தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பட்டினந்தான் போகலாமாடி...? - பாமயன்


'கெட்டும் பட்டினம் போ' என்றொரு பழமொழி உண்டு. இது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது உருவான பழமொழிகளில் ஒன்று. நகரங்கள் வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு முறைகளில் உருவாகி வந்துள்ளன. பட்டினப்பாலை என்னொரு இலக்கியமே நமக்கு சங்க இலக்கியங்களில் ஒன்றாக உள்ளது. நகரங்கள் வளர்ச்சியின் அளவு கோலாகவும், நாகரிகத்தின் உச்சமாகவும், நவீனத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. இதன் பயனாக மக்கள், குறிப்பாக சிற்றூர்ப் புறங்களில் வாழ்வியல் நெருக்கடிக்கு ஆளாகின்றவர்கள் நகரத்தை நோக்கி இடம் பெயரத் தொடங்குகின்றனர்.

நகரமயமாக்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. இந்திய மக்கள் தொகையில் 27 முதல் 30 விழுக்காட்டு மக்கள் நகரங்களில் வாழ்கின்றார்கள் என்றபோதிலும் இந்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறும் தன்மையில் உள்ளது. தமிழகத்தில் கிராமங்களை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

நகரமயமாக்கம் வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்கப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட பொருளியல், சமூகவியல், சூழலியல் சிக்கல்கள் மிக அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. முறையற்ற திட்டமிடலாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் நெருக்கடியில் நகரங்கள் திணறுகின்றன. குறிப்பாக இட நெருக்கடியில் நகரங்கள் தவிக்கின்றன. மும்பை போன்ற நகரங்களில் நூறு சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் வசதியுள்ள சிலரால் ஓரளவு சரி செய்யப்பட்டுவிடுகிறது. வசதியான மாளிகையில் வாழ்பவர்களின் அன்றாடத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.

ஆனால் நகரங்களில் சேரிகளின் வாழ்க்கை என்பது நரக வேதனையான உள்ளது. அங்கு குவியும் கழிவுகள் அதனால் ஏற்படும் நலக் கேடுகள் சொல்லில் அடங்காதவை. மக்கள் சேரிகளில் மலப்புழுக்களாக நெளிகிறார்கள் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் வேதனையானது. குடிநீருக்கும், மலங்கழிக்கவும், பிற மாதவிடாய் காலங்களில் உடல்நலத்தைப் பராமரிக்கவும அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இந்த வாழ்க்கைச் சூழல் அவர்களை வேறொரு படுகுழியில் தள்ளுகிறது. வாழ்வதற்குப் பணம் வேண்டும் என்பதற்காக அவர்கள் குறுக்கு வழிக்குச் செல்ல வாய்ப்பு உருவாக்கப்படுகிறது, குறிப்பாக அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் இந்த வகையான இளைஞர்களைக் குற்றச் செயல்களுக்கு உட்படுத்துகின்றனர். இதன் பயனாக அவர்கள் வாழ்க்கை முழுமையும் சீரழிந்து போகிறது. நகரத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதையும் அதன் தீவிரம் நெஞ்சை உலுக்குவதாக இருப்பதையும் செய்திகளும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.

ஒரு புறம் மாட மாளிகைகள் மறுபுறம் சாக்கடைப் புழுக்கள் போல மக்கள் என்ற இரட்டை வாழ்க்கைக்கு நகரங்கள் காட்சியாக உள்ளன. ஏழை பணக்காரர்களின் ஏற்றத்தாழ்வு ஐரோப்பிய நகரங்களுக்கும் இந்திய நகரங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கானதாக உள்ளது. ஐரோப்பாவில் திட்டமிட்ட முறையில் நகரங்கள் அமைக்கப்படுவதோடு அங்கு வாழும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை முறைப்படுத்தியுள்ளனர். அதற்கு அங்குள்ள மக்கள் தொகைக் குறைவு என்பதும் முக்கியமானது. ஆனால் மக்கள் தொகை பெருத்த இந்தியா போன்ற நாடுகளில் நகரம் என்பது வசதி படைத்தவர்களுக்கு இன்பமானதாகவும் ஏழைகளுக்குத் துன்பமானதாகவும் உள்ளது.

இந்தப் போக்கு, அதாவது நீடிக்க முடியாத தீங்கான இந்த நகரமய வளர்ச்சியின் மற்றொரு கோர முகம், அவை நமது அடிப்படை வாழ்வதாரமான இயற்கை வளங்களைச் சூறையாடுவதாகும். நிலத்தையும், நீரையும், காடுகளையும், கண்மாய் குளங்களையும் கபளீகரம் செய்துவிட்டு மலட்டுத் திட்டுகளாக மண்ணை மாற்றியுள்ளன. நஞ்சுப் பொய்கைகளாக நீர்நிலைகளை மாற்றியுள்ளன. நீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. குளங்கள் கண்மாய்கள் தூர்ந்து போயுள்ளன. மக்களின் இன்றியமையாத தொழிலான வேளாண்மை அழிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலை ஒரு புறம் இருக்க, அடுத்ததாக இயற்கையின் சீற்றம் பெருகி வருகிறது. இயற்கைத் தாய்க்கு மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் பிள்ளைகள்தாம். எனவே அவள் அனைத்துப் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியவளாக இருக்கிறாள். ஒரு பிள்ளை மட்டும் அரக்கத்தனமாக நடந்து கொண்டு மற்ற பிள்ளைகளை அழிக்க நேர்ந்தால் அவள் அந்த அரக்கப் பிள்ளை மேலும் கோபம் கொள்வாள். அவள் அனைத்தையும் சரி செய்து கொண்டு ஒரு புறம் தாழும் தராசுத் தட்டை நேராக்குவாள். அது புயலாக, மழையாக, நிலநடுக்கமாக, சுனாமியாக‌ வெளிப்படும்.

