தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இரு பரிசுகள் - பரிதி


உணவு உற்பத்தியின் அரசியற் பொருளாதாரம் - யார் வெல்வார்?

[கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)]

அதிக விளைச்சல் தரவல்லது வேதி வேளாண்மையா, உயிர்ம வேளாண்மையா? அனைத்து உழவர்களும் உயிர்ம வேளாண்மைக்கு மாறினால் பஞ்சம் தலைவிரித்தாடுமா? உணவு உற்பத்தி குறித்த சில பெரிய பொய்களை மக்கள் உணராதிருப்பதற்கே இது போன்ற வினாக்களும் விவாதங்களும் பரப்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

அக்டோபர் 14 அன்று அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தின் டெமாய்ன் நகரில் உணவு இறையாண்மைப் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் கருப்பின உழவர்கள் சார்ந்த “தெற்கத்திய கூட்டுறவுகளின் கூட்டமைப்பு (தெ.கூ.கூ.)” மற்றும் ஆண்டுராசு நாட்டின் “கருப்பின உடன்பிறப்புகள்சார்ந்த கழகம் (க.உ.சா.க.)” எனும் இரண்டு அமைப்புகள் இவ்வாண்டுக்கான உணவு இறையாண்மைப் பரிசைப் பெற்றன.

அதற்கு அடுத்த நாள் அதே நகரில் உலகெங்கும் இருந்து பல விருந்தினர்கள் வந்து கலந்துகொண்ட பெருவிழா ஒன்றில் ப்ராக் எனும் அமைப்புக்கு உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட இந்தத் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சர் ஃபேசல் ஆசன் ஆபெட் அந்தப் பரிசினைப் பெற்றுக்கொண்டார். [ப்ராக் அமைப்பு 1972-ஆம் ஆண்டு “வங்கதேச ஊரக மேம்பாட்டுக் குழு” எனும் பெயரில் வங்க தேசத்தில் தொடங்கப்பட்டது. இப்போது வேறு சில நாடுகளிலும் செயல்படுகிறது. 2014-இல் இதன் வங்கதேசக் கிளைக்குக் கிடைத்த நிதியுதவியில் 71 விழுக்காடு ஒன்றிய அரசியம், ஆசுத்திரேலியா ஆகிய நாட்டு அரசுகளிடமிருந்து கிடைத்தது; 11 விழுக்காடு பில் கேட்சு உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் நிறுவிய “உலகளாவிய நிதியம்” எனும் அமைப்பிடமிருந்து கிடைத்தது.]

மேற்கண்ட இரு பரிசுகளுமே பசி, பட்டினிக்கு எதிராகப் பாடுபடுவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இது தான் அவற்றிடையே உள்ள ஒற்றுமை. இதைத் தவிர அவ்விரண்டு பரிசுகளுக்கிடையில் எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது; அதிலிருந்துதான் நமது படிப்பினை தொடங்குகிறது!

“பசுமைப் புரட்சியின் தந்தை” என்று அறியப்படும் நார்மன் போர்லாக் எனும் வேளாண் அறிவியலாளரால் 1986-இல் உலக உணவுப் பரிசு நிறுவப்பட்டது. உலக மக்களுக்குத் தேவையான அளவு உணவு உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது இந்தப் பரிசு வழங்கும் குழுவினரின் நம்பிக்கை. ஆகவே, பெரும்பாலான ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒவ்வோராண்டும் இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவைவிட ஒன்றரை மடங்கு உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும், நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பட்டினி, ஊட்டச் சத்துப் பற்றாக்குறை ஆகியவற்றால் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை வாங்குவதற்குத் தேவையான பணம் அவர்களிடம் இல்லை.

ப்ராக் அமைப்பிற்கு உலக உணவுப் பரிசைத் தருவது, பசி, பட்டினிக்கு முதன்மையான காரணம் ஏழ்மையேயன்றி உணவுப் பண்டங்களின் பற்றாக்குறையன்று என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துவதாக இருக்கவேண்டும்.

