ஐந்தாவது அகில இந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு, சண்டிகர், ஃபிப்ரவரி 28 முதல் மார்சு 2, 2015 வரை மிகவும் சிறப்பாகவும், வியக்கவைக்கும் விதத்திலும் நடந்தேறியது. உலகிலேயே மிகப்பெரிய இயற்கை விவசாயிகளின் மாநாடாக இந்த மாநாடு திகழ்ந்தது. இந்தியா முழுவதுமிருந்து ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பாதுகாப்பான உணவிற்கான ஆர்வலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு சாரா அமைப்புகள் என பல தரப்பினரும் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில், தமிழகத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், தொலைதூரம் பயணித்துக் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் சில சிறப்புகள்
மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும், மாநாட்டிற்கான பதிவுத்தொகையை செலுத்தியும், தங்கள் சொந்த செலவில் பயணித்தும் மாநாட்டில் கலந்து கொண்டது
பல தரப்பட்ட மக்களின் நன்கொடை மற்றும் பங்களிப்புடனும், சில அரசு அமைப்புகளின் நல்கையுடனும் மட்டுமே (கார்பரேட் கம்பனிகளிடம் பொருள் அறவே பெறாமல்) நடத்தப்பட்டது
மாநாட்டின் மூன்று நாட்களும் 15 உணவு பந்தல்களின் கீழ், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட இயற்கை உணவு வகைகள், மாநாட்டில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது
மாநாட்டின் 2000 பேர் அமர்வதற்க்காக ஏற்ப்பாடு செய்யப்பட்ட முக்கிய பந்தலில், தொடர் நிகழ்ச்சியாக இயற்கை விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது
மாநாட்டில் விதவிதமான தலைப்புகளில் – சுற்றுசூழலும் இயற்கை விவசாயமும், இயற்கை விவசாயத்தில் பெண்கள் பங்கு, மலை பிரதேசத்தில் இயற்கை விவசாயம், இயற்கை விவசாயமும் கால்நடைகளும், பழங்குடியினர்வாழ் பகுதியில் இயற்கைவிவசாயம், கல்விவழியில் இயற்கைவிவசாயம், இயற்கைவிவசாய பொருட்களின் விற்பனை, இயற்கைவிவசாயமும் ஆரோக்கியமும், போன்ற கலந்துரையாடல்களும், பகிர்வுகளும் 6 வெவ்வேறு அரங்குகளில் நாள் முழுவதும் தொடர்ந்து நடந்தது
இயற்கை விவசாயிகளின், மற்றொரு முக்கிய பணியான பாரம்பரிய விதைகளைப் பராமரிப்பது மற்றும் பகிர்வதற்காக தனியான ஒரு “பன்மையம் கண்காட்சி” ஏற்பாடாகியிருந்தது. இதன் மூலமாகப் பல பாரம்பரிய விதைகளை விவசாயிகள் மீண்டும் பார்க்கவும், பகிரவும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறத்தாழ 30க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் இந்த முனைவில் தொடர்ந்து பங்கு கொண்டனர்
இத்தகைய பல மாநாடுகளிலும், மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும், நாம் காணக்கூடிய குப்பைகூளங்கள் அறவே இல்லாமல் இந்த மாநாட்டை நட்த்தியது மற்றொரு சிறப்பு அம்சமாகும். இதற்க்கான முயற்சிகளை மேற்க்கொண்ட தொண்டர்கள் இரவு பகலாக உழைத்து நிறைவேற்றிய இந்தச் சாதனை வீண்போகவில்லை. மாநாட்டிற்கு வந்த அனைவரும் குப்பையில்லா நிலையை பாராட்டினர்
“பச்சைப் புரட்சி”யின் தலையாய மாநிலம் என்று ரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் இந்தியாவில் தொடங்கிய காலத்தில் “பெயர்” பெற்று, அதன் வாயிலாக, இன்று இந்தியாவின், “புற்றுநோய் தலைமைமாநிலம்” என்று வழங்கிவரும் பஞ்சாப் மாநிலத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயற்கை விவசாயிகள் வந்திருந்தது அந்த மாநிலத்தைச் சேர்ந்த, இயற்கைவிவசாயிகளின் மத்தியில் மிகவும் உற்சாகத்தையும், வரவேற்பையும் உருவாக்கியது
சண்டிகர் நகரம், ஹரியானா மற்றும் பஞ்சாப் இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக விளங்குவதனால், இரண்டு மாநிலத்திலிருந்தும் அதிக அளவில் விவசாயிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் வியப்பில்லை.
