தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் - ஒரு பணப்பயிரே! - ஜெயக்குமார்


(அறிமுகம்: ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வேளாண் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்துச் சென்னையில் ஒரு பள்ளியில் வேளாண் நிர்வாகியாக இருந்தவர் ஜெயக்குமார். 33 வயதே ஆன இவரும், இவரின் மனைவியும் சென்னையில் பணி புரிந்து கொண்டு , சொந்த வீடும், ஒரு பெண் குழந்தையுமாக கிராமத்து மக்கள் அனைவரும் கனவு காணும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். மாதம் 30,000 வருமானத்தைத் துறந்து தன் சொந்த ஊரான மேலாநல்லூரில் தன் தந்தை நிர்வாகம் செய்து வரும் 20 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதாக ஒரு அதிரடி முடிவெடுத்து இருவரும் வேலையை விட்டு விட்டு வந்துள்ளனர்! 'கெடு முன் கிராமம் சேர்' என்ற நம் கொள்கையை வாழ்ந்து காட்டுபவர் இந்த இளம் விவசாயி. இவர் பரிசோதனை முயற்சியாக முதலில் 3 ஏக்கரில் நம் பரிந்துரைகளை ஏற்றுக் கிச்சடி சம்பா நெல்லைப் பயிரிட்டார். உழவன் விடுதலைக்காகப் பாடுபடும் தற்சார்பு இயக்கம் அதனை கிலோ ரூ.25 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளது. இந்த நெல்லைத் தூற்றிக் காயவைத்து அரிசியாக்கி பச்சரிசி கிலோ ரூ.60 என்ற விலையில் விற்கிறோம். அவரின் இயற்கை விவசாய அனுபவங்கள் கட்டுரையாகத் தந்துள்ளார். - ஆசிரியர் )

எனது பண்ணையில் கடந்த 35 ஆண்டுகளாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து பல இன்னல்களை அனுபவித்தும், மகசூல் குறைந்தும், கிடைத்த மகசூலுக்கான விலை இல்லாததாலும் எதிர்கால விவசாயம் கேள்விக்குறி ஆகும் நேரம் வந்துவிட்டதென நினைக்கும் போதெல்லாம் தூக்கம் இழக்க நேரிடும். 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி வேலையை துறந்து சொந்த கிராமத்திற்கு வந்து பண்ணையில் இயற்கை விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற வேண்டும்(integrated farming) என நினைத்து மூன்று ஏக்கரில் கால்நடை வளர்ப்புக்கான பசுந்தீவனம் மற்றும் கொட்டகை அமைத்து 20 ஆடுகளையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். 15 ஏக்கரில் நெல் பயிர் செய்து கொண்டிருக்கிறேன்.

2013ம் வருடம் சம்பா பருவத்தில் முதல் முறையாக 3 ஏக்கரில் கிச்சிலி சம்பா நெல் இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். 2013ம் வருடத்திற்கு முன்பு வரை ADT 44 என்ற ரகத்தை சாகுபடி செய்தேன்.

சாகுபடி முறைகள்:

மூன்று ஏக்கருக்கு 50 கிலோ விதை நெல்லை பாய் நாற்றங்கால் மூலம் விதை விட்டோம். 14ம் நாள் நாற்று பறித்து (SRI) ஒற்றை நாற்று முறையில் நடவு நட முயற்சித்தோம். ஆனால் 100 குழி (33 சென்ட்) நடவிற்கே ஒரு ஏக்கருக்குத் திட்டமிட்டிருந்த‌ நாற்றை நட்டுவிட்டார்கள். காரணம் இளம் நாற்றாக இருந்ததால், நடவாள் நாற்றை அதிகமாக வைத்து நட்டுவிட்டார்கள்.(நடவு வயலில் தக்கைப்பூண்டு விதைத்து 50ம் நாள் மடக்கி உழவு செய்திருந்தோம்). உடனே நடவை நிறுத்தி ஒரு வாரம் கழித்து 22ம் நாள் நட்டோம். 14ம் நாள் பாயிலிருந்து நாற்றை சேற்றில் எடுத்து போட்டதால் ஒரு வாரத்தில் நாற்று நன்றாக வளர்ந்து விட்டது.

நடவு நடுவதற்கு முன் சேற்றில் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுத கரைசல் இட்டு நடவு செய்தோம். நடவு வரிப்பட்டம் போட்டு நட்டோம். வரிசைக்கு வரிசை 30செ.மீ பயிர் இடைவெளி 20 செ.மீ என்ற கணக்கில் நட்டோம். நாற்றை ஒது குத்துக்கு 3 முதல் 5 வரை வைத்து நட்டு, நட்ட 20ம் நாள் களை எடுக்க ஆரம்பித்தோம் அப்பொழுது கோனோவீடர் மூலம் களை உருட்டலாம் என நினைத்து நான்கு நாள் மூலம் வீடர் உருட்டும் போது பயிர் நன்றாக பனைத்தும் மண்ணில் ஏராளமாக மண்புழு துளைகளும் இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். கோனோவீடர் உருட்டும் போது மண்புழுதுளை மூடிவிடும் என்று வீடர் உருட்டுவதை உடனே நிறுத்திவிட்டோம். பிறகு ஒரு வாரம் கழித்து 27ம் நாள் ஆள் மூலம் களை எடுக்க ஆரம்பித்தோம்.

