தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


வால் காக்கை

Indian Treepie ( Dendrocitta Vagabunda)

எளிதில் அடையாளம் கொள்ளும் குரல் உள்ள பறவை. கோகி… கோகி… கோகிலா என்று மிக‌ அழகாக பாடும் பறவை. காக்கை இனத்தை சேர்ந்தது. காலை நேரங்கள் மற்றும் மாலை நேரங்கள் புங்கமரம், மாமரம், முருங்கை போன்ற மரங்களில் தன் ஜோடியை அழகான குரலில் அழைக்கும்.

தோற்றம்

காக்கையை விட உடம்பு கொஞ்சம் சிறியது. வால் நீளமாக இருக்கும். முகம், வால் நுனிகள், சிறகு நுனிகள் கருமை நிற‌த்திலும், உடம்பு பழுப்பு நிற‌த்திலும், வால் சாம்பல் நிற‌த்திலும், சிறகுகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிற‌த்திலும் இருக்கும். மூக்கும், கால்களும் கருமை நிற‌த்தில் இருக்கும். இதன் வால் 30 செ.மீ வரை இருக்கும். ஆண், பெண் ஒரே நிற‌த்தில் இருக்கும்.

காணும் இடம்

இந்தியாவில், வங்கதேசத்தில், மியன்மன் மற்றும் பாகிஸ்தானில் இவை காணப்படும். இலங்கையில் இப்பறவைகள் இல்லை. இந்த இனத்தில் ஐந்து வகைகள் உள்ளன. நிற‌த்தை வைத்துத்தான் அடையாளம் கொள்ளலாம். பூங்காக்களில், புதர்களில், நம் வீடுகளில் உள்ள மரங்களில் இவற்றைக் காணலாம். தன் ஜோடியோடுதான் இருக்கும்.

உணவு

பழங்கள், பூச்சிகள், பல்லிகள், தவளைகள், பூரான் இவற்றை உண்ணும். அரணை ஓணான் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். அரணை இப்பறவையைக் கண்டால் அரண்டு ஓடிவிடும். பிற சிறு பறவைகளின் கூட்டைக் கலைத்து அவற்றின் முட்டைகளைத் தின்றுவிடும் பொல்லாத பறவை. அனைத்துப் பறவைகளையும் காக்கும் காவல்காரனான கரிச்சான் குருவி தான் இதற்கு ஒரே எதிரி. கரிச்சான் குருவி இதை கொத்தி விரட்டி விடும்.

இனப்பெருக்கம்

மாசி முதல் சித்திரை வரை. காக்கை போலதான் இது கூடு கட்டும். 4 முதல் 5 முட்டைகள் இடும். பெரும்பாலும் சாம்பல் நிற‌த்தில் தான் முட்டைகள் இருக்கும். ஆண், பெண் இரண்டும் குஞ்சு வளர்ப்பில் ஈடுபடும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org