தலைநகரில் ஒரு விதைத் திருவிழா - அனந்து
உலகிலேயே மிக அதிகமான உயிரிப்பன்மையம் (bio-diversity) உள்ள நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா கருதப்படுகிறது. உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 விழுக்காடு தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. இப் பதினேழு நாடுகளும் 'பெரும்பன்மைய'(megadiverse) நாடுகளாகச் சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று! ஏறத்தாழ 91,000 விலங்குகளும், 45,500 தாவரங்களும் நம் நாட்டில் இனங்கண்டு கொள்ளப்பட்டுப் பட்டியிலிடப் பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் புதிய புதிய உயிரினங்கள் பட்டியிலிடப் பட்டுக் கொண்டே உள்ளன. இந் நாற்பத்தி ஐந்தாயிரம் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானவை.வேறு எங்கும் காணப் படாதவை. இன்னும் இனங்கண்டறியப் படாத 4,00,000 உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். இப்பன்மையம் 3500 கோடி ஆண்டுகள் கூடிய பரிணாம வளர்ச்சியின் விளைவு என்றும் உயிரியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்பன்மையத்தைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமன்றி, மனித இனம் நீடிக்க வேண்டுமானால் இப்பன்மையம் இன்றி இயலாது. இமாலயக் காடுகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அவற்றின் நதிகளும், வளங்களும் பல கோடி மக்களின் வாழ்வாதரமாக இருப்பது தெளிவு. எனவே, நம் சந்ததிகள் வாழ வேண்டும் என்ற சுயநல நோக்குடனாவது நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
இது இனங்களின் எண்ணிக்கை மட்டுமே. நெல் என்ற ஒரு இனத்தை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் 4,00,000 நெல் ரகங்கள் இருந்ததாக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிச்சாரியா ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஒவ்வொரு இனத்திலும் எத்தனை ரகங்கள் என்று கணக்கிட்டால் நம் உயிரிப் பன்மையத்தின் விரிவும், ஆழமும், வீச்சும், வலிமையும் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும்.
காட்டுயிரிகளை நாம் எந்த விதத்திலும் காப்பாற்ற வேண்டாம். காடுகளை அழிக்காமல், அங்கு மனிதன் போகாமல் இருந்தால் மட்டுமே போதும்! மேம்படுத்துதல் என்று அந்நியத் தொழிற்சாலைகளுக்கு நம் காடுகளைத் திறந்து விடாமல் இருந்தாலே மிகப் பெரிய உயிரிப் பாதுகாப்பாகும். (உயிரிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் அழித்தால்தானே பெருமளவில் பணம் பார்க்க முடியும்? இது நம் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் கடினம் தான்!). ஆனால் நம் மனித இனம் உணவிற்குப் பயன்படுத்தும் உயிரிப்பன்மையத்தை எப்படிக் காப்பது?
'உணவெனப் படுவது நிலத்தொடு நீரே' என்கிறது புறநானூறு. அக்காலத்தில் விதையும், எருவும் பொதுச் சொத்தாய் இருந்ததால் இப்படிப் பாடினார்கள். இக்காலத்தில் உணவெனப்படுவது நிலம், நீர், மக்கு எரு, பாரம்பரிய விதைகள், உயிரிப்பன்மையம், பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை எல்லாம் சேர்ந்தது. இதில் ஒன்று குறைந்தாலும் உணவின் தரம் குறைந்துவிடும். உயிரிப்பன்மையப் பாதுகாப்புதான் உண்மையான உணவுப் பாதுகாப்பு. அதிலும் விதைகள் அழிந்து விட்டால் அந்த ரகமே அழிந்து விடும். உலகில் எவ்வளவுதான் மனிதப் பேராசையால் இயற்கை அழிவுகள் ஏற்பட்டாலும், ஒரு சில தனி மனிதர்கள், தூய சேவை எண்ணத்துடன், சுயநலமின்றி, எதிர்பார்ப்பின்றித் தங்களால் இயன்ற நன்மையைப் பற்பல களங்களில் செய்து வருகிறார்கள். இவர்களில் பாரம்பரிய விதை பாதுகாப்பவர்கள் பணி மிக இன்றியமையாதது.
