தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


நாம் கற்பதும் கசடும் என்ற இத்தொடரில், மன அழுத்தம், போட்டி மற்றும் பொறாமை நிறைந்ததும், சற்றும் சிந்தனைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் இடம் அளிக்காததும் ஆன, தற்கால‌ச் சந்தைப் பள்ளி முறைக்கு மாற்று ஏதேனும் இருக்கிறதா என்ற தேடலில் ஈடுபட்டுள்ளோம். மந்தையுடன் போவதில் ஒரு பாதுகாப்பு உணர்வு இருப்பதால் பெரும்பாலான மனிதர்கள் ஒரு தனிப்பாதையில் பயணிக்கத் துணிவதில்லை.

காந்தி தன் குழந்தைகளுக்குத் தானே கல்வி அளித்தார். ஆங்கிலக் கல்வி அடிமைத்தனத்தை வளர்க்கும் என்ற கருத்துடன் இருந்தார். ஆனால் அவரது மூத்த‌ மகன் ஹரிலால் அவரை எதிர்த்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் படித்தார். தன் குடும்பத்துடனான உறவை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். காந்தி அவரை மதுவையும், அளவிற்கு அதிகமான புலன் நுகர்ச்சியையும் கைவிடும்படியும் தன் மகனுடனான போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை விடக் கடினமானது என்றும் கடிதம் எழுதும் அளவுக்கு நடந்து கொண்டார்.

ஆனால், தன் வாழ்வு முழுவதையும் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை மற்றும் சேவை செய்ய அர்ப்பணித்த‌ பாபா அம்தே என்று அழைக்கப்பட்ட தேவிதாஸ் முரளிதர் அம்தே, விகாஸ், ப்ரகாஷ் என்னும் தன் இரு மகன்களையும் மருத்துவர் பட்டம் படிக்க வைத்தார். அவர்களோ, இரு மருத்துவர்களைத் திருமணம் செய்து கொண்டு நால்வருமாக பாபா அம்தேவின் ஆனந்த்வன் என்ற ஆசிரமத்தில் வந்து இலவச சேவை செய்வதற்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர்.

குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் விடை தெரியாத கேள்விகளில் ஒன்று என்று ஏற்கனவே எழுதியிருந்தோம். இதில் சிக்கல் என்னவென்றால், பிள்ளைகளால் 15 வயது வரை எது சரி, எது தவறு என்று முடிவெடுப்பது மிகக் கடினம். இது பெற்றோர் மேல் பெரியதொரு முடிவெடுக்கும் சுமையை ஏற்படுத்தி விடுகிறது. எது சரி, தவறு என்று பெரியவர்களான நமக்கே பெரும்பாலான நேரம் குழப்பம்தான் - நாம் எப்படி எதிர்காலத்தைப் பற்றி இப்போதே உணர்ந்து கொண்டு முடிவெடுப்பது? சரி, தவறு என்பதை விட, குழந்தைகள் வளர்ந்தபின் எதை விரும்புவார்கள் என்று யாராலும் கணிக்க இயலாது. தற்சார்பான வாழ்முறையைத் தேடுவோர்களுக்கு மிகவும் மன உளைச்சலையும், ஐயங்களையும் ஏற்படுத்துவது, தன் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதுதான். பெற்றோர்களான நாம் வன்முறை குறைந்த முடிவு எடுக்க வேண்டுமெனில் அது பிள்ளைகளின் (நமக்குத் தெரிந்த ) நன்மையையும், அவர்களின் விருப்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்காலப் போட்டி நிறைந்த குமுகச் சூழலில், வெற்றியே நன்மையாகக் கருதப்படுகிறது. அன்பு, மகிழ்ச்சி, நிறைவு, நலம், கலை, இயற்கை, நிதானம் என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகள் ஆகி விட்டன. வெற்றி என்பதும் கூடப் பணத்தாலேயே எடைபோடப் படுகிறது - ஆண் பிள்ளையானால் பணக்காரன் ஆவதும், பெண்பிள்ளையானால் பணக்காரனைத் திருமணம் செய்து கொள்வதும் உலகம் முழுவதும் வெற்றியாய்க் கருதப்படுகிறது (பெண்ணுரிமை பேசுவோர் என்னை மன்னிக்கவும் - நான் பார்க்கும் நடைமுறை நிதர்சனத்தைச் சொல்கிறேன்). ஆசிக முனிவர் என்று கருதப்பட்ட வள்ளுவரே “அவையத்து முந்தியிருப்பச் செயல்தான்” த‌ந்தையின் கடமை என்று வரையறுத்துச் சென்று விட்டார்.