முதல் நாள் மாநாட்டின் தொடக்கவிழாவுக்கு வந்திருந்த, ஹரியானா மாநிலத்தின் முதல் மந்திரி, திரு. கட்டார் அவர்கள், தனது மாநிலத்தில், 10% நிலத்தையாவது இயற்கை முறைப்படி விவசாயம் செய்யும் நிலங்களாக மாற்ற தன் அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அறிவித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அன்று அவருடன் வந்திருந்த ஹரியானா விவசாயத்துறை மந்திரி, திரு. தங்கர், எவ்வாறெல்லாம் ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நிலங்களும், நீர் நிலைகளும், மக்கள் உடல்நலமும் பாதிக்கின்றது என்பதை விளக்கமாக, தனது அனுபவத்தில் இருந்து எடுத்துரைத்தது பரவலாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதே சமயம் அவர், “மாற்றம் அவ்வளவு எளிதாக ஏற்படுத்த முடியாது” என்பதையும் கூறியது, இன்றைய அரசியல்வாதிகளின் ‘கடன்பட்ட’ நிலையை உணர்த்தியது. முதல் நாள், மற்றொரு அமர்வில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில உடல்நலத்துறை மந்திரி, திரு. அவதார் சிங்க் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி, தன்னார்வலர்களை, தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார்! யார் அரசு நட்த்துகின்றார்கள் இந்த நாட்டில்? எங்கின்ற கேள்வி எழுந்தது!
மாநாட்டின் இரண்டாவது நாளன்று பேசிய மத்திய அமைச்சர், திருமதி. மேனகா காந்தி அவர்கள், ‘நியொ நிகொடிநாய்டு’ என்னும் புற்று நோயை ஏற்படுத்தும் பயங்கர பூச்சிக்கொல்லி ஏன் இந்தியாவில் தடைசெய்யமுடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்தை பகிர்ந்து கொண்டது, தேசிய அளவில் ஊடகங்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் மேலும் பி டி பருத்தி மற்றும் கத்திரி பற்றியும் அவை தேவையற்றவை என்றும் மரபணு மாற்று விதைகள் அபாயகரமானவை என்றும் கூறினார்
மாநாட்டின் கடைசி நாளன்று முக்கிய உரையாற்றிய பஞ்சாப் மாநில முதல்வர், திரு. பாதல் அவர்கள், “பஞ்சாப், ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு உற்பத்தியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்ந்து நாட்டிற்க்காகத் தனது நிலம், நீர் மற்றும் மக்களின் உடல்நலனையும் (ரசாயன இடுபொருட்களினால்) கெடுத்துக்கொண்டு உணவு உற்பத்தி செய்தது. இன்று, நாட்டின் பல மாநிலங்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டிய நிலையில், பஞ்சாப், இயற்கை வேளாண்மையைத் தனதாக்கிக்கொண்டு, இந்தியாவின் தலைசிறந்த இயற்கை வேளாண் மாநிலமாக மாறும்’, என்று உண்ர்ச்சிவசமாக தெரிவித்தது, கூடியிருந்த அனைவரின் ஆதரவையும் பெற்றது. அவர் அன்று மாலையிலேயே தனது அறிக்கை வெறும் வாய்வார்த்தையாக மாத்திரம் இல்லாமல் உடனடியாக தகுந்த அரசாங்க உத்தரவை பிறப்பித்தது, இந்த மாநாட்டின் மிகப்பெரிய நல்விளைவு ஆகும்.
அத்துடன் நிற்காமல், பஞ்சாப் முதல்வர், தமது மானிலத்தில் இயற்கை விவசாயம் வேரூன்ற இந்த பெரும் மாநாட்டை வடிவமைத்த, (இயற்கை) விவசாயிகளுடன் பணியாற்றும் அமைப்புகள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்றும் கோரினார்.
