சென்ற மூன்று இதழ்களில் திரு. சூமாக்கர் அவர்களின் பொருந்திய தொழில்நுட்பம் அல்லது இடைப்பட்ட தொழில்நுட்பம் பற்றிக் கண்டோம். அதற்கு முன் வாணிபத்தின் கைப்பாவையாக எவ்வாறு தொழில்நுட்பம் என்னும் போர்வாள் ஆளுமைக்காகச் செலுத்தப் படுகிறது என்றும் கண்டோம். வாணிபத்தின் லாப வெறி இல்லையேல் தொழில்நுட்பம் எவ்வாறு மிகுந்த நன்மை பயக்கும் என்பதைப் பொருந்திய தொழில்நுட்பத்தைப் பற்றிய எடுத்துக்காட்டுகளில் கண்டோம். எளிமையாய் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் தொழில்நுட்பம், மிகக் குறைந்த முதலீட்டில் பல லட்சம் ஏழைகளுக்கு உதவி செய்ததைப் பார்த்தோம். இக்கட்டுரை எழுதும் வேளையில், மத்திய அரசு வரும் ஆண்டிற்கான நிதியறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8 முதல் 8.5 விழுக்காடு வளரும் என்ற அடிப்படையில் வருவாய் எதிர்பார்த்துச் செலவைத் திட்டமிட்டிருக்கிறார்கள். மத்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்பிரமணியன், “இந்த வளர்ச்சி இயலாவிட்டாலும் அரசின் வருவாய் பெருமளவில் பாதிக்கப் படாது” என்று கருத்துக் கூறியிருக்கிறார். விலைவாசி ஏற்றத்தாலேயே வளர்ச்சி இலக்கின் பாதி எட்டப்பட்டு விடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார் !
இந்த நிதியறிக்கையைப் பற்றிப் பலரும் பல விமர்சனங்கள் செய்கையில், இதன் அடிப்படைத் திசையை யாருமே கேள்வி கேட்கவில்லை. மூன்று அடிப்படை அனுமானங்களின் பேரில் இந்த நிதியறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அவை:
- நமக்குப் பொருளாதார வளர்ச்சி தேவை. வளர்ச்சி இருந்தால்தான் வேலைகள் உருவாகும். வேலைகள் உருவானால் வறுமை ஒழிந்து விடும். (இதில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனால் எப்படிப்பட்ட வேலை என்பதில்தான் யாருக்கும் தெளிவு இல்லை).
- வளர்ச்சிக்கு GDP எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியே குறியீடு , எனவே GDP யை (காகிதக் கணக்குகளைக் காட்டியாவது) வளர்த்த வேண்டும்.
- இதற்கு அந்நிய முதலீடு தேவை. பெரும் இயந்திரத் தொழிற்சாலைகள் தேவை. அவற்றிற்கான கட்டமைப்பு வசதிகள் தேவை.
எனவே முதலீடு செய்பவர்களுக்கு வசதியாக வரித் தள்ளுபடி, நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளார் சட்டங்கள் போன்ற சட்டங்களை மாற்றி அமைத்தல் என்று அரசு மிகவும் கூழைக் கும்பிடு போட்டு முதலீட்டளர்களைப் பரவசப் படுத்த முயன்றிருக்கிறது.
உண்மையில் வளர்ச்சி, வளர்ச்சி என்று இந்தியா மார்தட்டிக் கொள்வதில் பெரும்பங்கு பணவீக்கத்திற்கே சேரும். கடந்த 10 ஆண்டுகளில் 862 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஜி.டி.பி 1876 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது. இது 2.17 மடங்கு வளர்ச்சி. ஆனால் இதே காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கொண்டு அளக்கப்படும் GDP deflator என்னும் குறியீடு 1.76 ஆக வளர்ந்துள்ளது. எனவே விலைவாசி உயர்வைத் தள்ளுபடி செய்தால் நம் நாட்டின் உண்மையான ஜி.டி.பி 1097 பில்லியன் அமெரிக்க டாலர்களே. பத்து வருடங்களில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி 27.27 % மட்டுமே. அதாவது வருடம் 2.71% உண்மையான வளர்ச்சியை நம் பொருளாதார மேதைகள் மிகவும் வியர்த்துச் சாதித்திருக்கிறார்கள்!
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வதானால் ஒரு சிறு கிராமம் தினம் 1000 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது என்று கொள்வோம். அது வருடா வருடம் 8 முதல் 9 விழுக்காடு வளர்கிறது என்றால் என்ன பொருள்? அடுத்த வருடம் 1080 லிட்டர் பால், அதற்கடுத்த வருடம் 1080 * 1.08 = 1166 லிட்டர் என்றல்லவா வளர வேண்டும்? ஆனால் நடப்பது என்ன. முதல் வருடம் 1000 லிட்டர் பால், லிட்டர் 25 ரூபாய் = 25000 ரூபாய் உற்பத்தி. இரண்டாவது வருடம் 1027 லிட்டர் பால் உற்பத்தி, பால் விலை ரூ. 26.30 எனவே 1027 * 26.30 = 27010 ரூபாய் எனவே அக்கிராமத்தின் உற்பத்தி 2010 ரூபாய் அதிகரித்து உள்ளது; எனவே நாம் 8% வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று சொல்வது என்ன மடமை! இந்தக் கைப்புண்ணுக்கு எதற்கு வெளிநாட்டுக் கண்ணாடிகள்?
