தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அழகெலாம் மறந்து அழுததென் மனமே! - அர. செல்வமணி


பருவ மழைகள் தருவதை உண்டே

சிறுமணிப் பயிர்கள் சீராய் விளைந்தன

புரதமும் பலவும் பொதிந்த சுவையொடு

உழைப்போர் தமக்கு உடலுரங் கூட்டின

பனைமிக வளர்ந்து வினைபல ஊக்கின

தெளுவும் வெல்லமும் தெவிட்டா நுங்கும்

பழமும் கிழங்கும் வலுவைக் கூட்டின

பால்மணங் கமழக் கால்நடை வளர்ந்தன

தொழுஉரங் கொடுத்து உழுதொழில் ஊக்கிச்

சலிக்கா உழைப்பின் சான்றாய் நின்றன

கான்வளம் நிறைந்த காரணந் தன்னால்

வான்மிகப் பொழிந்தே வாழ்வு செழித்தது

பசும்பொழில் வயல்கள் பாடுக என்றன

கரும்புந் தென்னையும் விரும்பின அதையே

வாழை மரங்களோ வாவென் றழைத்தன

தாழையும் மணந்தென் ஆவியில் நிறைந்தது

மஞ்சளின் பசுமையில் மயங்கின கண்கள்

மனமோ அழகை மாந்தி நின்றது

ஊடு பயிர்களால் ஊதியம் மிகுந்தே

ஆண்டுகள் பலவாய் அருமை விதைகளைத்

தேர்ந்து திரட்டிய சிறந்த உழவரோ

சேர்ந்துல கணைத்தனர் செழுங்கரங் கொண்டே

ஏரின் பின்னே இயங்கிய துலகம்

அணிவகுத் திருந்த அழகெலாந் தொலைக்கப்

புரட்சிகள் பலவும் புகுந்த பின்னால்

திருடரின் பின்னே தேங்கிய செல்வம்

ஓரினப் பயிரால் நீர்வளம் மாய்த்தும்

நஞ்சுகள் மிகுத்தே நன்விதை கொன்றும்

வேதி உரங்களால் விளைநிலங் கெடுத்தும்

கலப்பினக் கால்நடை களத்தில் இறக்கியும்

வீணாய்ப் பல்லுயிர் வீழ்த்திய புரட்சியால்

இடையறா உழைப்பால் இப்புவி தாங்கும்

உழவரும் வெகுவாய் உருகிடும் வேளையில்

அழகெலாம் மறந்து அழுததென் மனமே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org