வறுமை ஒழிப்பில் ப்ராக் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை அதன் நிறுவனர் இதுவரை பெற்றுள்ள 20 உலகளாவிய விருதுகள் நிறுவுகின்றன. உலக உணவுப் பரிசுக்கு அவ்வமைப்பைத் தேர்ந்தெடுத்தது பரிசுக் குழுவுக்கும் நல்லது. ஏனெனில், பெரும்பாலான ஆண்டுகளில் பசுமைப் புரட்சியுடன் தொடர்புள்ள அறிவியலாளர்களுக்கும் உயிரித் தொழில்நுட்பத் துறையில் உள்ள பெருநிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்குமே இப்பரிசு வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதனால், ப்ராக் அமைப்புக்கு இம்முறை பரிசளித்ததன் மூலம் அப்பரிசுக்கே ஓரளவு மதிப்பு கூடியுள்ளது எனலாம். ஆனால், ப்ராக்-க்கு இவ்வாண்டு உலக உணவுப் பரிசு தந்ததை வைத்து, 'ஆலைமயமான வேளாண்மைதான் பசிப்பிணியைப் போக்கும்' எனும் தன்னுடைய கோட்பாட்டைப் பரிசுக்குழு கைவிட்டுவிட்டதாக எண்ணிவிடமுடியாது! [இந்த ஆண்டைப் போலவே] பசுமைப் புரட்சிக் கட்டமைப்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் கடந்த முப்பதாண்டுகளில் சில முறை அந்தப் பரிசு தரப்பட்டுள்ளது. ஆனால், பசியைப் போக்கவேண்டுமானால் உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கவேண்டும் என்பது அந்தக் குழுவின் அடிப்படைக் கோட்பாடு. வேதியியல் அடிப்படையிலான இயந்திரமயமான வேளாண்மையால் தான் இதைச் சாதிக்கவியலும் என்பது மேற்படிக் கோட்பாட்டின் கிளைத்தேற்றம்.

பசுமைப் புரட்சியின் ஆதரவாளர்களைப் பொருத்தவரை, ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலமாகத் தேவைக்கதிகமான உணவை இந்தப் புவிக்கோளம் உற்பத்தி செய்துவருகிறது என்பது [அவர்களுடைய குறிக்கோளுக்குத்] தொடர்பற்ற ஒரு செய்தி!

சூழலுக்கு இயைந்த வேளாண் உற்பத்தி முறைகள் பசுமைப் புரட்சி புகுத்தும் தொழில்நுட்பங்களைக் காட்டிலும் மலிவானவை, மிகப் பெரும்பான்மையினரான சிறு குறு உழவர்களுக்கு ஏதுவானவை, எப்போதும் அதிக உற்பத்தித்திறன் உள்ளவை, சூழல் மாற்றங்களைத் தாங்கும் வல்லமை படைத்தவை எனும் உண்மைகள் ஒவ்வோராண்டும் உலக உணவுப் பரிசு விழாக்களின்போது மூடிமறைக்கப்படுகின்றன. வறியவர்களான சிறு குறு உழவர்கள்தாம் உலக உணவு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டதை விளைவிக்கின்றார்கள்; அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். பசி பட்டினியால் வாடுவோரில் பலரும் அவர்களே. அவர்களுக்கு வேண்டியன {சொந்த) நிலம், பாசன வசதி, உற்பத்திக்கு ஏற்ற விலை ஆகியனவே.

ஆனால், உலகப் பொது வளங்கள் ஒரு சிறுபான்மையினருடைய கைப்பிடியில் குவிந்திருப்பதே பசியும் ஏழ்மையும் நிலவுவதற்கான காரணங்கள் என்பதை உலக உணவுப் பரிசு புரிந்துகொள்வதில்லை; பற்றாக்குறையே இவற்றுக்குக் காரணம் என்றே அது கருதுகிறது. எனவே, வளர்ச்சியை - உற்பத்தித் திறன் வளர்ச்சி, ஆலைமயமான வேளாண் இடுபொருள் வளர்ச்சி, உழவர்களுக்குத் தரப்படும் கடனில் வளர்ச்சி, உலகளாவிய சந்தைகளின் வளர்ச்சி ஆகியவற்றை - மேன்மேலும் அதிகரிப்பதுதான் சரியான தீர்வு என்பதே அந்தப் பரிசுக் குழுவின் நம்பிக்கை.