பொருளாதார வளர்ச்சி இருந்தால் வாழ்க்கைத்தரம் உயரும் என்று மேதைகள் கூறுகிறார்கள். அடிப்படைத் தேவைகளை எளிமையாக நிறைவு செய்வதுதானே வாழ்க்கைத் தரம் உயர்வதன் சான்று? பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஆண் விவசாயக் தொழிலாளரின் ஒரு நாள் ஊதியம் ரூ.60. இன்று அது ரூ.350. சுமார் ஆறு மடங்கு ஏறியிருக்கிறது.( ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோ 2.17 மடங்கே உயர்ந்திருக்கிறது). ஆனால் விவசாயத் தொழிலாளரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா? அடிப்படை உற்பத்தியில் இருப்பவர்களின் ஊதியம் உயர்ந்தால் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விடும். இதனால் தொழிலாளரும் பாதிக்கப் படுவார்; பாமர மக்களும் பாதிக்கப் படுவர். வளர்ச்சி என்பது பொருளாதாரத்திற்கு நல்லது என்றால் வளரும் நாடுகளில் விலைவாசி இறங்க அல்லவா வேண்டும் - ஏன் ஏறிக்கொண்டே போகிறது? எங்கோ இடிக்கிறதல்லவா?
விலைவாசி உயர்வுக்கு மூன்று அடிப்படைக் காரணிகள் உள்ளன:
- இருக்கும் வளங்களை வலுத்தோர் வீணடிப்பதும், அபகரித்துப் பதுக்குவதும் . (இப்பதுக்கல் காலி மனை வாங்கிப் போடுவது, தங்கம் வாங்கிப் பதுக்குவது, தேவைக்கு அதிகமாக நுகர்வது, சேமிப்பது போன்ற நடுத்தர மக்களின் செயல்களில் இருந்து வெளிநாடுகளில் பல கோடிகளில் பதுக்குவது, ஏழைகளைச் சுரண்டுவது, நிலம் அபகரிப்பது போன்ற கொழுத்த செல்வந்தர்களின் செயல்கள் வரை அடங்கும். ஒரு விதத்தில் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதற்கு நாம் எல்லோருமே நேரடிக் காரணிகளே)
- இரண்டாவது நேரடிக் காரணி ஊழல். பொதுப்பணத்தை நேர்மையாகச் செலவழிக்காமல் அதில் 25% வரை சுரண்டும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால்தான் நிதித்திட்டத்தில் துண்டு விழுந்து அரசு மேலும் மேலும் வரிவிதிக்கிறது. உதாரணமாகத் தற்போதைய நிதியறிக்கையில் சேவை வரி 12.36% இருந்து 14% ஆகி விட்டது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை நாடெங்கும் 1.5% உயர்ந்து விடும் (இதுவே 1% முதல் 1.5% “வளர்ச்சியை” உறுதி செய்து விடும்!).
- மூன்றாவது ஓட்டு வங்கி அரசியலும், அரசின் இலவசங்களும். இதனால் உற்பத்திக்கு வேலையாட்களே இல்லாமல் அவர்கள் கூலி மிகவும் உயர்ந்து வருடா வருடம் உணவின் விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டு வருகிறது. இதனால் பிற உற்பத்திகளும் பாதிக்கப் பட்டு எல்லாவற்றின் விலையும் கடுமையான உயர்வைச் சந்தித்து வருகின்றன. 20 வருடங்களுக்கு முன் எளிமையாக இருந்த கிராமத்து வாழ்க்கை, இப்போது போராட்டமாக ஆகி வருகிறது. நகரங்களைப் பற்றிப் பேசவே வேண்டாம்!
உற்றுப்பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகும். நம்நாட்டின் அனைத்து இயற்கை வளங்களும் கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் உள்ளன. ஆனால் கிராமங்களில்தான் ஏழைகள் அதிகமாக உள்ளனர். ஒரு அடிப்படை வளமும் இல்லாத பெரு நகரங்களில் எல்லாச் செல்வந்தர்களும் உள்ளனர். ராட்சத உற்பத்தியும், வாணிபமும் நகரங்களில் நடைபெறுகின்றன. சிறு உற்பத்தியும், தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருட்களும் கிரமங்களில் நடைபெறுகின்றன. குமரப்பா கூறியது போல் அன்று பிரிட்டனுக்குப் புகையிலை, தேயிலை, கரும்பு, அவுரி, பருத்தி, எஃகு போன்ற கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளை இறக்குமதி செய்தது இந்தியா. இன்றோ கிராமங்கள் நகரத் தொழில்களுக்குக் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து விட்டு அடிப்படைத் தேவைகளை இறக்க்குமதி செய்கின்றன. உழவன் கடனில் இருப்பதற்கும் விவசாயம் நலிவதற்கும் இந்த ஒன்றே மிக முக்கிய காரணம்.
