தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா

சமூகத் திட்டப்பணிகள்

(1952 ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் தூதர் திரு. செஸ்டர் பெளல்ஸ் இந்தியாவுக்கான முதல் கட்ட உதவிகளுக்கான திட்டத்தை முன் வைத்த போது திரு. குமரப்பா எழுதியது)

இந்திய திட்டக் கமிஷனுடைய அங்கமான‌ “சமூகத் திட்டப்பணி நிர்வாகக் குழு” தனது திட்டங்கள் குறித்த வரைவினை (draft) வெளியிட்டுள்ளது. இந்த வரைவில் பிரசுரிக்கப் பட்டுள்ள விவரங்கள் மிகக் குறைவாகவும், மேலோட்டமாகவும் இருப்பதால் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய இயலவில்லை. ஆயினும் திட்டங்கள் குறித்த சில பரவலான கணிப்புகளை முன் வைக்க முடியும்.

நமது பிரதம மந்திரியும் வட அமெரிக்கத் தூதரும் கையெழுத்திட்டுள்ள இந்திய - வட அமெரிக்க தொழில்நுட்ப ஒப்பந்தம் எந்தவொரு சுய கெளரவமுள்ள, இறையாண்மையுடைய நாட்டிற்கும் ஏற்றதல்ல. காரணம், அது நம் நாட்டில் பணியாற்றும் அந்நிய தேசத்தவர்களுக்கு நம் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட‌ பாதுகாப்பை வழங்கியுள்ளது. இது நம் மண்ணில் அந்நியர் பகுதிகள் உருவாக வழிசெய்யும். பொதுவாக சர்வதேச உறவுகள் விஷயத்தில் இறையாண்மையுடைய நாடுகள் தங்கள் குடி மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையை திருப்பிச் செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆசியாவை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி வட அமெரிக்கா மிகச் சிறிய எண்ணிக்கையில் தான் நம் நாட்டவரை தனது நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இருந்தும் நாம் அந்நாட்டவருக்கு நம் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட‌ பாதுகாப்பை அளித்திருக்கிறோம். இந்தச் சலுகை இதுவரை எங்கும் கேள்விப்படாதது. நாம் ஏன் இப்படிப் போய் அந்நியர் காலில் விழ வேண்டும்? டிராக்டர் ஓட்டுவது ஒன்றைத் தவிர அவர்கள் கையிலிருக்கும் ‘ அறிவு’ தான் என்ன? எதற்காக இந்த சிறப்பு சலுகை? நமது அரசு நம் தேசத்தவரைப் பாதுகாக்கும் வலிமை அரசிடம் இல்லையென்று ஒப்புக்கொள்கிறதா? நாம் என்ன அந்த அளவிற்கு ஊழல் பேர்வழிகளா அல்லது காட்டுமிராண்டிகளா?

ஒரு இந்திய ரூபாயில் வெறும் இரண்டணா (1/8 ) மட்டுமே வழங்கும் வட அமெரிக்காவிற்கு சமுதாய செயல் திட்டங்களின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை வழங்கப்படுகிறது. எதற்காக நாம் மண்டியிட்டு அந்த இரண்டணாவை வாங்க வேண்டும்? மொத்தமுள்ள 55 திட்டங்களை செயல்படுத்தப் போதுமான நிதி கைவசம் இல்லையெனில், அதில் எட்டிலொரு பங்கு திட்டங்களைக் குறைத்துக் கொண்டு 48 திட்டங்களை மட்டும் செயல்படுத்தி நமது சுய கெளரவத்தைக் காத்துக் கொள்ளலாமே? அதனால் பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் அது நமது தற்சார்பையும் அனுபவத்தையும் விரிவாக்கும். நாட்டின் பகுதிகளை அந்நியர் சோதனை செய்து பார்க்க கையளித்து விட்டுவிடுவது ஆபத்தானது. கிராமப்புற மறுகட்டமைப்புக்கென அந்நியர்களை அழைத்து இப்படி கூழைக்கும்பிடு போடுவதன் மூலம் , தனது அமைச்சர்கள் மீது பிரதம மந்திரி எந்த அளவிற்கு அவ நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறார். பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் நாட்டை மீள் கட்டமைத்துக் கொள்ளவும் வல்லமையற்றுப் போன ஒரு தேசம் தன்னாட்சி செய்யும் உரிமை பெறத் தகுதியற்றது.

எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த , திட்டத்தின் பயனாளிகள் குறித்த ஆழ்ந்த அறிவு முக்கியத் தேவையாகும். மேற்சொன்ன திட்டம் இந்த அத்தியாவசியமான தேவையை முற்றாகப் புறக்கணிக்கிறது. இயந்திரங்களை இயக்கும் அறிவு மட்டுமே மக்களை நிர்வகிக்கப் போதுமானது என்னும் அடிப்படையில் இத்திட்டம் முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டிற்குப் பொறுப்பானவர்கள் நமது மக்களின் உளவியலைப் புரிந்து கொள்வது குறித்து எந்த அக்கறையும் செலுத்தவில்லை. நமக்கு எஸ்கிமோக்களைப் பற்றி எந்தளவு தெரியுமோ அதே அளவுகுத்தான் நம்மைப் பற்றி வடஅமெரிக்களுக்குத் தெரியும். அவ்வாறிருக்க நமக்கு பாடம் சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நமது கிராமப்புற மக்களின் வாழ்க்கை த‌ற்சார்பு, தன்னாட்சி போன்றவற்றை ஊக்குவிக்கும் தத்துவத்தையும் வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படையில் நாம் மீள் கட்டமைப்பை செயல்படுத்தவில்லையெனில் நமது முயற்சிகள் வீணாகிப் போவதோடு மட்டுமின்றி சமுதாயமும் பண்பாடும் சீர்குலைந்து போகவும் வழிகோலிவிடும். நமது குறிக்கோள்கள் என்ன? நாளடைவில் தீர்ந்து போகும். சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கட்டுவதா அல்லது சீரிய பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்ட தேசத்தைக் கட்டமைப்பதா? பின்னதுதான் நமது குறிக்கோள் என்றால் நமது பிரதம மந்திரி அப்பணியை ஒப்படைத்துள்ள வட அமெரிக்கர்கள் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர்களாவர்.

இத்திட்டம் நிலச்சீர்திருத்தம் என்னும் கிராமப்புற வளர்ச்சியின் அடிப்படையான பிரச்னையைப் புறக்கணிக்கிறது. எனவே அது வீணானது. ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நிலத்தை மக்களிடம் திருப்பியளிப்பதே நிலச் சீர்திருத்தமாகும். இதுவே நமது கிராமக் குடியரசுகளின் அடிப்படையாக இருந்தது. வணிகச் சரக்குகளை உற்பத்தி செய்யும் கருவியாகவே நிலத்தை அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள். இத்தகைய அணுகுமுறை போட்டியையும் சச்சரவையும் ஏற்படுத்தும். வட அமெரிக்காவில் அளவற்ற சுரண்டலின் காரணமாக நிலம் பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.

சத்துள்ள உணவிற்கு உத்தரவாதமளிக்கும் பிராந்திய அளவிலான உணவுத் தன்னிறைவு குறித்து இத்திட்டம் எதுவுமே குறிப்பிடவில்லை. எனவே பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மக்களின் உணவுப் பழக்கங்களை நாம் ஆராய வேண்டியது அவசியம். எல்லையற்றுப் பெருகும் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பழக்கம் இந்தியாவிற்குப் பொருந்தாது என்பதோடு, உலகிற்கு அமைதியையும் கொண்டு வராது.

கொரியா தொடங்கி மேற்கு ஜெர்மனி வரை ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கில் வட அமெரிக்கா எழுப்ப முனையும் தடுப்புச் சுவரின் ஒரு பகுதிதான் இத்திட்டம். கொரியா சென்ற பாதையில் இந்தியாவை இட்டுச் செல்வதற்கே இந்த முயற்சி. வட அமெரிக்கக் கூட்டணிக்கு இரையாவதில் அபாயமுள்ளது. எனவே வன்முறைக்கு எதிராக உறுதி பூண்டிருக்கும் நம்மைப் போன்றோர் இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட இயலாது. வட அமெரிக்காவின் போர் முனைப்பின் ஒரு பகுதியே என்பதை அறிந்த பின், இத்திட்டத்திற்கென செலவிடும் சிறிய தொகை அந்நாட்டிற்கு ஒரு பொருட்டே அல்ல என்பது விளங்கும். அகன்று விரிந்த ரஷிய முன்னணிக்கு எதிரான போர்த்தளங்களைக் கட்டுவிக்க முனைந்திருக்கும் வட அமெரிக்காவின் தயாரிப்பில், வெறும் எட்டு மில்லியன் டாலர் என்பது மிகச் சிறு தொகைதானே? இந்தத் திட்டத்தில் ஒத்துழைப்பதால் உலகப் போரின் தயாரிப்புக்கு நாமும் உதவிக்கரம் நீட்டிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம்.

ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு விடை பெற்றுச் சென்றபின் நம் நாட்டில் ஆட்சிக்கு வந்த திறனற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ஆக்கிரமிக்க முயலும் அமெரிக்க நிதி ஏகாதிபத்தியத்தின் கத்தி முனையே இந்த நிதி உதவி என்று பொதுவாக எனக்கொரு பயமுண்டு. இக்காரணத்தினால்தான் மேற்கூறிய திட்டத்தில் பங்கேற்போர் தங்கள் சொந்த நாட்டினை நிர்மூலமாக்குவதற்காக நாட்டின் எதிரிகளோடு சேர்ந்து பணியாற்றும் Quislings* என்று நான் கருதுகிறேன். இன்றைய மோசமான நிலமை என்னை இவ்வாறு இரக்கமற்று வெளிப்படையாகப் பேச வைத்து விட்டது.

(Quislings : சொந்த நாட்டினை ஆக்கிரமிக்கும் எதிரிகளோடு கூட்டு சேர்ந்து செயல்படுபவர்கள். இரண்டாம் உலகப் போரின்போது நார்வே நாட்டினை ஆக்கிரமித்த ஜெர்மானியப் படையுடன் கூட்டாக செயல்பட்டு ஆட்சி அமைத்தவர் நார்வே நாட்டின் Vidkun Quislings என்பவர்).

-கிராம உத்யோக் பத்திரிகா, செப்டம்பர் 1952

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org