தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நவீன நாகரீகத்தின் உண்மைப் பரிமாணம் - சம்தாங் ரிம்பொன்சே


தமிழில் - ராம்

( திரு. சம்தாங்க் ரிம்பொன்சே, திபெத்திய பௌத்த துறவி மற்றும் சிந்தனையாளர். இன்று உலக அளவில் தலைசிறந்த காந்திய சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மாற்றுக் கோட்பாடுகளின் ஒரு முக்கிய ஆசானாகவும் திகழ்கிறார். முன்பு திபெத்திய அகதிகள் அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்துவந்த இவர், இப்போது உலகம் முழுவதும், அமைதி, அஹிம்சை, த‌ற்சார்பு, இயற்கை விவசாயம், காந்திய சிந்தனை போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தன் முக்கிய கடமையாகக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரை, சமீபத்தில் ‘சங்கமம்’ என்ற பெயரில், தில்லியில் சில சமூக சிந்தனையாளர்களின் கூட்டத்தை முன்னிருந்து நடத்திய திரு. ரிம்போன்சே ஆற்றிய துவக்க உரையின் சுருக்கம். நேரில் கேட்டு, தமிழில் தொகுத்து எழுதியது ராம்).

நான் ஒரு மிகப் பழைய சமூகத்தில் இருந்து வந்திருக்கின்றேன். இன்றைய நவீன நாகரீகத்தில் (modern civilization) நிகழும் விவாதங்களும், கலந்துரையாடல்களும், பெரும்பாலும் வெறும் செய்திகளின் தோரணமாகவே உள்ளது. இத்தகைய கூட்டங்களில், உணர்வு பூர்வமான பேச்சுக்கள் நிகழ்வதைக் காணமுடிவதில்லை. தர்க்கவாத‌ங்கள் பயன்படுத்தப் படுகின்றன; ஆனால், இவற்றை முன்வைப்பவர்கள், தர்க்கசாத்திரத்தைக் கற்றவர் அல்ல; ஆதாலால், அதுவும் அரைகுறையாகவே உள்ளது.

என் வாழ்வில் 12 வயது வரை, நான் ஒரு சுதந்திர நாட்டின் குடிமகனாக வாழ்ந்தேன். 12 முதல் 20 வயது வரை, எனது நாட்டில், சீன அரசாங்கத்தின் கீழ், ஆனால் எங்களது பாரம்பரிய, தர்மத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றிய ஒரு அரசாங்கத்தின் சூழலில் வாழ்ந்தேன். 1956இல், 20 வயதில், நான் (மற்றும் என்னை சேர்ந்த திபெத்திய சமூகத்தினர்) அகதியாக மாறினேன், அன்று முதல், ஒரு அகதியாகவே வாழ்ந்துவருகிறேன். நாங்கள் இந்தியாவிற்கு அகதிகளாக‌ வந்த, முதல் நாட்களில், எங்களைப் பலரும், “பின்தங்கிய” சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், நவீன நாகரீகம் அறியாத பழமைவாதிகள் என்றும் கூறினர். நாங்கள், நவீன நாகரீகத்தைத் தழுவியிருந்தால் இந்த அவல நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றும் பலர் அறிவுரை கூறினர். எங்களிலேயே பலர், ‘இந்த சாத்திரங்களும், கோட்பாடுகளும் கற்று என்ன பயன்?’ என்று சந்தேகிக்கும் அளவில் இத்தகைய அறிவுரைகளின் தாக்கம் அமைந்தது.

திபெத்து இமயத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நாடு, சுற்றியிருக்கும், இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளுடனும், மற்றும் மங்கோலியாவுடனும் வரலாற்றின் பெரும்பகுதியில் நட்பு பாராட்டி வந்த நாடாகவே இருந்துள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால், சுற்றியுள்ள நாடுகளைவிடப் பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும், எந்த விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு சிறிய - ஆனால் சுதந்திர- நாடாகவே இருந்து வந்துள்ளது. மா-செ-துங்கின் சீனாவில் (சீனாவின் திபெத்தின் ஆக்கிரமிப்பின் பிறகு) இந்த நிலை நீடிக்க வாய்ப்பில்லாமல் ஆனது.

