செம்பருந்து
இம்மாதம் நாம் காணவிருக்கும் பறவை செம்பருந்து. கருடன், கிருஷ்ண பருந்து, Brahminy Kite, Haliastur Indus என்ற பெயர்களை உடைய இவ்வழகிய பறவை பல இந்துக்களுக்குத் தெய்வத் தன்மை வாய்ந்தது. புராணங்களிலும் , சங்க இலக்கியங்களிலும் கருடனைப் பற்றி நிறையப் பாடல்கள் உள்ளன.
காணுமிடம்:
இவை இந்தியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இதைக் காணலாம். சதுப்பு நிலங்களிலும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளிலும் இவற்றை அதிகம் காணலாம்.
தோற்றம்:
பார்ப்பதற்குக் கழுகைப் போலவே இருக்கும். தலையும் கழுத்தும் வெள்ளை நிறத்திலும், உடம்பும் இறகுகளின் பின்புறமும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் பகுதி அரைவட்டமாய் பனைவிசிறியைப் போல் இருக்கும் (கழுகுகளுக்கு வால் V வடிவத்தில் இருக்கும் - இதனைக் கொண்டு உயரப் பறப்பவைகளை இனங் கண்டு கொள்ளலாம்). மூக்கு கூர்மையாகவும், வாள்போல் வளைந்தும், வெள்ளை நிறத்தில் இருக்கும், கண்கள் சிகப்பாகவும் இருக்கும். கால் நகங்கள் கத்திமுனை போல் மிகக் கூராகவும், வலுவாகவும் இருக்கும். இது வேட்டையாடுவது கால்களால்தான். இரையைக் கொத்திக் கிழிப்பதற்கே கூரிய மூக்கு பயன்படுகிறது சிறகுகளின் நுனி மனித இமைமயிர்போல் மிக அழகாக இருக்கும்.
உணவு
இவை செத்த மீன்கள், நண்டுகள், சிறு பறவைகள், எலி, நீர்ப்பாம்பு அகியவற்றை உண்ணும். ஆற்றங்கரைகளிலும், கடலோரங்களிலும் சுற்றி இரை தேடும். மனிதர்களுடன் இணைந்து வாழ்பவை ஆதலால், நெல் வயலில் சேடை ஓட்டும் பொழுது நிலத்தின் இடுக்குகளில் இருந்து கிளம்பி வரும் நண்டு போன்றவற்றை வேட்டையாடும். உழவு வயலில் மீன், சிறிய பறவைகளை வேட்டையாடும்.
இனப்பெருக்கம்
குளிரும் வறட்சியும் இருக்கும் பனிக்காலத்தில்தான் இவை இனப்பெருக்கம் செய்யும். (மார்கழி - பங்குனி). இவை கூடு கட்டும் விதம் வியப்பானது. மரத்தில் ஒரு சில குச்சிகளையும், முட்களையும் அடுக்கி விட்டு அவற்றில், குப்பை, சத்தை, களிமண், மனிதர்கள் களையும் பிளாஸ்டிக் பைகள், காகிதக் கோப்பைகள் போன்றவற்றை எடுத்து அழகிய கிண்ணம் போன்று கூடு கட்டும். பார்ப்பதற்குக் கூடு போல் தெரியாது. ஒரு முறை கட்டிய கூட்டைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தும். வெண்சிவப்பு நிறத்தில் இரண்டு முட்டைகளே இடும். பெண்பறவைதான் அடை காக்கும். குஞ்சுகளை வளர்ப்பதில் ஆண்,பெண் இரண்டும் ஈடுபடும். குஞ்சுகள் நன்றாகப் பறந்து, தானே வேட்டையாடி இரையைத் தின்னும் வரை அவற்றை வளர்க்கும்.