பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தோர் கூடு கட்டிக்கொண்டு
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே - மகாகவி பாரதி
குளியலறை மற்றும் கழிவறைக்கு கூரையின் மட்டம் சிறிது குறைவாக இருந்தால் போதுமல்லவா. வழக்கமாக, சம தள கூரைகள் பத்து அடி உயரத்தில் இருக்கும். இங்குள்ள ஜாக் ஆர்ச் கூரையின் ஆரம்பம் ஒன்பதே கால் அடியில் உள்ளது. அதாவது, ஜாக் ஆர்ச் அமர்ந்திருக்கும் காங்கிரீட் சட்டத்தின் மேல் மட்டம் ஒன்பதே கால் அடி. அந்த சட்டம் அமர்ந்திருக்கும் சுவரின் உயரம் சுமார் எட்டரை அடி. மூன்று அடி அகலமுள்ள ஆர்ச்சின் நடுப்பகுதி ஒன்பது அங்குலம் பக்கவாட்டை விட உயரமாக இருக்கும். எனவே, ஆர்ச்சின் மையப் பகுதியில் கூரையின் உயரம் பத்து அடிக்கு மூன்று அங்குலம் குறைவாக இருக்கும். முன்பே பார்த்தது போல் ஆர்ச் முடிந்த பிறகு, இந்த ஒன்பதே முக்கால் அடிக்கு மேல் தான் செங்கல் ஜல்லி, சுண்ணாம்பு, மணல் கலவையில் கடுக்காய் தண்ணீர் சேர்த்து தளம் அமைத்தது. எனவே, மேல் மட்டத்தில் தளத்தின் உயரம் சுமார் பத்தே கால் அடி. குளியலறை மற்றும் கழிவறைக்கு கூரை சுமார் எட்டு அடி உயரம் இருந்தாலே போதும். அதன் கூரைக்கு இரண்டு தெரிவுகளை பார்த்தோம். அகலம் ஐந்து அடிக்குள் தான் இருக்கும் என்பதால் கண்டிக்கற்களைக் கொண்டே இரண்டு சுவர்களுக்கும் இடையில் ஆர்ச் போல் அமைக்கலாம் என்பது. இரண்டாவது, பொதுவாக அலமாரிகள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கடப்பா கற்களைக் கொண்டு சம கூரை அமைப்பது.
ஐந்து அடி ஆர்ச் அமைத்தால் அதன் மேல், வீட்டின் ஜாக் ஆர்ச் தளத்தின் மழை நீர் அறுவடை தொட்டி அமைப்பது கடினம். அதற்காக அதையும் சமமாக ஆகுமாறு நிரவ வேண்டும். மேலும், ஐந்து அடி ஆர்ச்சின் மையப்பகுதி எப்படியும் ஒரு அடி உயரம் அதிகமாகி விடும். எனவே, மெல்லியதாக (ஒரே ஒரு அங்குலம் தான்) உள்ள கடப்பா கற்களைக் கொண்டு கூரை அமைக்கலாம் என்று முடிவு செய்தோம். கடப்பா கற்களை வைத்து அதன் இடையில் உள்ள சந்துகளுக்கு சாதாரண சிமெண்ட் கலவை வைத்து அடைத்தோம். பின்னர், அதன் மேல் எட்டு மில்லி மீட்டர் கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக அரை அடி தூரத்தில் வைத்து கட்டி அதன் மேல் கோழி வலையை பரப்பி சிமெண்ட், மணல் மற்றும் கருங்கல் சிப்ஸ் பொட்ட கலவையால் நிரப்பினோம். அதன் மேல் சிமெண்ட் கொண்டு தரை போல் வழவழப்பாக ஆக்கினோம். மொத்தமாக, இந்த கூரையின் உயரம் நான்கு அங்குலத்தை தாண்டவில்லை. அதனால் மேல் கூரையை விட சுமார் ஒன்றரை அடி கீழேயே இந்த தரை அமைந்தது. இந்த உயர வித்தியாசத்தை பயன்படுத்தி