எனவே ஒரு நல்ல பொருளாதாரக் கொள்கை என்பது மன்மோகன்சிங், அருண் ஜேட்லி எல்லாம் வாய்வார்த்தையாய்ச் சொல்வதுபோல ஏழைகளை உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். (ஆனால் உண்மையை ஒத்துக் கொள்வதானால், எப்படி அவர்களை உள்ளடக்க விடுவோம்? இது பணக்காரர்களால், பணக்காரர்களைக் கொண்டு பணக்காரகளுக்காக வரையப்படும் கொள்கை. எல்லாம் முடிந்தபின் எஞ்சியதுதான் ஏழைகளுக்கு). இதற்கு உற்பத்தியைக் கிராமங்களை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை வேளாண்மையை மையமாகக் கொண்ட சிறுதொழில்கள் கிராமங்களில் ஆங்காங்கே ஏற்படுத்தப் படவேண்டும்.
கிராமப்புற உற்பத்திக்கும், சிறுதொழில்கள் உற்பத்திக்கும் திட்டமிடுவோர் கூறும் எதிர்ப்பு, அது நெறிப்படுத்தப்படாத தொழில் (unorganized industry) , எனவே மேலாண்மை கடினம் என்பதே. இது ஓரளவு உண்மைதான். கிராமத்தொழில்களில் ஈடுபடுவோர் கணக்கியல், திட்டமிடல், கணினிப் பயன்பாடு போன்றவற்றில் மிகவும் பலவீனமாய் இருக்கிறார்கள். நேரம் தவறாமை என்பதும் மிகவும் அரிதாகவே உள்ளது. எனவே உற்பத்தியை எதிர்பார்த்தபடி திட்டமிடலும், நிர்வாகமும்செய்வது இப்போதுள்ள சூழலில் கடினமே. மேலும் நவீனத் தொழில்நுட்பப் பொறிகளை இயக்குவதிலும், ஆங்கில அறிவிலும் அவர்கள் பின் தங்கியே உள்ளனர். ஆனால் இதற்குத் தீர்வு பெரும் இயந்திரங்களைக் கொண்டு தீரா ஆற்றல் பசியுடன் நகரங்களில் உற்பத்தி செய்வது அல்ல. அது நகரத்தவர் வேளாண்மையையும் பிற தொழில்களையும் இயந்திர மயமாக்கி கிராமத்தவர்க்கு வேலை இல்லாமல் செய்வதற்கும், கிராமத்தவர் கோடிக்கணக்கில் வேலை வாய்ப்புக்காக நகரங்களைத் தேடி வந்து நகரங்கள் வாழ இயலாத அளவிற்குச் செய்து விடுவதற்கும் காரணமாகிறது. இதைச் சூமாக்கர் “இரட்டை நஞ்சூட்டல்” (dual poisoning) என்று தன் நூலில் வர்ணிக்கிறார்.
இதற்கு கிராமப்புறங்களில் தொழில்முனைவோராக நிறைய இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் கணினி, கணக்கெடுத்தல், மேலாண்மைக் கல்வி போன்றவை அளிக்க வேண்டும். முற்றும் கிராமத் தொழிலான இயற்கைக் கொப்பரை உற்பத்தியில் நாங்கள் தமிழிலேயே கணினியைப் பயன்படுத்துகிறோம். 10 வது, 12 வது , டிப்ளமோ படித்த இளைஞர்கள் ஆர்வமுடன் வேலையைக் கற்றுச் செய்கிறார்கள். 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப் பட்ட இத்தொழில் மாதம் 2 லட்சம் வியாபாரம் செய்து 7 பேருக்குக் குறையாமல் வேலையளிக்கிறது. தற்போது ஜி.டி.பி கணக்கில் வேளாண்மையைத் தனியாகவும், உற்பத்தியைத் தனியாகவும் பிரித்துக் கணக்கிடுக்கிறார்கள். உண்மையில் வேளாண் உற்பத்திப் பொருட்களை அண்மைச் சிறுதொழில்களுடன் இணைத்து கிராமிய உற்பத்தி என்று தனியாகக் கணக்கெடுக்க வேண்டும். தொழில்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம் ; ஒருவகை நிந்தனைத் தொழில்கள் - இவை சூழலை அழித்து, இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்து, பெரும் முதலீட்டுடன் மிகச் சிலருக்கே வேளை அளிப்பவை. இன்னொரு வகை பாரதி போற்றிய வந்தனைத் தொழில்கள் : மிகக் குறைந்த முதலீட்டில், அளவான ஆற்றல் பயன்பாட்டுடன், நிறைய உள்ளுர் மக்களுக்கு வேலை அளிப்பவை. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் கிராமிய உற்பத்தி 75 விழுக்காடும், நகரத் தொழில்கள் 25 விழுக்காடும் இருக்க வேண்டும். நமக்கு வளர்ச்சியை விட வளம் பகிர்தல் நேர்மையாய் இருத்தல்தான் மிக இன்றியமையாதது.
(தொடர்ந்து பேசுவோம்…)