தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கடன் பட்டார் நெஞ்சம்போல் - பாமயன்


இந்திய நாட்டின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்திய உழவர்களில் 52 விழுக்காட்டு மக்கள் கடனில் தவிக்கின்றனர். அவர்களது சராசரி கடன் குடும்பத்திற்கு 47000 ரூபாய் என்ற அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டு வருமானம் 36972 ரூபாய் மட்டுமே என்று கூறுகிறது. இந்த அறிக்கையின் பொதுவான கருத்தை ஏற்றுக் கொண்டாலும் வேளாண்மைப் பொருளியல் வல்லுநரான தேவிந்தர் சர்மா கடன் பெற்றுள்ள உழவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஏறத்தாழ 80 விழுக்காடு குடும்பங்கள் கடன் வலையில் சிக்கி இருக்கின்றன எனக் கூறுகிறது. என்னுடைய தனிப்பட்ட களப் பயணங்களின்போது கண்ட உண்மை என்னவெனில் 100 விழுக்காடு உழவர்கள் குறிப்பாக வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ள உழவர்கள் கடனில் இருப்பதைக் காண முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் பசுமைப் புரட்சியில் ஈடுபட்ட இந்திய உழவர்கள் 'கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலேயே செத்தும் போகின்றனர்'. ஆந்திர உழவர்களில் 92% குடும்பங்களும் அடுத்து தமிழகம் 82,5% குடும்பங்களும் கடன்பட்டுள்ளன. இந்தக் கடன் கணக்கில் நிறுவன ரீதியான கடன்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வங்கிகள் போன்றவற்றின் கடன் பெற்றவர்கள் மட்டுமே வெளியே தெரிய வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய, செல்வாகக்குள்ள பண்ணையாளர்கள். சிறு குறு நிலவுடைமையாளர்கள் குறிப்பாக மானாவாரி வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் கணக்கிலேயே வருவதில்லை. இவர்கள் மிகவும் கொடுமையான விளிம்பு நிலை மக்கள். இவர்கள் கடன் பெறுவது பொதுவாக பொருள்களை வாங்கிக் கைமாற்றித் தரும் தரகு மண்டிகளிலும், ரசாயன உர பூச்சிக்கொல்லி கடைக்காரர்களிடலும், இன்னும் பலர் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்குகின்றனர். முதலில் கூறிய பெரிய உழவர்களின் கடன் பெரிதும் வராக்கடன்களாக இருக்கின்றன. அல்லது தள்ளுபடி செய்யப்படுகின்றன. கார்ப்போரேட் பெருங்குழுமக்களுக்குச் செய்யும் தள்ளிபடியைக் காட்டிலும் இது ஒன்றும் பெரியது அல்ல என்றாலும், சிறுகுறு உழவர்களின் நிலை மிகவும் கொடுமையானதாக உள்ளது. ஆகவே இவர்கள் எப்படியாவது வேளாண்மையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தவிக்கின்றனர். இவர்களுக்கு இதைத் தவிர வேறு தொழில் செய்யும் திறனோ, மற்றவர்களை எளிதில் (தேவைப்பட்டால்) ஏமாற்றி வேறு தொழில் செய்யும் சாதுரியமோ இல்லாத காரணத்தில் வேளாண்மையில் உழன்றுகொண்டு இருக்கின்றனர். இதையும் மாதிரிக் கணக்கெடுப்புக் குறிப்பில் குறிப்பிடுகின்றனர். அதாவது 37 விழுக்காடு மக்கள் வேளாண்மையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளதாக அது தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்ல நேரயாக உழைக்கும் உழவர்களை வெளியேற்றிவிட்டு அல்லது வெளியேறச் செய்துவிட்டு பெருங்குழும கும்பணி வேளாண்மையை ஊக்கும்விக்கும்விதமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதாவது இந்தியாவில் பொதுத்துறையின், அரசுத்துறையின் முதலீடு வேளாண்மைத்துறையில் மிகவும் கடுமையாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் பெருங்குழுமக் கும்பணிகளின் முதலீடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. 1980களில் பொதுத்துறை முதலீடு 13174 கோடிகள் அதுவே தனியார் துறை முதலீடு 15384 கோடிகள் 2008-9ஆம் ஆண்டளவில் பொதுத்துறை முதலீடு 24452 கோடிகள் தனியார் துறை முதலீடு 114145 கோடிகள். அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனியார் துறை முதலீடு 2.5%ல் இருந்து 52% ஆக உயர்ந்துள்ளது. அதாவது பெருங்குழுமக் கும்பணிகளின் கைகளில் வேளாண்துறை போய்விட்டதைக் காட்டுகிறது. அத்துடன் அரசின் பாதுகாப்பு அல்லது பங்களிப்பு மிகவும் குறைவதைக் காண முடிகிறது. நிதி ஒதுக்கீடுகள் பிற துறைகளைவிட மிக மோசமாகக் குறைந்துள்ளது. அதாவது மகாத்மாக் காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிடக் குறைவாக வேளாண்துறைக்கு 2014ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேவிந்தர் சர்மா குறிப்பிடுகிறார். அதாவது மகாத்மாக் காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு 34000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதேசமயம் வேளாண்மைக்கு 31000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர். இந்தியா வேளாண்மையில், 1950களில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 55,6 விழுக்காடு. அதுவே 2009ஆம் ஆண்டளவில் 15.7 விழுக்காடு. அப்படியானால் இந்திய வேளாண்மையைக் காப்பற்றப்போவது யார்? இவ்வளவு கொடுமையான போர் இந்திய உழவர்களின் மீது அந்த நாட்டு ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட பின்னரும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (நிஞிறி) 15,7 விழுக்காடாக உள்ள வேளாண்மைத்துறை 56 விழுக்காடு வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது.