இந்தியாவில் அகதியாக வந்த சில ஆண்டுகளுக்குள் காந்தியை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதே, திபெத்து மொழியில், காந்தியடிகளின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன‌. அரசியலில் அஹிம்சைக் கொள்கை, நவீன நாகரீகத்தை அவர் சாடி எழுதிய எதிர்வினை, நவீன நாகரீக சிந்தனையின் கேடுகளை குறித்த அவர் எழுத்துக்கள், எங்களால் படிக்க முடிந்தது. அவருடைய கோட்பாடுகளில் சில அப்போது புரியத் துவங்கின‌.

நாங்கள் இன்றும், 800 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சமூகக் கோட்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். இது “பின்தங்கிய” ஒரு வாழ்க்கை முறை என்றால், இந்நேரத்திற்கு நாங்கள் முழுமையாக அழிந்து அல்லவா இருக்கவேண்டும்? ஆனால் எங்களைப் போன்ற சமூகங்களின் தொடரும் வாழ்க்கைமுறை, நவீன வாழ்க்கை முறையின் சீறல்களுக்கு எதிரான, மாற்றான ஒரு முறைக்கு சான்றாகவே தோன்றுகிறது.

வரலாற்றைச் சிறிது ஆராய்ந்தோம் என்றால், முதல் உலகப் போர் முதல், ஒவ்வொரு போரும், நவீன நாகரீகத்தின் சிந்தனை தாக்கத்தினாலும், அதன் முக்கிய பரிமாணங்களாக இன்று உலகம் முழுவதும் படர்ந்துள்ள, சந்தைப் பொருளாதாரம், மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை நிலைநிறுத்தவே, நிகழ்ந்துள்ளன‌ என்று அறியலாம். நாங்கள் முன்னரே, ‘ஸ்கூல்’ அறிவு பெற்று, ‘நாகரிக முன்னேற்றம்’ அடைந்திருந்தால், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்திலேயே எங்களையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

தெரிந்தோ, தெரியாமலோ, நவீன நாகரிகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுதல், இன்று உலகளாவிய ஒரு இயக்கமாக மாறிவிட்டது. காந்தியடிகளுக்கு முன்னர், நவீன நாகரிகத்திற்கு எதிர்மறை எழுதியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும், நவீன நாகரிகத்தின் உள்ளேயிருந்து அதன் கூறுகளைக் கொண்டே குறை கூறுவதாக இருந்தது. அல்லது, மதரீதியாக அமைந்தது. காந்தி தான் முதல் முறையாக அத்தகைய எதிர்மறையை, மிகத் துல்லியமாகவும், எளிதாகவும் எழுதினார். “இந்திய சுயராஜ்ஜியம்” புத்தகத்தில் அவர் எழுதியுள்ள நவீன நாகரிகத்தின் எதிர்மறை, இன்றுவரை (இந்த புத்தகம் 1909இல் பதிப்பிக்கப் பட்டது) முக்கியத்துவ‌ம் வாய்ந்ததாக உள்ளது. பிரபல காந்தியவாதிகள் கூட, இந்தப் புத்தகத்தை அவ்வளவு விரும்புவதில்லை. அவர்கள், ‘காந்தி இந்தப் புத்தகத்தை ஒரு கால கட்டத்தில் எழுதினார்’ என்றும், அது இதர காலங்களுக்கு பொருந்தாது என்ற பொருள்பட அதனைச் சித்தரித்துள்ளனர். சில சிந்தனையாளர்கள், ‘இந்த புத்தகம் மிகவும் எளியதாக உள்ளது’ என்கின்ற காரணத்தை காட்டி ஒதுக்குகின்றனர்.

நவீன நாகரீகம், உலகில் அனைத்தையும் அளந்து தெரிந்துகொள்ள பல அளவுகோல்களை ஏற்படுத்தியுள்ளது; ஆனால் அதனால் ஏற்படுத்தப்பட்ட தீர்வுகள் மிகச் சிலவே. நவீன தொழில்நுட்பத்தின் வன்முறை மிக அதிகம்; ஆனால், அந்த வன்முறையை எதிர்த்து குரல் எழுப்புபவர்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவே. அனைவரும், தங்கள் வாழ்க்கையும், தங்கள் சமூகமும் நாகரீகத்தின் வன்முறையால் அழியும் தருவாயை எட்டும் வரை, இந்த நவீனத் தொழில்நுட்பத்தில் வன்முறை இல்லாதது போலவே பாவித்து நடித்து வருவது விந்தையெ!

