தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள்


நம்மிடையே உள்ள நாயகர்கள் தொடரின் நோக்கம் அல்லது இலக்கு, ஒரு சில தனி மனிதர்களை உயர்த்திக் காட்டி அவர்களுக்கு ஒரு தனியான சமூக அரியணை அளிப்பதல்ல. இவ்வுலகில் இன்னும் மனித நேயம், இயற்கை மற்றும் சூழலைப் பற்றிய அக்கறை தழைத்துக் கொண்டிருக்கிறது. பல இளைய பருவத்தினர் வெறும் பொருளாசையால் பாதிக்கப் படாமல், மிகையான திணிக்கப் பட்ட வேட்கைகளின்றி உண்மைத் தேடலுடன், இயற்கையை நேசித்து வாழ்கிறார்கள் என்பதை நம் தாளாண்மை மலர்கிறது வாசகர்களுக்கு தெரிவிக்கவே.

நாம் இத்தொடருக்காக புதுப் புது நண்பர்களைச் சந்திக்கும் காலைகளில், நமக்கு வாழ்வின் வேறுபட்ட பரிமாணங்கள் புலப்படுகின்றன‌. ஒவ்வொருவரும் மிக எளிமையுடனும் இயல்பான அடக்கத்துடனும் தம் எண்ணங்களையும், வாழ்க்கைப் பாதையின் உந்துதல்களையும் இலக்குகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒத்த சிந்தையில் செல்லும், வேறு புதிய ஒரு நண்பர் வட்டத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். இதுவரை நாம் கோவை மாவட்டத்தை ஒட்டி மட்டும் சுமார் முப்பதிற்கும் மேல் கருத்து ஒன்று பட்ட நண்பர்களை கண்டு கொண்டுள்ளோம். முதலில் ஆசிரியர் நம்மை இப்பணியை செய்ய கோரியபோது, நமக்குள் இருந்த ஐயங்கள் யாவும் அடித்தளமற்றவை என்று புரிபடுகின்றன.

இம்மாத நாயகர் வரிசையில் பிறர் பசி போக்கும் ஒரே குறிக்கோளை மட்டும் கொண்ட ஒரு இளைஞரை காணச் சென்றோம். அவரைச் சந்திக்க சில முறை அலைபேசியில் அழைத்தும் சரியாக நேரம் கிட்டவில்லை. ஒரு நண்பர் அவர் எப்பொழுதும் இருக்கும் ஒரு தொழிற்கல்வி கூடத்துக்கு நேரே செல்லும் படி அறிவுறுத்தினார். நாமும் கோவை நகரத்தின் மையத்தில் இருக்கும் அவ்விடத்துக்கு சென்றடைந்தோம்.

அக்கல்வி நிறுவனத்தின் உள்ளே நாம் சற்றும் எதிர்பாராத பரபரப்பான நிலையைக் கண்டோம். பற்பல ஊர்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்குமிங்கும் நிறைய இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று, திரு. பத்மனாபனை காண வந்திருப்பதாய் கூறினோம். அங்கிருந்த ஒருவர், சற்றே தொலைவில் இருவருடன் உரையாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞரை சுட்டினார். அவரை அவர் பணியைத் தொடர விட்டு, பத்மனாபனை அணுகினோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், அவர் முன்னம் தொடர்பு கொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்த நிலையை விளக்கலானார். இப்பொழுது கடலூர், சென்னையில் இருக்கும் வெள்ள நிலைக்கு உதவும் பொருட்டு அவரும் அவரது அணியினரும் உணவுப்பொருட்கள், குடி நீர், உடைகள், மருந்துகள், மண்ணெண்ணய் அடுப்புகள், விளக்குகள், சிறு மிதவைப் படகுகள் போன்ற அவசிய பொருட்களை நன்கொடையாக சேகரிப்பதாகக் கூறினார்.

அச்சிறுமணித்துளிகளுக்குள் அவருக்கு அலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணமாய் இருந்தது. தவிர அங்கே இருந்த மற்றவர்கள், அவரிடம் ஏதோ வினவிக் கொண்டே இருந்தனர். நமக்கு அப்பொழுது தான், அவரிடம் நம்மால் ஏன் முன்பு தொலைபேசியில் சரியாக உரையாட முடியவில்லை என்பது தெளிவாகியது. நாம் அவரை மேலும் குறுக்கிடுதல் சரியல்ல என்று நகர்ந்தோம். அங்கே ஊர்திகளில் இருந்து பெட்டிகள், மூட்டைகளை இறக்கி கொண்டிருந்த தோழர்களுடன் இணைந்து, சிறு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

பத்மனாபனும் மற்ற நண்பர்களும் ” No Food Waste” என்னும் ஒரு தன்னார்வ அமைப்பை கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்களின் தினப்பணி, கோவை வட்டாரத்தில், எங்கெல்லாம் உணவு மீதமாகிறதோ (திருமணங்கள், விழாக்கள், உணவகங்கள்) அங்கே முன்கூட்டியே செய்தி அறிந்து, உணவை வீணாக்காமல், அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் துணையிருப்பவர்கள், மற்றும் சாலையில் காணப்படும் மாற்றுத் திறனாளிகள், மன நலம் மாறுபட்டோர், உழைக்க இயலாத முதியோர் போன்றோருக்கு அவ்வுணவை அளித்தலே ஆகும்.

