இத்தாலியில் வென்ற இயற்கை வேளாண்மை – வரிசே லிகுரே, இத்தாலி
முன்னுரை: விவசாயம், அதிலும் தற்சார்பான இயற்கை விவசாயம், ஒரு மிக வெற்றிகரமான தொழில் என்பதும், அதனால் மட்டுமே உலகில் உள்ள மக்களுக்குக்கு எல்லாம் நீடித்த, நிலைத்தன்மை உள்ள வேலை வாய்ப்பளிக்க முடியும் என்பதும், நம்மிடம் இருக்கும் நில,நீர் வளங்களைப் பொறுப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் நிர்வாகம் செய்தால், உழவனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, உலகத்துக்கே உணவளிக்கலாம் என்பதும் தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகள். இன்று இக்கருத்தை அனைவரும் பகற்கனவு என்று ஒதுக்கி, மேம்படுத்துதல் என்னும் நவீன மாயமானைத் துரத்தி நகரங்களிற் சென்று நெஞ்சு புண் ஆகின்றனர். ஆனால் நிலத்தையும், இயற்கை வேளாண்மையையும், கிராமத் தற்சார்பையும் முயற்சித்து வென்ற ஒரு இத்தாலியின் கிராமத்தையும் அதன் மேயரையும் இவ்விதழில் அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.மன்மோகன் சிங், அலுவாலியா, சிதம்பரம், சரத் பவார், நரேந்திர மோடி, வீரப்ப மொய்லி எல்லோரும் அவசியம் சென்று பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஊர் வரிசே லிகுரே! ]
இத்தாலி நாட்டின் வரிசே லிகுரே என்ற நகருக்கு ஒரு முறை பயணம் செய்தால் அங்கு வெளிர் நிறத்தில் வரிசையாக கட்டப் பட்ட வீடுகளும், சுவைமிக்க இயற்கை முறையில் செய்த மோர்சினி காளான்களும், செஸ்ட்நட் என்ற முந்திரி போன்ற கொட்டைகளும் பரிமாறும் உணவகங்களின் வரிசையும் நிறைந்திருப்பதைக் காண முடியும். பரபரப்பான சந்தையில் சற்று நின்று கவனிப்போமேயானால், இத்தாலி முழுவதுமிலிருந்து மக்கள் இங்கு இயற்கையாக விளைவிக்க பட்ட இறைச்சி, பாலாடைக்கட்டி தேன் ஆகியவை வாங்க வந்திருப்பதை உணர முடியும். வட மேற்கு இத்தாலியில் உள்ள லிகுரியா என்னும் பிராந்தியத்தில் வேலை வாய்ப்பற்ற, எந்த தொழிலும் இல்லாத, சொத்துகள் மக்கிப் போகின்ற அடிப்படை வசதிகளற்று இருந்த ஒரு ஊரில் இருபதே வருடங்களில் இந்த மாற்றம் வந்திருக்கிறது என்று சொன்னால், நம்ப சற்றுக் கடினம் தான்!
லா ஸ்பீசியா என்ற மாகாணத்தில், வாரா பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த வரிசே லிகுரே என்னும் மிகச்சிறிய ஊரின் மக்கள் தொகை 1980 களின் இறுதியில் வெறும் 2250 ஆகும்(6000 த்திலிருந்து 2250 ஆக குறைந்தது). ஆனால் மரிசியோ கரான்ஸா என்கிற மனிதர், இந்த நகரம் அழிந்து விடாது என்ற நம்பிக்கையோடு இருந்தார். அவர் இந்த ஊரின் மேயராவார். வரிசே லிகுரேயின் பின்னடைவுகள் எனக் கருதப்பட்ட, தனிமையான நிலப்பகுதி, நவீன தொழிற்சாலைகள் இல்லாமை, பழமையான விவசாய முறைகள் ஆகியவற்றையே இந்நகரின் இன்றைய வெற்றிக்கான காரணமாக மாற்றிக்காட்டினார் அந்த மேயர். மேற்கூறிய பின்னடைவுகளால் இந்த ஊருக்குக் கிடைத்தது, இரு மிகப்பெரிய வரங்கள்: நச்சுப் படாத நிலம், அதி சுத்தமான காற்று. இதுபோதாதா, மறுசுழற்சி செய்த ஆற்றலாலும், இயற்கை விவசாயத்தாலும் சுற்றுலா பயணிகளை இந்த நகருக்கு இழுக்க? இந்த நகரை அழிவிலிருந்து காக்க நாம் செய்யவேண்டியது, சுற்றுச்சூழலைக் காப்பதும், விவசாயத்தை வளப்படுத்துவதும் தான் என நாங்கள் புரிந்து கொண்டோம் என்று, அடன்குரோனோஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் கரான்ஸா.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், 1990 களின் ஆரம்பத்திலேயே, அதாவது புவி வெப்பமடைதல், ஒழுங்கற்ற பருவநிலை மாற்றம் என பரவலாக அனைவரும் பேசும் காலத்திற்கு முன்பே இதை அவர் அமுல் படுத்தியது தான். அதனால் அவர் தங்கச் சுரங்கத்தைக் கண்டடைந்தார் என்றே சொல்லலாம்.