இவர்களை ஒருங்கிணைக்கும் பணியாகவும், ஒருவருக்கொருவர் கருத்து மற்றும் விதை பரிமாறிக் கொள்ளவும், அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, தேவைப்பட்டால் அதற்காகப் போராடவும் ஒரு ஏற்பாடாக ஆசா கூட்டமைப்பினால் 2014 மார்ச் 6- 7 ஆகிய தினங்களில் டில்லியில் அகில இந்திய விதை சேமிப்போர் மாநாடு ஒன்று நடத்தப் பட்டது. மாநாட்டில் 20 மாநிலங்களிலிருந்து 80க்கும் மேற்பட்ட விதைக் காவலர்கள் கலந்து கொண்டு தங்கள் நீண்ட நாள் அர்ப்பணிப்புப் பணிகளின் பலனான விதைகளைக் கண்காட்சியாக நடத்தினர்.
டாக்டர் அனுபம் பால் - மேற்கு வங்காளத்தின் அரசாங்க வேளாண் துறையின் உதவி இயக்குனர்- 13 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு 300க்கும் மேல் பாரம்பரிய நெல் வகைகளை பராமரித்து வரும் மாமனிதர்! அரசாங்கத்திலிருந்து கொண்டு வேளாண் துறையின் நிலத்திலேயே இதைச் சாதித்தவர்.
நட்பர் சாரங்கி - ஒரிஸ்ஸா மாநிலத்தின் முது பெரும் இயற்கை விவசாயி . 76 வயதாகும் இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக 460 பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றி வருபவர்.
விஜய் ஜர்தாரி - நம் தாளாண்மையில் அக்கரைப்பார்வையில் சென்ற ஆண்டு இவரைப் பற்றிப் பார்த்தோம். இமயமலையில் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் பண்டைய வேளாண் முறைகளையும் பன்மயத்தையும் மீட்டெடுத்தவர். 'பாரா நாஜா' (bara naja) என்றழைக்கப்படும், இமயமலைப் பகுதிக்கே உரித்தான ஒரு பல்பயிர்/கலப்புப் பயிர் விதைப்பு முறையை நடைமுறைப்படுத்தியவர். பல நூறு பாரம்பரிய விதைகளை காத்து வருபவர்.
வடக்கில் மிகவும் பிரபல HMT விதைகளை கண்டு அறிமுகப்படுத்திய மஹாராஷ்டிரத்தின் கோப்ராகடே அவர்கள், விசாகப்பட்டினத்தில் விதை சேமிக்கும் சஞ்ஜீவனி விவசாயக்குழு, பல்வேறு விவசாயிகளுடன் சேர்ந்து நாட்டுக் காய்கறிகள் மற்றும் பாரம்பரிய விதைகளை காத்தும் பரப்பியும் வரும் நமது தமிழகத்தின் முசிறி யோகநாதன், பூண்டி இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, க்ரியேட் குழுவினர், ஆரோவில்லின் தீபிகா, 600 நெல் வகைகளை பராமரிக்கும் திப்பு சுல்தானின் வழி வந்த மைசூரின் அப்துல் கனி, ஹுப்பலி விதை காவலர்கள், மற்றும் 20 மாநிலங்களிலிருந்து பல்வேறு விதை வித்தகர்கள்.
மேலும் தன்னுடைய அழகிய நடையினாலும் கூரிய எழுத்தாலும் விதைகளின் முக்கியத்துவத்தை பொதுஜன பத்திரிக்கையின் வாயிலாக எடுத்துரைத்துப் பல விவசாயிகளையும், விவசாயக் குழுக்களையும் எழுச்சியுடன் விதைப் பாதுகாப்பில் ஈடுபடத் தூண்டிய கர்நாடகத்தின் நாகேஷ் ஹெக்டே, நாம் முன்பே தாளாண்மையில் பார்த்த தேபல் தேப், சட்டிஸ்கரின் ஜேகப், சகஜ சம்ருத்தாவின் கிருஷ்ணப்பிரசாத், கவிததாகுருகன்டி, பரத் மன்சாட்டா என்று நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த விவசாய முக்கியப்புள்ளிகள்.
