தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வெள்ளம் தாங்கும் வேளாண்மை - ஜெயக்குமார் & உழவன் பாலா


அரிசியானது உலகின் மிக முக்கிய உணவுப் பயிராக இருக்கிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே முக்கிய உணவாக உண்கிறார்கள். இச்சூழலில், உலக உணவுப் பாதுகாப்பில் நெல் வேளாண்மையின் முக்கியத்துவம் அதிகரிப்பதில் வியப்பில்லை. நெல் வேளாண்மை என்பது வரலாற்றுக்கு முற்பட்டது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இவ்வளவு ஆயிரம் வருடங்களாக ஒரே இடத்தில் விளைந்து கொண்டிருந்த நெல்லானது கடந்த 30 முதல் 40 வருடங்களில் விளையாமற் போவதற்கும், இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து போவதற்கும் நாம் தாளாண்மையில் தொடர்ந்து வெளிச்சமிட்டு வரும் வேதி வேளாண்மையும், புவி வெப்பமாதலுமே காரணங்கள். இதை அறிவியலாளர்களும், வேளாண் நிறுவனங்களும் பெரும் சீற்றத்துடன் எதிர்த்தாலும் உண்மை இதுதான். தொழில்நுட்பத்தைத் திணிக்கப் பிரதமர் முதல் நம் கிராமத்து விரிவாக்கப் பணியாளார் வரை துடியாய்த் துடிப்பதன் காரணம் அரசியலே அன்றி அறிவியல் அல்ல.

இதற்கிடையில் எல்லாவற்றையும் காசாக்க முனையும் வேளாண் வியாபாரிகளோ, வங்க தேசம் போன்ற நாடுகள் புவி வெப்பத்தால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன, எனவே வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடிய மரபீனி நெல்லைத் தயாரிக்கிறோம் என்று ஒரு புறம் நம் இறையாண்மைக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் நம் வேளாண் பல்கலைக் கழகங்களும் அவற்றின் முனைவர்களும் புதிய புதிய வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் (அவர்கள் வெளியிட்ட நூற்றுக் கணக்கான நெல்ரகங்களில் எவ்வளாவு விவசாயிகளால் பயிரிடப் படுகின்றன என்பது யாருக் கேட்கத் துணியாத கேள்வி!).

உள்ளூர் விதைக் கம்பெனிகள், ஆந்திரா பொன்னி, ஜிலகரா பொன்னி, கர்நாடகா பொன்னி, அதிசயப் பொன்னி என்று வித விதமாய் குழந்தைகளுக்குக் கலர் மிட்டாய் விற்கும் வியாபாரி போல உழவர்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் பரிதாபத்துக்குரிய உழவனோ யார் பேச்சைக் கேட்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் தன் இடுபொருள் செலவை மிகவும் அதிகமாக்கிக் கொண்டே போகிறான். நெல் விவசாயிகள் உயர் விளைச்சல் என்னும் மாயையை மறந்து விட்டு, நிகர லாபம் மற்றும் குறைந்த சாகுபடிச் செலவு ஆகியவற்றைத் தேடினால் நல்ல வாழ்வாதாரம் பெறலாம் என்பதே நம் அனுபவம் மற்றும் பரிந்துரை.

இச்சூழலில் சமீபத்திய பெரும் மழையினால் நாகை மாவட்டத்தில் பெருமளவில் பயிர்ச்சேதம் என்று செய்திகள் படித்து விட்டுப் பல நண்பர்களும் வாசகர்களும் நம்மைத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் நிலைமை என்ன என்று கேட்கிறார்கள்.20 ஏக்கர் நிலப் பரப்பில் இயற்கை வேளாண்மையில் கிச்சடி சம்பா பயிர் செய்து வரும் விவசாயியும், நம் தாளாண்மை நிருபரும் ஆன ஜெயக்குமாரின் பயிருக்கு எந்தப் பெரும் சேதமும் இல்லாத நிலைமையில், உண்மை என்ன என்று கண்டறிய‌ ஒரு நேரடிக் கள ஆய்வில் இறங்கினோம்.

நாகை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள ஒரு சிறு விவசாயியின் பண்ணைக்குச் சென்றோம். அவர் வயலில் நெற்பயிர் தண்ணீரில் கரைந்தும் நான்கு, ஐந்து வயல்களில் நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறியிருந்தது. உடனே அந்த நபரிடம் சென்று ஏன் இப்படி என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அவரின் நிலைமையை கண்டு கவலையடய வைத்தது. அந்த ரகம் BPT 5204 எனவும், இது மழை அதிக உள்ள நாட்களில் கரைவதாகவும் , இலைக் கருகல் நோய் மிக மோசமான அளவில் தாக்குவதாகவும் சொன்னார்.

