தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

என்றும் விடுமுறையா? - ராம்

[சென்னை வெள்ளம் மழையால் உருவானதல்ல; திட்டமிடாத ஏரித் திறப்பினால்தான் என்று பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.இக்கட்டுரை வெள்ளத்தின் காரணிகளை ஆயப் புறப்படவில்லை. இப்பேரிடர் என்பது ஒட்டுமொத்தப் புவிவெப்பத்தின் ஒரு முன்னோடிதான்; புவிவெப்பமடைதல் என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று நாம் உணரவேண்டும் - ஆசிரியர்]

சென்னையில் உள்ள பள்ளிகள் இயங்கி 20 நாட்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. இன்னமும் 5 நாட்கள் விடுமுறை தொடரும் என்றே தோன்றுகின்றது. இப்பொழுது குழந்தைகள் அனைவரும் மாலையில் தவறாமல் தொலைக்காட்சியில் செய்திகளைக் கவனத்துடன் கேட்கின்றனர் - அடுத்த நாள் பள்ளி இருக்குமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள!

வெள்ளத்தில் மிதந்த சென்னையிலிருந்து வந்து மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று, ஒரு தந்தை தன் 10-12 வயது மகளை தோள்மேல் தாங்கிக்கொண்டு சென்ற காட்சி. இத்தைகைய குழந்தைகள் தங்கள் சிறு வயதில் இத்தகைய பேரிடரைக் காண வாய்ப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது வெட்கப்பட வேண்டுமா என்று தெரியவில்லை.

நாளைய தலைமுறை இந்த வெள்ளத்தைக் குறித்து என்ன நினைப்பார்கள்? ஒரு மாதம் முழுவதும் நகரத்தில் மழை நீர் வடிய இயலாமல், தினமும் பள்ளி விடுமுறை இருந்தது என்றுதானே நினைப்பார்கள்?

முன்பொரு கலத்தில் 6000 ஹெக்டெர் பரப்பளவில் இருந்த சென்னையின் சதுப்புநிலம் , பெரும் மழை பெய்தபோதிலும், நகரத்தின் அதிக நீரைத் தக்கவைத்து, உறிஞ்சும் தன்மை கொண்டது. அது இப்பொழுது வெறும் 600 ஹெக்டெர் அளவிற்குக்கூட இல்லாதவாறு குறைத்துவிட்ட நமது தலைமுறையின் “சாதனை”களை வரும்காலம் போற்றும் என்று தோன்றவில்லை. நமுக்கு முன் இருந்த பல கோடி முன்னோர்கள் பல லட்சம் ஆண்டுகளாய்ச் செய்யாத அழிவை நம் தலைமுறை முன்னேற்றம், அறிவியல், தொழில்நுட்பம், மேம்படுத்துதல் போன்ற வெவ்வேறு பெயர்களில் வெகு வேகமாய்ச் செய்த சாதனைதான் வரலாற்றில் இடம்பெரும். இன்னமும் சற்று ஆர்வம் கொண்டு படிப்பவர்கள், “பெருவெள்ளம் வரும் அபாயம் இருந்த பொழுது, அதிகாரிகள் அதனைத் தடுத்திருக்கலாம், ஆனால், அவர்களின் மெத்தனப்போக்கும், தகுந்த நேரத்தில் சரியான முடிவெடுக்க இயலாமையும்தான் இந்த பேரிடர் வரக்காரணம்” என்று பயிலும் பொழுது, நமது காலத்தை வரும்காலத்து சந்ததியினர் கேலியாகவே எண்ணுவார்கள் என்று தோன்றுகின்றது.

