தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு - பகுதி -2


முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் வரலாற்று அடிப்படையில் சரியானதே! ரா. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், சட்டக் கல்லூரி, வெச்ட்மின்ச்ட்டர் பல்கலைக்கழகம், லண்டன் (R. Seenivasan, PhD candidate. School of Law, University of Westminster, London. r.seenivasan@gmail.com)

தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

சூழலுக்கு அழிவை உண்டாக்கும் பணித்திட்டமா?

மொத்தம் 8,100 ஏக்கர் கானக நிலங்கள் இந்தத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டன. பிரித்தானிய அரசு அந்நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்கவேண்டியிருந்தது. நாம் நினைப்பதைப்போல, இழப்பீடு என்பது வெறுமனே நிலத்துக்காக மட்டுமன்று; அதைக்காட்டிலும், அதில் கிடைக்கும் “நீரின் பொருளாதார மதிப்பின்” அடிப்படையிலும் இழப்பீடு கணக்கிடப்பட்டது.(vii) அத்திட்டத்தின் விளைவாகச் சூழல் பாதிப்பு ஏதும் இருக்குமாயின் நிலம் [அணை] நீரில் மூழ்கும் என்பதுதான் முதன்மையான பாதிப்பு. அத்திட்டத்தினால் மலைகளுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்துப் பார்ப்போம்.

அணையின் முழு மட்டமான 152 அடி உயரத்திற்கு நீர் தேங்குமானால் 6,500 ஏக்கர் கானக நிலங்கள் நீரில் மூழ்கும். அணையின் ஒரு பக்கத்தில் 420 அடி நீளமுள்ள சிறு குன்றொன்றைச் செதுக்கியதன் மூலம் கலிங்கு அமைக்கப்பட்டது. அங்கு யாரும் வசிக்கவில்லை; ஆகவே, யாரும் அப்புறப்படுத்தப்படவில்லை. நீரில் மூழ்கும் பகுதியின் பரப்பு இன்றைய தமிழ்நாடு அல்லது கேரளத்தில் ஒரு வருவாய்-ஊரின் பரப்பளவுக்குச் சமமாக இருக்கக்கூடும். இப்போது வீடு கட்டப் பயன்படுத்தப்படும் கிரானைட் உள்ளிட்ட பலவகைக் கற்களுக்காக முற்றிலும் அழிக்கப்படும் குன்றுகளை ஒப்பிடுகையில் கலிங்குக்காகச் செதுக்கப்பட்ட குன்று மிகச் சிறியது (சிலர் [தவறாக] நம்புவதைப் போல மலை எதுவும் தகர்க்கப்படவில்லை).(viii)

ஐயர் சொல்வதைப்போல [ஆறு] குழாய்களைப் போல வளைக்கப்படவோ உருக்குலைக்கப்படவோ இல்லை. எவ்வகையில் பார்த்தாலும் அது ஒரு வன்முறையற்ற [அமைதித்] திட்டமே. ஏற்கெனவே இருந்த கட்டமைப்பை எவ்விதத்திலும் பாதிக்காமல் ஆற்றின் போக்கு, ஏற்கெனவே இருந்த வாய்க்கால்கள், பழைய ஏரிகள் ஆகியவை அப்படியே பயன்படுத்தப்பட்டன. மிகச் சிக்கனமான [அதாவது, மிகக் குறைந்த ஆற்றல், சூழல் மாசு, செலவு தேவைப்பட்ட] ஒரு திட்டமாக இதனைக் கருதமுடியாதெனில் வேறெந்தத் திட்டத்தை அப்படிக் கருதலாமென்பது புரிந்துகொள்ளக் கடினமானதாக உள்ளது. வன்முறையற்ற இத்திட்டத்தைச் சூழலுக்கு மிக மோசமானதாகக் கூறுவதற்கு எந்தவித அடிப்படையுமில்லை.

இக்கூற்றுக்கு நேர்மாறாக, பெரியாறு அணைத்திட்டம் இயற்கையான ஓர் அணையையும் ஏரியையும் உருவாக்கியதன் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீரைத் தருகிறது. இன்றைக்கு அது இந்தியாவில் புகழ்பெற்ற புலி மற்றும் யானை சரணாலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. விலங்குகள் வாழ்வதற்கும் மக்கள் கண்டுகளிப்பதற்கும் உகந்த இடமாக உள்ளது. அழிவு, சூழல் கேடு குறித்த வாதங்கள் எவற்றுக்கும் எவ்வகைத் தரவு அடிப்படைகளும் இல்லை. சொல்லப்போனால், ஐயர் கூற்றுக்கு மாறாக, இயற்கையான ஆறுகளை உருக்குலைக்காமல், வளைக்காமல், அணை கட்டி முற்றிலும் தேக்கி வைக்காமல் பயன்படுத்தும் பொறியியல் பரிசோதனைக்கு இத்திட்டம் மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.