இன்று வரிசே லிகுரேவின் வளர்ச்சி நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. நான்கு காற்றாலைகள் மூலம் எட்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இது இந்த நகரம் பயன்படுத்தும் மொத்த மினசாரத்தை விட மூன்று மடங்காகும். இந்நகரிலுள்ள சமுதாயக் கூடமும், பள்ளிக் கூடமும் தங்கள் கூரையின் மேல் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. இவைகளால் முறையே 98 மற்றும் 62 சதவிகிதம் உற்பத்தி நடக்கிறது. 4 கி.வா பி.வி. அமைப்பு மூலம் இங்கு கழிவு நீர் சுழற்சி செய்யப்பட்டு நீர் மேலாண்மை சிறப்பாக உள்ளது. நகரத்தின் நீச்சல் குளத்திலும் நீரை சூடாக்க சூரிய மின்னழுத்த பலகங்களே பயன்படுகின்றன. 8 கிலோவாட் சக்தி கொண்ட நீர் மின்னியலுக்குரிய அமைப்புமுள்ளது. இதெல்லாம் வெறும் இருபது வருடத்தில் சாத்தியமானது.
இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட, மறுசுழற்சி செய்யப் பட்ட மின்சாரம் லா ஸ்பீசா மாகாணத்திலுள்ள ACAM என்ற மின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்தே நகர் முழுக்கப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் அது பகிர்ந்தளித்தலில் உள்ள செலவை மட்டுப் படுத்தியதோடல்லாமல், உபரி மின்சாரம் தயாரித்து அந்நிறுவனத்திற்கே வழங்குகிறது. இதம் மூலம் இந்த ஊருக்கு வருடம் 30000 அமேரிக்க டாலர்கள் (18 லட்சம் ரூபாய்) வருவாய் கிடைக்கிறது . அது மட்டுமல்லாமல், ஊரின் நிலதள மேலாண்மை, குப்பை மறுசுழற்சி/அகற்றுதல் ஆகியவற்றையும் இந்நிறுவனமே செய்து தருகின்றது.
பொது நிர்வாகம் பணமளித்தால் அங்குள்ள மக்கள் தங்கள் பழைய கல் வீடுகளை மாற்றி அமைக்க முன் வருவார்களா எனக் கேட்டார் கரான்ஸா. அங்கு இப்போதிருக்கும் அந்த அழகிய காற்றாலைகள் முன் அவ்வீடுகள் மாற்றப் படாமலிருந்திருந்தால் அந்நகரின் அழகில் எதோ ஒன்று குறைந்திருக்கும். முதலில் தயங்கிய மக்கள் பின்னர்த் தங்கள் ஆதரவைக் கரான்ஸாவுக்கு அளித்தனர். பகுதி பணம் ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்தாலும், மிகுதியான பணம் மக்களிடத்திலிருந்தே வந்ததாக கரான்ஸா அங்கு வந்த சுற்றுலா பத்திரிக்கையாளரான ஜியோவனா டன்மாலிடம் கூறினார். ”அது ஒரு மன இயல்பு” என்றும் , ஒருவர் வீட்டிற்கு சென்று அது நன்கு பராமரிக்கப் பட்டு அழகுற இருப்பதைப் பார்த்தவுடன் தன் வீடும் அவ்வாறு இருக்க வேண்டும் என மக்கள் விரும்ப ஆரம்பித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இயற்கை விவசாயம் குறித்தும், ரசாயன உரங்களின் பாதிப்பைக் குறித்தும் மிக அதிகமாக வகுப்புகள் விவசாயிகளுக்கு அளிக்கப் பட்டது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்கள் வாங்கும் வசதியற்று இருந்ததால், பாரம்பரிய விவசாயத்தையே செய்து வந்தனர். ஆனால் அவர்கள் இயற்கை விவசாயிகள் என்று சான்று பெறவில்லை. கரான்ஸா இந்த சான்றிதழ் மூலமும், இயற்கை விவசாயம் மூலமும் தயாரிக்கப் படும் விளைபொருட்கள் அதிக விலைக்கு விற்கும் சாத்தியங்களை விளக்கி, ஐரோப்பிய ஐக்கியம் மூலம் கிடைக்கும் உதவித் தொகயையும் பெற்றுத் தந்தார். இப்போது அங்குள்ள 108 இயற்கை விவசாய மையங்கள் அங்குள்ள 98 விழுக்காடு இறைச்சி, பால் உற்பத்தியை செய்கின்றன. வாரா பள்ளத்தாக்கு இப்போது இயற்கை பள்ளத்தாக்கு என அறியப்பட்டு, ஐ.எஸ்.ஒ சான்றிதழ் 14001 பெற்று சுற்றுச்சூழல் மேலாண்மையில் சர்வதேச திறனளவாக உள்ளது