மாநாட்டின் இறுதியில் பாரத விதை சுயராஜ்ஜிய குழுமம் (Bharat Beej Swaraj Manch) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். நமது பாரம்பரிய விவசாயம், நமது பாரம்பரிய விதைகள், உயிரிப்பன்மையம் ஆகியவற்றைக் காக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அடுத்த 2 நாட்கள் (8 &9 மார்ச்) அதே டில்லியில் ஒரு மாபெரும் விதைத் திருவிழாவும் நடந்தேறியது. நமது பாரம்பரிய விதைகளும், பன்மையமும் மிகச் சிறப்பாகக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. பெரும் கோலாகாலத்துடன் ஒரு திருவிழா போலவே இது நடந்தது. மிகப்பல பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. பாடல், ஆடல் மற்றும் பல்வேறு பாரம்பரியமான மலைவாழ், நாட்டுப்புற மற்றும் நாடோடிக் கலைகளின் நிகழ்ச்சிகளும் நடந்தன. உயிரிப் பன்மையம் மட்டுமன்றி நம் உணர்வுப்பன்மையத்தைப் பறைசாற்றுவதாகவும், பாதுகாப்பதாகவும் இவை இருந்தன.
ஒரே நெல்லின் உள்ளே இரு அரிசிகள், வேகவைக்கவே வேண்டாத அரிசி (30 நிமிடம் தண்ணீரில் இட்டால் வெந்த சோறு போலாகிவிடும்!), பல்வேறு புதிய காய் வகைகள், மிகவும் அரிதான மலைப் பழங்கள் மற்றும் விதைகள், விவசாயிகளே நேர்த்தி செய்து மிகவும் பிரபலமான பல விதைகள் (கோதுமை, பருப்பு, நெல் ரகங்கள்), மலை வாழ் சமூகங்கள் உண்ணும் பல்வேறு கிழங்கு வகைகள் என்று ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்ட விதைகள் கண்காட்சியில் இருந்தன!
நமது விதைகள் நமது நாட்டை விட்டுப் பறிபோவது ரிச்சாரியா காலத்திலிருந்தே நடந்து வருவதே. மேலும் அரசியல்வாதிகள், பன்னாட்டுக் கும்பணிகள், அவர்களுக்குக் கும்மியடிக்கும் “அறிவியலாளர்கள்” என்று நமது விதை உரிமை பறி போய்க்கொண்டே இருக்கிறது. உழவனுக்கும் உணவுக்கும் ஆதாரமான விதை என்பது, வியாபாரமாக, விகார லாபமளிக்கும் அரசியல் கலந்த பொருளாதாரமாக நம் மீது படையெடுப்பதை இந்நாட்களில் பார்க்கின்றோம். நமது மிகப்பெரிய சொத்தான பாரம்பரிய விதைகள் அழிந்து ஓரிரு நிறுவனங்களின் விதை மட்டுமே சந்தையிலிருக்கும் இழிநிலைக்கு நாமும் நமது விவசாயமும் தள்ளப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். காப்புரிமை என்று நமது வேம்பு முதல் மஞ்சள் வரை விழுங்க நடந்த அநீதிகள், உயிரிப்பன்மையத்தை நேரே கொல்லும் மரபீனிமாற்று வி(த்)தைகள், என்று நமது (பாரம்பரிய) விதைக்கும் விவசாயிக்கும் வந்துள்ள கொடுமைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அளவே இல்லை. சமீபத்தில் பவார் போன்ற கொடிய வேளாண் மந்திரிகளின் தரம்கெட்ட நடவடிக்கைகளால், அரசாங்க துறைகளே நமது பாரம்பரிய சொத்தான விதைகளை பன்னாட்டு தனியார் கும்பணிகளுக்குத் தாரை வார்க்கத் துடிக்கின்றன. இச்சூழலில் இத்திருவிழா, சந்தைச் சாக்கடைகளுக்கு இடையில் நம்பிக்கையூட்டும் ஒரு தெளிந்த நீரோடைபோல் பாய்ந்தது.
நமது விவசாயத்திற்கும், நமது உணவுப் பாதுகாப்பிற்கும், நம் அனைவரது நலனுக்காகவும், விதை மற்றும் நமது உயிரிபன்மையத்தை மேன்மைப்படுத்தும் பல்வேறு நிகழ்சிகள் நடந்த அந்த 4 நாட்கள், இந்தியாவெங்கிலும் பல்வேறு விவசாய நிகழ்சிகளுக்கும், விழாக்களுக்கும், போராட்டங்களுக்கும் செல்லும் எனக்கும் கூட மிக அரிதான, இதுவரை எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்ச்சியாகப் பட்டது.
என்ன தவம் செய்தனனோ!