ஆனால், பல பத்தாண்டுக் காலமாக உலக உணவு உற்பத்தி சராசரியாக ஆண்டுக்கு 12 விழுக்காடு வீதம் அதிகரித்துவந்துள்ளது. உணவுப் பஞ்சம் அதிகரித்த 2008, 2011-ஆம் ஆண்டுகளில் உலகளவில் தானிய உற்பத்தி மிக அதிகமாக இருந்தது!

வறுமையே பசிக்குக் காரணம். அதிகப் பொருள் வளம் இல்லாத உழவர்கள் - பசியால் வாடுவோரில் எழுபது விழுக்காட்டினர் இவர்களே - தம் விளைபொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டியுள்ளது. அதன் பின்னர் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை வாங்கவேண்டிய நிலை வரும்போது சந்தையில் விலைகள் அவர்களுக்கு எட்டாத வகையில் உயர்ந்துவிடுகின்றன. (அ) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளுக்குத் தேவையான சோயா, மக்காச்சோளம் முதலிய பயிர்கள், (ஆ) உயிரெரிபொருள் உற்பத்திக்குத் தேவைப்படும் கரும்பு, (இ) எண்ணெய்ப் பனை போன்றவற்றை விளைவிக்கிற, மேலதிக அளவில் வெளியிடுபொருள் தேவைப்படுகின்ற பண்ணை வேளாண்மை சிறு குறு உழவர்கள், மேய்ப்போர் ஆகியோரைத் தம் வாழிடங்களில் இருந்து துரத்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை ஒழித்துவிடுகிறு. அதன் விளைவாக, ஒரு புறம் தேவைக்கதிகமான உணவு உற்பத்தியும் மறுபுறம் வறுமை, பசி ஆகியனவும் ஒருசேர அதிகரிக்கின்றன. வளர்ச்சியே பசியைப் போக்கும் என்று உலக உணவுப் பரிசு தொடர்ந்து வலியுறுத்துவது எதனால்?

ஏனெனில், வளர்ச்சி மீது கவனஞ்செலுத்துவதன் மூலம், குமுகங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், எளியோர் சுரண்டப்படுதல், பணக்காரர்களுக்கும் பிறருக்கும் இடையிலான சொத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்தல் போன்றவற்றைக் கண்டுகொள்ளாது ஒதுக்கிவிட முடிகிறது. மேலும், உலகப் பொது வளங்கள் எப்படிப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, அவற்றை நியாயமான முறையில் மீள்பகிர்வு செய்யவேண்டியதன் தேவை போன்றவற்றைக் குறித்துச் சிந்திப்பதில் இருந்தும் நம் கவனத்தைத் திசை திருப்புவதற்கு அது உதவுகிறது. உலகிலேயே மிக அதிகச் சொத்து வைத்துள்ள 84 பணக்காரர்களின் சொத்து [பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள] உலக மக்கள் பாதிப்பேரிடம் இருக்கும் சொத்துக்குச் சமமானது! மேன்மேலும் வளர்ந்துவரும் சொத்துக் குவிதல் பசிப் பிணி நிலவுவதற்கு முதன்மையானதொரு காரணம். சட்டியில் இருக்கும் சோறு போதாது, இன்னும் அதிகம் சோறு சமைக்கவேண்டும் என்று சொல்வது எளிது; யாருக்குப் பெரிய கவளம் கிடைக்கிறது, அதை யார் முடிவு செய்கிறார்கள் எனும் கேள்விகளைக் கேட்பது மிக மிகக் கடினம்.