பெரியாறு அணைத்திட்டத்தின் தொடக்கங்கள்

பெரியாறு அணைத்திட்டம் இயற்கையை வெல்ல நினைக்கும் அறிவியல் பார்வையுள்ள சில ஐரோப்பியப் பழஞ்சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது என்று ஐயரைப் போலப் பலர் நம்பத் தலைப்படுகின்றனர். இன்றைய இந்தியாவின் அந்தப் பகுதியை பிரித்தானியர்கள் கைப்பற்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே பெரியாற்றை வைகையுடன் இணைப்பது குறித்த சிந்தனைகளும் திட்டமிடலும் உருவாயின. அவை வைகையின் கடைக்கோடியில் உள்ள ராமநாதபுர அரசாட்சியின் கீழ் வாழ்ந்த தமிழர்களின் முன்னீடுகளாகும். அப்பகுதி மக்களுடைய முன்னீடு பின்னர் ஆண்ட பிரித்தானியர்களால் தம் நலனுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. நெல்சன் என்பவர் 1868-ஆம் ஆண்டில் எழுதிய மதுரைக் கையேட்டில் சி. ஆர், மார்க்கம் (மார்க்கம் ஒரு புவியியல் ஆய்வாளர். உலகின் பல பகுதிகளில் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இவர் பெரியாறு அணையைக் குறித்தும் ஓர் ஆய்வறிக்கை எழுதியுள்ளார்) என்பவரின் பொறியியில் அறிக்கையை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதியுள்ளார்:

1798-இல் ராமநாதபுர அரசரின் துடிப்புள்ள அமைச்சரான 'முத்து-அகுல-அலே'(ix) என்பவர் தனக்கு முந்தைய அமைச்சர்களின் முயற்சிக்குப் புத்துயிர் ஊட்டத் தலைப்பட்டார்; அவரை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர்; இந்த நோக்கத்துடன் உள்ளூர் அறிவாளர்கள் சிலரை அனுப்பிப் பெரியாற்றைக் கம்பம் பள்ளத்தாக்குக்குத் திசை திருப்புவதற்கென ஒரு கால்வாய் அமைப்பதன் நடைமுறைச் சாத்தியத்தைக் குறித்து ஆராய முனைந்தார். ஓர் அணையைக் கட்டினால் வைகை பாயும் அனைத்து மாவட்டங்களுக்கும் அபரிமிதமான அளவு நீர் கிடைக்கும் என்று அவர்கள் கண்டறிந்து தெரிவித்தார்கள். அத்திட்டம் குறித்த பேச்சுரைகள் தொடர்ந்து நிகழ்ந்தன. அதன் இறுதியில் இரண்டாண்டுகள் கழித்து அப்போதைய மதுரை ஆட்சியர் அந்தத் திட்டம் குறித்த ஆய்வுகளைக் கையில் எடுத்தார். (முந்தைய மேற்கோள்: 5-ஆம் பாகத்தில் பக்கம் 55)

இது பிரித்தானியக் காலனிய அரசின் அதிகாரிகள் தம் ஆட்சிப் பகுதிகளில் வாழும் மக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கென அவ்வரசு வெளியிட்ட ஆவணத்தில் உள்ள பகுதி. இதை எழுதிய நெல்சன் என்பவர் சாதாரண அரசு அதிகாரி அல்லர். அவர் பொதுத்துறை மற்றும் குற்றவியல் நடுவராகப் பணியாற்றியவர்; தமிழ் மொழி, தமிழர் பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றில் புலமை மிக்கவர். பெரும் சட்டவியல் வல்லுநருங்கூட. இந்துச் சட்டத்தைப் பற்றிய அக்காலத்திய புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கியவர். இந்தியாவின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் அச்சட்டத்தைக் குறித்த புரிதல்கள் வெவ்வேறு வகையாக இருந்ததை நன்கு அறிந்துணர்ந்தவர் அவர். விவர நுணுக்கங்களுக்கு முதன்மை தந்தவர். எச்செயலைச் செய்தாலும் அதை முழு கவனத்துடன் செய்துமுடிப்பதில் பெயர்பெற்றவர். சென்னை ராசதானியில் பிற்காலத்தில் பல மாவட்டங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகளுக்கு அவருடைய கையேடு முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டது. எனவே, மாபெரும் யோசனை ஒன்றைத் தொடர்ச்சியான பல போர்களின் விளைவாகத் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களுடைய யோசனையாக அவர் குறிப்பிட்டது தவறுதலான நிகழ்வாக இருந்திருக்கமுடியாது. [தெரிந்தே தான் அவர் அதை மக்களுடைய சிந்தனையாகக் குறிப்பிட்டிருக்கவேண்டும்.]இது மக்களுடைய திட்டமே என்பதற்கு பிரித்தானிய அரசின் வேறு ஆவணங்களிலும் சான்றுகள் உள்ளன.

