கோவை மாவட்டம் பல்லடம் வட்டம் செஞ்சேரிமலை அருகில் உள்ள ஐயம்பாளையம் கிராமத்தில் ஒரு தார் சாலையை ஒட்டி 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது ஒரு உழவாண்மை பண்ணை. 5 ஏக்கரில் சுமார் 250 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் பல வருடங்களாக தரிசாக கிடந்த நிலம். இந்த பண்ணை திரு பாபுஜிக்கு சொந்தமானது. இது 4 வருடங்களுக்கு முன்னர் இவரால் வாங்கப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.
இவர் தொழில்நுட்பத்துறையில் மேலை நாடுகளில் வேலை பார்த்தவர். ஐரோப்பா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேலை பார்த்தவர். தனது 39 ஆவது வயதில் தாயகம் திரும்பியவர். வெளி நாட்டில் வேலை செய்தபோதும் தொடர்ந்து தாயகத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கையில் இந்தியாவில் நடை பெற்றுக்கொண்டிருந்த பொருளாதார மற்றும் வளர்ச்சி மாற்றங்களை இடையறாது கவனித்து வந்ததாலும் வெளி நாட்டு வாழ்வு ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே (சம்பாதி, ஊர் சுற்று, செலவு செய், சம்பாதி…) இருந்ததாலும் தாயகம் திரும்பியவர். தேவைக்கு அதிகமான வருவாய் இருந்த பொழுதும் நுகர்வு கலாசாரத்தில் இருந்து விலகி (தனக்கு தேவையான) உற்பத்தி கலாசாரத்திற்கு மாற இவர் மனம் விரும்பியுள்ளது. இது இவர் விவசாயம் செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது. இவரது மனைவியின் நோக்கமும் அவ்வாறே இருந்ததால் (அவரும் வெளி நாட்டில் வேலை பார்த்தவர்தான்) இந்த மாற்றம் சுலபமானது.
இவரது நிலம் அமைந்துள்ள பகுதி கடந்த காலத்தில் மிகவும் செழிப்பான பகுதியாகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமராவதி நீர்ப்பாசனத்தில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டி உள்ளதால் இங்கு எப்போதும் குளிர்ந்த சூழலும் வேகமான காற்று வீசக்கூடிய பகுதியாகவும் உள்ளது. ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் காற்று மின் ஆலைகளும் அமைந்துள்ளன. இதற்கு இடையில் இவரது நிலம் உள்ளது. அருகில் உள்ள நிலங்களிலும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி முழுவதுக்கும் வாய்க்கால் பாசன வசதி உள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கடுமையான வறட்சியினால் அணையில் இருந்து பாசன நீர் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை (நீர்ப்பாதையை சீரமைக்கும் பணியும் நடைபெறுவதால் PAP என்று சொல்லப்படும் பரம்பிக்குளம் - ஆழியார் பாசன வாய்க்கால் வருடத்திற்கு ஆறு மாதங்கள் மூடப்படும் சீரமைக்கும் பணிகளுக்காக). இவரது நிலம் உள்ள பகுதியில் போதுமான மழையும் தொடர்ந்து கிடைக்கவில்லை. நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. பாபுஜியின் நிலத்திலுள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் நீர் வற்றிவிட்டது. இதற்கு இடையில் இவர் பல இயற்கை விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இவருடன் பல வருடங்களாக வேலை பார்த்து இவருக்கு முன் தாயகம் திரும்பி வந்து தற்சார்பு விவசாயத்திற்காகவும் நஞ்சில்லா உணவு விற்பனைக்காகவும் விழிப்புணர்வு போராட்டங்கள் / முயற்சிகள் செய்து வரும் திரு. அனந்துவுடன் பல தற்சார்பு பண்ணைகளை பார்த்து அந்த பண்ணை உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். இந்த தொடர் தேடுதலின் காரணமாக இவரின் பலவிதமான விவசாய சிக்கல்களுக்கும் விடை கிடைத்துள்ளது.