வரலாற்று நூல்கள் (அவை எதிர்காலத்தில் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கப்பட்டால்), புவிவெப்பத்தின் காரணமாக உலக அளவில் நடக்ககூடிய மாறுதல்களின் ஒரு சான்றாக சென்னை பெருமழையும், வெள்ளமும் இருந்தன‌ என்று வரும் காலங்களில் எடுத்துரைக்கும். உலக அளவில் 192 நாடுகள் கலந்து கொண்டு புவிவெப்பத்தைக் குறைப்பது எவ்வாறு என்று சட்டப்பூர்வமாக முதல் முறையாக முடிவெடுக்கக் குழுமியுள்ள தருவாயில், சென்னை நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆம், பாரீசில் தற்பொழுது நடந்துவரும் இந்தக் கூத்து, புவிவெப்பத்தினை ஏதோ வெறும் கத்திரிக்காய் பேரம் பேசுவதைபோல நடத்திவரும் உலக நாடுகளுக்கும், நமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கும், நமது சென்னை வெள்ளம், “இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள்” என்று இயற்கை அன்னை விடுக்கும் ஒரு அறைகூவலாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒருபுறம், “நாங்கள் எங்கள் நாட்டின் எந்த ஒரு மரத்தையும் வெட்ட மாட்டோம், உலகத்தின் அனைத்து நாட்டினர் செய்யும் மாசிற்கும் (புவிவெப்ப பாவத்திற்கும்), நாங்கள் மரங்களை நட்டுத் தூய்மை (பிராயச்சித்தம்) செய்கின்றோம்” என்று பூடான் போன்ற சிறு நாடுகள் துணிச்சலாகக் கூறிக்கொண்டுள்ள இந்த மாநாட்டில், இன்றைய “வளர்ந்த” நாடுகளின் நாயகனாக விளங்கும் அமெரிக்காவும், “நாங்கள்தான் உல‌கத்தின் புதிய நாயகர்கள்” என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவும், சந்தையில் பேரம் பேசுவதுபோல் நான் இவ்வளவு டன் மாசு குறைக்கிறேன், நீ அவ்வளவு டன் குறை என்று வாதாடிக்கொள்ளும் கஞ்சத்தனத்தில் தங்கள் மக்களின் உயிர்களையும், பாதுகாப்பையும் பணய‌ம் வைத்துக் கொண்டிருக்கின்றன. உலகின் 5% மக்கள் தொகை கொண்டாலும், 25% சத கரியமிலக் கசிவு ஏற்படுத்தும் அமெரிக்காவோ, துளியேனும், வெட்கமோ, பொறுப்போ ஒரு அடிப்படை நாகரீகமோ இன்றி “மற்ற நாடுகள் த‌ங்கள் கசிவைக் குறைக்கும் பொழுது நாங்களும் குறைக்கிறோம்” என்று கேவலமான திமிருடன் நாணமற்றுப் பேசி வருகிறது. 'இந்தியா நிலக்கரியில் மின்சாரம் எடுக்கிறது, அதைக் கைவிட வேண்டும் அதன் பிறகு நாம் அமெரிக்க நுகர்ச்சியைப் பற்றிப் பேசலாம்' , ' சீனா என்ன செய்யப் போகிறது என்று தெளிவு படுத்த வேண்டும்' என்று மற்ற நாடுகளையே குறைகூறி வருகிறது.

இது போன்ற பன்னாட்டு மாநாடுகள் யாவையும் வெறும் கண்துடைப்பு உத்திகளாகவே பல காலமாக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு, அதை அரசுகளும், அரசியல்வாதிகளும் நடித்து அர‌ங்கேற்றுவது நமக்குத் தெரிந்ததே. இருப்பினும் வரும் 15 வருடங்களில் 2 C அளவிற்கேனும் புவிவெப்பத்தை குறைக்கவேண்டும் - இல்லையேல் வங்க தேசம் போன்ற கடலோரத்தில் கடல்சார்ந்து உள்ள பல நாடுகளும், தீவுகளும் கடலுக்குள் மறைந்து போகும் ஆபத்து உள்ள நிலையில், கத்திரிக்காய் பேரம் பேசுபவர்களை என்னவென்று சொல்லுவது?