மக்களின் இந்தச் சிந்தனை எவ்வளவு சிறப்பானது என்பதை உணர்வதற்கு ராமநாதபுரத்தின் நிலவியல் அமைப்பைப் பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். ராமநாதபுர அரசுப் பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடைப் பகுதியில் உள்ளன. பெரியாறு திசை திருப்பப்பட்டால் அதன் நீர் வைகையின் தொடக்கப்பகுதியில் வந்து சேரும். அதன்பின் மதுரை, சிவகங்கை ஆகிய வேறு இரு அரசுகளின் பகுதிகளையும் தாண்டித்தான் ராமநாதபுர அரசின் பகுதிக்கு வந்து சேரும். அப்படியிருந்துங்கூட, ராமநாதபுர அரசரின் அமைச்சர் திருவிதாங்கூர் அரசுடன் பேச்சுரை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரு அரசுப் பகுதிகளுக்கும் இடையில் நெடுந்தொலைவு இருப்பதையும் இரண்டுக்கும் இடையில் பொதுவான எல்லைகள் இல்லையென்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

நீரின் திசையை மாற்றினால் பெரியாற்றின் நீர் இருநூறு கிலோமீட்டர் பயணித்த பின்னர்தான் ராமநாதபுர அரசின் எல்லையைத் தொடும். இது அவ்வரசுக்குத் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர்கள் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டு நிதி முன்னீடுகளையும் உருவாக்கியுள்ளனர். ஆனால், அப்போதைய அரசியல் நிலைமைகள் உகந்தனவாக இன்மையால் அவர்களால் இதைச் செயல்படுத்த இயலவில்லை. ராமநாதபுர அரசரின் அமைச்சர் இத்திட்டம் குறித்த ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்த காலத்திலேயே அவ்வரசரின் ஆட்சி பெருமளவில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது. மைசூர் அரசு, ஐதராபாத் அரசு, பின்னர் பிரித்தானியர் ஆகியோருடன் தொடர்ந்து நடந்த பல போர்கள் காரணமாக ராமநாதபுர அரசு வலுவிழந்துவிட்டிருந்தது. அதற்கு முந்தைய நூறாண்டுகளிலும் பல போர்களைச் சந்தித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. 1803-இலேயே ஆங்கிலேயர்கள் அப்பகுதி முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடிமைப்படுத்தியிருந்தனர். ராமநாதபுர அரசர் இறுதிவரை பிரித்தானியர்களுடன் போரிட்டார். சூழ்ச்சிகளின் உதவியாலேயே பெருமளவு வெற்றி ஈட்டியிருந்தார். இறுதியில் நிலக்கிழாரியப் பெருந்தோட்டம் எனுமளவுக்கு அவருடைய அரசாட்சிப் பகுதி சுருங்கிவிட்டது.

பிரித்தானியர்களை எதிர்த்த அரசர்களில் எஞ்சியவர்கள் மேற்கொண்டு போரிடும் வலுவை இழந்தபின் நிலக்கிழார்களாக மாற்றப்பட்டனர். இவர்கள் மதிப்புமிக்க வருவாய்த் தண்டுநர்களாக மட்டுமே செயல்பட முடிந்தது. அவர்களுக்கு ஏறக்குறைய எவ்வகை அரசியல் அதிகாரமும் இல்லை. எனவே பிரித்தானிய அரசு அணையைக் கட்டத் தொடங்கியபோது ராமநாதபுர அரசு எவ்வகை உரிமையையும் கொண்டாட இயலாத நிலையில் இருந்தது. பிரித்தானியர்கள் தம் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை மாவட்ட உழவர்களுடன் தொடர்ந்து செயல்பட வேண்டியிருந்ததால் அப்பகுதிக்கு நீர்ப்பாசன வசதி செய்து தருவதுதான் காலனிய அரசின் குறிக்கோளாக இருந்தது.