அடுத்த நாளே அவரது அலுவலகத்தினின்று இயற்கை வேளாண் வாரியம் அமைக்கபடும் என்று செய்தி வெளியிடப்பட்டதுடன் நிற்காமல், கேதி விராசட் மற்றும் ஆஷா அமைப்புகள் உடனடியாக அவர்களது அறிவுரை/அலோசனை களை அனுபுமாறும் கெட்டுக்கொண்டுள்ளது. இவை ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இயற்கை விவசாய செயல்முறைகள், விவாதங்கள், வேளாண் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டம், மாடி தோட்டம் பற்றிய பயிற்சி, விதை திரு விழா, விவசாயிகள் கலந்துரையாடல், இயற்கை வேளாண் சந்தை என்று . வந்திருந்த எல்லோரும் திகைத்தும் திகட்டும் அளவிற்கு பலப்பல நிகழ்வுகள்!
இந்த மாபெரும் மாநாட்டிற்கு வந்திருந்த எல்லோருக்கும் மூன்று நாளும் மூன்று வேளையும் இயற்கை உணவே பரிமாரப்பட்டது ஒரு பெரும் சிறப்பு. இயற்கை விவசாயிகளின் மாநாட்டில் இயற்கை உணவு என்பது தானே நியாயம் என்று தோன்றுகிறதா? 2500 பேருக்கும், 3 நாளும், அதை தவிர இதற்கு உறுதுணையாக இருந்து 24 மணி நேரமும் களப்பணி ஆற்றிய தொண்டூழியர்களுக்கும், வந்த அனைத்துப் பொது மக்களுக்கும் கூட இயற்கை உணவே!.
15 மாநிலங்களிலிருந்து வெவ்வேறு விவசாயக்குழுக்களின் (இயற்கை விவசாயிகள் அல்லது அவர்களுடன் இயங்கும் குழுக்கள்) உணவு அரங்குகள் நிரம்பிய ஒரு பெரும் உணவுத் திருவிழா திட்டமிடப்பட்டு அதிலிருந்துதான் மேற்கூறிய எல்லோருக்கும் இயற்கை உணவு பரிமாறப்பட்டது.
ஒவ்வொன்றும் பாரம்பரிய இயற்கை உணவை மட்டுமே மையப்படுத்தப்பட்ட அரங்குகள். பல அரிய பாரம்பரிய இயற்கை உணவினை பரிமாறின. குஜராத், மஹாராஷ்டிரம், கரநாடகம், கேரளா, ஒடிஷா, உத்தராகண்ட், ராஜஸ்தான், சன்டிகர், பஞ்சாப் மற்றும் நம் தமிழகம் என்று பல மாநிலங்களிலிருந்து இந்த அரங்கங்கள் அமைக்கப்பட்டன.
மலை ராஜ்மா, அமரந்த் மற்றும் அரிசி தவிடு லட்டு, பலதானிய ரொட்டி, குதிரை வாலி கீர், மூலிகை சாறு, மலை பதார்த்தங்கள் நிறைந்த உத்தரகாண்டின் உணவு பட்டியல் என்றால், மூங்கில் அரிசி பாயசம், பலாச்சொளை பாயசம், உன்னி அப்பம், கேழ்வரகு புட்டு என்று கேரளா, பல்வேறு சிறு தானியங்களில் ராகி பப்படம் உட்பட கரநாடகாவின் பட்டியல், அடுப்பில்லா சமையல், அடுமனையற்ற பீட்சா, பல தானியங்களில் பலகாரம், உருளை இல்லா பட்டீஸ், போகளின் சாரில் டீ என்று மஹாராஷ்டிரம், சிகப்பு அரிசியில் இனிப்பு மற்றும் உப்பு கூழ் (ராப்), கம்பு கிச்சடி, சிறுதானிய ரொட்டி, முளைகட்டிய தானியங்கள் என்று ராஜஸ்தானம், கேழ்வரகு டீ மற்றும் பல தானிய ரொட்டி ஒடிஷாவிலிருந்து, பல பஞ்சாபி சிறப்பு பதார்த்தங்கள் என்று ஒவ்வொரு அரங்கும் மிளிர்ந்த்து.
இதில் மிகவும் தனியாக அனைவரது கவனத்தையும் இழுத்தது தமிழகத்தின் அரங்கு. இன்று வரையும் பலரும் மின் அஞ்சலிலும் பின்னூட்டு படிவத்திலும், போன்களிலும் தமிழகத்தின் சிறப்பை சிலாகிக்கின்றனர். இந்த பெரும் மாநாட்டினை ஏற்பாடு செய்தவர்களின் முக்கிய நபர்கள் பலரும் தமிழகத்தின் அரங்கை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பற்பலரும் அவர்களிடம் கூறியதாக தெரிவித்தனர்.