ஜாக் ஆர்ச் கூரையின் பரப்பின் மேல் விழும் தண்ணீர் எல்லாவற்றையும் வழவழப்பான தரையின் மேல் ஒரு தொட்டி அமைத்து அறுவடை செய்கிறோம். தண்ணீர் தொட்டியின் வாட்டம் மூன்று அங்குலம் வைத்ததால் குளியலறை, கழிவறையின் மேல் ஒன்றேகால் அடி உயரத்திற்கு தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி மூன்று பாகங்களைக் கொண்டது. முதலில், வடிகட்டும் சிறு தொட்டி. இதில், மாடியில் சேரும் மழை நீர் அனைத்தும் வந்து முதலில் விழும். இதில், ஒன்றரை ஜல்லி, முக்கால் ஜல்லி மற்றும் கருங்கல் சிப்ஸ் ஆகியவற்றை ஒன்றன் மீது ஒன்றாக கொட்டி வைத்துள்ளோம். தண்ணீர் இதன் வழியாக சென்று மற்றுமொரு சிறு தொட்டிக்கு, வடிகட்டும் தொட்டியின் அடிவழியாக வரும். அந்த தொட்டியின் மேல் மட்டம் வழியாக மூன்றாவது பெரிய தொட்டிக்கு தண்ணீர் வழிந்து போகுமாறு அமைத்துள்ளோம். இதனால், மண், இலை, குப்பைகள் இல்லாத தண்ணீர் பெரிய தொட்டியில் சேருகிறது. பெரிய தொட்டியின் கொள்ளளவு சுமார் 3500 லிட்டர். நல்ல மழை பெய்தால் சுமார் அரை மணி நேரத்தில் தொட்டி நிறைந்து விடுகிறது. எட்டரை அடி உயரத்திலேயே தண்ணீர் சேமிக்கப்படுவதால் சமையலறை, குளியலறை மற்றும் கழிவறைக்கு குழாய் மூலம் தண்ணீர் புவியீர்ப்பு விசையின் மூலமாகவே கிடைத்து விடும்.
இந்த வீட்டில் குளியலறை, கழிவறை இரண்டும் தனித்தனியாக அமைந்துள்ளது. இணைந்ததல்ல. குளியலறை பற்றி எதுவும் குறிப்பாக சொல்வதற்கில்லை. கழிவறை உலர் குழி (Dry Pit) அமைப்பைக் கொண்டது. மனிதக் கழிவு தண்ணீருடன் கலக்கும் போது தான் மக்காத தன்மையை அடைந்து, எப்போதும் துர் வாடையை ஏற்படுத்துகிறது. திறந்த வெளியில் உள்ள கழிவு சீக்கிரம் மக்கி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. அது மட்டுமல்லாமல், மக்கும் போது மண்ணை வளமாகவும் ஆக்குகிறது. தண்ணீருடன் கலந்து விட்டால் எதற்கும் பயன்படாதது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. எவ்வளவு வருடம் கழித்து நமது தண்ணீர் மலத் தொட்டி (Septic Tank) நிறைந்து சுத்தம் செய்து லாரிகளில் அடைத்து எடுத்துச் சென்றாலும் அது எங்கே கொட்டப்படுகிறதோ அந்த இடத்தையும் மாசுபடுத்துகிறது. ஆனால், தண்ணீரைக் கொட்டி பயன்படுத்தும் கழிவறைக்கே நாம் பழகியுள்ளோம். அது எவ்வளவு மாசுபடுத்தினாலும், தண்ணீரை அதிகம் செலவு செய்தாலும், அதுவே உகந்தது என்று நாம் பொதுவாக கருதுகிறோம். இவை எல்லாவற்றையும் விட அதுவே சுகாதாரமானது என்றும் கருதுகிறோம். எதனால்? கழிவு நமது வீட்டை விட்டு பத்து அடி தொலைவில் உள்ள தொட்டியை அடைந்து விடுவதாலா? அல்லது சென்னை நகரத்தில் உள்ளது போல் நேரே அது கூவத்திற்கோ அல்லது அடையாறுக்கோ சென்று சங்கமமாகி விடுவதாலா?
