விண்முட்டும் எங்கள் புகழ் போச்சே
சென்ற மாத இறுதியில் மத்திய அரசு நிதியறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிதிமிகுந்தவர்களால், நிதி மிகுந்தவர்களுக்காக, நிதி மிகுந்தவர்களைக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இது என்பது தெளிவாகிறது. மோடியின் “இந்தியாவில் செய்யுங்கள்” என்ற கோஷத்தைத் தழுவி அந்நிய முதலீட்டுக்கும், உற்பத்திக்கும் மிகப் பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேல் சபையில் பேசிய பிரதமர் ” என் அரசு பணக்காரகளுக்கு அல்ல, ஏழைகளுக்கே” என்று 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற ரீதியில் ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
அந்நிய முதலீடும், உற்பத்தியும் நம்நாட்டில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி ஏழ்மையைப் போக்கி விடும் என்று காங்கிரஸ் நம்பியது - 2005 முதல் 2010 உள்ளிட்ட ஐந்தாண்டுகளில் 2.77 கோடிக்கும் குறைவான நிகர வேலைகளையே உருவாக்கியது. நிகர வேலை என்பது (புது வேலைகள் - வேலை இழப்போர்). 100 கோடிப் பேருக்கு மேல் கொண்ட நாட்டில் வளர்ச்சியின் உச்சகட்டம் என்ற ஆண்டுகளில், தாராள மயமாக்கலால் இந்தியா ஒளிர்வதாகச் சொல்லப்பட்ட காலத்தில் இது மிகக் குறைவே. இந்த ஐந்தாண்டுகளில் சுய வேலை வாய்ப்பில், சிறு தொழில்களில் இருந்து 2.5 கோடிப்பேர் வேலைகளைத் தேடிப் போய்விட்டனர் என்று தேசிய புள்ளியியல் கணிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு அந்நிய முதலீடு தேவை என்றால், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% க்கும் குறைவான பங்கு வகிக்கும் வேளாண்மை எப்படி 61% மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றது ? 56% பங்கு வகிக்கும் சேவைப் பிரிவோ 26% பேருக்கே வேலை அளிக்கிறது. நம் அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கும் உற்பத்திப் பிரிவோ, 8.5% பேருக்கே வேலை அளிக்கிறது.
உற்பத்திக்கும், அந்நிய முதலீட்டிற்கும், சேவைப் பிரிவிற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்தால் 61% பேரின் வாழ்வாதாரமாக இருக்கும் வேளாண்மை என்னாவது? இந்த நிதியறிக்கையில் இயற்கை வேளாண்மைக்கான ஒதுக்கீடு என்ன? பாரம்பரிய வேளண்மை மற்றும் சிறு பாசனத் திட்டங்கள் இரண்டிற்கும் சேர்த்து 5300 கோடி ஒதுக்கீடு! நாட்டிலுள்ள அனைவரும் ஒரே ஒரு வேளை கடையில் சாப்பிடும் அளவே இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்ய்ப் பட்டுள்ளது. சேவை வரியை உயர்த்தி, இந்தியாவைத் தூய்மையாக்கும் வெட்டிச் செலவிற்குப் பலவாயிரம் கோடி ஒதுக்கீடு.சோறு முக்கியமா அழகு முக்கியமா?
வருவாய் என்று பார்த்தால் அரசின் மிக முக்கிய வருவாயாக நிலக்கரிச் சுரங்கங்களை விற்பதுவும் அவற்றின் மீது விதிக்கும் வரியும் குறிப்பிரப் பட்டுள்ளன. பல லட்சம் ஆண்டுகளாக உருவான கனிமங்களை ஏலம்போட்டு விற்று ஐந்தாண்டுகளில் அதைக் கணக்குக் காட்டுவது என்ன மேதாவித்தனம்? வாரி பெருக்கி வளம் படுத்து செயல் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். வாரி என்றால் வருவாய் வரும் வழி. நல்ல நிதியறிக்கை வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, வளங்களைப் பாதுகாக்க வேண்டும். வளங்களை விற்று வருவாய் என்றால் என்ன தலைகீழ்க் கணக்காக இருக்கிறது.
காங்கிரஸ் அரசின் நிதியறிக்கைக்கும், பா.ஜ.க அரசின் நிதியறிக்கைக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது? ஏழைகளுக்கு இருவரும் என்ன செய்கிறார்கள்? மூன்றில் இரண்டு பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் வேளாண்மை மற்றும் கிராமப்புரத் தொழில்களுக்குக் கடனைத் தவிர என்ன செய்கிறார்கள்? ஏழைகள் என்பதனால் அவர்களுக்குத் தன்மானம் இல்லையா, தாங்களே சொந்தக் காலில் நிற்க விரும்பாதவர்களா? இருப்பதை எல்லா வலுத்தவர்களும் கூறு போட்டுக் கொண்டபின் எஞ்சியதற்குக் கையேந்துவதா கிராமிய வாழ்வு? இலவசங்களையும், கடன்களையும் நம்பிப் பிழைக்க வேண்டிய நிலைமைக்கு ஏன் உழவர்கள் தள்ளப்படுகிறார்கள்? பெரும் மரியாதையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் நடந்த உழவன் இன்று பாரதியின் பாடல் போல் இருக்க வேண்டியதுதானா?
மண் வெட்டிக் கூலி தினல் ஆச்சே - எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே
விண்முட்டும் எங்கள் புகழ் போச்சே - இந்த
மேதினியில் கெட்ட பெயர் ஆச்சே