நாங்கள் திபெத்தில் ஒரு கதை சொல்லுவதுண்டு – ஒரு மனிதனுக்கு ஒரு பூதத்துடன் நட்பு ஏற்பட்டது. அவன், அந்த சக்திவாய்ந்த பூதத்தை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிக்குமாறு வினவினான். அந்த பூதமும், ‘அடுத்த வாரம் பக்கத்து வீட்டுகாரன் இறந்துவிடுவான்’, ‘அடுத்த மாதம் அடுத்த தெருவில் வசிப்பவன் இறந்துவிடுவான்’, என்று தொடர்ந்து தெரிவித்து வந்தது. ஒருநாள், ‘அடுத்த வாரம் நீ இறந்துவிடுவாய்’ என்று தெரிவித்தது. இதை கேட்டு அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தான். ‘நான் எப்படி இறப்பது?’ என்று வினவினான். அந்த பூதமோ, “இத்தனை நாளாக இதைத்தானே நான் உனக்கு உணர்த்திவந்தேன்?” என்று ஆச்சரியப்பட்டது. அடுத்தவர்க்குத் தானே என்கின்ற அலட்சியப் போக்கில் வாழ்ந்தால் நமக்கும் அதேகதிதான்.

இன்று உலகளவில் பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையையும், ஆக்கிரமித்துள்ள இந்த நவீன நாகரீகம், மக்களை அதன் ஒரு பரிமாணமான, உலகமயமாக்க‌ப்பட்ட சந்தையில் தன்னுடன் கைகோர்த்து தங்கள் வாழ்க்கையில் பிணைத்து, பயணம் செய்யுமாறு வற்புறுத்துகிறது. இதனாலேயே, இன்று பெரும்பாலான மக்கள், நவீன நாகரீகத்தின் கீழ்த்தரமான விழைவுகளை நேரடியாகத் தெரிந்தும், தெரியாதது போலவும், இல்லாதது போலவும், அந்த நாகரீகத்தின் பிடியிலேயும், அதன் விழைவான, நவீன தொழில் நுட்பத்தின் பிடியிலேயும் சிக்கித் தவிக்கின்றனர்.

கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பெரிய போரும், நவீன நாகரீகத்தை நிர்மாணிக்கவே மூண்டது. பெரும்பாலான நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்கள் வன்முறையை வளர்க்கும் விதத்திலும், இதர மக்களின்பால் போர் செய்யத் தூண்டும் விதத்திலும் அமைந்துள்ளதை நாம் மறுக்க இயலாது. சில வருடங்களுக்கு ஒருமுறை, ஏதேனும் ஒரு போர் தொடுக்காவிட்டால், இவர்கள் நிறுவியுள்ள அனைத்து ஆயுத உற்பத்தியும் வீணாகிவிடும். அதனாலேயே உலகத்தின் ஏதேனும் ஒரு கோடியில் நவீன ஆயுதங்களை கொண்டு போர் நிகழ்ந்தவண்ணம் உள்ளதை நாம் காண்கிறோம். வியட்னாம் போரை அமெரிக்கா அதன் உள்நாட்டு நிலைமையைக் கருதியே நிறுத்தியது. அதன் காரணம் எப்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் நவீன நாகரீகத்தை யாரும் எதிர்க்கக்கூடாது என்பதே ஆகும். இதர பல போர்களின் கதியும் இதுவே என்பதற்கு வரலாறே சான்று.

தனி நபர் வாழ்க்கையும், தீம்பேறாக (துரதிஷ்டவசமாக), இன்று பெரும்பாலும் ஒரு போக காரணமாகவே அமைந்துள்ளது . நாம் இன்று எதையும் உபயோகிப்பதில்லை, மாறாக, உபபோகிக்கின்றோம் [போகம் - இன்பம் துய்ப்பது; யோகம் - இணைவது]. இதைப் பலரும் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தில் வாழ்வதாக நினைத்து வருவது அவலமே. இதனால் எந்த ஒரு பொருளையும் அதன் மெய்ப்பொருள் அறியும் தன்மையை மனிதன் இழந்துவருவதை நாம் காண்கிறோம். இயற்கைக் கூறுகள் இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை நாம் காண்கிறோம். இன்று குடிக்கும் தண்ணீருக்குக் கப்பம் கட்டும் நிலை, இன்னும் சில காலத்தில் மூச்சுவிடும் காற்றிற்கும் நாம் ஏதேனும் பெருநிறுவனங்களுக்குக் கப்பம் கட்டி ஆகவேண்டிய கட்டாயத்திற்க்குத் தள்ளப்படுவோமோ என்று கேள்வி எழுகின்றது.