நோயில்லாதவன் இளைஞன், கடனில்லாதவன் பணக்காரன் என்ற ஒரு பழமொழி உண்டு. இதன்படி வருவாய்க்குள் வாழும் பண்பாட்டைக் கொண்டிருந்த நமக்குக் கடன் என்ற இனிப்பு காட்டப்பட்டு அதன் ஊடாகப் பின்னப்பட்ட சந்தை வலை உழவர்களை கடன் பொறிக்குள் சிக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளர்களின் ஒருவரான எலினா ரூஸ்வெல்ட் கடன் பற்றி ஒரு கருத்தைக் கூறுகிறார், கடன் என்பது உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், போதிய அளவு கிடைக்க வேண்டும். குறைந்த வட்டிக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் கடன் வாங்கி அதை வைத்து தொழில் செய்து மீள முடியும், கடனைத் திரும்ப அடைக்க முடியும். ஆனால் நடைமுறை அவ்வாறு இல்லை. வங்கிகளுக்குச் சென்று கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை யாவரும் அறிவர். அலைக்லைப்பிற்கு ஆளாகாமல் யாரும் கடன் பெற இயலாது. இவ்வாறு மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ள கடன் வழங்கும் முறை, பிற தனியார் நிதி அமைப்புகள் தாராளமாகப் புழங்க வழி வகுத்துள்ளது.

மன்னராட்சிக் காலத்தில் இருந்து உழவர்கள் மீதுதான் பெரும்பாலான சுமைகள் ஏற்றப்பட்டு வந்துள்ளன. உழவர்களிடம் வரி வாங்கியே பல அரசுகள் இயங்கியுள்ளன. 1960களுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் உழவர்களை வழங்கும் இடத்தில் இருந்து பெறும் இடத்திற்கு மாற்றிவிட்டன. தேவையை நோக்கிய சாகுபடி முறை, சந்தையை நோக்கிய சாகுபடி முறையாக மாறிவிட்டது. விளைபொருள்களை சேமித்து வைக்கும் பழக்கம் மறைந்துவிட்டதாலும், அதற்கான நிதி, வாய்ப்பு வசதிகள் இல்லாமையாலும் சந்தையால் உழவர்கள் சூறையாடப்படுகின்றனர். இதனால் உழவர்கள் குடும்பம் குடும்பமாகத் தற்கொலையாகின்றனர். இதுவரை (1997 முதல் 2011 வரை) இரண்டரை லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துள்ளதை குற்றவியல் ஆவணங்களில் இருந்து வேளாண் பொருளியல் ஆய்வாளர் சாயிநாத் விளக்குகிறார். இதில் தமிழ்நாட்டின் பங்கு 11.8 விழுக்காடு என்பது மிகவும் அதிச்சியான தகவல். இவர்கள் யாவரும் பசுமைப் புரட்சி உழவர்கள்.

முன்னேறிய மாநிலங்கள் என்று கூறப்படும் மாநிலங்களான, மராட்டியம், குஜராத், தமிழ்நாடு. கேரளத்தில் உழவர் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும்போது, இயற்கை வேளாண்மைக்கு மாறிய மாநிலங்களில் தற்கொலைகள் இல்லை. (பார்க்க: லீttஜீ:ஸீநீக்ஷீதீ.ரீஷீஸ்.வீஸீ/சிஞி-கிஞிஷிமி2011/ suவீநீவீபீமீs-11.ஜீபீயீ) அதுமட்டுமல்ல தற்கொலைகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ள மாராட்டிய மாநிலத்தில் இயற்கைவழி வேளாண்மை செய்யும் உழவர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவர் குடும்பம் கூட கடனுக்காகத் தற்கொலை செய்துகொள்ளவில்லை. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று புறநானூறும், மணிமேகலையும் கடவுளுக்கு இணையாக உழவர்களை வைக்கின்றன. நமது பண்டை அறிஞர்கள் வேளாண்மையையும், உழவர்களையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். ஆனால் மிக நவீன சிந்தனையாளர்களான நாம் உணவளிப்பவர்களை எந்த இடத்தில் வைத்துள்ளோம். அன்பிற்குரிய மன்னிக்கவும் அறிவுக்குரிய கொள்கை வகுப்பாளர்களே! ஆட்சியாளர்களே உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுப் பாருங்கள் இது நியாயந்தானா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org