மறுபுறம், ஆங்கிலக் கல்வியில் வற்புறுத்தி நுழைக்கப்பட்ட பாரதியோ,


செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
தீது எனக்குப் பல்லாயிரம் நேர்ந்தன‌
நலமோர் எட்டுணையும் காண்கிலேன் - இதை
நாற்பதாயிரம் கோவிலில் சொல்லுவேன்

என்கிறான்.

(பாரதி, தோரோ, ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றோர் 40 வயதிற்கு முன்னரே இறந்து விட்டனர். தங்கள் வாழ்வில் பெரிதாய்ப் பொருள் ஈட்டியதாகத் தெரியவில்லை. தற்கால எடைக்கோலின்படி அவரகளை வெற்றி பெற்றவர் என்பதா தோற்றவர் என்பதா? )

ஷேக்ஸ்பியர் காதலைப் பற்றி எழுதும்போது “இச்சை என்பது மூள்வ‌து எவ்விடம்? புத்தியிலா, இல்லை மனதிலா சொல்லடி? ” என்பார் (Tell me where is fancy bred, Or in the heart or in the head ). பெரும்பாலும் குழப்பம் என்பது இச்சையும், புத்தியும் எதிரும் புதிருமாய் இழுக்கும்போது ஏற்படுவதுதான். நம் குழந்தைகள் வாழ்வில் நலமாக இருக்க வேண்டும்; நல்லவர்களாக இருக்க வேண்டும்; அதிகச் சிரமம் இன்றி நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் எல்லாப் பெற்றோரின் அவாவும். கள்ளச் சாராயமோ, கடத்தலோ செய்து பணக்காரனாகிய மனிதர்கள் கூடத் தங்கள் பிள்ளைகள் படித்து, நல்ல வேலையில் சேர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நம் புத்தியானது, குழந்தை இப்போது நலமாக இருந்தால் நாளை எல்லோரிடமும் போட்டியில் தோற்று விடுவானே என்ற ஒரு அடித்தளமற்ற அச்சத்தை நம்மிடம் உருவாக்கி - நம் குழந்தைகளை, எதிர்காலம் ஒளிமயமாய் இருக்க வேண்டும் என்ற கற்பனை அச்சத்தினால், நிகழ்காலத்தில் கடுமையான வன்முறைக்கு ஆட்படுத்தச் செய்கிறது.

தன் குழந்தைகள் மட்டுமல்ல, எந்தக் குழந்தையாய் இருந்தாலும், நேர்மையான, உணர்வுள்ள மனிதனால் அவர்களைத் துன்புறுத்த இயலாது. தோரோ மிகச் சொற்ப காலம் பள்ளி ஆசிரியனாய்ப் பணி புரிந்தார். அப்போது அவர் எந்தக் குழந்தையையும் அடிக்க மறுத்து விட்டார். வ‌ன்முறையான தண்டனை சார்ந்த ஒழுங்காற்றும் பள்ளிமுறையை அவர் கொள்கை ரீதியாக முற்றிலும் எதிர்த்தார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியர் அவரைப் பிரம்பைப் பயன்படுத்தும்படி வற்புறுத்தவே, மிகவும் வெறுத்துப்போன தோரோ, காரணமே இல்லாமல் நான்கு பையன்களைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு அடி கொடுத்து விட்டுத் தன் வேலையை ராஜினாமா செய்தார்!

பின்னர் இதைப் பற்றி எழுதுகையில் “நான் பள்ளி ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அதில் என் செலவுகள் என் வரவுக்கு ஏற்றாற்போல் (வரவை விடவும்) அதிகமாயின. ஏனெனில் நான் நாகரிகமாக உடை அணிவதும் பழகுவதும் மட்டுமின்றி, அவ்வாறே சிந்திக்கவும் நம்பவும் தேவைப்ப்ட்டதால் அதில் என் நேரம் தொலைந்ததாகவே உணர்கிறேன். நான் என் சக மனிதர்களின் நன்மைக்குப் பாடம் சொல்லித் தராமல் என் பிழைப்பிற்காகச் சொல்லித் தந்ததால் இது ஒரு தோல்வியே! ” என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் அவர் வால்டனில் எழுதியுள்ளார்.