உணவு இறையாண்மைப் பரிசு என்பது உலக உணவுப் பரிசுக்குப் பல வகைகளில் நேரெதிரானது. வளர்ச்சி குறித்து அதிகக் கவனஞ்செலுத்துவதால் அரசியல் மட்டத்தில் கிடைக்கும் வசதி [இக்கட்டான கேள்விகளைத் தவிர்க்கும் வசதி] உணவு இறையாண்மைப் பரிசைக் குறித்துப் பார்க்கையில் வெளிப்படையாகப் புலப்படுகிறது. அப் பரிசு சில ஆண்டுகளாகத் தான் வழங்கப்படுகிறது. அதன் நிதி வசதியும் உலக உணவுப் பரிசினுடையதைக் காட்டிலும் மிகக் குறைவானதுதான். இந்த ஆண்டு அப்பரிசைப் பெற்றவர்கள் மனித உரிமைகளுக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கும் இடையறாது பணியாற்றுபவர்கள். மனித உரிமைகள், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கும் பசிப்பிணிக்கும் என்ன தொடர்பு? அவை மிக நெருங்கிய, முழுமையான தொடர்புள்ளவை!

“தெற்கத்திய கூட்டுறவுகளின் கூட்டமைப்பு” 1967-இல் அமெரிக்கக் கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தினூடே பிறந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் பதினாறில் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆப்ரிக்க-அமெரிக்கக் குடும்பங்களின் [அதாவது, அமெரிக்கக் கருப்பின குடும்பங்களின்] வேளாண்மை, கூட்டுறவு அமைப்புகள், நிலைத்த வேளாண் பயிற்சி, காடு வளர்ப்பு, மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அவ்வமைப்பு உதவி வருகிறது. மேலும், கருப்பின உழவர்களின் உரிமைகளுக்காக வழக்குமன்றங்களிலும் மாநிலச் சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றிலும் வாதாடியுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்களின் நில இழப்பு 14 விழுக்காட்டில் இருந்து ஒரு விழுக்காடாகக் குறைந்திருப்பதற்கு இந்த அமைப்பின் பணிகள் முதன்மையான காரணிகள். அவ்வமைப்பைச் சேர்ந்த உழவர் ஒருவர் கூறுகிறார்:

“உள்ளூர் நுகர்வுக்காக உள்ளூரிலேயே விளைவித்தல், மக்களின் உணவுத் தற்சார்பைத் தக்கவைத்தல், உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் உணவு, தூய குடிநீர், தூய காற்று, நன்னிலம் ஆகியவற்றை அடையும் உரிமைக்காகப் பாடுபடுதல், உள்ளூர்ப் பொதுக்குடிவாழ்வுக் குழுமங்கள் தமக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்துகொள்வதற்கும் தாம் விரும்பியவாறு செயல்படுவதற்கும் உதவுதல் போன்றவை எங்கள் குறிக்கோள்கள். சுருங்கச் சொன்னால் நாங்கள் வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தை அறிந்து செயல்படுகிறோம்.”

இவ்வாண்டுக்கான உணவு இறையாண்மைப் பரிசைத் “தெற்கத்திய கூட்டுறவுகளின் கூட்டமைப்பு”டன் பகிர்ந்துகொண்ட ஆண்டுராசு நாட்டின் கஉசாக 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்நாட்டின் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினங்களில் ஒன்றான ஆப்ரிக்க-கரீபிய சந்ததியினருடைய வாழிடங்களையும் உரிமைகளையும் காப்பதற்காக அது தொடங்கப்பட்டது. காடழிப்பு, வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தல் ஆகிய இரு கூறுகள் காரணமாக அம்மக்கள் சூழல் மாறுபாடுகளின் விளைவுகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூழல் மாறுபடுவதற்கேற்பத் தம் வேளாண் முறைகளையும் வாழ்முறைகளையும் தகவமைத்துக்கொள்வதற்கு கஉசாக உதவுகிறது.

இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சொல்கிறார்:

“எங்கள் உணவுக்குத் தேவைப்படும் பயிர்களை நாங்களே விளைவித்துக் கொள்வதில் இருந்துதான் எங்களுடைய விடுதலை தொடங்குகிறது. இதுதான் உணவு இறையாண்மை. எம் மக்களுக்குத் தன்னாட்சியும் இறையாண்மையும் கிடைக்கவேண்டுமானால் நாங்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். நாங்கள் வெறும் நுகர்வோராக மட்டும் இருந்துவிட்டால் நாங்கள் எவ்வளவு கத்தினாலும் கண்டனம் தெரிவித்தாலும் அதில் பலனில்லை. நாங்கள் உற்பத்தியாளர்களாகவேண்டும். தேவையான அளவு சம்பாதிப்பதுதான் எங்கள் எதிரிகளை வெல்வதற்கு ஒரே வழி. மேலும், இந்த மண்ணுடன், எம் மக்களுடன், எம் நிலத்துடன் எங்களுக்கு இருந்த தொடர்புகளை மீட்டெடுத்து மீளுறுதி செய்வதும் இன்றியமையாதது.”

உலக உணவுப் பரிசுக்கும் உணவு இறையாண்மைப் பரிசுக்கும் உள்ள வேறுபாடு, தொழில் முனைவோருக்கு “வலுவூட்டுதலுக்கும்” [மக்கள்] உண்மையான அரசியல் அதிகாரத்தைப் பெறுதலுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பானது. இப்போது நடப்பில் இருக்கும் அரசியற்பொருளாதார முறைமையில் பொருளாதார வெற்றி பெறுவதன் வழியாக ஒரு தனி மனிதரின் வளத்தை உயர்த்துவது உலக உணவுப் பரிசில் தொக்கிநிற்கிறது. ஆனால், உணவு இறையாண்மைப் பரிசானது, உணவு உற்பத்தி முறைமையின் வளங்கள் மக்களிடையே எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதற்கு முதன்மை தருகிறது. ப்ராக் அமைப்பின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் மேற்கண்ட இரு அமைப்புகளின் வெற்றிகள் மிகச் சாதாரணமானவை போலத் தோன்றக்கூடும். ஆனால், அவற்றின் நிலைப்பாடுகள் உயர்ந்தவை; உலகளாவிய, வல்லாண்மை படைத்த, பொருளாதார ஆதிக்க ஆற்றல்கள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட இனவெறி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் சின்னஞ்சிறு அமைப்புகள் அவை.

உலகிலுள்ள பல கோடி சிறு குறு உழவர்களுடைய இன்றைய நிலையை ஒப்பிடுகையில் ப்ராக்-இன் சாதனைகள் விதி விலக்குகள் மட்டுமே. நிலப் பறிப்பு, இன-மத-சாதி வெறி , பசி, நிறுவனமயமான வன்முறை, சூழல் பாதிப்புகள் ஆகியனதாம் பெரும்பாலான சிறு குறு உழவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள். இவர்களுக்காகத் தான் தெகூகூ-வும் கஉசாக-வும் பாடுபடுகின்றன.

ப்ராக் முன்வைக்கும் அடிமட்டத் தொழில்முனைவோர் மேம்பாடு ஊரக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதெனில், அவ்வமைப்பு தொடங்கி நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவ்வமைப்புக்கு உலகளவில் பரவலாகப் புகழ் கிடைத்தபின்னரும் ஏன் அதன் செயல்பாடுகள் அரசுகளின் திட்டக்கொள்கைகளாகச் செயல்வடிவம் பெறவில்லை?

ப்ராக்-உடன் இணைந்த உழவர்கள் பலனடைந்துள்ளனர் என்பதும் அவர்களுடைய வெற்றிக் கதைகள் கொண்டாடப்படவேண்டியவை மற்றும் பரப்பப்படவேண்டியவை என்பதும் தெளிவு. ஆனால், ப்ராக் முன்வைக்கும் கூட்டுறவு அமைப்புகள், நுண்கடன் வசதிகள், பயிற்சிகள், இதர சேவைகள் ஆகியவற்றை ஆகப் பெரும்பாலான உழவர்கள் பயன்படுத்திக்கொள்வதை இப்போது உலகெங்கும் நடைமுறையிலுள்ள பொருளாதார முறைமை தடுக்கிறது. இந்நிலையில் விதிவிலக்கான ஒரு சில வெற்றியாளர்களுக்குப் பரிசளித்துச் சிறப்பிக்கும் செயலானது பெரும்பாலானோரின் இன்னல்களை உலகின் பார்வையிலிருந்து மறைப்பதற்கே பயன்படும்.