இவ்வமைப்பில் களப்பணியாற்றுவோர் யாவரும் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டோரே. இவர்கள் பொறியியல், வணிகவியல், மேலாண்மை போன்ற உயர் படிப்புப் படித்தவர்கள். வழக்கமான பன்னாட்டு நிறுவன (ஊதியம் கூடுதலாய் கிடைக்கும்) பணி வாய்ப்புகளை புறக்கணித்து இப்பொதுப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். சிலர் முழு நேரமும் இவ்வமைப்பிலேயே இணைந்தவர்கள், சிலர் பகுதி நேரப் பணிகளை மேற்கொள்கின்றவர்கள். ஒரு நண்பருடன் உரையாடலைத் துவங்கினோம்.

“என் பெயர் சத்ரி. நான் இவ்வமைப்பில் முழு நேரம் பணியாற்றுகிறேன். ஒரு நிரந்தர அலுவலகப் பணிக்கு தேர்ச்சி பெற்ற போதும், நான் அதை வேண்டாமென்று விட்டு விட்டேன்.” தா: “வீட்டில் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?”

சத்ரி: “இல்லைங்க. அம்மா, அப்பா இருவருமே எனக்கு முழு ஆதரவு தான்.”

தா: “எவ்வளவு நாட்கள் நீங்கள் வருமானற்ற இந்த பொதுப்பணியில் தொடர முடியும் என்று நினைக்கிறீர்கள்?”

சத்ரி: ” நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.” புன்னகைக்கிறார். “இப்பொழுது நான் இதை மிக்க மன நிறைவுடன் இதைச் செய்து வருகிறேன். பிற்காலத்தில் செய்ய இயலாமல் போகலாம். நான் இல்லாவிடில் வேறு யாரேனும் ஒருவர் வந்து இதைத் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.”

அதற்குள் ஒரு ஒரு சரக்கு ஊர்தி ஒன்று உள்ளே வர, அதிலிருந்து பொருட்களை இறக்கும் பணியில் மற்ற நண்பர்களுடன் இணைந்து விட்டார், சத்ரி. தர்னேஷ் என்ற வேறு ஒரு இளைஞரை அணுகி, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரும் No Food Waste அமைப்பில் முழு நேரப் பணியாற்றுகிறார். பத்மனாபன் நீண்ட கால நண்பர் என்றும், தானும் இவ்வியக்கம் துவங்கிய நாள் முதல் இதில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று சென்னைக்கு பொருட்கள் செல்வதால் இவ்வளவு நெருக்கடியாக‌‌ உள்ளதா என்று கேட்டோம்.

தர்னேஷ் அவ்வாறல்ல; வழக்கமான நாட்களில், இதை விட அதிகமான வேலைப்பளு இருக்கும் என்றார். இப்போது சில கல்லூரி மாணவர்கள் உதவுவதற்காக வந்திருப்பதாகவும் அதனால், சற்றே எளிதாக உள்ளது என்றும் கூறினார். இன்று வழக்கமாக நடை பெறும் உணவளிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதா என்றோம். அதையும் செய்து முடித்து விட்டதாக தர்னேஷ் தெரிவித்தார். வழக்கமாக ஒரு மாதத்தில் சராசரியாக எட்டாயிரம் பேருக்கு உணவு அளிப்பதாகக் கூறினார்.

அதற்குள் ஒரு மகிழுந்து வந்தது. அதில் இருந்து இரு முதிய பெண்மணிகள் இறங்கினர். அவர்கள் வண்டியில், போர்வைகள், விரிப்புகள், பெண் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் முதலுதவி மருந்துகள் உள்ளதாக தெரிவித்தனர். வேகமாக கல்லூரி மாணவர்கள், எல்லாப் பொருட்களையும் இறக்கி வைத்தனர். உள்ளே பெரிய ஒரு அறையில் வரும் பொருட்கள் எல்லாம் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கே இரு பெண்கள் வரும் பொருட்களை என்னவென்று சரி பார்த்து வைக்கும் போதே சரியாக உடைகள் ஒரு பக்கம், உணவு ஒரு பக்கம், மருந்துகள் மற்றொரு பக்கம் என, (சென்னைக்குச் செல்லும் வண்டியில் ஏற்றும் பணி எளிதாகும் வண்ணம்) அடுக்கிக் கொண்டிருந்தனர்.

