மற்ற தமிழ் பத்திரிக்கைகளை விட எளிய நடையில் இருந்தாலும், சில கட்டுரைகளை படிக்க மிகவும் கடினமாக இருக்கிறது. எளிதில் புரியாமல் இருந்தால் தான் அது நல்ல தமிழ் என்று பொருளா? உதாரணமாக குமரப்பாவின் கட்டுரை தமிழாக்கத்தை சொல்லலாம். முதல் வரியை படிக்கும்போதே தலை சுற்ற ஆரம்பிக்கிறது. சாதாரண மக்களை சென்றடைய வேண்டுமென்றால் மொழி இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்க வேண்டாமா?
ராமசுப்ரமணியன், தேக்கம்பட்டு, சேலம் மாவட்டம்.
ஆசிரியர் பதில்
மொழிபெயர்ப்பு ,அதுவும் குமரப்பா போன்ற ஆழ்ந்த சிந்தனையாளர்களின் எழுத்தை மொழிபெயர்ப்பது, என்பது சிலசமயம் புரியாமல் போக வாய்ப்புண்டு. எனினும் மூலத்தில் உள்ளதையே நாங்கள் மாற்றமின்றிப் பெயர்க்க விழைகிறோம். தாளாண்மை வியாபார நோக்குள்ள ஒரு வெகுஜனப் பத்திரிக்கை அல்ல; யாருக்கும் புரியாமல் எழுத வேண்டும் என்று முயற்சித்துக் குழப்பும் இலக்கியப் பத்திரிக்கையும் அல்ல. இரண்டுக்கும் ஒரு நடுப்பாதையில் பயணித்துக் கனமான கருத்துக்களை இயன்றவரை எளிய சொற்களில் (ஆனால் இலக்கிய/இலக்கணத் தரம் கெடாமல்) கொடுக்க நாங்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறோம். பரிதி போன்ற எழுத்தாளர்கள் தூய தமிழில் எழுதிப் பின் அதற்கு ஈடான கலைச்சொற்கள் அகராதியைக் கடைசியில் கொடுக்கிறார்கள். நாம் பெரும்பாலோர் கடுமையான ஆங்கிலத்தை வசை பாடுவதில்லை; மாறாக அதை மிக முயற்சி செய்து படிப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். (எல்லோர் வீட்டிலும் ஆங்கில அகராதி உள்ளது). ஏனெனில் அப்போதுதான் ஆங்கிலத்தின் மீது நமக்குள்ள புலமை வளரும் என்று உள்ளூர உணர்கிறோம். நம் தாய்மொழி என்ற ஒரே காரணத்திற்காகத் தமிழைப் படிக்க சிரமப் படுவதை ஏன் சுமையாக எண்ண வேண்டும்?
வெல்லும் வெல்லமும், கொல்லும் சீனியும் மிக அருமையாக இருந்தது. தாளாண்மையில் உள்ள செய்திகளை பலருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்
பூவேந்தரசு, ஊத்தங்கரை