தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பெருமழையில் சிறு துளிகள் - அனந்து


நவம்பர் 23 திங்கட்கிழமை, சென்னையில் 3 மணி நேரத்தில் 40 செ மீ மழை பொழிந்தது . அதே தினம், மதுராந்தகம் அருகே உள்ள நமது நண்பர்களின் கிராமத்தில் 55 செ மீ பொழிந்தது. அடுத்த நாள் எங்குமே நீர் தேங்கி இருக்கவில்லை. (அந்தக் கிராமத்தில் இவர்கள் மட்டுமே நெல் நடவு செய்திருந்தார்கள், மற்றவர்கள் வற‌ட்சி காரணமாகப் பயிரிடவில்லை). இருந்தும், அடுத்த மாதம் அறுவடைக்கான பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களது மண் விட்டிற்கும் 55 செ மீ மழையினால் எந்த பாதிப்பும் இல்லை. நீர், வழியில் இருக்கும் நீர் நிலைகளையெல்லாம் நிரப்பிவிட்டு, அதன் வழியில் சேர வேண்டிய இடத்திற்குச் சென்றடைந்தது.இதில் ஒரு பெரும் பாடம் சென்னைக்கு இருப்பது புரிகிறதா?

வருடத்திற்கு 100 செ மீ மழை, அதுவும் 100 மணி நேரத்தில் விழும் சென்னையில். அதற்கே அல்லோல கல்லோலப்படும் சென்னை; இப்படிச் சில மணி நேரங்களில் இவ்வளவு மழை என்றால்?

யார் குற்றம்?

சென்னை பல ஆறுகளின் கடைமடைப் பகுதியில் உள்ள ஒரு சம நிலப் பரப்பு. ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள், இயற்கைக் கால்வாய்கள் கொண்ட நகரம். பல நூறு ஏரிகளும் நீர் நிலைகளும் கொண்டது. அவை எல்லாம் நிரம்பி, ஆயக்கட்டுகளை நிரப்பிப் பின் கடல் சேறுமாறு அமைந்தது. கூவத்திற்கு 75 ஏரிகளும் அடையாறுக்கு 450க்கு மேலான ஏரிகளும் தாம் நிரம்பிய பின் அதிகப்படியான நீரைக் கொடுத்தன. இவை தவிர வடிகால் வழிகள். அவை சரியாக சிறப்பாக இருக்கவில்லை என்றால் இந்த விரிந்த சம தளத்தில் சிக்கல்தான். இயற்கையாக அமைந்த வடிகால்களும் மனிதன் உருவாக்கியவையும் மிகவும் இன்றியமையாதது! ஆனால் அந்த நீர் நிலைகளும், வடிகால்களும் எங்கே?

1970க்குப் பின்ல் வந்த அடுத்தடுத்த அரசுகள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக அவற்றைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டன. அரசுப் பேருந்து நிலையங்கள் முதல் கல்லூரிகள், மருத்துவமனைகள் என்று முதலில் வரத்துவங்கிப் பின்னர் தனியார் கல்லூரிகள், பெரும் அடுக்கு மனைகள், சிறு ஆக்கிரமிப்புகள் என்று எல்லாம் தொலை நோக்கில்லாமல், கட்டுக்கடங்காமல், கொஞ்ச‌மும் அக்கறையோ, திட்டமோ, இல்லாமல் -1,50,000க்கு மேல் சட்டவிரோத கட்டுமானங்கள். எல்லாமே நீர் நிலைகளை அழித்து உருவாக்கியவைதான். எனக்குத் தெரிந்தே கடந்த 20 ஆண்டுகளுக்குள் பல நூறு நீர் நிலைகள் முழுங்கப்பட்டு விட்டன. அவை எல்லாம் கல்லூரிகள், பெரும் அடுக்கு மாடி கட்டிடங்களாக மாறி விட்டன‌.

சரி, இவற்றையும் அடைத்து, நதிக‌ளையும் நஞ்சாக்கிக் கொன்று விட்டுக் குடி நீருக்கு என்ன செய்வார்கள் என்கிறீர்களா? காவிரி முதல் வீராணம் வரை பிச்சை எடுத்து, அங்கு உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்புடன் திருடப்படுகிறது. நமது அடுத்த தலைமுறையின் நீரும் நிலத்தடியிலிருந்து மிக ஆழத்திலிருந்து கொஞ்ச‌மும் அறிவில்லாமல் திருடப்பட்டது, .

