மாடுகளுக்கும் நம்மைப் போலவே அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நேரங்களில் இயன்ற அளவு நாம் கை வைத்தியம் செய்தாலே பெரும்பாலான சாதாரண உபாதைகள் நீங்கி விடும். சில பெரிய தொந்தரவுகளுக்கு மட்டுமே நாம், முதலில் நாட்டு வைத்தியரை நாட வேண்டும். அதுவும் பலிக்கவில்லையானால் கால்நடை மருத்துவரை அணுகலாம். பெரிய தொற்று வியாதிகளுக்கு கூட நாட்டு வைத்தியம் நன்றாக செயலாற்றுவதை சில மாதங்களுக்கு முன் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பரவலான கோமாரி நோய் பாதிப்பு எடுத்துக் காட்டியது. அரசு கால்நடைத் துறை கூட கோமாரி நோய் பரவுவதை தடுக்கவும், வந்து விட்டால் குணப்படுத்துவதற்கான சிகிச்சை மருந்துகளையும் நாமே எவ்வாறு தயாரித்து அளிப்பது என்று வானொலி, தொலைக்காட்சி மூலம் விளக்கினர். பொதுவாக அந்தக் கை மருந்துகள் பலனளித்ததாகவே பெரும்பாலானோர் தெரிவித்தனர். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் கூட, மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அரசே பல இடங்களில் விளம்பர பலகைகள் வைத்து பச்சிலை மருந்துகளை தயார் செய்து சாப்பிட சொன்னதும் நிறைய பப்பாளி மரங்கள் இலைகள் இல்லாமல் காட்சி அளித்ததும் நினைவிருக்கலாம்.
எனவே, பச்சிலை மருந்தும் நாட்டு வைத்தியமும் மட்டுமே போதும், கால்நடை மருத்துவம் என்ற துறையே வீண் என்றும் பொருள் கொள்ள வேண்டாம். எல்லா விதமான உபாதைகளுக்கும் ஆங்கில மருந்துகளை நாடுவது உகந்ததல்ல. கை வைத்தியம் மூலமோ, உங்கள் பகுதியில் உள்ள நாட்டு வைத்தியர் மூலமோ, தீர்க்க இயலாத தொந்தரவுகளுக்கும், சில அவசர சிகிச்சைகளுக்கும் கால்நடை மருத்துவரை அணுகினால் போதும். ‘ஒன்றுமே செய்யாதே’ விவசாய முறையை (Do Nothing Farming) பின்பற்றிய ஜப்பானிய விவசாயி திரு. மாசனோபு ஃபுகுவோகா அவர்கள், அவரது புத்தகத்தில் ஒரு முறை, “நமது மருத்துவத்துறையின் முன்னேற்றம், மனிதர்களின் உடல், எதிர்ப்பு சக்தியில்லாமல் எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதன் அளவு கோல்” என்றார். அதன் உட்பொருள், சீரழிந்ததற்கு நமது வாழ்க்கை முறை, உணவின் சீரழிவு போன்ற காரணங்களோடு மருத்துவத் துறையுமே ஒரு காரணம். எல்லா உபாதைகளுக்கும் உடனே நாம் ஆங்கில மருந்துகள் மூலம் விரைந்த தீர்வை நாட நாட, நமது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வருகிறது. உதாரணமாக, ஆன்டிபையோடிக்ஸ் (Antibiotics) என்று அழைக்கப்படுகிற உயிர் எதிரிகள் - உண்மையில் நமது உயிருக்கே எதிரியாகிக் கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். அதிக அளவில் உயிர் எதிரிகளை எடுத்துக் கொண்டதனால் அவற்றுக்கான எதிர்ப்பு சக்தியும் நமது உடலில் தோன்றத் தொடங்கியுள்ளது. தற்போது பெரும்பாலான மருத்துவர்கள் எந்த உயிர் எதிரிகளுக்கு நமது உடல் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்பதை ஒரு பரிசோதனை மூலம் அறிந்து கொண்டு, பின்னரே மருந்து அளிக்க வேண்டிய நிலையில் மனித உடல் உள்ளது. மாடுகளுக்கு எப்படி வைத்தியம் செய்வது என்பதில் மனித உடலைப் பற்றி ஏன் இவ்வளவு பேச வேண்டும் என்று நினைக்கலாம். மனித உடலைப் போல மாடுகளையும் பழக்க வேண்டாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். மிகையாக, எல்லா சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் நாம் மருந்து அளித்தால் மாடுகளும் அதற்கு பழகி விடும். எனவே, நோயின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப என்ன சிகிச்சை அளிப்பது என்பதை முடிவு செய்யவும்.