இத்திட்டத்தின் முழுப் பலனும் கிடைப்பதற்கு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகிவிட்டதாகப் பல ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது. இத்திட்டம் குறித்த முதல் அதிகாரப்பூர்வ ஆய்வுகள் 1802-இல் மதுரை ஆட்சியரால் தொடங்கப்பட்டன. இத்திட்டம் இறுதிப்படுத்தப்படுவதற்குள் 1886 வரை பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிதியியல் முன்னீடுகள் உருவாக்கப்பட்டன. 1887-95 காலப்பகுதியில் அணை கட்டப்பட்டது. இறுதிப் பெரும்பணியாக 1899-ஆம் ஆண்டு பேரணையில் நழுவடைப்புச் சட்டங்கள் [மதகுகள், கதவுகள்] பொருத்தப்பட்டன.

ஆற்றிடை நீர்ப் போக்குவரத்து

ஓர் ஆற்றின் படுகையில் இருந்து மற்றோர் ஆற்றுப் படுகைக்கு நீரை மடை மாற்றி அனுப்புவதன் மூலம் ஆயிரக் கணக்கான ஏரிகளை நிரப்புவது பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் கையாளப்படும் உத்தி. ஆறுகள் தம் போக்கினைச் சிறுகச்சிறுக மாற்றுவதற்குப் பழக்கியும் வாய்க்கால்களை அமைத்தும் ஆற்றுப் படுகைகளின் இயற்கை எல்லைகளை உடைப்பதன் மூலம் இவ்வாறு நீர் மடை மாற்றப்படுகிறது. அது வைகைப் பகுதியில் பரந்த அளவில் செய்யப்பட்டுவந்தது. வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் நீரும் ஏரிகளைப் பயன்படுத்தி முழுமையாக அறுவடை செய்யப்பட்டது. இது வரலாறு நெடுகிலும் நிகழ்ந்தது; ஆங்கிலேயர்களிடம் கற்றுக்கொண்டதன்று. ஆற்று நீர் இவ்வாறு மடை மாற்றப்படுவதைப் பார்த்த அருட்தந்தை மார்ட்டின் எனும் ப்ரென்ச் நாட்டு மதப் போதகர் 1713-இல் பின்வரும் சொற்களில் விவரிக்கிறார்:

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட [வீணாகத்] தப்பிக்கவிடாது ஓடைகளிலும் வெள்ளங்களிலும் கிடைக்கும் மழை நீர் முழுவதையும் சேமித்து வைப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் வேறெங்கும் இல்லாத அளவுக்கு மறவர் பகுதியில் செய்யப்பட்டுள்ளன. வைகையாறு என்றழைக்கப்படும் பெரியதோர் ஆறு இப்பகுதியில் பாய்கிறது. மதுரையைக் கடந்தபின் அது மறவர் பகுதியில் நுழைகிறது. வழக்கமாக ஆண்டில் ஒரு மாதம் அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அச்சமயத்தில் அது [பிரான்சின் வடபகுதியில் உள்ள] செய்ன் ஆற்றுடன் ஒப்பிடத்தக்கது. ஆயினும் நம் இந்தியர்களால் ஏரிகளில் இருந்து வெகு தொலைவுக்குத் தோண்டப்பட்டுள்ள வாய்க்கால்கள் இந்த ஆற்று நீரை முற்றிலுமாக வடித்துவிடுகின்றன. ஆகவே ஆறு நிறைய நீர்த் தேக்கங்களை நிரப்பிவிட்டுப் பல கிழமைகள் [வாரங்கள்] கழித்தே தன் கழிமுகத்தை அடைகிறது. (ராகவையங்கார் 1898: 7)

