தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


கெடுமுன் கிராமம் சேர்

11 வருடங்களுக்கு முன்னர் சுனாமி வந்து தமிழகத்தில் மிகப் பெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. நல்ல விளைநிலங்கள் கொண்ட‌ கடைமடைப் பாசனப் பகுதியில் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவையே விளைக்க இயலாதவாறு நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகவும், பலப்பல கிராமங்களின் வாழ்வாதாரங்களை நிரந்தரமாக‌ச் சூறையாடியதாகவும் சுனாமி இருந்தது. அதன் பின் தானே புயல் வந்து கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாயின. இவ்வருடம் இயற்கை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து மிகப்பெரும் பேரிடராக உருவெடுத்து இருக்கிறது. இவை எல்லாம் நாம் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்ய விடாமல் குறுக்கிடுவதற்கும் அதை அடக்கி ஆள இயலும் என்று செருக்குக் கொள்வதற்கும் இயற்கை விடும் எச்சரிக்கை.

சென்னையின் இழப்பின் வீச்சை நினைத்து நாம் கண்ணிர் விடுகிறோம்; வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு நம் இதயம் கசிகிறது. இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் , அல்லது சற்றுத் திட்டமிட்டு இருந்தால் உயிர்ச்சேதத்தைப் பெருமளவில் குறைத்திருக்கலாம் என்று அறியும்போது அரசின் பொறுப்பற்ற தன்மை மேலும் அதிகாரிகளின் மெத்தனத்தின் மேலும் கடுமையான சினம் பொங்குகிறது. பல லட்ச‌ம் மக்கள் அளவிலாப் பெருந்தன்மையுடன் ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டபோது எஞ்சியிருக்கும் மனித நேயத்தை எண்ணி மிகவும் நம்பிக்கை பொங்குகிறது. இளைஞர் சக்தி மிக இயல்பாகப் பொங்கித் தன்னார்வலர்களாகத் தெருவில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கையில் பெருமை விம்முகிறது.

முழுக் கட்டுரை »

தோரோ பக்கம் - சாட்சி


நான் [வால்டனில் தங்கிய] முதல் வருட வேனிலில் புத்தகங்கள் படிக்கவில்லை; நான் பீன்ஸ் செடிகளுக்குக் களை எடுத்தேன். இல்லை, பல சமயம் அதை விட நல்ல வேலை செய்தேன். இந்நொடியின் மலர்ச்சியைப் புறக்கணித்து விட்டு உடலுக்கோ, சிந்தைக்கோ வேலை கொடுக்க இயலாத பல நேரங்கள் இருந்தன. நான் என் வாழ்வில் ஒரு நிதானத்தை நேசிக்கிறேன். சில வேனில் காலைகளில், இளவெய்யிலில், என் வழக்கமான [குளத்தில் நீந்திக்] குளியலை முடித்து விட்டு வெய்யில் ஒளிரும் என் வீட்டு வாயிலிலேயே நான் ஒரு சிந்தை தோய்ந்த‌ நிலையில், பைன் மரங்களுக்கு இடையில், தனிமையில் அசைவற்று எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந்திருக்கிறேன். வீடு முழுவதும் பறவைகள் பாடியும், பறந்தும் திரிகையில், கதிரவன் மேற்கில் மறையும்போதோ அல்லது தூரத்துச் சாலையில் பயணிப்போரின் வண்டி ஓசையாலோ மீண்டும் விழித்து நேரம் கழிந்ததை உணர்ந்திருக்கிறேன்.

இர‌வில் வளரும் மக்காச்சோளத்தைப் போல நான் அப்பருவங்களில் வளர்ந்தேன்; கையால் செய்யும் எந்த வேலையையும் விட அந்நேரங்கள் மிக உயர்வாய் இருந்தன. அவை என் வாழ்வில் இருந்து கழிக்கப்பட்ட மணிகள் அல்ல; எனக்கு அளிக்கப்பட்ட வழக்கமான வாழ்நேரத்தை விடவும் கூடுதலாகவே இருந்தன. கீழை நாடுகளின் ஞானிகள் பணிகளைத் துறந்து தியானத்தில் ஈடுபடுவது என்று சொல்வதன் பொருளை நான் உணர்ந்தேன். பெரும்பாலும் நான் நேரம் எப்படிச் சென்றது என்று கவனித்ததே இல்லை. என் பணிக்கு வெளிச்சமிடுவதற்கு விடிந்தது போலவே நாள் நகர்ந்தது; காலையாய் இருந்தது, அட, மாலையாகி விட்டது - இந்நேரம் நினைவு கூறும்படி எதுவும் சாதிக்கவில்லை. மகிழ்ச்சியில் பாடும் பறவைகளைப் போல் அன்றி, நான் என் நல்வாய்ப்பை எண்ணி மௌனமாய் முறுவலித்துக் கொண்டேன். ஹிக்கரி மரத்தில் அமர்ந்த குருவியின் கிரீச்சைப் போல் என் மகிழ்ச்சிச் செருமலும் என் கூட்டில் இருந்து கேட்டிருக்கும்.

முழுக் கட்டுரை »

குமரப்பாவிடம் கேட்போம்


பொருளாதாரச் செயல்பாடு

மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளும் செயல்கள், அப்பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, அவனுடைய மன வளார்ச்சிக்கும் மேம்படுத்துதலுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். மனிதன் உண்ணும் உணவு அவன் சுவைத் தேவையை மட்டும் நிறைவு செய்வதோடு அல்லாமல், உடலில் இருந்து வெளியாகும் சத்தைப் புதுப்பித்து உடலைப் பாதுகாப்பதும், மேற்கொண்டு உடலின் வளர்ச்சிக்கும் வழி வகுக்க வேண்டும். இவ்விரண்டு தேவைகளை நிறைவேற்றாமல், சுவைத் தேவையை மட்டுமே நிறைவு செய்யுமானால் அவ்வுணவால் எப்பயனும் இல்லை. சாக்கரினால் இனிப்பூட்டப்பட்ட நீரை ஒருவன் அருந்திக் கொண்டே இருந்தால், அவ்வுணவு எவ்வளவுதான் அவனுக்குப் பிடித்ததாய் இருந்தாலும், அதனால் அவனுக்கு என்ன உடல் நலமும், வலுவும் கிடைக்கும்? உடலைப் பராமரிக்கத் தேவையான அனைத்தும் சரியான விகிதாசாரத்தில் கிடைக்க வேண்டாமா?

சுவை என்பது நல்லதுதான், ஆனால் அதுவே எல்லாம் ஆகிவிடாது. நம் சுவை நாளங்களைத் தாண்டிய‌ பிறகுதான் உணவு தன் முக்கிய பணியைச் செய்கிறது. இறுதியில் உணவு எப்படி உடம்பில் ஒட்டுகிறதோ அதுதான் முக்கியம். அதே போல, வேலை என்பது அதன் வெளித்தோற்றங்களை வைத்தோ, என்ன உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை வைத்தோ எடை போடப் படலாகாது. வேலை என்பது மனித மனவளர்ச்சியை மேம்படுத்தி அனைத்து மனிதத் திறமைகளுக்கும் உணவளிப்பதாக இருத்தல் அவசியம்.நாம் பேராசையாலோ, அறியாமையினாலோ அல்லது சரியான விகிதாசாரம் அறியாமலோ இயற்கைக்கு மாறாக ஒரு குறுக்கு வழி தேடினால், நாம் இறுதியில் வளங்களை வீணடித்து விடுவோம்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org