தனது பண்ணையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றிவிட்ட நிலையில் தென்னையை காப்பாற்ற நினைத்தவர் ஒரு பண்ணை வடிவமைப்பாளர் மற்றும் இயற்கை விவசாயின் அனுபவத்தை பின்பற்றி 1. இரண்டு மர வரிசைக்கிடையில் JCB இயந்திரத்தைக்கொண்டு 2 1/2 அடி அகலத்தில் 1 1/2 அடி ஆழத்திற்கு நீளவாக்கில் வாணி எடுத்து 2. அதில் அருகில் கிடைத்த தேங்காய் மட்டையில் இருந்து கிடைக்கும் கழிவை (காயர் பித்) அந்த குழிகளில் இட்டு நிரப்பி 3. ஏக்கர் ஒன்றுக்கு 1 டன் உமிசாம்பலையும் அந்தக்குழிகளில் கலந்து இட்டு 4. தோட்டத்தில் கிடைக்கும் அனைத்து கழிவுகளையும் (மட்டை, கலை செடிகள்) அதே வாணிகளில் இட்டு நிரப்பினார்.
இந்த பண்ணையிலுள்ள தென்னை மரங்களுக்கு சொட்டுநீர் பாசன வசதி செய்யப்பட்டிருந்தது. அந்த சொட்டு நீர் தென்னை மரத்தின் அடியில் இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது. அத மாற்றி இரண்டு மர வரிசைக்கிடையில் எடுத்த வாணிகளில் அந்த பாசனம் மாற்றப்பட்டது. தண்ணீர் வெளியில் இருந்து லாரியில் வாங்கப்பட்டது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பாசனம் செய்யப்பட்டது. மிகவும் குறைந்த அளவு நீரே கொடுக்கப்பட்டது. இந்த செயல் இரண்டு வருடங்களாக தொடர்ந்தது (2 வருட வறட்சி!).
இந்த வருடம் சுமாரான மழை இந்தப்பகுதியில் கிடைத்துள்ளது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி இரண்டு மரங்களுக்கு இடையில் தோண்டப்பட்ட ஒவ்வொரு வாணியிலும் ஐந்து அடிக்கு ஒரு பழ மரக்கன்றும் அடுத்து ஐந்து அடிக்கு ஒரு தடி மரக்கன்றும் நடவு செய்துள்ளார். தனது 5 ஏக்கர் தோப்பு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் பலவிதமான பழ மரங்கள் மற்றும் பல விதமான தடி மரங்களை நடவு செய்துள்ளார். இந்த இரண்டு மரக்கன்றுகளுக்கு இடையில் கால்நடைக்கு தீவனத்திற்காக மல்பரி, கினியா புல்லும் நடவு செய்துள்ளார். வேலியோர உட்புறங்களில் பனை, மூங்கில் மற்றும் மலைவேம்பு போன்ற மரங்களை 5 அடிக்கு ஒன்று என்று நடவு செய்துள்ளார்.
இந்த வருடம் கிடைத்த சிறிதளவு மழை நீரே இவரதுபண்ணையில் முறையாக இரண்டு மர வரிசைக்கு இடையில் தோண்டப்பட்ட வாணிகளில் சேமிக்கப்பட்டதால் ஆழ்துளைக்கிணறுகளில் போதிய தண்ணீர் இன்று கிடைக்கிறது (பண்ணையே மழை நீர் சேமிப்புக்களம்!). இன்று 5 மணி நேரம் மட்டுமே மின் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாசனத்திற்கு போதுமானதாக உள்ளது. இன்று தென்னை மரங்கள் செழிப்பாக புதிய பாளைகள் விட்டு ஆரோக்கியமாக காய்க்க தொடங்கிவிட்டன.