கால்நடைகளுக்கு மருத்துவம் செய்வதில் மற்றொரு சிரமமும் உள்ளது. கொடுக்கும் சிகிச்சை பலனளிக்கிறதா என்று அறிய மாடுகளைப் பார்த்து நாமே தான் முடிவு செய்ய வேண்டும். மாடுகள் சாதாரணமாக தீவனம் உட்கொள்கிறதா, தண்ணீர் அருந்துகிறதா, சாணம், கோமியம் எவ்வாறு உள்ளது, இன்னும் மாடுகளுடன் நெருங்கி பழகுபவராக இருந்தால் அதன் மன நிலை எவ்வாறு உள்ளது என்பதை வைத்துத்தான் நோயையோ, அதன் வீரியத்தையோ, குணமடைந்துள்ளதா என்பதையோ அறிய முடியும். எனது பண்ணைக்கு வரும் கால்நடை மருத்துவர் சொல்லுவார் - “மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது சுலபம். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கேட்டு அறிய முடியும். (சில முறை பரிசோதனைகள் சொல்லும் உபாதைகளை நாம் உணராமல் இருப்பதும் உண்டு!) மேலும், மனித மருத்துவர்கள் ஒரு உடல் கூறை (Physiology) மட்டும் படித்தால் போதும். கால்நடை மருத்துவர்கள் பல மிருகங்களின் உடல் கூற்றை பற்றி படிக்க வேண்டும். இவையெல்லாம் போதாதென்று, என்ன சிகிச்சை அளிப்பது என்பதை, வளர்ப்பு விலங்காக இருந்தால், அந்த விலங்குகளை வளர்ப்பவரின் மன நிலையை ஒட்டித்தான் முடிவு செய்ய இயலும். சில முறை செலவு அதிகம் ஆகும் என்பதாலேயே சிகிச்சை அளிப்பது தடைப்படும்”. சரியோ, தவறோ… நாம் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது கூட, அந்த மாட்டின் இன்றைய விலை என்ன? நாம் இந்த விலையுள்ள மாட்டிற்கு இவ்வளவு செலவு செய்தால் எவ்வளவு விலைக்கு விற்க முடியும்? அல்லது பின்னர் அது எவ்வளவு பால் கறக்கும் அல்லது கன்று ஈனும்? என்று, பொருளாதார அடிப்படையிலேயே சிகிச்சை அளிப்பது அமைகிறது. மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல், என்ன செலவு ஆனாலும் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று பொதுவாக சொல்வதில்லை. ஆனால், அதையும் நாம் ஒரு நன்மையாக கருத வாய்ப்புள்ளது. மனிதர்களுக்கோ, நமது உறவினருக்கோ என்பது போல் அல்லாமல், உயிர் போய் விடுமோ என்ற அச்சம் நம்மை பீடிக்காமல், கை வைத்தியத்திலிருந்து முயற்சி செய்யலாம்.
சசரி, இனி சில பொதுவான உபாதைகளுக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று பார்ப்போம். இங்கே சொல்லப்பட்டுள்ளவை தவிற வேறு சில மருந்துகளும், பழக்கங்களும் இருக்கலாம். உங்கள் கிராமத்தில் உள்ள வயதான பெரியவர்களை ஆலோசிப்பதும் அவர்கள் சொல்வதை முயற்சிப்பதும் மிகவும் இன்றியமையாதது.
1. அடி, சிராய்ப்பு, புண்:
மாடுகள் ஈக்களின் தொல்லையை சமாளிக்க மரத்திலோ அல்லது சுவற்றிலோ தேய்த்துக் கொள்ளும். அப்போது அதிக அரிப்பினால் அதிகம் தேய்த்து விட்டாலோ அல்லது சறுக்கி கீழே விழுவதாலோ அல்லது கூரான கற்கள் போன்ற பொருட்களின் மீது இடித்துக் கொண்டாலோ, மற்ற மாடுகளுடன் சண்டையிடுவதலேயோ தோலில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. புண் இருக்கும் இடத்தில், மேலும் ஈக்கள் மொய்ப்பதாலும் அதனால் மாடுகள் மீண்டும் தேய்த்துக் கொள்வதால் புண் ஆறாமல் பெரிதாகிக் கோண்டே போகும். அதற்கு, புண்ணை சுத்தமான தண்ணீர், டெட்டால், டிங்சர் அயோடின் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைத்த தண்ணீரினால் நன்றாக கழுவி, அதன் மீது நன்றாக படும் படி ஒரு துணி கொண்டு வேப்பெண்ணெய் தடவி விட்டால் ஈக்கள் மொய்க்காமல் இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை போடலாம். புண் நாளடைவில் காய்ந்து ஆறி விடும். அப்படியும் ஆறவில்லையானால் காய்ந்த மஞ்சள் கிழங்கை உரசி புண்ணின் மீது தடவலாம். சீத்தா இலையை அரைத்து தடவுவதாலும் புண்கள் ஆறும்.2. குளம்பில் புண் மற்றும் புழுக்கள்:
கோமாரி நோய் இல்லாமலே சில சமயம் மாடுகளுக்கு கால் குளம்புகளுக்கு இடையில் புண் வருவதுண்டு. ஈரத்திலேயே அதிகம் நிற்கும் மாடுகளுக்கு அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இம்மாதிரி புண் உள்ள மாடுகள், புண் இருக்கும் காலை அடிக்கடி உதறும். புண்ணில் வலி அதிகம் இருந்தால் காலை நொண்டவும் செய்யும். இதற்கு, மாட்டின் கால்களை கட்டி (வண்டி மாடுகளுக்கு லாடம் அடிப்பது போல்) படுக்க வைத்த பின்னரே மருந்து வைக்க முடியும். புண் வந்த காலை அதன் போக்கிலேயே உள் பக்கமாக மடித்து வைத்துக் கொண்டும் முயற்சி செய்யலாம். வழக்கம் போல் புண்ணை சுத்தமான தண்ணீர், டெட்டால் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைத்த தண்ணீரினால் நன்றாக கழுவி, வேப்பெண்ணெயில் பூங்கற்பூரத்தை (பட்டன் போன்று செதுக்கப்பட்ட பெட்ரோலிய கழிவான கற்பூரத்தை வாங்க வேண்டாம்) நுணுக்கி பிசைந்து குளம்பு இடுக்கில் அழுத்தி விடவும். சிறிது நேரத்திற்கெல்லாம், புழுக்கள் இருந்தால் நெண்டிக் கொண்டு வெளியே வரும். அவற்றை சுத்தம் செய்து விட்டு மீண்டும் மருந்தை வைத்து விடவும்.3. தீப்புண்:
எதிர்பாராத விதமாக தீப்புண் ஏற்பட்டால் வெறும் தண்ணீரில் புண்ணை சுத்தம் செய்து, துடைத்து, சிறு வெங்காயத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கோழி இறகால் தடவி வரவும். வாழைத்தண்டை அரைத்தும் பூசலாம். சுண்ணாம்பு கரைத்த தண்ணீரை தெளிய வைத்து அந்த நீரில் தேங்காய் எண்ணெய் கலந்து புண் மீது பூசி வந்தாலும் தீப்புண் ஆறும்.4. கட்டி, வீக்கம்:
உடலில் சில சமயம் கட்டி வந்து வீங்கிக் கொண்டு தொந்தரவு தரலாம். கட்டி பழுக்காமல் வீக்கம் மட்டும் இருந்தால் மாடுகளுக்கு நம்மைப் போலவே குத்தலாக வலிக்கும். அதற்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வறுத்த தவிட்டினால் ஒத்தடம் கொடுக்கவும். பிறகு கற்ப்பூரத் தைலத்தை தடவி விடலாம். சீழ் பிடித்தால், சுத்தமான கத்தியை நன்கு வெந்நீர் மற்றும் டெட்டாலினால் கழுவி, அதன் மூலம் கீறி எல்லா சீழையும் எடுத்து சுத்தம் செய்யவும். பிறகு, சுத்தமான தண்ணீர், டெட்டால் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைத்த தண்ணீரினால் நன்றாக கழுவி, வேப்பெண்ணெயில் பூங்கற்பூரத்தை கரைத்து அதில் ஒரு சிறு துண்டு துணியை முக்கி, மடித்து, புண்ணுக்குள் வைத்து கட்டி விடவும். இரண்டு மூன்று முறை செய்த பிறகு, புண் ஆறத் தொடங்கியதும், துணி இல்லாமல் வெறும் மருந்தை மட்டும் ஆறும் வரை போடவும்.5. பால் மடிப் புண்:
பால் மடியில் சில சமயம் புண் ஏற்பட்டு பால் கறக்கும் போது மாட்டிற்கு வலி ஏற்படும். நமக்கும் பால் கறக்க சிரமமாக இருக்கும். மடியில் புண் இருந்தால் கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு அந்த நீராவி மடியில் படும்படி செய்யவும். விளக்கெண்ணெயை கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் கோழி இறகால் மூன்று வேளை பூசி வரலாம். முருங்கைக் கீரை இரண்டு கையளவு, உப்பு ஐம்பது கிராம், மிளகு இருபத்தைந்து கிராம் சேர்த்து இடித்து கிடைக்கும் சாற்றை காலையில் மட்டும் மூன்று நாட்கள் உள்ளுக்கு கொடுக்கவும்.6. பால் மடி வீக்கம்:

(மாட்டின் பாலைச் சிறிது கறந்து வடிகட்டி அதில் ரத்தம், சீழ், புண் போன்ற ஏதேனும் நோய் அறிகுறிகள் தெரிகிறதா என்று அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்)