இது போலவே நாம் சென்ற கட்டுரையில் அறிமுகப் படுத்திய ஜான் ஹால்ட் என்னும் சிந்தனையாளர், பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கினார். 1923ல் நியூயார்க் நகரில் பிறந்த ஹால்ட், தன் 62 வயதில் 1982ல் பாஸ்டன் நகரில் இறந்தார். பள்ளிகளில் மதிப்பெண்களுக்கும், முதலில் வருவதற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதைக் கூர்ந்து கவனித்த ஹால்ட், கல்வி என்பது குழந்தைகளின் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதே அன்றி அவர்களுக்குள் திணிப்பது அல்ல என்று உணர்ந்தார்.[ தற்போது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வருடா வருடம் பல லட்சம் குழந்தைகள் ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினியியல் ஆகிய பாடங்களை மனப்பாடம் செய்கிறார்கள். கேள்விகளோ ஏற்கனவே குறிக்கப்பட்ட வரைபடத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். அனைவரும் 195 முதல் 200 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்றால் அக்கல்வியால் என்ன பயன்? இத்தனை லட்சம் பேரும் ஒரே திறமையும், ஆர்வமும் கொண்டவர்களா? குழந்தைகளுக்கு எது நன்றாக வருகிறதோ அதில் அவர்களைப் ப‌யிற்றுவதுதானே அறிவை வளர்க்கும் கல்வி?]. கற்பிக்கும் முறை இன்னும் மனிதாபிமானம் உள்ளதாகவும், பிள்ளைகளின் ஆர்வத்தையும், கலைநயத்தையும் ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஹால்ட் கூறலானார். தன் பாடங்களை அவ்வாறே நடத்தத் துவங்கினார் - இதனால் அவர் பணிசெய்த பள்ளி எந்த மாற்றமும் அடையவில்லை; ஜான் ஹால்ட்டின் வேலை பறிபோயிற்று!

வற்புறுத்தும் பள்ளி முறையைப் பற்றி அவர் சக ஆசிரியர்களுக்கு “வலியற்ற, மிரட்டாத நிர்ப்பந்தம் என்பது ஒரு கற்பனையே. அச்சம் என்பது நிர்ப்பந்தத்தின் இணை பிரியாத் தோழன் ; அதன் நேரடி விளைவு. குழந்தைகள் விரும்புகிறார்களோ இல்லையோ நீங்கள் நினைப்பதை அவர்களைச் செய்ய வைப்பது உங்கள் வேலை என்று நினைத்தால், அதன் நேரடி விளைவாக‌ நீங்கள் சொன்னதை அவர்கள் செய்யாவிடில் அவர்களுக்கு என்ன ஆகிவிடுமோ என்ற அச்சத்தை அவர்களிடம் நீங்கள் உருவாக்கியே தீரவேண்டும்” என்று எழுதியுள்ளார்.

தன் ஒருவனால் ஒட்டு மொத்த அமெரிக்கப் பள்ளித் திட்டத்தைச் சீர் செய்ய இயலாது என்று உணர்ந்த ஹால்ட், “பள்ளி என்பது குழந்தைகள் மூடர்களாக ஆகும் இடமாகி விட்டது” என்று கூறிப் பள்ளிகளை ஒதுக்கி விட்டு, பள்ளியின்மை (unschooling) என்றும் பள்ளியை அகற்றல் (de-schooling) என்றும் சொல்லாடல்களைத் தோற்றுவித்தார். 1981ல் நீங்களே கற்பியுங்கள் (Teach your Own) என்ற நூலை எழுதினார். அதில் “அன்புள்ள பெற்றோர்கள் அனைவரும் அவர்களே தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்” எனவும் “அவ்வாறு கற்பிக்கப் பெரிய அறிவு தேவையில்லை; நாமும் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கலாம்” என்றும் எழுதினார்.

பின்னர் இவர் பள்ளியில்லாமலே வளர்வது (Growing without School) என்ற ஒரு செய்திமடலைத் துவங்கினார். இதில் பல நூறு பெற்றோர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். வீட்டுப்பள்ளி (homeschooling) என்ற முற்றிலும் புதுமையான கல்விமுறைக்கு வித்திட்டவர் ஜான் ஹால்ட்.

நம்நாட்டில் இதெல்லாம் சாத்தியமா? இவ்வளவு மதிப்பெண் எடுத்தே கல்லுரியில் இடம் கிடைப்பதில்லை. வீட்டுக் கல்விக்கும், வேறு முறைசாராக் கல்விக்கும் குமுகத்தில் என்ன மரியாதை கிடைக்கும்? நாளை என் பிள்ளை என்னிடம் “உன்னால்தான் என் வாழ்க்கை வீணாயிற்று” என்று குற்றம் சாட்டினால் அதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பன போன்ற கேள்விகள் எழுவது இயல்பே.

ஆனால் இது தேவையற்ற அச்சமே. பத்தாவது வரை பள்ளி செல்லாமலே கடவுக் கல்வி பெற இயலும். 10வதுக்கு இணையான இரு பரீட்சைகளை நம் தமிழ்நாட்டில் பள்ளிக்குச் செல்லாமலே எழுத இயலும். ஒன்று IGCSE எனப்படும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் தேர்வு. இன்னொன்று நம் அரசு நடத்தும் NIOS எனும் தேர்வு. இவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org