1980களில் 1200 ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருந்த நீர்நிலைகள் 2000ம் ஆண்டு 600ஹெக்டேராக சுருங்கியது. நமது ஆர்வலர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் தகவல் உரிமை சட்டம் மூலம் பொதுப்பணித் துறையிடம் தகவல் தொகுப்பு எடுத்த பொழுது, நன்மங்கலத்தின் 200 ஏக்கர் ப‌ரப்பளவு கொண்ட பெரிய ஏரி இப்போது முற்றிலும் இல்லாமலே ஆகி விட்டது. அப்படியே சினிமாக்களில் வருவது போல் மொத்தமாக மறைந்திருக்கும் சென்னையின் ஒரு பிரம்மாண்டமான ஏரி!

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் உட்படப் பல இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களும், ஆகிரமிப்புக்களும் என‌ வளர்ச்சிக்கு தாரை வார்த்தது பற்றி இங்கு பேசக்கூட தேவை இல்லை.

ஆனால் இது பேரிடர் இல்லையா?

கன மழையையே தாங்க முடியாத சென்னைக்கு இப்படிப் பெரும் மழை அதுவும் 'தெளிய வைத்துத் தெளிய வைத்து' அடித்தால்? ஒரு கோடியை நெருங்கும் மக்கள் தொகை கொண்ட சென்னையில் 3000 கி மீ சாலைகள் உள்ளன. ஆனால் 800 கி மீ புயல் நீர் வடிகால் மட்டுமே உண்டு.

வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகள் அரசிடம் கொடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. ஒரு வரைமுறை இல்லாமல் கட்டிடங்களைக் கட்டியவர்கள் மற்றும் சரியாகக் கட்டுமானப்பணிகளை நிறைவேற்றாத ஒப்பந்ததாரர்களை நெருக்கம் கொடுத்த நேர்மையான அதிகாரியான ரவி பிங்காலே பணி மாற்றம் செய்யப்பட்டார். நேர்மையான அரசு இருந்திருந்தால் அவர் சரியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், பல இடர்களிலிருந்து மக்கள் தப்பித்திருக்கலாமோ? இந்த அரசுக்கு (முந்தையதிற்கும்தான்) நீர் நிலைகள் என்பது 'ரியல் எஸ்டேட்' மட்டுமே.

விமான நிலையத்தின் ஓடுபாதை சரியாக அடையாறு நதியின் பாதியில்தான் அமைக்கப்பட்டது. அதனால்தான் அது ஓடுபாதையா நதியா என்று போன வாரம் முழுவதும் தெரியவில்லை. பாதுகாப்புப் பற்றிய கவலையே கிடையாது இந்த அரசுகளுக்கு.

திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பற்றிப் பேசவே தேவை இல்லை. நீர் நிலைகளை காப்பாற்றுவதற்கோ கொஞ்ச‌மும் கவலை இல்லை இந்த அரசுக்கு. இத்தனைக்கும் 2003 முதல் மழை நீர் அறுவடை பெரிய அளவில் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இருந்தும் 5 மாதங்களுக்கு முன் தண்ணீர் தட்டுப்பாடு. இன்றிலிருந்து 5 மாதங்களில் தண்ணீர் தட்டுபாடு வரும். கடந்த வாரம் மட்டும் சென்னையின் 2 வருட நீர் தேவை கடலுக்குள் விடப்பட்டது. நீரைத் தேக்கி வேனல் காலத்தில் பயன்படுத்துவது தமிழன் பல ஆயிரம் வருடங்களாகக் கண்டறிந்த தொழில்நுட்பம்.

நெகிழியின் பாதிப்புகளைப் பற்றிக் கூறவேண்டிய தேவையே இல்லை. எல்ல வடிகால்களிலும், கால்வாய்களிலும் நெகிழிப்பைகளும் பிற மக்காக் குப்பைகளும் அடைத்து அடைந்து பொதிந்து பல இடையூறுகளைக் கொடுக்கின்றன. நாம் நமது நாகரீகம் என்று கொக்கரித்துக்கொண்டே எல்லா இடங்களிலும் இந்த நெகிழியை எறிய, அது நதிகளால் கடல் வரை கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் கடல் அவற்றில் பெரும்பகுதியை சுனாமி போன்ற உயர்அலை சமயங்களில் நமக்கே பரிசாக கொடுத்துச் செல்கிற‌து.