பன்னாட்டு நிறுவனங்களும் குறைந்த காலத்திற்குள் அதிகப் பணமீட்டும் தொழில்களுக்கு, இந்த “வளரும்” நாட்டு அரசுகளைப் பயன்படுத்திக் கொண்டு, அளவிற்கு அதிகமாக சலுகைகளை அளித்து, புவிவெப்பத்தை அதிகரித்து, இயற்கை சீற்றங்களுக்கு உலகை மேலும் தாரை வார்க்கும் உத்திகளையே கடைபிடித்து வருகின்றன. சென்னையின் பெரும்வெள்ளம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. “வெறும் 20 வருடம்கூட தாக்குப்பிடிக்காத ஒரு தொழில்நுட்ப (தகவல் தொழில்நுட்பம்) வியாபாரப் பெருக்கத்திற்காக, ஒரு நகரம் தனது 1000த்திற்கும் அதிகமான பலநூறாண்டு காலமாகப் பராமரிக்கப்பட்ட ஒட்டுமொத்த நீர்நிலைகளை 20 வருடங்களில் ஆக்கிரமித்து சீர்குலைத்தது. அதன் காரணமாக தன்னுடைய அழிவை அந்நகரம் தேடிக்கொண்டது” என்று வரலாற்று ஆசிரியர்கள் வரும் காலத்தில் வகுப்புகளில் எடுத்துரைப்பார்கள்.

“ஒரு நாளில் 47 செ.மீ. மழை பார்த்தவன், இனி எந்த மழையும் என்ன ஒண்ணும் செய்யமுடியாது”, என்று யாரும் பெருமைபட முடியாது. “அந்த மழைவந்தது சரிதான், ஆனா அந்த மழைவரும் என்று முங்கூட்டியே தெரிந்தும், நீங்கள் என்ன செஞ்சீங்க?” என்று வரும்கால சந்ததி திரும்பி நம்மிடம் கேட்டால் எங்கு செல்வோம் என்று நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே நமக்கு தெரிவிக்கும் கருவிகளும், விஞ்ஞானமும் என்றும் இல்லாத அளவில் வளர்ந்து நம்மிடையே இருந்தும், அதனை ஒரு கடுகளவேனும் மதித்து நாம் நடந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்பது நிதர்சனம்.

சரி, உலகளவில் பேசப்படும் புவிவெப்பம், ஏதோ பணக்கார நாடுகள் மட்டுமே கவலைப்படும் நிலையாக நாம் நினைத்திருந்தால், அது தவறு என்று இப்பொழுது உணர்ந்துளோம். ஆனால், நாம் இந்த உணர்ந்த நிலையில் நமது வாழ்கைமுறையை மாற்ற இயல்கின்றோமா என்பதுதான் நாம் எந்த அளவிற்குப் பிற்காலத்தில் அறிவுசார்ந்த சமூகமாக மதிக்கப்படுவோம் என்று கட்டியங்கூறும். இதனைத் தவிர்த்து, ஏதோ, ‘பேரிடர் நேர்ந்தது, நாம் பாதிக்கப்பட்டோம், முயன்று சமாளித்து வெற்றிகண்டோம்’ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, வசதியான, வழக்கமான குமுக‌ மறதியுடன் இப்படியே வாழ்வைத் தொடர்ந்தால் பேரிடரை வெறும் ‘விடுமுறை’யாகப் பாவிக்கும் குழந்தைகளுக்கும் நமக்கும் பெரிய வேற்றுமை இருக்காது.

குழந்தைகளுக்குப் பள்ளி இன்று விடுமுறை; வாழ்வும் வரலாறும் கற்பிக்கும் பாடங்களுக்குச் செவிசாய்த்துச் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள மறுக்கும், அறிவுடன் பிறந்த மாந்தர்களான நமக்கும், நம் சிந்திக்கும் திறனுக்கும், அறிவிற்கும் என்றும் விடுமுறைதானா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org