தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


ஊழலின் உட்பக்கம்

பொருளியலில், “வாடகை வேட்டல்” (rent-seeking) என்றொரு சொல் உண்டு. இதன் பொருள், ஒரு நிறுவனமோ, குழுவோ, தனிநபரோ சமுதாயத்திற்கு எந்த வித மறுநன்மையும் செய்யாமல் தன்ன‌லமாகப் பொருள், பண‌ம் பெறத் தன் ஆற்றலைச் செலுத்துவது. 'நாடுகளின் வளம்' என்ற நூலை எழுதிய ஆடம் ஸ்மித், வருவாயை லாபம், கூலி மற்றும் வாடகை என்ற மூன்றாய்ப் பிரித்தார். இதில் கூலி என்பது உற்பத்திக்கான செலவுகளையும், வாடகை என்பது நிலம், நீர், ஆற்றல் போன்றவற்றிற்கு செய்யப்படும் செலவாகவும், லாபம் என்பது முதலுக்கும், முனைவுக்கும் ஆன ஊதியமாகவும் கொள்ளப்படுகிறது. வாடகை வேட்டல் என்பது வளங்களின்மேல் ஆளுமை செலுத்துதலும் அதற்கான திரைமறைவு வேலைகளையும் குறிக்கிறது. லாபம் வேட்டல் என்பது விற்போர் , வாங்குவோர் இருவருக்கும் பயன்படும் செயல். வாடகை வேட்டலோ ஒருபக்கப் பயனை மட்டுமே அளிக்கக் கூடியது. எதிர்நன்மை எதையும் அளிக்காதது.

இப்போது நம் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் சமூகச் சூழலை நோக்கினால் இந்த வாடகை வேட்டல் மிக அதிகமாகி விட்டதை உணரலாம். நெஸ்லே, மன்சான்டோ, போஸ்கோ , டாட்டா போன்ற பெரும் நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் தனியார் (தங்கள்) வசமாக்க இந்த வாடகை வேட்டலில் கடுமையாக ஈடுபடுகின்றன. சந்தைப் பொருளாதாரம் சார்ந்த எல்லா நாடுகளிலும் இவ்வாடகை வேட்டல் என்பது, இயற்கையையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்தாலும் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப் படுகிறது. வலுத்தவன் செய்தால் அது ச‌ரி என்பதே சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையாகிறது. ஆயினும் இவ்வாடகை வேட்டலின் சட்டப்படி தவறான ஒரு பரிமாண‌ம் லஞ்சம், ஊழல்.

சூழல், கனிமங்கள், ஆதிவாசிகள், வன உயிரினங்கள் போன்றோரின் பாதுகாப்புக்கென இயற்றப்பட்ட சட்டங்களை இவ் வாடகை வேட்போர் மூன்று வழிகளில் மீறுகிறார்கள்: 1. வளம் சுரண்ட அனுமதி பெறுவதற்கென , அதிகாரிகளை, அமைச்சகங்களை விலைக்கு வாங்குவது. 2. அனுமதித்த அளவுக்கும் மிக அதிகமாக வளங்களைச் சுரண்டி அதை நெறிப்படுத்தும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்குவது . 3. இதையெல்லாம் மீறி வளம் சுரண்டத் தடையாய் இருக்கும் சட்டங்களையே மாற்ற அரசியல்வாதிகளையே விலைக்கு வாங்குவது. இதே போல் வரி ஏய்ப்பும் ஊழலின் நிழலில் ஒரு வகையான வாடகை வேட்டலாகச் செய்யப்படுகின்றது. இதனால் சரியாக வரவேண்டிய வரி வராமல், சிதம்பரம் போன்ற நிதி அமைச்சர்கள், நிர்வாகச் செலவைக் குறைக்க வழி தெரியாமல், நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பது, அரிசிக்கும், அரவைக்கும், ஆயுட்காப்பீட்டுத் தொகைக்கும் எல்லாம் சேவை வரி போடுவது, என்று தலையறுந்த கோழி திசை தெரியாமல் அலைவது போல் நடுத்தர , ஏழை மக்களைப் பாதிக்கும் புதிய, புதிய வரிகளைப் போடுகிறார்கள்.

வரி ஏய்ப்பு, வளம் சுரண்டல் இரண்டும் விலைவாசி உயர்வில் வெளிப்படும். மையப்படுத்தப்பட்ட‌ பொருளாதாரத்தில் அடிமட்ட உற்பத்தித் தொழிலாளிகூட நுகர்வோன் தான். எனவே இவ்வாடகை வேட்டல் மிகச்சிலரைச் செல்வந்தர்களாக்கிப் பிறர் அனைவரையும் வதைக்கிறது. உண்மைப் பொருளாதார‌ வளர்ச்சியின் அறிகுறிகள் இரண்டு: 1. விலைவாசி இறங்க வேண்டும். 2. நாட்டின், மாநிலங்களின் கடன் சுமை குறைய வேண்டும். இவை இரண்டுதான் நோயாளி குணமாவதற்கான அறிகுறிகள். மற்றெல்லாம் ஏமாற்றே. இது ந‌டக்க வேண்டுமானால் அரசியல், மற்றும் அதிகார ஊழல் ஒழிய வேண்டும். எளியோர்களான நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நாம் எறியும் வாக்கு என்ற ஒரே அம்புதான். இதை ஊழலுக்கு எதிராக எறிவதே விவேகம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org