1996 ம் ஆண்டு தொடங்கப்பட்ட CEA என்னும் சூழல் கல்வி மையம் ஒரு முக்கியமான திட்டமாகும். இது அந்தப் பகுதிக் குழந்தைகளுக்கு, இயற்கை விவசாயம் மற்றும் மறுசுழற்சி ஆற்றலின் தேவைகளையும், அதன் மூலம் ஏற்படும் நிலைத்தன்மையின் உத்திரவாதத்தையும் சொல்லித் தருகின்றார்கள். அக்குழந்தைகளைக் காற்றாலைகளுக்கும், சூரிய மின்னொளி மையங்களுக்கும், இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கும், தேனி வளர்ப்போர் அமைப்புகளுக்கும் கூட்டிச் சென்று அனைத்தைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் அளிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இங்கு சிறிய காற்றாலைகள், சூரிய மின்னொளிப் பலகைகள், மற்றும் சூரிய ஓளியிலிருந்து பெறப்படும் ஆற்றல் குறித்த வகுப்புகள் நடை பெறுகின்றது. இளைஞர்களுக்கு ஆற்றல் நுகர்வு பற்றியும், காலநிலை மாற்றங்கள் பற்றியும் வகுப்புகள் கொடுக்கப் படுகின்றது.
சுற்றுலா, சூழல் மற்றும் விருந்தோம்பலுக்காக, டூரிங் க்ளப் இட்டாலியானோ என்ற நிறுவனம் அளிக்கும் ஆரஞ்சு நிறக் கொடியை வென்றுள்ளது வரிசே லிகுரே. அது மட்டுமல்லாது, இத்தாலியின் சிறந்த சிறிய ஊர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இப்போது அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1990 களில் இருந்ததைவிட 500 விழுக்காடு உயர்ந்து அதனால் ஒரு ஆண்டின் வரி வருமானம் மட்டும் 514000 அமேரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது. இதனால் 140 புதிய வேலைகளும் நிலையான மக்கள் தொகையும் அங்கே உருவாகியுள்ளது.
கரான்ஸா தன்னிறைவடைந்த, தன் நகரைப் பற்றி பெருமை கொள்ளும் நபராக இப்போது உள்ளார். ”வருடத்தில் ஆறு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அப்போது வரிசே லிகுரேவில் உள்ள பல்வேறு இயற்கை விவசாயிகள் இயற்கையான முறையில் உருவாக்கப் பட்ட பழங்கள், காய்கறிகள், இறைச்சி பால் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து பயனடைகிறார்கள். எப்போதும் எவற்றையெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகிறோம். இப்போது 25 விழுக்காடு மறுசுழற்சி நடை பெறுகிறது. ஆட்சியில் உள்ளவர்களின் விருப்பும், தெளிவும் இருந்ததால் இந்த ஊர் அழியாமல் காக்கப் பட்டது”, என கரான்ஸா கூறினார். அழிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல் அந்நகரை, சுத்தமான ஆற்றலுடைய, நிலையான வேளாண்மை உடைய ஒரு சுவர்க்கமாக மாற்றியுள்ளார்.
(நன்றி:
http://blog.rmi.org/blog_2014_01_06_high_renewables_tomorrow_today_varese_ligure)