“மறவர்” பகுதி எனக் குறிப்பிடப்படும் பகுதி வைகை, சருகணி, குண்டாறு ஆகிய மூன்று ஆறுகளின் படுகைகளை உள்ளடக்கியது. வைகை ஆற்றிலிருந்து இப்பகுதிக்கு நீர் கொண்டுசெல்லப்பட்டது. இப்போதும் வைகையாறு மற்ற இரு ஆறுகளின் படுகைகளுக்கும் நீர் தருகிறது. குண்டாறு வைகைக்குத் தென்புறமும் சருகணி வடபுறமும் உள்ளன. வைகையில் இருந்து தொடங்கும் கால்வாய்கள் பெரியதும் சிறியதுமான நூற்றுக் கணக்கான ஏரிகளை நிரப்புகின்றன. எடுத்துக்காட்டாக, வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகையில் அதன் உபரி நீரை வடிப்பதன் மூலம் ஆற்றைச் சமநிலைப்படுத்துவதற்கென்றே வடக்கில் உள்ள ராசசிங்கமங்கலம் ஏரி வடிவமைக்கப்பட்டது. இந்த ஏரி வைகை, சருகணி ஆகிய இரண்டு ஆறுகளையும் இணைக்கிறது. இரண்டு ஆறுகளின் வெள்ள நீரையும் உள்வாங்கிக் கொள்ளும் கொள்திறன் கொண்டது. அந்த ஏரி 72 சிறிய ஏரிகளுக்குத் தண்ணீர் தரும்வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதேபோலத் தெற்கேயுள்ள மாடக்குளம் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அது வைகையில் இருந்து நேரடியாக ஒரு கால்வாய் வழியே நீர் பெறுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மடை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் இப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் தேவையாகவே இருந்தது.

இப்பகுதியின் நிலவியல் தன்மையைச் சற்று புரிந்துகொள்வது நல்லது. மேற்கு மலைத்தொடர் தமிழ்நாட்டையும் கேரளத்தையும் பிரிக்கிறது. இத்தொடரில் உள்ள மலைகள் குறுகலாகவும் செங்குத்தாகவும் உள்ளன. பெருமளவு மழை பெறுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மழைப்பொழிவையும் நீர்த் தேவையையும் குறித்துத் தொகுத்த பிரான்சிச் என்பவர் மதுரையில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்குப் போதுமான நீர் வளம் இல்லை என்கிறார் (1906).(x) மலைகளுக்கு அருகில் உள்ள வைகைப் படுகையின் மேற்குப் பகுதிக்கும் கிழக்கிலுள்ள பள்ளத்தாக்குக்கும் இடையில் மழையளவு வேறுபாடுகள் மிக அதிகம். ஆகவே வைகையின் நீர் வரத்தில் பாரிய வேறுபாடுகள் நிகழ்கின்றன. வைகையாற்றை நெல்சன் பின்வருமாறு விவரிக்கிறார்:

வைகை நீர் வரத்து குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு ஒழுங்கற்றது; எந்த அளவு உறுதியுடனும் கணித்துச் சொல்லவியலாதது; அதைக் கணக்கில் வைத்துத் திட்டமிட முடியாது. மதுரையில் மழை பெய்கையில் மலைகளில் மழையே இல்லாதிருக்கக்கூடும்; அதனால் ஆற்றில் புதுப்புனல் இராது. மாறாக, மதுரையில் வறட்சி நிலவுகையில் கம்பம், [மேற்கு மலைத் தொடரில்] வருசநாடு பகுதிகளில் பெருவெள்ளம் நேரிடலாம் (நெல்சன் 1868: 17, பாகம் 1).

மலைகளுக்குக் கிழக்கில் வாழ்ந்த மக்கள் தம் ஏரிகளை நிரப்பக்கூடிய அளவுக்கு மலைக்கு மேற்குப் பகுதியில் நீர் வரத்து இருந்ததை அறிந்திருந்தார்கள். இப்பகுதியில் பெரியாறு அந்த உபரி நீராதரமாக விளங்கிற்று. இது [அற்பப்]பெருமைக்கான மனப்பாங்கன்று; மாறாக, மிக இன்றியமையாத நடைமுறைச் சாத்தியமான சிந்தனையே.(xi) நெல்சன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:(xii)

மதுரைப் பாசனப் பகுதியில் 5,688 ஏரிகள் இருந்தன; அவற்றில் பெரும்பாலானவை 508 ஆற்றுக் கால்வாய்கள், 27 நீரூற்றுக் கால்வாய்கள், மற்றும் 376 அணைக்கட்டுகள் ஆகியன மூலம் தண்ணீரைப் பெற்றன; அவை 1,82,887 ஏக்கர் பரப்புக்குப் பாசன வசதியளித்தன.