தரிசாக கிடந்த மீதி ஒரு ஏக்கரிலும் விசைத்தெளிப்பு நீர் பாசனம் செய்யப்பட்டு 1/2 ஏக்கரில் 3 1/2 அடிக்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டு கீரைகள் பயிர் செய்யப்படுகின்றன. இவரது தேவைக்கு அதிகமாகவே காய்கறிகளும் கீரையும் கிடைப்பதால் எஞ்சியவற்றை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தந்து மீந்தவற்றை நகரில் அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள காய்கறிக்கடையில் விற்பனைக்காக தருகிறார் (கடையில் தேங்காய்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நஞ்சுள்ள காய்கறிகளையே உண்டு பழகிய மக்கள் இன்னும் இந்த காய்கறிகளை வாங்க தயங்குவது இன்றைய நிஜம் - வேதி பொருட்கள் கொண்டு 'தயாரிக்கப்படும்' காய்கறிகளின் நிறம் மற்றும் வளர்த்திக்கு பழகிவிட்டனர்). வரும் காலத்தில் தானே சந்தையாளராக மாறி தம் தோட்ட விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளார்). ஏக்கருக்கு ஒன்று என்ற வீதத்தில் (இந்திய) தேனீ பெட்டிகளும் வாங்கிவைத்துள்ளார்.
மீதமுள்ள 1/2 ஏக்கரில் பலவிதமான விதைகளும் விதைக்கப்பட்டு அடுத்த பட்டத்திற்கு தானியங்கள் பயிர் செய்ய தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பண்ணையிலேயே ஒரு குடும்பம் ( கணவன்,மனைவி) தங்கி வேலையை கவனிக்கின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு ஆடுகள், 50 கோழிகள், 200 புறாக்கள் வளர்க்கும் வகையில் அதற்குண்டான கொட்டிலும், கூடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. அதற்குண்டான கட்டுமானப்பொருட்களும் அருகில் கிடைக்கக்கூடிய தென்னை மரச்சாமான்களைக்கொண்டே செய்துள்ளார். மிகவும் அழகாகவும்,எளிமையாகவும், நீண்டு உழைக்கும் தன்மையுடனும் அவற்றை அமைத்துள்ளார். அந்த கிராமத்தில் உள்ள தச்சர், மற்றும் பூச்சு வேலை செய்பவர்களையே இந்த வேலைக்கு பயன்படுத்தியுள்ளார். பண்ணையை மிகவும் சுலபமான முறையில் பராமரிக்கும் வண்ணம் அமைத்துள்ளார்.
போன வருடம் காய்ந்துகிடந்த பண்ணை இன்று பசுமை போர்த்திய பூமியாக, எங்கும் பசுமையுடன் பல விதமான உயிரினங்களுடனும், தண்ணீர் வசதியுடனும் மாறியுள்ளதற்கு மிகவும் முக்கிய காரணங்கள் இவருக்கு அமைந்த வழிகாட்டிகளும்,இவரது தெளிவான இயற்கையைப்பற்றிய புரிதலும், மனம் தளராமல் அனைத்து வேலைகளையும் முறைப்படுத்தி மிகவும் நிதானமாக செயல்படுத்தியதும் ஆகும். இந்த சூழல் வேறு ஒரு விவசாயிக்கு ஏற்பட்டிருந்தால் அவர் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது நிச்சயம்.
ஆக ஒரு விவசாயி தன் சுற்றுப்புறத்தில் உள்ள சூழலை புரிந்து மிகவும் நுட்பமாக இயற்கையைபயன்படுத்த தெரிந்துகொண்டால் போதும், வெற்றி நிச்சயம் என்பதை இவரது செயல்பாட்டில் இருந்து புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மானாவாரி விவசாயியும் இவரது பண்ணையை பார்த்து புரிந்து செயல்பட பல விதமான தொழில்நுட்பங்கள் இங்கு குவிந்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இவருடன் கலந்துகொண்டு பயன் பெறலாம். இவரும் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கட்டுரை வடிவாக்க உதவி - பாபுஜி