(அ) உலகளாவிய முதலாளுமை மற்றும் (ஆ) 'பசியைப் போக்குதல்' என்கிற பெயரில் ஆலைமயமான வேளாண்மை பரவுதல் ஆகிய இரண்டின் விளைவாகப் பெருமளவிலான மக்கள் தம் வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றார்கள்; புவிச் சூழல் மிக மோசமாகக் கெட்டுவருகிறது. [ப்ராக் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளின் பலனாக வறியோருக்கு] “அதிகாரமளித்தல்” என்பது ஊர்ப்புற மக்கள் மேற்கண்ட இரண்டு பேரிடர்களிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான ஆற்றலைத் தராவிடில் ப்ராக்-இன் செயல்பாடுகளால் விளையும் நன்மைகள் குறுகிய காலத்திலேயே பலனற்றுப்போய்விடும். நம் உணவு [உற்பத்தி மற்றும் வழங்கல்] முறைமையில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கட் குழுக்களுக்குப் பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால், அது மட்டும் இருந்தால் போதாது. பெரும்பாலான [பொருளாதார] வளர்ச்சித் திட்டங்கள் வறியோருக்குத் தீமையில்தான் முடிகின்றன. அதிகாரமும் செல்வ வளமும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படாத வரை பொருளாதார வளர்ச்சி இப்போது நிலவும் சுரண்டல்களை மேலும் உறுதிப்படுத்தவே பயன்படும். நிலம், நீர், சந்தைகள், வேளாண் உற்பத்திக்குத் தேவையான வளங்கள் ஆகிய அனைத்தின் மீதும் வெகுமக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கவேண்டும். அதாவது, அனைத்து மக்களுக்கும் உணவு இறையாண்மை கிடைக்கவேண்டும். இல்லையேல், எண்ணெய்ப்பனைப் பெருந்தோட்டங்கள், சுற்றுலாப் பகுதிகள் உள்ளிட்ட பல வணிகத் திட்டங்கள் ஊர்ப் புற மக்களை எளிதில் வறுமை, பசி ஆகிய புதைகுழிகளில் தள்ளிவிடும்.

அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்

1. ஆசுத்திரேலியா australia
2.ஆண்டுராசு honduras
3.ஆப்ரிக்க-கரீபிய சந்ததியினர் african-caribbean descendants
4.இறையாண்மை sovereignty
5.உணவு இறையாண்மைப் பரிசு food sovereignty prize
6.உலக உணவுப் பரிசு world food prize
7.உலகளாவிய நிதியம் the global fund (www.theglobalfund.org)
8.ஐயோவா iowa
9.ஒன்றிய அரசியம் the united kingdom
10.கருப்பின உடன்பிறப்புகள் சார்ந்த கழகம் (க.உ.சா.க.) ofraneh (organizacion fraternal negre hindurena – the black fraternal organization of honduras)
11.டெமாய்ன் des moines
12.(தெ.கூ.கூ.) தெற்கத்திய கூட்டுறவுகளின் கூட்டமைப்பு the federation of southern cooperatives
13.நார்மன் போர்லாக் norman borlaug
14.பில் கேட்சு bill gates
15.ஃபேசல் ஆசன் ஆபெட் fazle hasan abed
16. ப்ராக் brac (www.brac.net)
17.பொதுக்குடிவாழ்வுக் குழுமம் community
18.முதலாளுமை ('முதலாளித்துவம்' என்பதன் சரியான வடிவம்) capitalism
19.வங்கதேச ஊரக மேம்பாட்டுக் குழு bangladesh rural development committee

நன்றி: Eric Holt-Gimenez, “A Tale of Two Food Prizes”, 2015 Oct. 12, http://www.otherworldsarepossible.org/tale-two-food-prizes.

மேற்கோள்: Maria Hengeveld, “The Anti-Poverty Swindle - Corporate-driven development partnerships benefit their sponsors more than those in the Global South”, https://www.jacobinmag.com/2015/11/united-nations-nike-walmart-sustainable-development-ngo.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org