உணவே மருந்து
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
புதுப்புது பெயருடன் புரியாத மொழியில் வகைவகையான சோதனை முறைகளுடன் பல லட்சங்கள் செலவு செய்தும் முடிவாக இதுதான் இந்த நோய்க்கு மூல் காரணம் இதனை இந்த முறையில் சரிசெய்து விடலாம் என்று கூறுவாரை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். மருத்துவர்கள், வைத்தியர்கள், ஹீலர்கள், தெரபிஸ்டுகள் என அனைவரும் மருத்துவம் என்ற பெயரில் தங்களுக்குத் தெரிந்த முறைகளில் சிகிச்சை கொடுத்தாலும் உணவே அனைத்திற்கும் தலையாயது. உணவை எவ்வாறு சீராக்குவது என்னும் கலையையும் உணவு குறித்த உடலின் முழு இரகசியத்தையும் சொல்லிகொடுக்க மறுக்கின்றனர்.
வெறும் வெண்பூசணி சாறு, எலுமிச்சை சாறு அருந்துவதும், இரண்டு தேங்காய் துண்டுகள், பழங்களும் அன்றாடம் உண்ணுவதும், துயில் எழுந்ததும்் காலை யோகாசனம் மற்றும் நஞ்சில்லா உணவுமே நீண்டநாள் நோயிலிருந்து் விடுதலை பெற உதவும். ஒரு சின்ன உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலால் உருவாக்க இயலாத பொருள் உணவு. உணவுதான் உடல் இயங்க சக்தியைக் கொடுக்கக் கூடியது (ஓய்வு, காற்று, நீர், உடல் இயக்கம், திட ஆகாரம்) என்பதை மறந்து விடக் கூடாது. இவையே உடல் உயிர் வளர மூலப் பொருள் ஆகும். இவற்றுள் ஒன்று அதிகரித்து மற்றொன்று குறைந்தால் விளைவு ஆரோக்கியமின்மை. காலப்போக்கில் உயிர்கொல்லி நோய்.
உடல் ஆரோக்கியமாக இருக்க நம்மை சுற்றி பல நுட்பங்கள், எளிதாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது. அவற்றில் ஒன்றான கழிவு நீக்கம் , மிக எளிய முறையில் அன்றாடம் அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக என்றும் ஆரோக்கியத்தை காக்கக் கூடியதாக உள்ளது. கழிவு நீக்கம் பல பரிமாணங்களுடன் இருந்தாலும் எளிதாக அன்றாடம் பின்பற்றக்கூடியதை தவறாமல் கடைப்பிடித்தால் சுகமான வாழ்வைப் பெறலாம்.
பிரபஞ்ச நியதிகளில் ஒன்றான “ஒவ்வொரு செயலுக்கும் சமமான அல்லது எதிர்மறையான செயல் உள்ளது” என்று அறிந்திருக்கிறோம். அவற்றுள் ஒன்றானதே உட்கொண்ட உணவின் கழிவை வெளியேற்றுதல். இந்த வெளியேற்றுதல் தடைப்பட்டால் உடல், உயிரின் நிலை திண்டாட்டமே. பல நோய்களுக்குக் காரணமும் இந்த கழிவு வெளியேற்றுதல் தவறுவதனாலேயே.
சக்தியைக் கொடுக்கக் கூடிய உணவுகள் இன்று செயற்கையாகவும், இராசயனம் போர்த்தப்பட்டதகவும் உள்ளது. இயற்கையான தூக்கம் கூட இல்லாத நிலையில் கிடைத்தவற்றை உண்டு அனைத்திலும் நஞ்சோடு உடல் கழிவு நமது செல்களிலும், செல் சுவர்களிலும் தங்குகிறது. இதனால் இரத்தமும் நஞ்சாக மாற கழிவுகள் கொண்ட உடல் குப்பைத்தொட்டியைப் போல் வெப்பத்தை அதிகரிக்கிறது.