தண்ணீர் மட்டம் மழை பெய்து சில சமயம் கிணற்றில் தரை மட்டத்திற்கு இரண்டு மூன்று அடி கீழே வரை தண்ணீர் உயர்வதில்லையா? அப்போது நமது தெருவில் உள்ள எல்லா மலத்தொட்டியின் தண்ணீரும் நமது நிலத்தடி நீருடன் அதாவது, கிணற்று தண்ணீருடன் ஓரளவு கலக்க வாய்ப்புள்ளது என்று நாம் எண்ணியதுண்டா? சென்னை போன்ற பெரு நகரங்களில், கழிவறையிலிருந்து, “நம் கழிவு” உடனே வெளியேறிவிட வேண்டும் என்று தண்ணீர் செலவு செய்து அதை வெளியே அனுப்பி விட்டு, அலுவலகம் செல்லும் போது அதே கழிவு நீரின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேல் தான் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம். போதாக் குறைக்கு அந்த பாலங்களின் அருகிலேயே வீடு கட்டிக் கொண்டு வசிப்பவர்களையும் பார்த்து கொண்டு தான் செல்கிறோம். நகர எல்லையைத் தாண்டி உள்ள பெரிய அலுவலகங்களின் நிலை இன்னும் மோசம். கூவத்துடன் இணைப்பு இல்லாததால், தினமும் பல லாரிகள் மூலம் கழிவு நீரை எரி பொருள் உபயோகித்து அப்புறப்படுத்தியாக வேண்டும். வண்ண வண்ணமாக உள்ள பல அடுக்கு மாடி மென்பொருள் அலுவலகங்களின் நிலை இது தான். இது எந்த வகையில் யாருக்கு சுகாதாரம்? நமக்கு அருகில் இருந்தால் சுகாதாரக் கேடு என்று கருதும் பொருளை, நாம் கேடில்லா பொருளாக மாற்ற முயல வேண்டும். அதை வேறொரு இடத்திற்கு இன்னும் கேடான பொருளாக மாற்றி அனுப்புவது எப்படி தீர்வாகும். அந்த வேறொரு இடம் என்பது இந்த உலகில் எங்கிருந்தாலும் அது சேர்ந்து, சேர்ந்து என்றாவது நம் எல்லோரையும் அல்லவா பாதிக்கும்.
இதற்கெல்லாம் உலர் குழி ஒன்றுதான் தீர்வா? இல்லை. சென்ற மாதம் அனந்து தனது கட்டுரையில் சொன்ன மாடித் தோட்டம், பம்மல் இந்திரகுமார் வீட்டில் உள்ளது போல், கழிவை நாமே, ஒரு நுண்ணுயிரைச் சேர்த்து, உடனே மக்குவதாக மாற்றி தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம். இன்னும் பல வழிகளை திடக் கழிவு மேலாண்மை செய்யும் வல்லுனர்கள் தரக் கூடும். நகரத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு கூட முயன்றால் தீர்வைக் காண முடியும். மேலும் திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் சொன்னது போல் நகரங்கள், கிராமங்களுக்கு எருவளித்து நன்றி செலுத்தலாம்.
சரி… நமது வீட்டு கழிவறைக்கு வருவோம்! உலர் குழி என்றதுமே மனதில் பல ஐயங்கள் எழ ஆரம்பிக்கிறது. உலர் குழி கழிவறையை நம்மால் பயன்படுத்த இயலுமா? அதிலிருந்து துர்நாற்றம் வீட்டினுள் வீசாதா? மழைக்காலத்தில் தண்ணீருடன் கலந்து விடாமல் எப்படி குழியை பாதுகாப்பது? கழிவு மக்க எவ்வளவு நாட்களாகும்? மக்கும் போது கழிவை மக்கச் செய்யும் பூச்சிகள் கழிவறையினுள் ஊர்ந்து வராதா? இவை எல்லா கேள்விகளும் எங்கள் மனதிலும் உள்ளது. ஒரு வருடமாவது, எல்லா தட்ப வெப்ப நிலையிலும் எங்கள் உலர் குழியை பயன்படுத்தி பார்த்த பிறகே இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க இயலும்.
