறே இருந்ததால் (அவரும் வெளி நாட்டில் வேலை பார்த்தவர்தான்) இந்த மாற்றம் சுலபமானது.

முழுக் கட்டுரை »

கடன் பட்டார் நெஞ்சம்போல் - பாமயன்


இந்திய நாட்டின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்திய உழவர்களில் 52 விழுக்காட்டு மக்கள் கடனில் தவிக்கின்றனர். அவர்களது சராசரி கடன் குடும்பத்திற்கு 47000 ரூபாய் என்ற அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டு வருமானம் 36972 ரூபாய் மட்டுமே என்று கூறுகிறது. இந்த அறிக்கையின் பொதுவான கருத்தை ஏற்றுக் கொண்டாலும் வேளாண்மைப் பொருளியல் வல்லுநரான தேவிந்தர் சர்மா கடன் பெற்றுள்ள உழவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஏறத்தாழ 80 விழுக்காடு குடும்பங்கள் கடன் வலையில் சிக்கி இருக்கின்றன எனக் கூறுகிறது. என்னுடைய தனிப்பட்ட களப் பயணங்களின்போது கண்ட உண்மை என்னவெனில் 100 விழுக்காடு உழவர்கள் குறிப்பாக வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ள உழவர்கள் கடனில் இருப்பதைக் காண முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் பசுமைப் புரட்சியில் ஈடுபட்ட இந்திய உழவர்கள் 'கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலேயே செத்தும் போகின்றனர்'. ஆந்திர உழவர்களில் 92% குடும்பங்களும் அடுத்து தமிழகம் 82,5% குடும்பங்களும் கடன்பட்டுள்ளன. இந்தக் கடன் கணக்கில் நிறுவன ரீதியான கடன்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வங்கிகள் போன்றவற்றின் கடன் பெற்றவர்கள் மட்டுமே வெளியே தெரிய வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய, செல்வாகக்குள்ள பண்ணையாளர்கள். சிறு குறு நிலவுடைமையாளர்கள் குறிப்பாக மானாவாரி வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் கணக்கிலேயே வருவதில்லை. இவர்கள் மிகவும் கொடுமையான விளிம்பு நிலை மக்கள். இவர்கள் கடன் பெறுவது பொதுவாக பொருள்களை வாங்கிக் கைமாற்றித் தரும் தரகு மண்டிகளிலும், ரசாயன உர பூச்சிக்கொல்லி கடைக்காரர்களிடலும், இன்னும் பலர் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்குகின்றனர். முதலில் கூறிய பெரிய உழவர்களின் கடன் பெரிதும் வராக்கடன்களாக இருக்கின்றன. அல்லது தள்ளுபடி செய்யப்படுகின்றன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org