உலகளவில் இன்று தர்மக் கோட்பாட்டின் அடிப்படையிலான பாரம்பரியங்களும், மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைச் சொல்லப் பெருமளவில் தவறிவிட்டன. ‘ஏழை’, ‘பணக்காரர்’ என்கின்ற பாகுபாடு நமது சமூகக் கோட்பாடுகளைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பாகுபாட்டின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை, பெரிய பொருளாதாரச் சந்தைகளை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் வலிமையைத் தக்க வைக்கும் பெருநிறுவனங்களின் ஆதிக்கமும் தொடரும் என்றே தோன்றுகிறது. தர்ம பாரம்பரியங்கள் வலுவிழந்து, மக்களுக்கு நன்மை தீமை எடுத்துரைக்க இயலாத நிலை இன்றைய சந்தை பொருளாதார நிலைக்கு சாதகமாக உள்ளதால், அந்நிலை தொடருவதற்கான‌ அனைத்து ஏற்பாடுகளையும் சந்தை சக்திகள் செய்துகொடுக்கும்.

கால் நுற்றாண்டுகளுக்கு முன்னால் பல விஞ்ஞானிகளிடம் விவாதித்தபொழுது, அவர்கள், 'நவீன தொழில்நுட்பம், நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளித்துவிடும்’ என்று நம்பினர். இன்று அத்தகைய நம்பிக்கை அவர்களுக்கே இல்லை என்பது தான் நிதர்சனம். அவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவே உணர முடிகிறது.

ஒரு பெரிய தொழில் அதிபர், அவரைப் போன்றவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இவ்வாறாக கூறினார் – “ஆமாம், எல்லாம் மோசமாகிகொண்டு தான் இருக்கின்றன‌. ஆனால், என்னுடைய காலத்தில் மிக மோசமாக ஆகாதவரை எனக்குக் கவலையில்லை!” இன்று படித்தவர்கள் பெரும்பாலானவர்களின் மத்தியில் இந்த நிலையே நிலவி வருகின்றது.

நமது பாரம்பரியத்தின் உலக நோக்கில், தனிந‌பர், சமூகம், ராஷ்டிரம் (நாடு) மற்றும் அந்தராஷ்டிரம் (உலகம்) என்று எல்லாத் தளங்களிலும் சிந்திக்கவேண்டியது மனிதனின் கடமையாகப் போற்றப்பட்டது. இன்று இந்த நவீன தொழில் நுட்பத்தின் மற்றும் நவீன சித்தாந்தங்களின் விபரீத தாக்கமே இந்த எல்லா தளங்களிலும் பெரிய அச்சுறுத்தலாகத் தெரிகின்றது. நமது பாரம்பரியத்தில், உடலானது சித்தத்தின் ஒரு கருவியாகப் பயன்படுத்தபட்டது. இதனாலேயே, சித்தம் சுத்தமாக (மனத்தூய்மை) வைத்துள்ளதையே நாம் ‘ஆரோக்கியம்’ என்று கொண்டிருந்தோம்.

கொடுமை என்னவென்றால், இதில், ‘நவீனம்’ கொஞ்சமேனும் கிடையாது. முந்தைய சமூகத்தில் இருந்த கூறுகளை மாற்றிப்போட்டு அதையே அவர்கள் நவீனம் என்று நம்மை நம்ப விழைகிறார்கள். இத்தகைய 8 மாறுதல்களை நான் நவீன சித்தாந்தங்களின் தாக்கத்தால் காண்கின்றேன் –

உலகத்தின் அனைத்து ஆதாரங்களையும், அவற்றின் இணைப்புகளுடன் இணைந்து நோக்கும் தன்மை நமது பாரம்பரியத்தில் இருந்த மிகப்பெரிய சித்தாந்தம். அனைத்தையும் பிரித்து, வேறுபடுத்தித், தனிமைப்படுத்திப் பார்த்தல் நவீன நாகரிகத்தின் அடிப்படைக் கோட்பாடு. நாம் மீண்டும், பூரணமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ளுவதே இன்றைய நிலையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org