அதில் ஒன்றுதான் சென்னையில் அண்மையில் நடந்தேறிய அவலம். யாரும் கற்பனை செய்து பார்த்திருக்காத பெருமழைப் பேரழிவை சென்னை சந்தித்தது. ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல், தொண்டர், தலைவர் என்ற வேற்றுமையில்லாமல் அனைவரையும் பதம் பார்த்தது வெள்ளம். நோவாப் பேழையைப் போல ஒன்றை மக்கள் எதிர்பார்த்தனர். இந்தச் சிக்கலுக்கான காரணங்களில் மிக முதன்மையானது இந்த நகரப் பெருக்கமே. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த 600 நீர் நிலைகளை வெறும் ஐம்பதுக்கும் குறைவாக மாற்றியது இந்த நகரப் பெருக்கம். பள்ளிக்கரணை என்ற சதுப்பளம் அதாவது நீரை வாங்கி வழங்கும் அரியவகை இயற்கை அமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டது. அதை விழுங்கியவர்கள் அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பள்ளியும் அந்த அரிய பணியைச் செய்துள்ளது. இவர்கள் உருவாக்கும் மாணவர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பிற்கான கட்டிட‌ம் முதல், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகக் கட்டிடம், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடு என்று அனைத்து வகையிலும் அந்த நிலம் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இன்னும் உயிர் வாழும் தென்னிந்தியாவிலேயே அரிய சதுப்பளம் அதுதான், அதைப் பாதுகாக்க வேண்டும் என்று உலகளாவிய அமைப்புகள் கூறியுள்ளன. இந்திய அரசு மிக முக்கியமான ஈரளம் (wetland) என்ற நில வகையில் உள்ளது என்று வரையறுத்துள்ளது. இந்தப் புரிதல் இன்றி அனைத்தையும் நுகர்ந்து முடித்துவிடலாம் என்று நுகர்வுவெறியில் நமது நகரவாழ் பெருமக்கள் சென்றன் விளைவு இந்தப் பேரழிவைச் சந்திக்க நேரிட்டுள்ளது.

சென்னையில் நடந்தேறியது இயற்கைப் பேரிடர் அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று 'டவுண் டு எர்த்' என்ற அறிவியல் இதழ் குறிப்பிடுகிறது. அனைத்து நீர் வழிகளும் தடுக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தை அபகரித்தவர்கள் மட்டுமல்லாது அதில் கழிவுகளைக் கொட்டிக் குவிக்கும் கொடுமையும் நடந்தேறியது. எங்கும் பிளாஸ்டிக் மலைகள். ஒரு புறம் கான்கிரீட் காடுகள், மறுபுறம் பிளாஸ்டிக் மலைகள், அடுத்தாற்போல் சாக்கடை ஆறுகள் என்று இயற்கை அன்னையை எப்படி எல்லாம் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு நமது நகரங்கள் சீரழித்துவிட்டன. அடையாறு, கூவம், பங்கிங்காம் கால்வாய் என்று ஆறு நீர்வழித்தடங்கள் சென்னைக்கு மிக இன்றியமையாதவை. இவற்றை இன்று நாம் அச்சடித்த தாள்களிலும், கணினித் தடங்களிலுமே பார்க்க முடிகிறது. இந்தப் புள்ளி விவரங்களுக்குள் சென்றால் கட்டுரை மிகப் பெரியதாகிவிடும்.

எனவே ஒரு சிலரைப் பிடித்தாட்டும் பேராசை என்ற மனநோயின் காரணமாக அனைத்து மக்களும் இன்னுலுக்கு உள்ளாகின்றனர். எழ்மைக்கும் எளிமைக்கும் வேறுபாடு தெரியாத மக்களால் இந்தத் துயர்கள் பெருகுகின்றன. நகரங்கள் இந்திய மண்ணுக்கு ஏற்றவையல்ல, பெருந்தொழில்களும் இந்தியாவிற்கு ஏற்றவையல்ல. நம்மை ஆண்டவர்கள், நம்மிடமிருந்து வரியைப் பறிக்க வேண்டும், இயற்கை வளங்களைக் கொள்ளையிட வேண்டும் என்று திட்டமிட்டு நமக்கு ஒரு வளர்ச்சி மாதிரியைக் கொடுத்துச் சென்றார்கள். அதையே நாம் இன்னும் மக்களாட்சி என்று பேசிக் கொண்டு அதை வைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறோம்.

இது தொடர்ந்தால் இன்னும் பல சென்னைச் சீரழிவுகள் வரும். வரும் முன்னர் காப்பதுபோல் நாம் நகரப் பெருக்கத்தைக் குறைத்து சீரான சிற்றூர்களை உருவாக்க வேண்டும். அவற்றை நமது முன்னோர்கள் சீறூர் என்று கூறினார்கள். அது சீர் ஊராக, சீரூராக மாற வேண்டும். வறுமையும் நோயும் இல்லாத சிற்றூர்களை உருவாக்க வேண்டும். சின்னஞ்சிறிய தொழில் முனைவுகள், மக்கள் தொகை அழுத்தம் இல்லாத ஊர்களை உருவாக்க்கி, இயற்கையை அழிக்காத ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டும். அதற்குச் சென்னை மக்களும் கைகொடுக்க வேண்டும். இனியும் இப்படி ஒரு கொடுமையான அவலத்தைச் சென்னை சந்திக்கலாகாது என்ற உறுதியோடு முன்னேறுவோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org