முதல்களை ஏக்கருக்கு 10 பெண் ஆட்களும், இரண்டாம் களை ஏக்கருக்கு 3 ஆட்களும் ஆனது.

பூச்சிக் கட்டுப்பாடு:

நடவு வயலில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் நடவு நட்ட 60ம் நாள் முதல் தென்பட்டது. அதற்காகவே மூலிகை பூச்சி விரட்டி அடிக்கலாம் என நினைத்து கைத்தெளிப்பாந் மூலம் அடிக்கும் பொழுதுதான் தெரிந்தது : அடர்ந்த நெல் பயிருக்கு இடையில் நடமாட முடியவில்லை. மீறி நடந்தால் பயிரின் மீது கால்பட்டு பயிர் மிதிப்பட்டது. இரண்டு தெளிப்பான் மட்டும்(50 குழிக்கு) தெளித்துவிட்டு நிறுத்திவிட்டோம். பின்பு தானாகவே இலை சுருட்டு புழு குறைந்தது. நோய் தாக்குதலோ வேறு பூச்சி தாக்குதலோ இந்த ரகத்தில் அறவே இல்லை என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.

பயிரின் வளர்ச்சி:

நட்ட 40ம் நாள் பார்க்கும் பொழுது ஒரு குத்துக்கு 35 முதல் 40 தூர்க்கட்டி இருந்தது. இலையின் நீளம் 40 செ.மீ இருந்தது (நட்ட 85ம் நாள் முதல் கதிர்வர தொடங்கியது). ஒரு கதிரில் 300 முதல் 350 நெல் மணியும் இருந்தது வியப்பாக இருந்தது. பயிர் செய்த மூன்று ஏக்கரில் ஒரு ஏக்கர் மட்டும 50ம் நாள் பழம் சேறு, அதாவது உழவு ஒட்டி 50 நாள் ஆகியிருந்தது. அந்த சேற்றில் நட்ட கிச்சிலிசம்பா நெல் பயிர் 100 முதல் 135 நாள் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்துவிட்டது. காரணம் பயிரின் உயரம் 110 செ.மீ முதல் 120செ.மீ இருந்தது

விளைச்சல்:

கிச்சிலி சம்பா 3 ஏக்கரிலும் 5130 கிலோ மகசூல் கிடைத்தது. இதை கிலோ 25 ரூபாய்க்கு தற்சார்பு இயக்கம் கொள்முதல் செய்தது. மொத்த ரூபாய் 128250. ஏக்கருக்கு 42750 ரூபாய் நெல்லும் அதில் கிடைத்த வைக்கோலை மாட்டிற்கும் வைத்துள்ளோம். ஆனால் ADT44 என்ற ரகம் ஏக்கருக்கு 42 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைத்தது. ஆனால் மூட்டை 730 மட்டுமே விலை போனது. ஏக்கருக்கு ரூ.30,660 மட்டுமே வருவாயாகக் கிடைத்தது.

வரவு செலவு விவரங்கள் (இயற்கை விவசாயம்)

மூன்று ஏக்கருக்கான செலவு
 • * டேஞ்சா(தக்கைப்பூண்டு) = 1500
 • விதை = 2500
 • நாற்றாங்கால் பாய் = 2130
 • உழவு = 6000
 • அண்டை-சமன் = 3200
 • நடவு = 6525
 • களை = 5800
 • அறுவடை = 12100
 • மொத்தம் = 39755
 • * 1 ஏக்கருக்கான‌ செலவு = 13252
 • வரவு = 42750
 • நிகரலாபம் = 29498
செயற்கை விவசாயத்திற்கு 1 ஏக்கருக்கான‌ ஆன வரவு செலவு
 • சாகுபடி செலவு = 16600
 • வருமானம் = 30660
 • நிகர லாபம் = 14060
பின் குறிப்பு
தீவிர ரசாயன விவசாயியான என் தந்தை , இந்த விவரங்களைப் பார்த்து விட்டு “கிச்சலி சம்பாவை மட்டும் விதை எடுத்து வை, அடுத்த முறை 20 ஏக்கரிலும் இதையே நடலாம்” என்று சொல்லிவிட்டார்! இனி எங்கள் பண்ணையில் வேதிப் பொருட்களுக்கே வேலையில்லை.'உணவளிக்கும் உழவனுக்கு விஷம் அளிக்க எந்த உரிமையுமில்லை' என்று ஒரு இயற்கை விவசாயி ஒரு கூட்டத்திற் கூறினார். என் 4 வயதுக் குழந்தையை இனி மனசாட்சி உறுத்தலின்றிக் கொஞ்சலாம்!
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org