அவர் இந்த நூலை எழுதிய காலத்தில் வைகையாறு 250 கிமீ நீளமுடையதாக இருந்தது. அதில் கல்லணைகள் நான்கு மட்டுமே இருந்தன. அவற்றிலும் இரண்டு புழக்கத்தில் இல்லை. பயன்பாட்டில் இருந்த இரண்டில் ஒன்று பேரணை. ஆற்று நீரைப் போதுமான அளவு உயரத்திற்குத் தேக்குவதன் மூலம் புவியீர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்திக் குறிப்பிட்டதொரு கால்வாயில் நீரைச் செலுத்துவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. வடகரை என்றழைக்கப்பட்ட அந்தக் கால்வாய் ஆற்றின் வட கரையில் உள்ளது. சில குளங்களை நிரப்பிய பின்னர் இந்தக் கால்வாய் மீண்டும் ஆற்றில் இணைகிறது. தென்கரை எனப்பட்ட இரண்டாவது அணைக்கட்டு வைகைக்குத் தென்புறமுள்ள குண்டாறு வடிநிலப் பகுதியில் உள்ள குளங்களுக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்காகக் கட்டப்பட்டது. பிற கால்வாய்கள் அனைத்தும் பருவகாலங்களில் மட்டும் நீர் கொண்டுசெல்லும் தற்காலிகப் பயனுள்ளவை. 376 அணைக்கட்டுகளும் சிற்றோடைகள், சிற்றாறுகள் ஆகியவற்றில் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. அவற்றின் நீரைக் குளம் குட்டைகளுக்குத் திசை திருப்புவதற்கு அவை பயன்பட்டன. மேற்கண்ட 5,688 ஏரிகள் வைகை, குண்டாறு, சருகணி ஆற்றுப் படுகைகளில் இருந்தன. இருப்பினும் வைகையாறே அவற்றுக்கு முதன்மையான நீரூற்றாக இருந்தது. இதைக் குறித்து நெல்சன் இவ்வாறு எழுதுகிறார்:

மாவட்டத்தின் பாசனம் வைகையாற்றில் வரும் நீரையே பெருமளவுக்குச் சார்ந்திருந்தது. தண்ணீர் எங்கு காணப்பட்டாலும் அது அநேகமாகச் செயற்கையாகச் சேமித்துவைக்கப்பட்டதாகவே இருக்கும்; மேற்கு மலைத்தொடரில் உள்ள பழனி மலைகளில் இருந்து வங்காள விரிகுடாக் கடற்கரை வரை ஒருவர் எங்கு சென்றாலும் இயற்கையான நீர்த் தேக்கம் ஒன்றைக் கூட, மிகச் சிறிய குளம் உட்படக் காண முடியாது (1868: 20, பாகம் 1).

இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்துமே மிகக் குறைவானதும் எப்போது கிடைக்கும் என்று கணிக்கமுடியாததுமான மழையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக மனிதரால் உருவாக்கப்பட்டவை. சிற்றோடைகள், சிற்றாறுகள் ஆகியவற்றுடன் அவற்றை இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டன.(xiii) தம் ஏரிகளை திடமான நீராதாரங்களுடன் இணைப்பது குறித்த புரிதல்தான் பெரியாறு அணைத்திட்டம் குறித்த ராமநாதபுர அரசின் கருத்துப்படிவத்திற்கு அடிப்படையாக இருந்திருக்கும் என்று நினைப்பதற்கு அனைத்துக் காரணங்களும் உள்ளன. மொத்தத்தில், பெரியாறு பாயும் நிலம் என்றழைக்கப்பட்ட பண்டைத் தமிழ்ப் பேரரசான சேர நாட்டில்தான் பெரியாறு பாய்ந்தது.(xiv)

பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே வைகை நீர் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டதால் மிகக் குறைவான அளவு உபரி நீரே கடலைச் சென்றடைந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் வைகை குறித்த வர்ணனையைப் பொறுத்தவரை இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவைக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவைக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் வைகையில் நேர்ந்த பெருவெள்ளங்களைப் பாடுகிறது. அந்த ஆற்றை அடக்குவதற்கு மக்கள் செய்த முயற்சிகள், ஆற்று நீரைக் கொண்டு ஏரிகளை நிரப்புதல், ஆற்றங்கரைகளையும் ஏரிகளையும் வெள்ளம் உடைப்பதில் இருந்து தடுத்துக்காத்தல் ஆகியன இந்த இசைப் பாக்களில் அதிகம் காணப்படும் காட்சிகளாக உள்ளன.