இந்த ஆண்டுதான் BPT ரகத்தை தேர்ந்தெடுத்தீர்களா எனக் கேட்டோம். அவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த ரகத்தைதான் பயிர் செய்து வருகிறேன் எனவும், 6 ஆண்டுகளாகவே பல தொல்லைகளை தருவதாகவும் சொன்ன அவர் கடந்த ஆண்டு ஐந்து முறை பூச்சி மருந்து மற்றும் நோய்களுக்கான மருந்தைக் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தாகவும் கூறினார். மறுபடியும் இப்படி தொல்லை தருகின்ற ரகத்தை ஏன் பயிர் செய்தீர்கள் என கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மேலும் அதிர்ச்சியடைய வைத்தது : “நெல் விலை BPT மட்டும் 900 ரூபாய் (60கிலோ மூட்டை) விற்பதாகவும் மற்ற நெல் ரகங்கள் 750-800 ரூபாய் வரை மட்டுமே விற்பதாகவும் கூறினார்.

மகசூல் சென்ற ஆண்டு ஏக்கருக்கு 22 மூட்டை (60 கிலோ) எனவும், அதற்கு முன்பு வரை 27 முதல் 32 மூட்டை வரை இருந்ததாகவும் கூறினார். ஏக்கருக்கான செலவு எவ்வளவு எனக் கேட்டதற்கு செலவுக் கணக்கு எல்லாம் குறித்து வைப்பது இல்லையெனவும், உழவுக்கு 2,500ரூபாய், அறுவடைக்கு 2,500 ரூபாய் எனவும் மற்ற செலவுக் கணக்கை எழுதுவது இல்லை எனவும் கூறினார்.

விதை முதல் நாற்ற‌ங்கால் செலவு, நடவு வயல் சரி செய்தல், நாற்றடி, நடவு ஆட்கள், ரசாயன உரம், பூச்சி மருந்து மற்றும் தெளிப்பு ஆட்கள் கணக்கு, எலி மற்றும் இயற்கை இடர்களின் செலவு சேர்த்தால் இவர் செய்யும் செலவு 18000 ரூபாய் வரை இருக்கும் என்பது கள நிதர்சனம். ஏக்கருக்கு 18000 ரூபாய் செலவு செய்து சென்ற ஆண்டை போல் 22மூட்டை விளையும் BPT ரகத்தைப் போடுவதால் விவசாயிகளுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. 22 x 900 ரூபாய்= 19800 ரூபாய் இதில் 18000 ரூபாய் செலவு போக மீதி 1800ரூபாய் இதிலும் அவரின் சொந்த உழைப்பிற்கு கூலி போடவில்லை . நான்கு ஏக்கர் வைத்திருக்கும் அவரின் மொத்த வருமானம் (6 மாதம்) 6400 ரூபாய். இதை வைத்துக் கொண்டு தற்போது விற்கும் விலைவாசியில் எப்படி காலம் கடத்துவது? உயர் விளைச்சல் எனக் கருதப்படும் 30 மூட்டை விளைந்தாலும் நிகர லாபம் 30 x 900 = 27000 - 18000 = 9000 மட்டுமே.

சென்ற ஆண்டு இதே போல் எங்கள் கிராமத்தில் ஒருவர் CO 50 என்ற ரகத்தைப் புதிதாக 5 ஏக்கர் நடவு செய்து அந்தப் பயிர் 4.5 அடி உயரம் வளர்ந்து அறுவடையின் போது சாய்ந்து ஏக்கருக்கு 21 மூட்டை மட்டுமே மகசூல் ஆனது. உயர் விளைச்சலுக்கு ஆசைப்பட்டுப் பல இடங்களில் இது போன்ற இன்னல்களை விவசாயிகள் அனுபவிக்கின்றனர்.

விவசாயிகள் அவர்களின் சொந்த முயற்சியிலோ, பொருளாதாரத் திட்டமிடலிலோ வாழவில்லை என்பது மிகவும் தெளிவாகப் புரிகிறது. நண்பர் சொன்னது போல் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் அதிகமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஏக்கருக்கு 4000 முதல் 5000 வரை அதிக செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். 30 மூட்டை விளைந்தாலும் 3000 ரூபாய் கூடுதலாக BPT போன்ற ரகங்களுக்கு கிடைக்கும்.ஆனால் அதற்காக ஆகும் செலவு அதைவிட அதிகமே. ஆகையால் தான் நான்கைந்து ஏக்கர் நிலம் இருந்தும் நெல் பயிரிட்டு எந்த ஒரு முன்னேற்றமின்றிக் கடன்கள் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன‌. கடன்சுமை உயர்ந்து கொண்டே போவதற்கு உயர் விளைச்சல் மோகமே காரணம்.