30,000 க்கும் மேற்பட்ட சேரி வீடுகள் ஆற்றுப்படுகைகளில் உள்ளது. அவர்களை பற்றிய கவலை, அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் 5 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் . இவர்களும் காசு வாங்கியும் இலவசங்கள் பெற்றும் வோட்டுப் போடத் தொடங்கிய காலம் முதல் நேராக நின்று கேட்கக்கூட முடியாத நிலை. அதனாலும் அரசு இயந்திரங்கள் வேலை செய்யவில்லையோ?

2014ல் CAG, தமிழக அரசு செலவு செய்திருந்த 394 கோடி பற்றி எழுப்பிய கேள்வி தவிர, வெள்ள தடுப்பு திட்டங்களையும் வெள்ள கட்டுப்பாடுக்கும் ஒன்ரும் செய்யவில்லை என்று குறை கூறியிருந்தது. தமிழக முதல்வர் இது தவிர்க்க முடியாதது, இயற்கையின் சீற்றம் என்றெல்லாம் கூறுகிறார். தவறு. உறுதியாகத் தடுத்திருக்க முடியும்- மழையை அல்ல. அதன் பெரும் பாதிப்புகளை.

சென்னை மட்டும் தான் இப்படியா? இல்லை பெங்களூரு, கொல்கொத்தா, என்று எல்லா நகரங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பாடம் அவர்களுக்கும்தான். மும்பையிலும் இப்படிப் பெருமழை வரும். இதை விட அதிகம் - கடந்த ஆண்டு ஒரே நாளில் 50 செ மீ க்கு மேல் பொழிந்தது . 2003ல் ஒரே நாளில் 94 செ மீ! 10 வருடங்களுக்கு முன் நகரமே அசைவற்றுப் போகும் ; இன்று அவ்வாறு இல்லை. பெரு மழைக்கு மறுநாளோ, அல்லது இரண்டாம் நாளோ நகரம் சுதாரித்து விடும். இயல்நிலைக்குத் திரும்பும்.

இந்நிலையில் மோடியின் அரசு 100 புதிய‌ நகரங்களைக் கனவு காண்கிறது! இது எங்கு கொண்டு போய் விடுமோ, காலம்தான் பதில் சொல்லும்.

பருவ மாற்றம் ஒரு காரணம்தான். ஆனால் நாம் தான் அதற்குத் திட்டமிட்டுத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு சுற்றுச்சூழல் நம் தவறுகளையும், அதிமேதாவித் திட்டங்களையும் ஒத்துப்போகும் என்று கனவு காண்பது வடிகட்டிய‌ முட்டாள்தனம். சற்றும் (ந‌கர) திட்டமிடல் இல்லாமல், நகர்ப்புற வடிகால்களும் சாக்கடை நீர் மேலாண்மையும் இல்லாமல் “மேம்பாடு” “வளர்ச்சி” என்றால் இப்படித்தான் முடியும்.

எல்லாமே சோகமும் தவறுகளும் மட்டுமே தானா? இல்லை! மக்களின் மனவலிமை, தன் நிலையைப் பொருட்படுத்தாமல் உதவ முன்வந்தது, உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாவிட்டாலும் அடுத்தவற்கு உதவுவது என்று மனிதம், மனித மாண்புகள் உச்சத்தைத் தொட்டன. இதைப்போல் பல்லாயிர‌க்கணக்கான நல் மனிதர்கள், தன்னார்வலர்கள், நல்லிதயங்களும்தான் இப்பேரிடரைக் கையாளத் துணை நின்றன. அரசு இயந்திரம் பெரிதாய்ச் செயலாற்றினதாய்க் காணவில்லை. ஆனால் எவ்வளவு சிறு,சிறு நற்செயல்கள்! இவ்வளவு இடர்களுக்கிடையிலும் சிரிப்பும், உதவும் குணமுமே மேலோங்கி இருந்தன‌.

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில், பெரும் காட்ரினா புயலுக்கு பின் ஆங்காங்கே பெரும் கொள்ளை நடந்தது.ஆனால் இந்த 'ஏழைகள்' நிரம்பிய நாட்டில் நாம் திருட்டைக் கேள்விப்படவே இல்லை! அதற்கே பெருமைப் பட வேண்டும் நாம். அரசுகளையும், அரசியல்'வியாதிகளையும்' நம்பாமல் இருப்பதே உசிதம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org