செயற்கையான நஞ்சு கலந்த உணவு உடல் சூட்டை அதிகரித்ததனால் கழிவுகள் சீராக வெளியேறாது கெட்டிப்பட்டுப் போக உடலிலேயே தங்கி விடுகிறது. உதாரணதிற்கு சளி கெட்டிப்பட்டு உரைத்து போக சுவாசம் சம்மந்தமான நோய்கள் உருவாவதும்; தலை, பித்தப்பை, கர்ப்பப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கற்கள் கட்டிகள் உருவாவதும்; கணையம் வெப்பத்தால் காய்ந்து இன்சுலின் சுரப்பை தடை செய்வதும்; செயற்கை மற்றும் ஏ.சி காற்றினால் வியர்வை துவாரம் அடைப்பு ஏற்பட்டு தோல் தடிமானம் அடைவதும்; பெருங்குடலில் மலம் கெட்டிப்பட்டு மலச்சிக்கல், மூலம் ஏற்படுவதும் போன்றவற்றைக் கூறலாம்..
இந்த கழிவுகள் உடலில் கெட்டிப்பட்டு அல்லது வறண்டு போவதினால் பல தொந்தரவுகளும், இந்த கழிவுகளை அகற்ற உடலுக்கு தீமை செய்யும் நுண்ணுயிர்களும் உருவாகிறது. இவை உடல், உறுப்புக்கள், இரத்ததிற்கு பெரும் பதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இவற்றுடன் கழிவுகளும் உடலில் தேங்குவதினால் உடல் சூடும் அதிகரிக்கிறது.
காலம் செல்லச் செல்ல கோழியின் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்தத என்று கணக்கின் படி கழிவில் இருந்து உடல் வெப்பம் அதிகரித்தா? அல்லது உடல் வெப்பத்தால் கழிவுகள் தேங்கியதா? என்ற நிலை உருவாகும். அதனுடன் நோயும் எளிதாக உருவாகி உடலில் நிலைத்திருக்கும். இரத்த ஓட்டமும் கழிவுகள் தேங்கிய இடத்தில தடைப்பட்டிருக்கும். இதுவே நோய் முற்றிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும்.
இவ்வாறு நோய் முற்றிப்போன நிலையில் நம்மை எவ்வாறு சீரான உணவின் மூலம் அதாவது சதாரண உணவின் மூலம் ஆரோக்கியத்தை மீட்டேடுப்பது என்றும் நாமே நம் நோயை குணப்படுத்திக்கொள்வது கொள்வது என்றும் இனிப் பார்போம்.
இன்றைய இளைய சமுதாயம் பெருமளவில் சீரான உணவுப் பழக்கம் இன்றி பாதிக்கப்படுவது வயிற்று வலியினாலும் குடல் புண்ணாலும். இதனை எவ்வாறு எளிதாக உணவு முறையில் சீரகுவது என்று பார்ப்போம்.
சாப்பாட்டில் காரம், அதிக மசாலா பொருட்கள், அசைவ உணவுகளைக் குறைக்கவும்.
வலிநிவாரணி மருந்துகளை அறவே தவிர்க்கவும். வலிநிவாரணி மருந்துகளை உட்கொள்வதால் உடலும், நரம்புகளும் பலவீனம் அடைந்து விபரீதமான பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்.
கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
டீ, காபியை தவிர்த்து இயற்கை முறையில் தயாரித்த சுக்கு மல்லி கருப்பட்டி சேர்த்த பானங்களை அருந்தவும். அல்லது பூசணி சாறு, கருவேப்பிலை தேங்காய்ப்பால் சேர்த்த பானத்தை அருந்தவும்.
மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கி துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். இதனை சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம். இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம்பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
சோற்று கற்றாழை சாற்றில் பச்சைப் பயறை ஊற வைத்து, காயவைத்துப் பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்
உணவே மருந்து; மருந்தே உணவு, முறையான உணவைத் தவிர எந்த மருத்துவமும் அவசியமற்றதே. மருத்துவத்திற்கும் வைத்தியருக்கும் செய்யும் செலவை அகற்றி என்றும் நம்முடன் மருத்துவராகவும், மருந்தாகவும் இருக்கும் காலை சூரியனையும் இரசாயனங்கள் இல்லாது எளிதில் ஜீரணிக்கும் இயற்கையின் கொடையான பழங்களையும் உட்கொள்வோம். வளமான வாழ்வு பெருவோம்