அஷ்வின் என்னும் மற்றொரு No Food Waste முழு நேர அங்கத்தினர், அப்பெண்மணிகளிடம் அவர்களின் பெயர், முகவரி விவரங்களை பதிவு செய்ய ஒரு குறிப்பு புத்தகத்தை அவர்களிடம் நீட்டினார். அவர்கள் சிறு புன்னகையுடன் மறுத்து விட்டு, பெயர் தேவையில்லை. நாங்கள் மீண்டும் வருவோம் என்று உறுதியளித்து விட்டு சென்று விட்டார்கள். நாம் அஷ்வினிடம், அக்குறிப்பேட்டைப் பற்றிக் கேட்டோம். அவர், உதவும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்க மற்றும் எதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அணுக அவர்கள் விவரங்களைச் சேகரிப்பதாகக் கூறினார். இவ்விரு பெண்மணிகளும் தம் அமைப்புக்கு பல முறை உதவி இருப்பதாகவும், எனினும் தம் பெயர் விவரங்களை பகிரவில்லை என்று தெரிவித்தார்.

அவருடன் சற்று நேரம் அவர்கள் தினசரி நிகழ்வுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவரும் நன்கு படித்த இளைஞர். மற்ற அங்கத்தினர்களைப் போலவே நிகழ் காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளார். அவர், இவை யாவும் ஒரு தன்னிச்சையான, மனித நேயம் கொண்ட அனைவருக்கும் தோன்றும் சிறு பொறி தான் என்று விளக்கினார். நமக்கு மீண்டும், இது நெடு நாட்கள் நிலைக்குமா எனும் ஐயம் தோன்றியது. அஷ்வின் தம் எண்ணத்தை அழகாக எளிமையாக வெளிப்படுத்தினார். “யாவுமே தெளிவாகத் திட்டமிட்டு நடக்கும் என்று சொல்ல முடியாது. இந்த மரம் (அருகில் நெடிதாய் வளர்ந்த வேப்ப மரத்தைச் சுட்டிக் காட்டுகிறார்), விதைக்க பட்டதா, அதுவாய் முளைத்ததா என்று யாருக்கு தெரியும்? ஆனால் இப்பொழுது மிகப் பயனுள்ளதாய் இருக்கிறது அல்லவா. நம் முயற்சிகளும் அது போலவே. முயற்சி மட்டுமே நம் கையில், அதை நமக்கு தோன்றும் போதே செயலாக்க வேண்டும். பிறகு அதனதன் பாதையில் செல்லும்”

பிறகு அங்கிருந்த கல்லூரி மாணவர்களிடம், அவர்கள் அங்கே வந்ததன் நோக்கத்தைப் பற்றி விசாரித்தோம். அவர்கள் கல்லூரியில் இருந்து அனுப்பப் படவில்லை, தம் சுய ஆர்வத்திலேயே இதில் பங்கெடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அங்கே நாம் ஒரு நான்கு மணி நேரம் இருந்தோம். பலதர பட்ட மனிதர்கள் வந்த வண்ணம் இருந்தனர். யாரிடமும் நாம் சிறிதளவும் எந்த ஒரு பெரும்போக்கான, பகட்டான செயலையும் காணவில்லை. நமக்கு அங்கே நாம் செலவிட்ட நேரம் பல பாடங்களை பயிற்றுவித்ததாக தோன்றியது. மானுடம் என்பது எப்பொழுதும் இது போன்ற நல்ல நோக்கங்கள் இருக்கும் வரை மாயாது என்ற நம்பிக்கை புத்துயிர் கொண்டு உயர்கிறது. பொருள் கொடுப்போர், அவ்விடத்தில் பணியில் ஈடுபட்டிருப்போர், அவ்வமைப்பின் அங்கத்தினர் யாவரும் தாம் செய்யும் பணியின் தாக்கம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறேதும் சிந்தையின்றி செயலாற்றி கொண்டிருந்தார்கள்.

பத்மனாபன், சில அரசு அதிகாரிகளுடன் அன்று இரவு செல்ல இருக்கும் இரண்டு பெரும் சரக்கு ஊர்திகள் செல்ல வேண்டிய பாதை, வழியில் எற்படக்கூடிய இடர்களை எதிர்கொள்ளும் முறை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டோம். அவருக்கு தாளாண்மை மலர்கிறது சார்பில் நம் வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.

அவர் ” நாங்கள் யாரும் பெரும் சாதனை எதுவும் செய்து விடவில்லை. இந்த மகிழுந்து ஒரு மருத்துவர் இலவசமாய் கொடுத்தது. எங்கள் பணி உதவ நினைக்கும் மக்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருப்பதே. நாம் யாரிடமும் பணம் பெறுவதே இல்லை. உதவிகள் யாவுமே பொருளாய் மட்டுமே பெறுகிறோம். இன்று செல்லவிருக்கும் ஊர்திகள் கூட ஒரு நண்பரின் சொந்த ஊர்திகள்தான்.” என்ற‌ முத்தாய்ப்புடன் விடை கொடுத்தார்.

நாம் ஒரு நாயகரைச் சந்தித்து அவரைப் பற்றி எழுத வந்தோம். ஆனால், பல நாயகர்களைக் காணும் பேறு பெற்றோம். அவர்களின் செயல்கள் யாவும் பல முகமறியாத, இடரில் இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாய் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன் திரும்புகிறோம். எனினும் அடுத்த இதழில், திரு. பத்மனாபன் அவர்களை பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்து எழுதுவோம் என்ற உறுதியுடன் இம்மாத கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org