பன்னிரண்டாம் நூற்றாண்டை எட்டும்போது வைகையாறு முழுவதுமாக அறுவடை செய்யப்பட்டுக் குறைந்தளவு நீரே கடலை அடைந்தது. வைகையின் இறுதிப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்த அறிக்கை இவ்வாறு பதிவு செய்துள்ளது: “பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே (அல்லது அதற்கும் முன்னராகவே) வைகை கடலில் கலப்பது நின்றுவிட்டது” (ச்ரீதர் 2005: 2). நீரின்றி வறண்ட ஆறு தமிழ்ப் பாவலர்களின் எள்ளலுக்கும் ஆட்பட்டது. போட்டியரசான சோழப் பேரரசின் பாவலர்கள் வைகையைக் கடலெனுந் தன் காதலனைக் காண விரும்பாத “தொத்தல் பெண்” என்று கிண்டல் செய்தனர்.

ஏரிகளைக் கட்டமைப்பது குறித்துத் தமிழிலக்கியத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளது. ஆனால், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஏரி பழுது பார்த்தல், வாய்க்கால்களின் நீளங்களை அதிகரித்தல், புதுக் கலிங்குகளையும் மதகுகளையும் கட்டுதல் ஆகியன பற்றிய குறிப்புகளே பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன என்பது வியப்பளிக்கிறது. புது ஏரிகள் கட்டப்பட்டமை குறித்து அதிகக் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. வைகையில் நீர் வரத்து இல்லாமை குறித்த எள்ளல்கள் பரவலாகத் தென்படுகின்றன. இப்போது அதனுடன் ஒப்பிடத்தக்க வேறெந்த ஆற்றிற்கும் இல்லாதவகையில் வைகையாற்றுக்குக் கழிமுகம் என்பது சொல்லத்தக்க அளவில் இல்லை; அது கடலைச் சென்றடைவதுமில்லை; மாறாக, ராமநாதபுரம் பெரிய ஏரியில் முடிந்துவிடுகிறது.

ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒன்பது பஞ்சங்கள் மதுரைப் பகுதியைத் தாக்கின. பஞ்சத் தடுப்புத் திட்டங்களாகப் பஞ்ச ஆணையம், பாசன ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்களின் கவனத்தை அவை ஈர்த்தன. எனவே மதுரைப் பகுதியின் நீர்த் தேவையை ஈடு கட்டுவதற்குப் பெரியாறு அணைத்திட்டம் இன்றியமையாததாகக் கருதப்பட்டது.

முடிவுரை
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் பெரியாறு அணைத்திட்டம் வன்முறையற்றது. ஆறுகள், அணைக்கட்டுகள், இயற்கையாக அமைந்த கால்வாய்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் அது அமைந்தது. இத்தகைய வேறு பல திட்டங்களைப் போலன்றி, பெரியாறு அணை திட்டமிடப்ட்டதைவிட நான்கு மடங்கு அதிகப் பாசனப் பகுதியைக் கொண்டுள்ளது.

இயற்கையை வெல்லும் மனப்பாங்குக்கு மாறாக அப்பகுதியின் இயற்கை அமைப்பு குறித்த வரலாற்றறிவும் பொறியியல் மற்றும் வேளாண் செயல்பாடுகளுமே பிரித்தானியப் பொறியியலாளர்கள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருந்தன என்பதை இது காட்டுகிறது. வேறோர் ஆற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதைவிட வேறு வழியே இல்லை என்பதை பிரித்தானியர்கள் புரிந்திருந்தார்கள் என்பதற்குக் காலனிய ஆவணங்கள் பலவற்றில் சான்றுகள் உள்ளன. அதனால்தான் அப்பகுதி மக்களின் சிந்தனைப்படி பெரியாற்றின் குறுக்கே அணைகட்டும் திட்டத்தில் இறங்கினார்கள். திட்டமிடுதல் முதற்கொண்டே அனைத்துச் சூழல் பாதிப்புகளைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தது; எனவே அப்பகுதியின் சூழலுக்கு எவ்வகைத் தீங்கும் இல்லாது அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆய்வுக் குறிப்புகள்

(Kartik please make the following footnotes in a slightly smaller font)

