தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம் - சாட்சி

நான் [வால்டனில் தங்கிய] முதல் வருட வேனிலில் புத்தகங்கள் படிக்கவில்லை; நான் பீன்ஸ் செடிகளுக்குக் களை எடுத்தேன். இல்லை, பல சமயம் அதை விட நல்ல வேலை செய்தேன். இந்நொடியின் மலர்ச்சியைப் புறக்கணித்து விட்டு உடலுக்கோ, சிந்தைக்கோ வேலை கொடுக்க இயலாத பல நேரங்கள் இருந்தன. நான் என் வாழ்வில் ஒரு நிதானத்தை நேசிக்கிறேன். சில வேனில் காலைகளில், இளவெய்யிலில், என் வழக்கமான [குளத்தில் நீந்திக்] குளியலை முடித்து விட்டு வெய்யில் ஒளிரும் என் வீட்டு வாயிலிலேயே நான் ஒரு சிந்தை தோய்ந்த‌ நிலையில், பைன் மரங்களுக்கு இடையில், தனிமையில் அசைவற்று எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந்திருக்கிறேன். வீடு முழுவதும் பறவைகள் பாடியும், பறந்தும் திரிகையில், கதிரவன் மேற்கில் மறையும்போதோ அல்லது தூரத்துச் சாலையில் பயணிப்போரின் வண்டி ஓசையாலோ மீண்டும் விழித்து நேரம் கழிந்ததை உணர்ந்திருக்கிறேன்.

இர‌வில் வளரும் மக்காச்சோளத்தைப் போல நான் அப்பருவங்களில் வளர்ந்தேன்; கையால் செய்யும் எந்த வேலையையும் விட அந்நேரங்கள் மிக உயர்வாய் இருந்தன. அவை என் வாழ்வில் இருந்து கழிக்கப்பட்ட மணிகள் அல்ல; எனக்கு அளிக்கப்பட்ட வழக்கமான வாழ்நேரத்தை விடவும் கூடுதலாகவே இருந்தன. கீழை நாடுகளின் ஞானிகள் பணிகளைத் துறந்து தியானத்தில் ஈடுபடுவது என்று சொல்வதன் பொருளை நான் உணர்ந்தேன். பெரும்பாலும் நான் நேரம் எப்படிச் சென்றது என்று கவனித்ததே இல்லை. என் பணிக்கு வெளிச்சமிடுவதற்கு விடிந்தது போலவே நாள் நகர்ந்தது; காலையாய் இருந்தது, அட, மாலையாகி விட்டது - இந்நேரம் நினைவு கூறும்படி எதுவும் சாதிக்கவில்லை. மகிழ்ச்சியில் பாடும் பறவைகளைப் போல் அன்றி, நான் என் நல்வாய்ப்பை எண்ணி மௌனமாய் முறுவலித்துக் கொண்டேன். ஹிக்கரி மரத்தில் அமர்ந்த குருவியின் கிரீச்சைப் போல் என் மகிழ்ச்சிச் செருமலும் என் கூட்டில் இருந்து கேட்டிருக்கும்.

என் நாட்கள் கிரகங்களின் பெயர் தாங்கிய‌ வாரங்களின் நாட்களாக இருக்கவில்லை; துடிக்கும் கடிகாரத்தின் வியர்வையால் மணிகளாகக் கூறு போடப்படவும் இல்லை. ஏனெனில் நான் [பிரேசில் நாட்டுப் பழங்குடிகளான] பூரி இந்தியர்களைப் போல் வாழ்ந்திருந்தேன் - அவர்கள் நேற்று , இன்று , நாளை என்ற மூன்றிற்கும் ஒரே சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்களாம் - வேற்றுமையைக் கையைப் பின்னோக்கியும், முன்னோக்கியும், தலைக்குமேல் வீசியும் சைகைகளால் உணர்த்துவார்களாம்!

என் சக மனிதர்களுக்கு இவையெல்லாம் ஐயமற ஒரு வெட்டிச் செயலாய்த்தான் தெரிந்திருக்கும்; எனினும், பறவைகளும், மலர்களும் தங்கள் வாழ்முறையால் என்னை எடைபோட்டிருந்தால் குறையேதும் கண்டிருக்காது. ஒரு மனிதன் தன் நேர்மையான தருணங்களைத் தன்னுள்ளே கண்டு கொள்ள வேண்டும். இயற்கையான நாள் மிகவும் அமைதியானது - அவன் சோம்பலைக் குறைசொல்லாதது. பொழுதுபோக்குவதற்காக வெளியில் குமுகம், நாடகம் என்று தேடுவோரைக் காட்டிலும் என் வாழ்முறையில் ஒரு சிறப்பு இருந்தது - என் வாழ்வே எனக்குக் களிப்பூட்டுவதாகவும், எப்போதும் புதுமை நிறைந்ததாகவும் இருந்தது. எண்ணற்ற காட்சிகளைக் கொண்ட முடிவற்ற‌ நாடகத்தைப் போன்றிருந்தது!

Walden or Life in the Woods

Chapter 04 , Sounds

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org