உலர் குழியிலும் பல மாதிரிகள் உள்ளன. பொதுவாக ஈகோ சான் (Eco-San) என்ற கழிவறை மாதிரி பிரசித்தம். இதில், திடக் கழிவும், திரவக் கழிவும் தானாக, தனித்தனியாக சேரும். திடக் கழிவு, சக்கரம் உள்ள ஒரு இரும்புத் தொட்டியில் (Wheel Barrow) சேரும். அதன் மேல், சாம்பல் அல்லது தேங்காய் நார் கழிவு ஆகியவற்றை, பயன்படுத்திய பிறகு போட வேண்டும். மேற்கத்திய நாடுகள் போலல்லாமல் நமக்கு தண்ணீர் கொண்டு நம்மை சுத்தம் செய்வதே வழக்கம். அதை தனியாக இன்னொரு இடத்தில் செய்ய வேண்டும். இரும்புத் தொட்டி நிறைந்தவுடன் உருட்டி வேறு இடத்தில் வைத்து விட்டால், சிறிதளவு கூட தண்ணீர் திடக் கழிவுடன் கலக்காததால் அது சீக்கிரம் மக்கி எருவாகிறது. ஆனால், நாங்கள் கட்டியுள்ள கழிவறையில் இரும்புத் தொட்டி இல்லை. வெறும் மண் குழியில் திடக் கழிவு, திரவக் கழிவு எல்லாம் விழும். மண் ஓரளவு தண்ணீரை உறிஞ்சி விடும். மேலும், அதன் மேல் சாம்பல் அல்லது தேங்காய் நார் கழிவு போட்டு விட்டால் இன்னும் தண்ணீரை உறியும். குழி ஓரளவு நிரம்பியவுடன் அந்தக் குழியை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, அதே கழிவறையில் உள்ள இன்னொரு குழியை பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். பழைய குழியில் உள்ள கழிவு மக்கியவுடன், பின்னால் உள்ள கடப்பா கல் மூடியை எடுத்து விட்டு எருவை அள்ளிக் கொள்ளலாம். இந்த மாதிரி கழிவறையை தருமபுரி அருகில் உள்ள எங்களது வீடு வடிவமைப்பாளரின் (Architect) பள்ளியில், பல குழந்தைகள் பயன்படுத்துவதை பார்த்த பிறகே ஓரளவு நம்பிக்கை வந்தது. ஆனால், அந்தப் பகுதி எங்கள் பகுதியை விட கொஞ்சம் உலர்ந்த பகுதி. எங்கள் வீட்டில், இந்த மாதிரி கழிவறை சரியாக வேலை செய்யுமா என்பதை முன் சொன்னதுபோல் ஒரு வருடம் கழிந்த பின் தெரிவிக்கிறேன். மாற்றம் என்பது என்றாவது, எங்காவது ஆரம்பித்துதான் ஆக வேண்டும். முயற்சி செய்யாமல் ஒரு தீர்வு வேலை செய்யாது என்று சொல்வது சரியல்ல. சரியாக வேலை செய்யாவிட்டாலும், வடிவமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த பயன்படுத்தி பார்ப்பதே ஒரே வழி.
இது வரை நாம் பார்த்த எல்லா கட்டுமானப் பொருட்களையும் விட முக்கியமாக ஒரு கட்டுமானப் “பொருள்” தேவை. இந்த மாதிரி வீட்டை அமைக்க எவ்வளவு பொருள்-பணம் செலவானது. சாதாரண வீடு கட்டுவதை விட இது அதிக செலவு பிடிக்குமா? இல்லையா? இவையே நம் எல்லோருக்கும் உள்ள கேள்வியாக இருக்கும். மேலும், எந்தப் பொருட்களுக்கு எவ்வளவு செலவானது என்பதைப் பற்றி வரும் இதழில் காண்போம்.