விவசாயிகள் சற்று சிந்திக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரகத்தை 1250 முதல் 1300 ரூபாய் வரை வாங்கிய மில் முதலாளிகள் தற்போது 900 ரூபாய்க்கு மேல் வாங்குவதில்லை. 1300 ரூபாய்க்கு வாங்கிய போதே லாபம் இருந்தால் ரூபாய் 900க்கு வாங்கினால் எவ்வளவு லாபம் எனக் கணக்குப் போட்டுப் பாருங்கள். விவசாயிகளுக்கோ லாபம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வரை மட்டுமே (அதுவும் நன்றாக விளைந்தால்!). சாகுபடிக் கணக்கைப் பார்க்கும்போது ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். இது மட்டுமன்றி, ஒரு மூட்டைக்கு என்ன ஒட்டு மொத்த செலவு ஆயிற்று என்று பார்க்க வேண்டும். 20 மூட்டை விளைக்க 18000 செலவு செய்தால், ஒரு மூட்டைக்கு ஆகும் செலவு 900 ரூபாய்! போட்ட காசை எடுக்கவா இவ்வளவு மன உளைச்சலும், உழைப்பும்?

இதுவே இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 5000 முதல் 6000 வரை குறைகிறது. அதில் 20 மூட்டை விளைந்தால் ஒரு மூட்டைக்கு ஆகும் அடக்கச் செலவு 600 ரூபாய் மட்டுமே. ஆனால் நன்றாய்ப் பராமரித்தால் கிச்சடி சம்பா போன்ற ரகங்கள் 25 மூட்டை (ஏக்கருக்கு 1500 கிலோ) நிச்சயமாக விளையும். அதாவது ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். விலையோ ஒரு மூட்டைக்கு 1500 ரூபாய் கிடைக்கும்.

பொதுவாகப் பாரம்பரிய ரகங்கள் (சன்ன ரகமானாலும்) தண்டு விரைப்பாகவும், பருமனாகவும் இருக்கும். வெள்ளத்திற்கு ஏற்றவாறு தங்கள் உயரத்தையும், தூர்களையும் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய திறம் படைத்தவை. ஆனால் வீரிய ஒட்டு ரகங்களோ அடியுரம், மேலுரம் இட்டால் மட்டுமே விளையக் கூடியவை. வேகாமாய் வளர்ந்து தண்டு பொச பொசவென்று வலிமையற்று இருப்பவை (பார்க்க படம்). அதிலும் அதிக விலை கிடைக்கக் கூடிய BPT போன்ற சன்ன ரகங்கள் லேசான வெள்ளத் தேக்கத்தையே தாங்காதவை.

விவசாயிக்கு ஒட்டு ரகங்கள் உயர் விளைச்சலில் குறைந்த லாபத்தையும், சராசரி விளைச்சலில் மிகச் சொற்ப வருவாயும், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை மாற்றங்களினால் பதிக்கப் பட்டால் பெரும் இழப்பையும் ஏற்படுத்தி விடும். பாரம்பரிய ரகங்களோ எப்போதும் ஒரு நிரந்தர வருவாய்க்கு உத்திரவாதம் அளிப்பவை. ஆகையால் வேளாண் நண்பர்களே, இனிமேலாவது மற்ற முதலாளிக்கு உழைக்காமல் உங்களுக்காக உழையுங்கள். அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த மாதிரியான ஒட்டு ரகங்களை விட்டொழித்துப் பாரம்பரிய ரகங்களைப் பயிர் செய்யுங்கள்.

பாரம்பரிய ரகத்தின் நன்மைகள்

1.ஒரு முறை விதை வாங்கினால் போதும்
2.முளைப்புத்திறன் பாதிப்பதில்லை
3.பூச்சி, நோய்களின் தாக்குதல் இல்லை
4.இயக்கைச் சீற்றத்தை தாங்கும் சக்தி மிகவும் அதிகம்
5.வறட்சியை தாங்கும்.
6.இயற்கையில் விளைந்த‌ நெல்லிற்கு விலை கூடுதலாகக் கிடைக்கும் (குறைந்த பட்சம் ரூபாய் 1200/மூட்டை)

வருடா வருடம் மாநில அரசு வெள்ள நிவாரணம் என்று கடைமடை விவசாயிகளுக்குப் பல ஆயிர‌ம் கோடிகளைச் செலவு செய்கிறது. உர மானியம் என்ற பெயரில் மத்திய அரசு பல லட்சம் கோடிகளைச் செலவு செய்கிறது. இதற்கிடையில் வெள்ளத்தைத் தாங்கும் மர‌பீனி நெல் தேவை என்று ஒருபுறம் பொய்ப்பிரசாரங்கள் வேறு. இவ்வளவு துயரும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடச் சொன்னால் கிடையாதல்லவா? உண்மையான வெள்ளம் தாங்கும் வேளாண்மை இயற்கை முறையில் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடுவதுதானே? அரசு ஏன் இயற்கை வேளாண்மையை இவ்வளவு அலட்சியப் படுத்துகிறது ? ஒரு வேளை அதில் உழவனைத் தவிர யாருக்கும் வருவாய் இல்லை என்பதாலா?

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org