(vii)நிதி ஒதுக்கீடு தொடர்பாகப் பல காலம் நடந்த பேச்சுரைகளின் இந்தக் கூறு குறித்து மெக்கென்சி இவ்வாறு சுருக்கமாக எழுதுகிறார்: “திருவாங்கூருக்கு [இந்த உபரி] நீர் பயன்பட்டதில்லை, இனிமேலும் பயன்படப்போவதில்லை; அப்பகுதி நிலங்கள் மனித நடமாட்டமற்ற காடுகள்; மர வணிகத்திற்குங்கூட பெரியளவில் பயன்படா; அது அமைந்துள்ள இடத்தின் சூழமைவு காரணமாகத் திருவாங்கூர் அரசு அதன் பயன்களைப் பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால், அத்திட்டத்தினால் பிரித்தானிய அரசுக்குக் கிடைக்கும் பயனைப் பொறுத்து அதன் மதிப்பு கணக்கிடப்படவேண்டும் என்று திருவாங்கூர் அரசு கூறுகிறது. ஐம்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிட்டால் ஆண்டுதோறும் ஏழு விழுக்காடு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் மதிப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்” (மெக்கென்சி 1899: 33). அதே அடிப்படையில் வேளாண்மை தவிர்த்து மின்சாரம், சுற்றுலா, உள்ளிட்ட வேறு அனைத்து வழிகளில் துணை ஒப்பந்தங்களின் மூலம் இத்திட்டத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுவதும் கேரளத்துக்குத் தரப்பட்டன.

(viii)அதே பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள நிலங்களில் மலைத்தோட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தச் செயல்பாடு இந்திய விடுதலைக்குப் பின்னரும் தொடர்ந்தது. தேயிலை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்காக கானக நிலங்கள் தொடர்ந்து தாரைவார்க்கப்பட்டன. எ.கா. இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் பெரியாறு அணைக்கருகில் முப்பதாயிரம் எக்ட்டேர் நிலங்கள் தேயிலைச் சாகுபடிக்கு உட்படுத்தப்பட்டன. பெரியாறு அணைத்தேக்கத்தைக் காட்டிலும் தேயிலைத் தோட்டங்கள் சூழலுக்கு அதிகம் கேடு விளைவிப்பதாக நம்பப்படுகிறது.

(ix)முத்து இருளப்பப் பிள்ளை என்ற தமிழ்ப் பெயரின் திரிபே இந்தப் பெயர். ராமநாதபுரம் பகுதிக்குக் கூடுதல் நீர்ப் பாசன வசதி செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் இன்றும் அப்பகுதி மக்களால் நினைவுகூரப்படுகிறார்.

(x)“ஆண்டில் சராசரியாக 53 நாள்களில் மழை உள்ளது; ஆக, மழை பெய்யும் நாளொன்றுக்குச் சராசரி மழைப் பொழிவு 0.64 அங்குலம்; இது ஓரளவு நல்ல மழை தான்; இருப்பினும் இம்மாவட்டத்திலுள்ள செம்மண் நிலங்களில் நீர் மிக விரைவில் உட்சென்றுவிடுவதால் ஏரிகளை நிரப்புவதற்கு இம்மழை போதுமானதன்று” என்கிறார் பிரான்சிச் (1906: 161).

(xi)மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை எளிய முறையில் கிழக்கு திசைக்குத் திருப்பும் நோக்கில் பெரியாறு அணைத் திட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்களின் நீண்ட பட்டியல் யாரையும் வியப்புக்குள் ஆழ்த்தாது. தமிழ்நாடு, கேரளம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும் வரைபடத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே மேற்கு மலைத்தொடரில் உருவாகித் தமிழ்நாட்டில் பாயும் ஒவ்வோர் ஆறுக்கும் தொடர்புடைய மற்றோர் ஆறு மலையின் மேற்குப் பகுதியில் பாய்வது தெரியவரும்.

(xii)வைகைப் பாசனப் பகுதிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்று வகைப்பட்ட அரசியல், வருவாய் அமைப்புகள் நிலவின. மேற்பகுதிகளில் பெரும்பாலும் ரயத்துவாரி [அரசு நேரடியாக நில வரி தண்டம் செய்தல்] முறையும் மீதி இரண்டு பகுதிகளில் [பெருநிலக்கிழார்கள் வரி தண்டும் உரிமையுடைய] சமீந்தாரிக் குடியேற்றங்களும் இருந்தன.

(xiii)தண்ணீர் வழங்கல் ஏற்பாடுகளுக்கென தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதை அரசியற்கலை என்று குறிக்காமல் “நீரின் ஆட்சி” என்றே குறிப்பிட்டார் பிரித்தானிய மாந்தவியல் ஆய்வறிஞர் டேவிட் மாச் (2003).

(xiv) “பேரியாற்றுச் சீருடை வியன்புலம்” என்றே பதிற்றுப்பத்து எனும் சங்க இலக்கியம் அதைக் குறிப்பிடுகிறது (சாரங்கபாணி 1984: 157).

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org