ஒவ்வொரு வேளையும் ஒரு மூலிகை சாறு, செம்பருத்தி/தாமரை/ஆவாரம் சாம்பார், நெல்லி அவல் உப்புமா, பல தானிய இட்லி, முடக்குத்தான்/தூதுவளை சூப், கொள்ளு/பீட்ரூட் சட்னி, வரகு சாதம், புடலை கட்லட் என்று இவர்களது புதுமையான கற்பனை பட்டியலுக்கு முடிவே இல்லை!
இவர்களது பெரிய கவர்ச்சி, எல்லாப்பொழுதும் இயற்கை முறையில் விளைந்த தேசி பருத்தியின் பாலின் பாயசமும், மூலிகை தோசையும்!
இப்படி ஒவ்வொரு அரங்கும் அதிர, இந்த மிகப்பிர்ம்மாண்டமான மாநாட்டின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியாக இயங்கியது இந்த பாரம்பரிய இயற்கை உணவு வளாகம்.
இதில் மிகவும் சிறப்பாக எல்லோராலும் பாராட்டப்பெற்ற இன்னொரு விஷயம்: இந்த மாநாட்டிற்கு வந்த்திருந்த அனைத்து நபர்களுக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் வெவ்வேறு அரங்கத்திலிருந்து உணவு பரிமாரப்பட்டது. இதற்காக ஒரு தொண்டூழியர் குழு 3 இரவுகள் செலவழித்து ஒவ்வொருவருக்கும் (3 நாட்களின்) 9 வேளையில் ஒவ்வொரு வேளையும் எங்கு சாப்பிட வேண்டும் என நிர்ணயித்து ஒரு பட்டியலை வடிவமைத்து எழுதி ஒவ்வொருவருக்கும் வழங்கினர்!
இன்னொரு பெரிய அரிய விஷயம்: குப்பை அதுவும் நெகிழிக் குப்பை (ப்ளாஸ்டிக்) அற்ற மைதானமாகவும் அரங்குகளாகவும் இந்த மாநாடு விளங்கியது. பாக்கு மட்டை தட்டுகளில் உணவு, இலை தொன்னைகள், மந்தார இலை தட்டுக்கள் என்றும், தண்ணீருக்காக அங்கங்கு பானைகளும் குடுவைகளும் வைக்கப்பெற்று, அனைவருக்கும் அவரவர் மாநாட்டுப் பதிவின் போது தரப்பட்ட கைப்பையில் ஒரு சில்வர் டம்ளர் கொடுக்கப்பட்டது. அதனையே அனைவரும் தேனீருக்கும் தண்ணீருக்கும் உபயோகித்தனர். பொது மக்களுக்கு மண் குவளைகள் வைக்கப்பட்டன.
3 நாட்களில் பாதியை மழை வந்து தடுத்தும் மக்கள் இந்த பல்வேறு மாநிலத்தின் உணவையும், இந்த புதுமையான பொ௫த்தமான வடிவத்தையும் எண்ணத்தையும் எல்லோரும் இன்றளவும் மெச்சியபடியே உள்ளனர்.
அடுத்த இதழில்: -
இயற்கை விவசாயிகள் சமூகத்தின் தீர்மானம் - இந்த மா நாட்டில் இயற்றப்பட்டது - பஞ்சாப் அரசின் அறிவிப்புகள் மற்றும் அடுத்த கட்ட தீவிர நடவடிக்கைகள் - இயற்கை விவசாயக்கொள்கை பற்றிய விவாதங்கள் மற்றும் கோரிக்கைகள் - நீர், நிலம், காற்று, மாசு, சுற்றுசூழல், பன்மையம் போன்றவற்றின் பங்கு மற்றும் சீர் படுத்தும் தீர்வுகள்: பல்வேறூ அமர்வுகளிலிருந்து சாராம்சம் - சிறு விவசாயிகளின் முக்கியத்துவம், விவசாயத்தில் பெண்களின் பெரும் பங்கு, மலை பிரதேசத்தில் இயற்கை விவசாயம், பழங்குடியினர்வாழ் பகுதியில் இயற்கைவிவசாயம் போன்ற அமர்வுகளின் விவரங்கள் - விஞ்ஞானிகளின் அமர்விலிருந்து பல துளிகள்